தினம் என் பயணங்கள் -27 Miracles and Angels !

 

 

வாழ்க்கையின் தேடல்களும் மனம் போகிற போக்கும் அலாதியானது. காரணமற்ற மன அழுத்தம் எங்கிருந்து வருகிறது என்பதும், எதற்காக வருகிறதென்பதும் புரியாத புதிர்கள். அப்படியான ஒரு நாள் பொழுதில், அலுவலகம் நோக்கிய எனதான பயணத்தில், காலை புலர்ந்து பனி வாடாத மலர்போல் இருந்தது.

 

 

எங்கோ ஓர் காகம் கரைய, காகக் கூட்டத்திலாவது பிறந்திருக்கலாமோ என்றெண்ணிக் கொண்டேன். இறக்கைகளைச் சட்டென்று விரித்து நினைத்த இடத்திற்கு சென்றுவிடலாம் என்றெண்ணியபடி கடந்த போது தான் பொத்தென்று ஒரு காகம் தரை விழ டப்பென்று மாபெரும் வெடிச் சத்தம் போல் முன் தெரிந்த டிரான்ஸ்பார்மர் புகைந்தது. அதிர்ந்து போய் நின்ற என்னை யாரோ அந்த மனிதர் என் சைக்கிளை ஒடித்து ஓரம் நகர்த்தியது, பயந்து போன நான் என் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்த்தியது.  அந்த மனிதர் என்னைக் காக்க வந்த ஏஞ்சல் !

 

 

சாலையில் விபத்துக்கள் நேரும் !  மிராக்கிள் வந்து என்னைக் காப்பாற்றும் !

 

 

சற்று அசுவாசப்படுத்திக் கொண்டவளாக அந்த மேட்டைக் கடந்தேன். இல்லை யில்லை, மேட்டைக் கடக்க முயற்சி செய்தேன். நான் மேடேறச் சிரமப்படுவதை எதிர்ப்புறம் தேநீர் கடையில் தேநீர் அருந்தியபடி பார்த்த அந்த இளைஞன் சாலையைக் கடந்து வேகமாக ஓடிவந்தான். பின் என் அனுமதி இன்றி சைக்கிளை மேடேற்றி நிறுத்தினான். நான் ப்ரேக்கை கையில் பிடித்து சைக்கிளை என் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இலாவகமாக மெதுவாய்ப் பள்ளம் நோக்கிச் செலுத்தி சம தளத்தில் நிறுத்தி, நன்றி சொல்ல பின் திரும்ப, என் நன்றியை எதிர்பார்த்திராத அவன் வெகுதூரம் சென்றிருந்தான். மனம் வாடியது !

 

 

இப்படி எதையும் எதிர்பாராத சிறு சிறு உதவிகளை செய்து அசத்துபவர்கள் அநேகரைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன் என் வாழ்வில். செய்த காரியத்திற்காக ஒரு நன்றியோ அல்லது விளம்பரமோ எதிர்பாராதவர்கள்.

 

 

இந்த சமூகத்தில் இருந்து அநேகம் பெற்றுக் கொண்டிருக்கிற எனக்கு, இந்த சமூகத்திற்காக ஆக்கப் பூர்வமாக எதையேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது என் உள்ளத்தில்.

 

 

அடுத்துச் சாலையின் மாபெரும் பள்ளத்தை ஒதுங்கிக் கடக்க முயற்சித்த வேளை எதிர்ப்புறம் வந்த பேருந்தின் பயமுறுத்தலில் வலது சக்கரம் பள்ளத்தோடு ஐக்கியம் ஆக அதிலிருந்து மீள முயற்சி செய்து கொண்டிருந்த போதுதான் அந்த குரல் என் செவிகளைத் தீண்டியது.

 

 

“போ போய் தள்ளிவிடு, பாவம் அந்த அக்கா,” இப்படி அந்த செருப்பு தைக்கும் முதியவர் உந்த அந்த ஆறு வயது மதிக்கத்தக்க அந்த சிறுமி சற்று தயக்கத்தோடு சைக்கிள் அருகில் வர, அந்த பிஞ்சுக் கைகளுக்கு வலித்துவிடுமோ என்ற அவசர உணர்வில் நான் சைக்கிளை முழு பலத்தோடு பள்ளத்திலிருந்து ஏற்றினேன்.

