தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

தீர்மானம் – 2

தி. ஜானகிராமனால் 1957ல் எழுதப்பட்ட சிறுகதை. ஒரு சிறுகதையின் பரிபூரண லட்சணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சான்றாக இந்தக் கதை நிற்கிறது. இக்கதையின் அமைப்பு அதன் வரையறுக்கப்பட்ட எல்லைகளை நன்கு உணர்ந்து செதுக்கப்பட்டுள்ளதால் அனாவசியப் பிசிறு, கோணல்மாணல் அற்று ஒரு பல்லவ சிற்பம் போல அமைந்துள்ளது. ஜானகிராமன் எப்போதும் வணங்கும் சொற்செட்டும் சொல் பொறுப்பும் கதையின் சம்பாஷணைகளிலும் வர்ணனைகளிலும் பிரமிக்கும் அளவு பதிந்து கிடக்கின்றன. இதை இங்கே அழுத்திச் சொல்லக் காரணம், இன்றுள்ள சூழலில் ஒருவர் தனது சிறுகதையில் இயற்கையின் பலவேறுவித விகசிப்புகளை (மரங்கள், வயல்கள், நதிகள் இன்னபிற) வருணிக்கிறேன் என்று ‘நடந்தாய் வாழி காவேரி’யைப் குப்புறத் தள்ளி விடுவது போல  வருணிக்கும் பிரம்மப்பிரயத்தனத்தில் மூழ்கி விடுகிறார். சரி, பறவைகளின் இன்னிசையை, அழகை வருணிக்கிறேன் என்று இன்னொருவர் மறைந்து விட்ட சலீம் அலியின் இடத்தைப் பிடிக்கப் பார்க்கிறார். பொறுப்பும் சேட்டும் இல்லாத இவற்றுக்கு நடுவில் வாசகன் இலக்கிய மேன்மையைத் தேடுகிறான்.

.     

ஸிந்துஜா

“தீர்மானம்” பத்து வயது நிரம்பிய சிறுமியின் வாழ்வில் எதிர்ப்படும் ஓர் உன்னதத் தருணத்தைப் பரிசீலிக்கிறது. விசாலிக்குத் திருமணமாகி விட்டது.. ஆனால் இன்னும் கணவன் வீடு செல்லவில்லை. அவள் கணவனுக்கு அவள் இரண்டாவது மனைவி ! வசதி நிரம்பிய விசாலியின் தந்தை அவ்வளவாக வசதியில்லாத மாப்பிள்ளையையும் மாப்பிள்ளை வீட்டாரையும் மதிக்காமல் பெண்ணைத் தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கிறார். கதை ஆரம்பத்தில் விசாலியின் வீட்டுக்கு அவளது பெரிய மச்சினனும் பெரிய மாமனாரும் சின்ன மாமனாரும் வருகிறார்கள். அப்போது விசாலியின் வீட்டில் அவளும் அவளது அத்தையும்தான் இருக்கிறார்கள். அவள் தகப்பனார் வெளியே போயிருக்கிறார். வந்தவர்கள் விசாலியைத் தங்களுடன் உடனே அழைத்துச் செல்ல வேண்டுமென்று அவள் அத்தையிடம் கூறுகிறார்கள். அத்தை அவர்களிடம் தன் சகோதரன் வரும் வரை இருக்குமாறும் சாப்பிட்டு விட்டுப் போகுமாறும் கூறுகிறாள். அவர்கள் மறுத்து விசாலியை உடனடியாகக் கிளம்பி வருமாறு சொல்கிறார்கள்.

“வராவிட்டால்?’ என்று அத்தை கேட்கிறாள். ‘அதைப் பற்றி யோசிக்கவில்லை இன்னு’மென்கிறார்கள் வந்தவர்கள். குழந்தை அவர்களுடன் கிளம்பி விடுகிறாள். சற்றுக் கழித்து வீட்டுக்கு வரும் விசாலியின் தந்தையிடம் அத்தை விசாலி கிளம்பிப் போய்விட்டதைத் தெரிவிக்கிறாள். அவர் அதிர்ச்சி அடைந்து அத்தை பிசைந்து கொடுக்கும் நாலு பேருக்கான சாப்பாட்டுப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு வண்டியைப் பிடித்து விரைகிறார். வழியில் விசாலியையும் மற்றவர்களையும் பிடித்து விடுகிறார். கையுடன் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை அவரும் குழந்தையும் சாப்பிடுகிறார்கள். மீத சாதத்தை ஆற்றில் தூக்கி எறிந்து விடும் அவர் விசாலியிடம் போகுமிடத்தில் ‘சமத்தா இரு’ என்று சொல்லி விட்டு மற்றவர்களைப் பார்க்காமல் திரும்பிப் போகிறார்.

பத்து வயதுச் சிறுமியின் தீர்மானம் நம்மைத் திகைக்க வைக்கிறது. கதை, ஆரம்பிக்கையில் அவள் சிநேகிதியுடன் சோழி விளையாடும் பருவத்தில்தான் இன்னும் இருக்கிறாள் என்கிறது. கணவனின் உறவினர்கள் அவளைக் கூட்டிக் கொண்டு போக வரும் போது அவர்களுக்கும் விசாலியின் அத்தைக்கும் நடக்கும் பேச்சு இரு வீட்டாருக்கும் உள்ள உறவின் நிலைமையை எப்படி எடுத்துக் காட்டுகிறது என்று பாருங்கள்:

“குழந்தே…நீலகண்டன் இப்ப கையோடு உன்னை அழைச்சுண்டு வரச் சொன்னான். கிளம்பி வந்திருக்கோம்…என்ன சொல்றே? லெட்டர் எழுதி உங்கப்பா பதில் போடலியாம்…சரி அப்பா எங்கே?”

