திண்ணைவீடு

Spread the love

பூர்வீக வீடெங்கள் வீடு
திண்ணைவீடென்பர் அதை
பெயருக்குப் பொருத்தமாய்
நீண்ட பெருந்திண்ணையோடிருந்தது

திண்ணையின் பகல்கள் தாத்தாவினுடையது
காலையில் செய்தித்தாள் அலசுவார் நண்பர்களுடன்
உள்ளூரிலிருந்து உலகஅரசியல்என
மாலையில் அவரிடம்
பலவித கதைகள்கேட்கும் என் பால்யம்

பதின்களில் அரைக்கால் சராய்களில்
பழைய கட்டைகளை மட்டையாய் பிடித்தபடி
ஆடிய பந்தாட்டங்கள், பச்சை குதிரைகள்…
அக்காவும்  தோழிகளும் ஆடும் நொண்டி பாண்டியுமென
திண்ணை முழுவதுமென் பால்யம்

இரவில் உறங்கி அதிகாலையில் எழுந்து செல்லும்
ஆதரவற்ற அறியா முகங்கள்

யாருமில்லா இரவில் எச்சங்களைக் கழித்து செல்லும் தெருநாய்கள்

ஒருநாளும் முகம் சுழித்ததில்லை அம்மா
திண்ணையை சுத்தம் செய்து வாசலில் கோலமிட

அம்மாவிற்குப்பின்
காலமாற்றங்களில் மாறியிருந்தது
எங்கள் திண்ணை
இரவுகளில் யார் யாரோக்களின்
அநாகரீகங்கள்
திண்ணை சுவர் ஜன்னல் வழி
வீட்டுக்குள் எட்டிப்பார்க்கும் கொள்ளிக்கண்கள்
வேறு வழியில்லாமல் வேலி முளைத்தது திண்ணைக்கு

எத்தனையோ எதிர்ப்புகளையும் மீறி இடிக்கவிடாமல்

பாதுகாத்திருந்தேன் திண்ணையை
பால்ய நினைவுகளுடன்

கொள்ளுப்பேரன்களில்  கனினிவிளையாட்டுக்களால்
வெறுமையாய் கிடந்த
தாத்தாவின் திண்ணை  இறுதியில்
வாகன நிறுத்தமாய் வடிவமைக்கப்பட்டது

இப்போதெல்லாம் அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு
உணர்வுகளற்ற அன்னியனாய்தான் நுழைகிறேன்

அந்த வீட்டில்

அந்தத் தாத்தாவும் பேரனும்
திண்ணைவீடெதும்  தென்படுகிறதா
என தேடிக்கொண்டிருக்கலாம் இன்னும்
திண்ணைவீடென்னும் பெயரை மட்டும்
எப்போதாவது கேட்டதுண்டு
ஊரிலுள்ள சிலரின் பேச்சில்.

நிலாரவி.
Series Navigationமருத்துவக் கட்டுரை வயிற்றுப்போக்குநண்பன்