 

 

“நன்றி” என்று புன்னகைக்க, அவள் வாயில் ஒரு விரலின் நகத்தைப் பற்களில் நளினமாகக் கடித்தபடி நெளிந்தாள்.

 

“என் பேத்தியோட சிநேகிதி; அவ வரலேன்னு ஸ்கூலுக்கு போகாம இங்க ஒடியாந்துட்டா,” என்றார் முதியவர்.

 

அன்று எனக்கு உதவி செய்ய அடுத்து வந்த ஓர் குட்டி ஏஞ்சல் !

 

ஏஞ்சல்கள் பலவிதம் ! வானுலகிலிருந்து வர வேண்டியதில்லை !  புழுதிக் குட்டையில் முளைத்த தாமரைப் பூக்கள் !

 

 

எண்ணெய் காணாத செம்பட்டைத் தலை பின்னலும், முழுச் சூரிய காந்தியின் மலர்ந்த நிலை போன்ற கண்கரும் கரும் தேகமுமாக அழகாய் இருந்தாள் அந்தச் சிறுமி, அரசாங்கச் சீருடை அவளை மேலும் அலங்காரமாகக் காண்பித்த போதும், அவள் குடும்ப வறுமை தோற்றத்தில் மறையாமல் தெரிந்தது.

 

 

இந்த உலகத்தில் அதனதன் நேர்த்தியோடு அனைத்தும் சீராகத்தான் இயங்கிக் கொண்டிருக்கி்றது, வறுமை, பட்டினி, பசி, செழுமை, செல்வம், பணம், அன்பு, அன்பின் வறுமை என்று.

 

 

நான் வாழும் செங்கம் நகர் தற்போது தன் இடத்தை மக்கள் கூட்டத்தால் நிரப்பிக் கொண்டிருந்தது. முன் சென்றாலும், பின் சென்றாலும் யாரோ ஒருவரின் காலில் சைக்கிளை ஏற்ற வேண்டி யிருக்கும். ஒருவேளை இந்த ஆடிப் பண்டிகையும் வரப்போகும் ரமலான் பண்டிகையின் கைங்காரியமாகவும் இருக்கலாம்.

 

 

அலுவலகத்தில் புதியதாக வந்திருக்கும் அலுவலர் மன உளைச்சலுக்கு நான் ஆளாகிறேன் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்த ஒருபுறம் ஒரு கேலிப் புன்னகையும், மறுபுறம் இந்த மனிதர் தன் வார்த்தையினால் எப்போதும் தனக்கு மன உளைச்சலை வருவித்துக் கொள்ளுபடி செய்கிறாரே என்ற வருத்தமும் ஏற்பட்டது எனக்கு.

 

 

முன்பிருந்த அதிகாரிகளின் அதிகாரத் தோரணயைில் வதைப்பட்ட காட்சி மாறி என் வாழ்க்கைப் பயணத்திலும் ஒரு மாற்றம் உருவாவதை நான் கண்டு கொண்டிருந்தேன். எப்பொழுதும் எனக்குள்ளாக இருந்த தாழ்வு மனப்பான்மை விடுபடுவதையும், பேஸ்புக் மற்றும் குழுமத்திலும் நண்பர்கள் மனதில் எனக்கென்று தனி இடம் பிடித்திருப்பதையும் உணர்ந்த போது ஏலாத மாற்றுத்திறன் என்பது வாழ்தலுக்கான தடை இல்லை என்பதை இப்போது உணர்கிறேன். எதையும் செய்வதற்கு அடிப்படைத் தைரியமும் அதை எப்படியும் செய்துமுடிக்க வேண்டும் என்ற உத்வேகமும் தான். இவை இரண்டும் இல்லாத சராசரி மனிதரும் கூட எதையும் செய்ய முடியாது என்பதை அறிந்த மனம் ஒருவாறு அடுத்த கட்ட பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

 

[தொடரும்]

Series Navigation