தினம் என் பயணங்கள் – 42 பாராட்டும் பட்ட காயமும் .. !

Spread the love

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி

சில்லென்ற காற்று உடல் தழுவும் உணர்வைப் போல மனம் ரம்மியமாய் இருந்தது அன்றைய பொழுது. திரு.வையவன் அவர்கள், “தமிழ்ச்செல்வி உங்களுக்கு ஒரு பாராட்டுவிழா நடத்தப் போகிறோம். அன்னை நிர்மலா தொழிற்பயிற்சி மையத்தில்,” என்ற பொழுது, எனக்குள் உதயமான கேள்வி, நான் என்ன சாதித்து விட்டேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துகிறார்கள் என்பதுதான்.

இந்த பாராட்டு விழாவில் எல்லாம் எனக்கு நாட்டமில்லை. வேண்டாம் என்றேன். அவரோ “உன் சாதனை களைப் பற்றி உனக்கு தெரியா திருந்தாலும், உன்னைப் பற்றி மற்றவர்கள் பாராட்டிப் பேசுகிறார்கள். அவர்கள் எல்லோரின் சார்பிலும் உனக்காக இந்த பாராட்டு விழாவை நான் ஏற்பாடு செய்கிறேன். அதோடு அன்னை நிர்மலா தொழிற் பயிற்சி மையத்தின் அறங்காவலர், தொல்பொருள் ஆய்வாளருமான பிரேம் ஆனந்த் அவர்கள் சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிருக்கிறார்கள், பாராட்டு விழாவில் அவர்களையும் இணைத்து விடலாம்,” என்றார்கள்.

மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைக்கு உற்சாக மூட்டும் தாயாரின் கைத்தட்டல் போல எழுத்துலகத்தில் அடி எடுத்து வைத்திருக்கும் என்னை உற்சாகப்படுத்த புகழ்பெற்ற எழுத்தாளரான திரு.வையவன், மற்றும் திருமதி. ஜானகி அம்மா அவர்களும் என்னை தேடி எங்கள் ஊருக்கே வந்து என்னைப் பாராட்டுவது உள்ளத்தில் மகிழ்ச்சி நீருற்றுகளை உற்பத்தி செய்தது.

அன்றைய தினம் மிகவும் விசேடமானது. நான் எழுதிய “யாழினி ஐ.ஏ.எஸ்,” குறுநாவல் வெளியிடப்பட்டது. அத்தொழிற் பயிற்சி மையத்தில் படித்த மாணவிகள் என் படைப்புகளைப் பற்றி பேசியதும். செங்கம் பகுதிப் பெரியோர் முன் ஒரு எழுத்தாளராய் என் அறிமுகமும் இந்த பயணத்தில் நான் போய்க் கொண்டிருக்கும் பாதையின் சரித்தன்மையை எனக்கு ஊர்ஜிதப்படுத்தியது.

மாணவிகள் என் படைப்புகளைப் படிக்கும் ஏற்பாட்டை திரு.வையவன் அவர்கள் எனக்குத் தெரியா வண்ணம் செய்திருந்தார். என் படைப்புகளில் இருந்த அவர்களுக்குப் பிடித்த வரிகளை அவர்கள் எடுத்துப் பேசிய போது அது எனக்கு எதிர்பாராத மனக்கிளர்ச்சியையும், நான் ஏதோ மிகப் பெரிய சாதனையைச் செய்த மனப்பிரம்மையையும் எனக்கு உண்டாக்கியது.
அந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் அடித்துச் சென்று மீளும் முன், அடுத்த நாள் காலை 10.01.2015 ஓர் அதிர்ச்சி எனக்குக் காத்திருந்தது !

