திருமணக் கவிதைகள்

Spread the love

 

ஆங்கிலத்தில்மத்ஸுகி மஸுதானி 

தமிழில்: ட்டி. ஆர். நடராஜன்    

1.

 

நான் என் மனைவியைச் சந்தித்தேன்

காத்மாண்டுவில்.

நாங்கள் இருவரும் சேர்ந்து

பல மாதங்கள் பிரயாணித்தோம்.

கனடாவை அடைந்து நின்றோம்.

அங்கேயே தங்கி விட்டோம்.

மூன்று குழந்தைகளை வளர்த்த பின்பும்

பிரயாணிகளைப் போலவே இருந்தோம்.

கஃபேக்களில் திரிவதும்

தெருக்கடைகளை வலம் வருவதுமாக

அக்கம்பக்கத்தில் நடமாடினோம்.

செல்வதற்கு

வேறு இடமின்றி.  

 

2.

 

என் மனைவி சொல்லுகிறாள், 

நீ எப்போதும் 

உன் மேஜை முன் இருக்கிறாய்.

நாள் பூராவும்,

காலையிலிருந்து இரவு வரை,

தினந்தோறும்,

வருஷா வருஷம்.

பார்த்தாலே தெரிகிறது

அது உன் பழைய வழக்கமென்று.

கை மீறிச் செல்வதற்குள்

நாம் ஏதாவது

இதை விடக் காத்திரமான

செயலை மேற்கொள்ள வேண்டும்.

 

3.

 

நேர்மறையை உறுதி செய் 

எதிர்மறை வேண்டாம்.

வாழ்க்கையைச் செலுத்தும் இவ்வளவு சுலபமான வழியை

என் மனைவி புரிந்து கொள்வதில்லை.

அவள் உணர்ச்சிகளை முன் வைத்து 

வாழ்க்கையை நடத்த வேண்டும் என்கிறாள்.

அவள் சொல்கிறாள்: 

வாழ்க்கை கொடுமையாய் இருக்கிறது. 

சுற்றியிருப்பவர்கள்  ரோபோக்களாக இருக்கிறார்கள்.

அவளது உணர்ச்சி மிகுந்த வாழ்க்கைப் பார்வை

எனக்குப் பொறாமையை ஊட்டுகிறது.

 

4.

 

பெருஞ் சத்தத்துடன் வெகு வேகமாக

சுமையூர்தியைக் கொண்டு வந்து நிறுத்தினாள்.

இளஞ்சிவப்புக் கால்சட்டையும்

ஊதா நிற சட்டையும் அணிந்திருந்தாள்.

வலது கையில் கறுப்பு நிறக் கைப்பை.

இடது கையைக் காற்றில் வீசிக் கொண்டு

வாசல் கேட்டைப் பிடித்துத் தள்ளி விட்டு உள்ளே வந்தாள்

“நான் திரும்பி வந்தாச்சு !” என்று பெருங் குரல் எழுப்பியவாறே.

5

அவள் கனவில்

நான் அவளை ஒரு

முன்பின் தெரியாத நகரத்தில்

காரிலிருந்து வெளியே தள்ளி விட்டேன் என்று

என் மனைவி சொன்னாள்.

வீட்டுக்குத் திரும்பி வருவதற்குள்

போதும் போதுமென்றாகி விட்டது என்றாள்

அதற்காக என்னிடம் மன்னிப்புக் கேள்

என்கிறாள். 

 

6.

ஒரு

பார்ட்டியிலிருந்து

திரும்பி வரும்போது

தாங்கமுடியாத வயிற்றுவலி

எனக்கு ஏற்பட்டது.

போதையில் இருந்த என் மனைவி

அவள் என்னை எவ்வளவு தூரம் காதலிக்கிறாள் என்றும்

என் கஷ்டத்தைப் பார்த்து எவ்வளவு தூரம்

வேதனைப்படுகிறாள் என்றும் உருகினாள்.

நான் இறந்து கொண்டிருப்பது போல உணர்ந்தேன்.

பிறகு அவள் சொன்னாள் :

“மகர ராசிக்காரர்கள் எப்போதும் வயிற்று

உபாதையால் கஷ்டப்படுவார்கள்;

ஏன் தெரியுமா?”

நான் பதிலளித்தேன்:

“நாங்கள் என்ன சொல்ல விரும்புகிறோமோ

அதைச் சொல்ல மாட்டோம்.”

“நீ என்ன சொல்ல விரும்புகிறாய்?”

“ஷட்டப்” .

ஆனால் அவள் பேச்சை நிறுத்தவில்லை.

பேசிக் கொண்டும்

ஆடிக் கொண்டும் இருந்தாள்.

நான் இறந்து கொண்டிருப்பதாக

இன்னும் நினைத்தேன்.

 

7.

நான் சொல்கிறேன் “நாங்கள்” என்று.

என் மனைவியையும் என்னையும் குறித்து.

அவளும் சொல்கிறாள்:

“நாங்கள்” என்று.

அதன் அர்த்தம் அவளும் நானும்.

சிலசமயங்களில் அவை விசேஷ அர்த்தமுடையவை

“நாம்” என்பது ஒரே சமயத்தில்

மகிழ்ச்சியையும் துக்கத்தையும் குறிக்கக் கூடும்.

நான் இதைப் பற்றி ரொம்பவும் கவலைப்படக் கூடாது –

“நாங்கள்” என்று சொல்லுவதை அவள் நிறுத்தும் வரை !  

 

8.

ஓர் இளம்பெண் என்னைக் கேட்டாள்,

“நீண்ட கால மணவாழ்க்கையின் ரகசியம் என்ன?”

நான் பதிலளித்தேன்,

“இருவரும் காதலிப்பதை நிறுத்தி விட்டால்,

அதுதான் மணவாழ்க்கையின் முடிவு.

ஆனால் இருவரில் ஒருவர் காதல் வயப்பட்டுக் கிடந்தாலும்

அதன் தொடர்ச்சி இருக்கும்.”

அவள் சொன்னாள்: “என்ன கண்ணராவி!”

மேலும் நான் தொடர்ந்தேன்,

“இதுவும் மாறலாம்.”

ஒரு வாரம் கழித்து அவளுடைய புது நாயுடன்

அவளைப் பார்த்தேன்

மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டாள்.

 

((மத்ஸுகி மஸுதானி டோக்கியோவிலிருந்து வான்கூவருக்குக் குடி பெயர்ந்தவர். கனடிய எழுத்தாளர்களின் படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். “திருமணக் கவிதைகள்அவரது முதலாவது  கவிதைத் தொகுப்பு.)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Series Navigationவெறியாடல்உலக நடை மாறும்