திருக்குறளைப் பரப்பும் அலேமன் ரமேஷ்ராவ் அவர்களின் குறுவட்டு

தமிழ்த்துறைத்தலைவர்

மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி

சிவகங்கை

அழியா மதிப்புடையது திருக்குறள். அதன் அழிவின்மைக்குக் காரணம் அதனுள் உள்ள உண்மைத்தன்மையும் தற்சார்புத்தன்மையின்மையும்தான். திருக்குறளை அழிவில்லாமல் தினம் தினம் மக்கள் மத்தியில் உலாவச் செய்வதன் மூலம் மக்களிடத்தில் அமைதியையும், தெளிவையும், அன்பையும், அறிவையும், பண்பையும், சான்றாண்மையையும், நாகரீகத்தையும் மேம்பாடு அடையச் செய்ய இயலும். இதற்காக தினம் தினம் திருக்குறளைப் பரப்பும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். சொற்பொழிவுகள், புத்தக வெளியீடுகள் என்ற பதிவுகளைக் கடந்து தற்போது திருக்குறள் டிஜிட்டல் மீடியா எனப்படுகிற எண்வழி சாதனங்களிலும் இடம் பெறத் தொடங்கிவிட்டது. திருக்குறளை உரையோடு தரும் இணையப்பக்கங்கள், திருக்குறள் இசைவட்டுகள் என்று பரவி வரும் திருக்குறளின் பரவல் எளிமையாகத் திருக்குறளை  மக்களிடம் சென்று சேர்ப்பதாக உள்ளது. இவ்வழியில் திருவரங்கத்தில் வசித்து வரும் அலேமன் ரமேஷ் ராவ் என்பவர் புதிதாக எம்.பி. 3 வடிவில் ஒரு திருக்குறள் குறுவட்டினை உருவாக்கியுள்ளார்.

 

‘‘காவிரி நாடு வழங்கும் திருக்குறள்- தமிழ் ஆங்கில உரை’’  என்ற பெயருடைய இக்குறுவட்டில் திருக்குறளின் மூலப்பகுதி ஒலி வடிவில் தரப்பெற்றுள்ளது. இம்மூலப்பகுதிக்கு ஏற்ப ஆங்கில விளக்கம், தமிழ் விளக்கம் ஆகியன ஒலி வடிவில் வழங்கப் பெற்றுள்ளன. அலேமன் ரமேஷ் ராவ் அவர்களின் குரலில் பதிவு செய்யப் பெற்றுள்ள மூலப்பகுதிக்குத் தனித்த சிறப்பு உண்டு. திருக்குறளை ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படும் ஓசை நயத்துடன் தந்துள்ளார். ஒரு மனிதரின் வாழ்க்கைச் சூழல் எவ்வாறு அவரது படைப்புகளுக்குள் பணிபுரிகின்றது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று. திருவரங்கத்தில் வசித்து வரும் அவருக்குள் ஆழ்வார் பாசுரங்களைக் கேட்டு, கேட்டு அதன் வாயிலாக எழுந்த தாக்கம் திருக்குறளை அவர் ஒலிவடிவாகத் தரும்போது செயல்புரிந்துள்ளது. இந்த மூலப்பகுதியை வாசித்து முடிக்கும் சூழலில் அதற்கு ஒத்திசைவாக ஒரு சிறு மணியொலி தரப்பெறுகிறது. இந்த மணியொலி குறள் படித்து முடித்தாகிவிட்டது என்பதை அறிவிக்கும்படியாகவும் உள்ளது.

 

இந்த மூலப்பகுதியை முதன்மைக் கோப்பாக வைத்துக் கொண்டு இதற்குத் துணை ஒலிக் கோப்புகளாக ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய ஒலிக் கோப்புகள் இணைத்துக் கொள்ளப் பெற்றுள்ளன. இதன் காரணமாக ஆங்கிலத்தில் விளக்கம் கேட்கும் போதும், தமிழில் விளக்கம் கேட்கும்போதும் மூல வடிவத்தினை இருமுறை கேட்டுக் கொள்ள முடிகின்றது. இருமுறை கேட்பதன் வாயிலாக திருக்குறளின் மூலப்பகுதி அப்படியே மனதிற்குள் பதிந்துவிடுகின்றது. ஆங்கிலத்திலும், தமிழிலும் அமைந்துள்ள உரைப்பகுதிகள் எதிரொலி செய்வனவாக அமைக்கப் பெற்றுள்ளன. அவை உரைப்பகுதிகள் என்பதைக் கேட்பவர் உணரவேண்டும் என்பதற்காக இவ்வேற்பாடு செய்யப் பெற்றிருக்க வேண்டும்.

