திருக்குறட் செல்வர் திரு மேலை பழனியப்பன் அவர்களின் ஏற்புரை

 

திரு மேலை பழனிப்பன் மேலைச் சிவபுரியைச் சேர்ந்தவர். கரூரில் பல்லாண்டு காலமாய் வசித்து வருகிறார். அவருக்கு இந்தத் திருக்குறள் விழாவில் ( காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நிகழ்ந்த 61 ஆம் ஆண்டு குறள் விழாவில் ) திருக்குறள் செல்வர் என்ற பட்டமும் விருதும் வழங்கப்பட்டது.

 

{முதலில் முனைவர் குமரப்பன் பற்றிக் கூறி இவர் நகரத்தார்களின் முதல்வர் என்று சிறப்பித்துக் கூறினார்.கருத்தரங்கமும் கவியரங்கமும் காலையிலேயே நடைபெற்றிருந்தன. அதில் பழ கருப்பையா, பேராசிரியை விசாலாட்சி ஆகியோர் உரையாற்றி இருந்தார்கள்.}

 

1986 இல் கரூரில் திருக்குறள் பேரவை தொடங்கப்பட்டதாக திரு மேலை பழனியப்பன் கூறினார். இப்பேரவையின் மூலம் சுமார் 50,000 திருக்குறள் சார்ந்த புத்தகங்கள் இலவசமாக வெளியிடப்பட்டிருப்பதாகவும், இலட்சம் புத்தகங்கள் வெளியிடவேண்டுமென்பது தமது குறிக்கோள் எனவும் கூறினார்.

 

வருடத்தில் ஓர் நாள் மட்டுமல்ல திருக்குறள் படிப்பது என்பது. அதை வருடம் முழுதும் வளரும் சமுதாயத்துக்குக் கொண்டு செல்வோம் என்று கூறினார். கரூரில் ஆண்டுதோறும் பள்ளிகளில் திருக்குறள் போட்டிகள் நடத்தி தைத்திருநாளில் விழாவெடுத்துப் பரிசு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார். கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக இம்முறை நடைபெறுவதாகத் தெரிவித்தார். 5,6,7,8, ஆகிய வகுப்பில் படிப்பவர்கள் ஒரு குழுவாகவும் ( சப் ஜூனியர்), 9,10 ஆம் வகுப்பில் படிப்பவர்கள் ஒரு குழுவாகவும் ( ஜூனியர் ) , 11.12 ஆம் வகுப்பில் படிப்பவர்கள் ஒரு குழுவாகவும் ( சீனியர் ) மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் வைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசுகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.

 

1775 மாணாக்கர்கள் கலந்து கொண்டு அதில் முதல் கட்டமாக 172 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்போது இறுதிச் சுற்றில் 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். தொலைக்காட்சித் தொகுப்பாளர் திரு ஜேம்ஸ் வசந்தன் இந்நிகழ்ச்சியை நடத்துவதாகவும் பரிசுத் தொகை  3 லட்சம் எனவும் குறிப்பிட்டார்.  முதல் பரிசு 30.000, இரண்டாம் பரிசு 20,000 எனவும் 100 திருக்குறளைக் காணொளி மூலம் கண்டு 4 கேள்விக்கும் 15 நொடிகளில் பதில் சொல்பவருக்குப் பரிசு என்றும் கூறினார்.

 

திரு பொன்னம்பல அடிகள் கூறியது போல பள்ளிகள் தோறும் திருக்குறள் மன்றம் அமைத்து குறள் வகுப்புகள் எடுத்து வள்ளுவத்தைப் பரப்புதல் வேண்டும் என்பதைக் கட்டளையாக்க வேண்டும் என்று கோரினார்.  

 

1950 இல் வள்ளல் அழகப்பர் ( காரைக்குடியில் பேசும் யாவரும் வள்ளல் அழகப்பர் பற்றிச் சிலாகிக்காமல் பேசுவது இல்லை J. ) ரயில்வே க்ராசிங்கில்  காரில் காத்திருந்த போது ஒரு வெள்ளரிக்காய் விற்ற பெண்மணியிடம் வெள்ளரிக்காய் வாங்கிவிட்டுச் சில்லறை இல்லாமல் 100 ரூபாய் நோட்டைக் கொடுக்க அவர் சில்லறை இல்லையே என்று சொல்ல பரவாயில்லை வைத்துக்கொள்ளம்மா என்று இலவசமாகக் கொடுத்தாராம். அதைக் கேட்ட அப்பெண்மணி தன் கூடையில் இருந்த மிச்ச வெள்ளரிக்காய்களை அங்கே ரயில்வே க்ராசிங்கைக் கடக்கக் காத்திருந்த அனைவருக்கும் ஓடி ஓடிச் சென்று இலவசமாக வழங்கினாராம். அப்போது அவரைச் சார்ந்தவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார். வரவுக்கு மேலே கிடைத்துவிட்டதால் தலை கால் புரியலையா என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அப்பெண்மணி வள்ளல் அழகப்பர் கொடுத்த ரூபாய் நோட்டைத் தொட்டவுடன் அவருடைய ஈகைத் தன்மை தனக்கும் ஒட்டிக்கொண்டுவிட்டதாகச் சொன்னாராம்.  வள்ளல் தொட்ட 100 ரூபாய் நோட்டைத் தொட்டதும் அந்த சாதாரணப் பெண்மணியையும் அது வள்ளல் ஆக்கியதாம்.