அன்று நீராடுவதற்காக குளிக்கச் சென்ற என் மீது மகள் தவறுதலாக வெந்நீரைக் கொட்டி விட்டாள். டெய்ல்ஸ் போடப்பட்ட தரையில் அமர்ந்திருந்த என்னை நோக்கி பாய்ந்து வந்த வெந்நீர் கண நேரத்தில் என்னைத் துடித்துப் போகச் செய்தது. வெம்மை தாங்கா உடல் அவசரகதியில் கண்களில் கண்ணீரை ஊற்றெடுக்கச் செய்தது. என் மனக் கதறலானது என் குரலின் ஒப்பாரியாய் பெரும் ஓசையோடு எழுந்தது. என் கதறலைக் கண்ட என் தாயார் ஓடி வந்து, குளிர்ந்த நீரை என் மீது ஊற்றினார்கள்.

அன்றை தினம் என் மரணம் நிச்சயக்கப்பட்டு விட்டதாய் நான் உணர்ந்தேன். முன்பொருமுறை என் மகள் சிறுமியாய் இருந்த போது, தீக்குச்சியை கிழித்து என் பாதத்தில் போட்டுவிட, லேசாய் சுரீர் என்றதற்கே அவளைத் திட்டி யிருக்கிறேன்.

இப்பொழுதோ தவறுதலாகத் தண்ணீர் கொட்டிய அவளைப் பார்த்து நான் நன்றாக இருக்கிறேன், நீ அழாதே என்று சொன்னதும், அவள் இன்னும் அதிகமாய் அழுதது ஏன் என்று பின்னொரு நாள் அவள் சொல்ல அறிந்து கொண்டேன்.

தரையில் சம்மணம் போட்டு அமர்ந்திருந்ததால் என் இடது காலின் அடிபாகம் முழுவதும் கொப்பளித்து, வேதனை தரும், கரும் முத்துக்களால் அலங்கரிக் கப்பட்டிருந்தது. முதலில் வலி இல்லை. எரிச்சல் இல்லை. சற்று நேரத்திற் கெல்லாம் அடங்கி உணர்வற்ற நிலை ஏற்பட்டிருந்த போதும், மனதிற்குள் ஒரு மரண பயம் வந்து குடிபுகுந்து கொள்ள, என் லட்சியக் கனவுகள் என்னுள் தன் மேற்பரப்பிலிருந்து இடியும் தோற்றம் உருவானது ! பிடிவாதமாய் என் மனக்காட்சியை மாற்ற முனைந்தேன். அதே கணம் என் இளைய தம்பிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவனும், என் சகோதரியின் மகனும் ஓடிவந்து பார்த்த போது நான் சுடிதாரின் மேல்சட்டையை மட்டும் அணிந்து ஈரத்தில் வலியோடு அமர்ந்திருந்தேன்.

அவசரகதியில் என் உடையைக் கழட்டி, ஒரு மழலையைப் போல் வெளியில் தூக்கி வந்து தூயதான பருத்தி துணியில் அமரவைத்து உடைமாற்றினார்கள். இதோ நான் பெண் என்பது அவர்கள் மனதிற்கு புரியவில்லை. மருத்துவரின் மனப்போக்கு போல என் நிர்வாணத்தை அவர்கள் கண்டும் அவர்களின் கருத்திற்கு அது பெரியதாய்த் தெரியவில்லை. நான் ஓர் உயிர்ப் பிறவி ! வலியில் ஆண், பெண் என்று ஒரு பிரிவோ, பாகுபாடோ இல்லை என்பதை உணர்ந்தேன்.

பெரும்பாலும் என்னை அலுவலகம் அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுனரான அலெக்சிக்குத் தகவல் தெரிவித்து அவன் வந்தவுடன் என்னை செங்கம் பகுதியின் பிரபல மருத்துவரான திரு.இராமமூர்த்தி அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள்.

நடக்க முடியாத எனது கால் சிகிட்சைக் காண்டம் வேதனை மிக்கது.

[மீண்டும் தொடரும்]

Series Navigationஅம்மாஜோன் ஆஃப் ஆர்க் நாடக நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன், கனடா