திரை விமர்சனம் – எனக்குள் ஒருவன்

கனவால், நிஜ வாழ்வு விபரீதமாகும் ஒருவனின் விசித்திரக் கதை!

சித்தார்த் திறமையான நடிகர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஆச்சர்யம் புதுமுகம் தீபா சன்னதி. அழகாகவும் இருக்கிறார். அசத்தலாகவும் நடிக்கிறார். அவர் சமந்தா ஜாடையாக இருப்பதில் ஏதும் உள்குத்து இல்லை என நம்புவோம்.

சிம்புவுக்குப் பிறகு, எடுப்புப் பல்லோடு வலம் வருகிறார் சித்தார்த். ஒரு சென்டிமெண்டாக இந்தப் படம் வெற்றி பெறும். உடல் மொழி, நடை, வசன உச்சரிப்பு எனப் பிரமாதப்படுத்தி இருக்கிறார் சித்து.

நிஜத்தில் பிரபல நடிகர். கனவில் டப்பா தியேட்டரிலேயே பிறந்து வளர்ந்த வெள்ளந்தி வாலிபன் என பட்டையைக் கிளப்பும் சித்தார்த்தின் நடிப்பிற்கு விருதுகள் நிச்சயம்.

இயக்குனர் பிரசாத் ராமரிடம் இன்னொரு கார்த்திக் சுப்புராஜ் ஒளிந்திருக்கிறார். அவருடைய அடுத்த படமே அவரது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

கனவும் நனவுமாக எல்லோருக்குமே இரட்டை வேடங்கள். அதில் நாயகன் நாயகி தவிர்த்து மனதில் நிற்பவர் ‘ ஆடுகளம் ‘ நரேன். திரை அரங்க முதலாளியாகவும் நடிகனின் மேனேஜராகவும் அவர் காட்டும் வித்தியாச நடிப்பு சிற்பி செதுக்கிய சிலை. வெல் டன்!

சில கணங்களே வரும் கனவு மாத்திரை கம்பெனி முதலாளி வஜ்ரவேலு, ஜான் விஜய்யின் அதீத சேஷ்டைகளால் காணாமல் போகிறார். பல படங்களில் பார்த்த ஒரே மாதிரியான வசன உச்சரிப்பு வெறுப்பேற்றுகிறது. சுய சோதனை செய்ய வேண்டிய நேரம் அவருக்கு.

சந்தோஷ் நாராயணன் அசத்தல் பாட்டுகளை போட்டிருக்கிறார். எல்லா இசை வாசனைகளையும் தொட்டு, அதை நீங்காவண்ணம் பாடல்களாக போட்டு பல படிகள் முன்னேறி இருக்கிறார் அவர்.

“ நானாக நான் இருந்தேன் “ கானா ஸ்டைலில் ஒரு கலக்கல் பாட்டு. அதில் இசையும் கோபி அமர்நாத்தின் கேமராவும் கைக்கோர்த்து களியாட்டம் போடுகின்றன. “ பூ அவிழும் பொழுது “ இன்னொரு மென் பாடல். காட்சிகளைத் தவிர்த்து, கண்களை மூடி ரசிக்கலாம். சமயத்தில் ‘ லாலாலா’ பெண் குரலை தவிர்த்தால் இவர் பின்னணி இசையில் இன்னும் உயரம் போக முடியும்.

விக்னேஷ் பிரபல நடிகன். அவனுடைய காதலி திவ்யா. திவ்யாவின் லட்சியம் திரைப்பட பிரபலமாக ஆவது. விக்னேஷின் கனவு அவளை மணந்து இதயச் சிறையில் வைப்பது. தூக்கம் வராத வியாதிக்குத் தீர்வாக அவன் லூசியா எனும் கனவு மாத்திரையை உட்கொள்ள ஆரம்பிக்கும்போது, ஆரம்பிக்கிறது சிக்கல். நிஜத்தின் தோல்விகளை கனவில் சரி செய்ய முயன்று அதன் சுமை தாங்காமல் தற்கொலைக்கு துணிகிறான் விக்னேஷ். அவனுடைய கனவு நாயகன் விக்கி ஒரு சாதாரணன். அவனைக் காதலிக்கும் திவ்யா ஒரு நடுத்தர குடும்பப் பெண். சொற்ப சம்பளம், சுகமான வாழ்க்கை என போகும் கனவிற்கு முற்றுப் புள்ளி வைத்து நிஜத்துக்கு விக்னேஷ் திரும்புகிறானா என்பது க்ளைமேக்ஸ்.

நிஜத்தை கருப்பு வெள்ளையாகவும், கனவுகளை வண்ணங்களாகவும் காணும் விக்னேஷ் பாத்திரம் சரியாக செதுக்கப்பட்டிருக்கிறது. சிறு வயதில் பெற்றோரை இழந்து அதோடு வண்ணங்களை உணரும் பார்வைக் குறைபாட்டையும் பெறும் விக்னேஷ், படம் முழுக்க கருப்பு வெள்ளை, வண்ணம் என்று மாறி மாறி வருவது நல்ல உத்தி. கடைசி காட்சியில் கனவு முடிந்து, போக நிஜ வாழ்வில் அவை பார்வையாளனுக்கு வண்ணமாக மாறுவது ரசிக்க வைக்கிறது.

பிரசாத் ராமரிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறது தமிழ் திரையுலகம். அதை அவர் நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது.

0

Series Navigationமகளிர் தினச் சிந்தனை ஊர்மிளைபேருந்து நிலையம்