 

இந்த ஒலிக்கோப்பு திருக்குறளுக்கு அணிசெய்யும் நல்ல கோப்பு. ஒவ்வொரு மனிதருக்கும் திருக்குறளுக்குத் தன்னால் ஆன ஏதாவது ஒரு தொண்டினைச் செய்தாக வேண்டும் என்ற கடப்பாடு உண்டு. அம்மனிதர் தமிழ் மண்ணில் பிறந்த்தற்கு, வாழ்ந்ததற்கு அதுவே அடையாளமாகும். அலேமன் ரமேஷ் ராவ் என்ற இந்த குறுவட்டு உருவாக்குநர் பிறப்பில் தெலுங்கர். வசிப்பது வாழ்வது தமிழகத்தில். ஆங்கிலத்தைப் பரப்புவது, இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டுவது அதற்கான நிகழ்வுகளை நடத்துவது என்பது இவரது தொழில். இவ்வகையில் தமிழகத்தில் வசித்த்தன் பயனாக திருக்குறளை நுகர்ந்து, அதனை மற்றவர்களுக்கும் எடுத்துச் செல்லும் நல்ல முற்சியை இவர் மேற்கொண்டுள்ளார். முன்னே சொன்னதுபோல இவரின் கடப்பாட்டை இனிமையுடன் நிறைவேற்றியுள்ளார்.

 

திருக்குறளுக்கு உரை வகுத்து, இருமொழிகளிலும் குரல் தந்துள்ள அலேமன் ரமேஷ் ராவ்  திருக்குறளுக்கான உரைப்பகுதியை கவனமாக கையாண்டுள்ளார். இறைமாட்சி என்பது பொருட்பாலின் முதல் அதிகாரம். இதில் மன்னனுக்கான இலக்கணம் திருவள்ளுவரால் சுட்டப் பெற்றுள்ளது. இவ்வதிகாரத்தில் வேந்தன், மன்னன் போன்ற சொற்களை வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். தற்காலத்தில் மன்னராட்சி முறை இல்லாமையால் அதனை மன்னருக்கான இலக்கணம் என்று இச்சமுகம் விட்டுவிடுமோ என்ற அச்சம் எழுவதுண்டு. ஆனால் அலேமன் ரமேஷ் ராவ் இச்சொற்களுக்குத் தலைவர் எனப் பொருள் கொள்ளுகின்றார்.இதன்  காரணமாக இறைமாட்சி தலைவர்களுக்கு இலக்கணம் காணும் அதிகாரமாகி விடுகின்றது.

‘‘இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவருக்கும் நல்லாற்றின் நின்ற துணை’’ என்ற இல்வாழ்க்கை அதிகாரக் குறளுக்கு அலேமன் ரமேஷ் ராவின் உரை பின்வருமாறு ‘‘ தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தைகள் ஆகிய உறவுகளைப் பொறுப்போடு பேணுவது குடும்பத் தலைவனின் இன்றியமையாத கடமையாகும்.” இதில் இயல்புடைய மூவர் என்பதற்கு அவர் தாய், தந்தை, மனைவி ஆகியோரைக் காட்டுகின்றார். இக்காலத்தில் இம்மூவரையும் காக்க இயலாமல் நடுத்தெருவில் விட்டுவிடுகிற சூழலே அதிகமாக இருக்கிறது என்பதால் அவரின் உரை இவ்வாறு அமைந்துள்ளது. இதில் நான்காவதாக குழந்தைகள் என்பது சேர்க்கப் பெற்றுள்ளது. குறளில் மூன்றுதானே உள்ளது உரையில் நான்குபேரைச் சொல்லியுள்ளாரே என்ற சந்தேகம் எழலாம். இயல்புடைய மூவர் என்பதில் தாய் தந்தை மனைவி அடங்குகின்றனர். வழக்கத்தில் இயல்பானது, சிறப்பானது என்று இருபிரிவு உண்டு. இவ்விருபிரிவினரையும் சுட்ட வந்த வள்ளுவர் சிறப்பாக காக்கவேண்டியவர்களும் உண்டு என்பதால் இயல்புடைய மூவர் என்றார். இங்கு குழந்தைகள் என்பவர்கள் சிறப்பு நிலைப்பட்டவர்கள். மக்கட்பேறு என்று தனிநிலையில் குழந்தைகள் பற்றி சிறப்புகள் தனி அதிகாரத்தில் குறிக்கப்படுவதால் இக்குறுவட்டின் உரையாசிரியர் இயல்பான மூவரையும் காட்டிச்  சிறப்பாக குழந்தைகளையும் காட்டி  இக்குறளுக்கு அணிசேர்த்துள்ளார்.