 

“தோன்றிற் புகழொடு தோன்றுக “

 

“ ஈதல் இசைபட வாழ்தல் “

 

“ அறம் செய்க “

 

“ஒண்டு உலகத்து உயர்ந்த புகழல்லால் “ என்ற குறள்களைக் கூறினார். பிறந்தோம் இருந்தோம் இறந்தோம் என்றில்லாமல். பிறந்தோம் இருந்தோம் சிறந்தோம் இறந்தோம் என வாழவேண்டும் என வலியுறுத்தினார்.

 

வள்ளுவர் அவ்வாறு வாழாதவர்களை மரத்துக்கு ஒப்பானவன், மிருகத்துக்கு ஒப்பானவன் என்று குறிப்பிடுவதாகச் சொன்னார்.

 

“ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையோர்

செத்தாருள் வைக்கப் படும். ”

 

என வள்ளல்களை, ஈகைக் குணம் கொண்டவர்களை ஒரே பட்டியலில் வைக்கிறார்.

 

காந்தியடிகள் ஒரு முறை திருக்குறளின் நிலையாமை என்ற குறளை மொழிபெயர்ப்பில் படித்தபோது

 

“ உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு. ”

 

இதன் பொருளுணர்ந்து ரசித்த அவர் தான் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும் என்றும்  இந்தக் குறளை அதன் மூல மொழியாகிய தமிழில் புரிந்துணர்ந்து படிக்க வேண்டும் என்றும் விரும்புவதாகக் கூறினாராம்.

 

நபிகள் தான் சம்பாதித்தவற்றை அன்றைக்கே தர்மத்திற்கு செலவழித்து விடுவார்களாம். இரவில் அவர் எப்போதும் சமாதி நிலையில் உறங்குவாராம். ஆனால் ஒரு நாள் நபிகளுக்கு இரவில் உறக்கம் வராமல் இருந்ததாம். அப்போது வீட்டில் உதவியாகப் பணிசெய்துகொண்டிருந்த பெண்ணை அழைத்து தான் அன்று கொடுத்த பணம் எல்லாம் செலவாகிவிட்டதா என்று வினவி இருக்கிறார்கள். அதற்கு அந்தப் பெண் இல்லை என்றும் நபிகளுக்கு சிறிது உடல் நலக் குறைவாக இருப்பதால் மருந்து வாங்க அந்தப் பணத்தைச் சேமித்து வைத்திருப்பதாகவும் கூறினாராம்.

 

உடனே நபி அவர்கள் அந்தப் பெண்ணிடம் அந்தத் தொகையை யாருக்காவது வழங்கிவிடும்படிக் கூறினார்களாம். அப்போது அந்தப் பெண் இந்தக் குளிர் இரவில் யாரைத் தேடுவது காலையில் கொடுத்துக்கொள்ளலாம் என்றாராம். அந்தச் சமயத்தில் வீட்டு வாசலில் குளிரில் நடுங்கியபடி ஒருவர் கதவைத் தட்டி குளிருக்கு உணவு வாங்கவும்  போர்வை வாங்கவும் பணம் வேண்டும் என்று கேட்டாராம். உடனே நபி அவர்கள் சொன்னபடி அந்தப் பெண் அந்தப் பணத்தை ( 5 தினார்கள் ) வழங்கினாராம். அதன் பின்னரே நபி அவர்களுக்கு நிம்மதியான நித்திரை வந்ததாம்.

 

ஒவ்வொருவர் உண்ணும் அரிசியிலும் பெயர் பொறித்திருப்பது போல கடவுள் பணத்தையும் அவர்க்காக  வழங்கும்படிக் கொடுத்திருப்பதாகக் கூறுவாராம்.. நாம் சேமிக்க மிகச் சிறந்த செல்வம் ஒழுக்கமும் பண்பாடுமே என்று மேலை பழனியப்பன் கூறினார்கள்.

 

தன்னுடைய இத்தனை வருட வாழ்க்கையில் இந்த திருக்குறட் கழகத்தின் திருக்குறட் செல்வர் விருது பெற்ற இந்த நாள்தான் சிறந்தநாள் என்று கூறினார்கள். இத்துடன் அவர்கள் உரை இனிது முடிந்தது

Series Navigationடோனி மொரிசனின் பிலவ்ட் (Beloved By Toni Morrison) அயல்மொழி இலக்கியம்வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய உலகம்