 

இதுபோன்று பல குறட்பாக்கள் தற்காலச் சிந்தனையின் விளைந்த உரைகளைக் கொண்டு அமைந்துள்ளன. ‘‘விருந்து புறத்த்தாத் தான்உண்டல் சாவா மருந்து எனினும் வேண்டற்பாற்று அற்று””” என்ற குறளுக்கு சாவா மருந்தினை உண்டுகொண்டு இருந்தாலும் விருந்தினர் வீட்டில் வெளியில் நின்றால் அவ்வாறு உண்ணும் அமிழ்தத்தை விட்டுவிட்டு விருந்தினரை வரவேற்று உபசரிக்க வேண்டும் என்று புதுப் பொருள்  கொள்ளுகின்றார் இவ்வுரையாசிரியர். இதுவரை சாவா மருந்து என்றாலும் விருந்தினர்களை வெளியில் அமரவைத்துவிட்டுத் தான் மட்டும் உண்ணக் கூடாது என்று பொருள் கொண்டு வந்த நிலை இங்குச் சற்று மாறியிருப்பதை உணரமுடியும்.

 

முக நக நட்பது நட்பன்று என்ற குறளுக்கு இவர் அளித்துள்ள விளக்கம் ‘‘ முகத்தில் மட்டும் புன்னகை பூத்து வருவது நட்பைக் குறிப்பது அல்ல. நல்ல நட்பு மனமகிழ்ச்சியோடு சந்திக்கும் நண்பர்களிடம் வெளிப்படுவது’’ என்பதாகும். கவிதை கலந்த்தாக இந்த உரை அமைக்கப் பெற்றுள்ளது. இதனை ஒலிவடிவில் கேட்கும்போது குறளுக்கு கவிதை வடிவான உரையோ என்று எண்ணத்தக்க அளவிற்கு சொற்சேர்க்கை அமைந்துள்ளது.

 

இவரின் உரைப்பகுதி பல இடங்களில் இரத்தினச் சுருக்கமாக நாகரீகமாக அமைந்துள்ளது. தகை அணங்குறுத்தல் என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள நோக்கினாள் நோக்குஎதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்னது உடைத்து” என்ற குறளுக்கு  தலைவியின் பார்வை ஒரு படையே பார்ப்பதைப் போன்று இருந்த்து என்று பொருள் கண்டுள்ளார். ‘‘கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறறியும் ஐம்புலனும் ஒண்டொடிக் கண்ணே உள” என்ற குறளுக்கு இவர் அளித்துள்ள விளக்கம் ‘‘பெண் என்பவள் ஐந்து புலன்களையும் உயிர்ப்பிக்கும் சக்தி உடையவள்” என்பதாகும். இது ஒரு நாகரீகமான இரத்தினச் சுருக்கமான உரைப்பகுதி ஆகும்.

 

ஆங்கிலத்தில் வழங்கியுள்ள உரைப்பகுதிகள் கேட்பதற்கு இனிமையாகவும், உயர்தரமான ஆங்கில உச்சரிப்புடனும் உள்ளது. பல இடங்களில் இவரின் திருக்குறளுக்கு ஆங்கில மொழியாக்கம் சிறப்புடையதாக உள்ளது.  கடவுள் வாழ்த்து என்தற்கு ஆங்கில ஆக்கமாக Trust in the almighty  என்பதைக் கொண்டுள்ளார். அறன் வலியுறுத்தல் என்பதன் ஆக்கமாக  good virtue என்பதைக் கையாண்டுள்ளார். ஆங்கில உரை ஆக்கமும் சிறப்புடைய ஒன்று. மேற்காட்டிய தமிழ் உரைவடிவச் சிறப்புகள் அப்படியே ஆங்கிலத்திலும் பின்பற்றப் பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

இந்த வகையில் பற்பல உரைப் புதுமைகளையும் கேட்க இனிமையையும் பயன்படுத்த எளிமையையும் கொண்டு விளங்கும் இந்தக் குறுவட்டு திருக்குறளைப் பரப்பும். உலக அளவில் ஒலிவடிவில் பரப்பும். இதனைப் பெற விரும்பும் அன்பர்கள் arameshrao@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளுங்கள். இக்குறுவட்டின் விலை ரூபாய் 150 மட்டும். இதனை சீமானூர் எஸ். பிரபு வெளியிட்டுள்ளார். இதன் வெளியிட்டு விழா மற்றும் அறிமுக விழா சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் 21.12.2012 அன்று மாலை மூன்று மணி அளவில் நடைபெற்றது. இக்குறுவட்டினை உலகத்திருக்குறள் பேரவையின் தலைவர் தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்கள் வெளியிட்டார். அலேமன் ரமேஷ் ராவ் அவர்கள் உடனிருக்கு இந்நிகழ்வு நடைபெற்றது, திருக்குறளை திசைதோறும் பரப்பும் முயற்சிகளுக்கும், பரப்பும் அன்பர்களுக்கும் தலைவணங்குவோம்.

Series Navigationஇரு கவரிமான்கள் –மணலும், (வாலிகையும்) நுரையும்! (6)