“அவ அப்பா கடைத் தெருவுக்குப் போயிருக்கான். சித்தே உட்காருங்கோ. இன்னும் ரெண்டு நாழியிலே வந்துடுவான்…”

“ஓகோ… ஏம்மா குழந்தே! நீலகண்டன் கொண்டு வந்து விடுன்னு கடுதாசி போட்டானாம். பதிலே போடலியாமே உங்கப்பா?…

கலியாணத்திலேதான்உங்கப்பா நன்னா செய்யலே…இளையாளா கொடுக்கறதுக்கு இது போறும்ன்னு நெனச்சிப்பிட்டார் போலிருக்கு. இளையான்னா கிழவனா அவன்? வயசு இருபத்தியாறுதானே ஆறது! அந்தப் பொண்ணு திடீர்னு பறக்க விட்டுட்டு வயத்தில் இருந்த குழந்தையோடயேகண்ணை மூடிப்பிட்டா….எதிலே குறைந்து போயிட்டான் அவன்? நிலம் இல்லையா? வீடு இல்லையா? .உங்கப்பா சாதாரண மரியாதை கூட காண்பிக்க மாட்டேங்கிறாறே…”      

“இதெல்லாம் எதுக்காகக் குழந்தை கிட்ட பேசறேள்? அது என்னத்தைக் கண்டது பாவம் !”

“அதுவும் சரிதான். குழந்தே, அவன் ஒண்டிக்காரன். வீட்டைப் பாத்துக்க நாதியில்லே. எங்க குடும்பமா, அது ஒரு சமுத்ரம் ! உன்னைப் போய் ‘வரயா, இல்லையா’ன்னு கேளுங்கோ. வந்தா அழச்சுண்டு வந்துடுங்கோ’ன்னான்.”

“வராட்டா?” – அத்தை.

“அதைப் பத்தி யோசிக்கலைன்னும்.” 

“இப்படிக் கூடத்தில் கூண்டிலே நிறுத்தறாப் போல நிக்கவச்சு இப்படிக் கேட்டா…குழந்தை என்ன பண்ணும்? கலங்க அடிக்கிறேளே? அதுக்கு என்ன தெரியும்? பச்சைக் குழந்தை அவ !…” அத்தையின் குரல் வெறுப்பாகப் புகைந்தது…..

“அத்தை !” என்று நிமிர்ந்தது பெண். உள்ளே போயிற்று. அத்தை அதோடு அடுக்களைக்குள் சென்றாள்.

“நான் போயிட்டு வரேன் அத்தை!”

“போயிட்டு வரியா! எங்கே?”

“அவரோட!”

“என்னடீது?”       

“ஆமாம் அத்தை” என்று சொல்லிக் கொண்டே கொடியில் தொங்கிய இரண்டு பாவாடைகளையும் சட்டைகளையும் எடுத்து மூட்டையாகக் கட்டிக் கொண்டது பெண். ஜாடியிலிருந்து ஒரு முட்டைத் தேங்காயெண்ணையை எடுத்துத் தலையில்  தடவி மரக்கட்டைச் சீப்பால் வாரிப் பின்னிக் கொண்டது, ஒரு நிமிஷத்துக்குள். மாடத்திலிருந்து மரச் செப்பைத் திறந்து ஒரு குங்குமப் பொட்டு. மூட்டை இடுப்பில் ஏறிற்று.

“”போயிட்டு வரேன் அத்தை !” 

“நிஜமாத்தானா?”

இந்தச் சிறுகதையில் விசாலியின் தகப்பனார் தீர்மானிக்கிறார். அவள் கணவன் நீலகண்டன் தீர்மானிக்கிறான். விசாலி தீர்மானிக்கிறாள்.  விசாலியின் தீர்மானம்தான் முக்கியத்துவம் பெறுகிறது. பத்து வயதுச் சிறுமியின் மனதில், அவள் மீது பாசத்தைக் கொட்டும் தந்தையை மீறித் தீர்மானம் எடுக்க எங்கேயிருந்து வந்தது அந்த மனமுதிர்ச்சி? பெரியவர்களின் பேச்சிலிருந்து வெளிப்படும் அவளது தந்தையின் 

அலட்சியத்தையும், கர்வத்தையும் விசாலி கடந்து போகிறாள் – தன் தீர்மானம் வழியே. கதையில் வரும் விசாலியின் சிநேகிதியான ராதையின் அம்மா விசாலி கிளம்பிச் செல்லுவதைப் பார்த்து “அ!” என்று கண்களில் நீர் முட்டிக் கொண்டு வர நிற்கிறாள். “என்ன தீர்மானம் இதுக்கு ! அவாதாம் தம் மனுஷான்னு யார் சொல்லிக் கொடுத்தா இதுக்கு !” தழதழப்பு சொல்ல விடவில்லை.

இந்தத் திடுக்கிடலையும் வியப்பையும் வாசகரும் அடைகிறார்.    

விசாலி வயதில் சிறியவளாயிருந்தாலும், செயலில் பெரியவளாய்  மனஉறுதி படைத்தவளாய் இருக்கிறாள். அவளது வாழ்க்கையை மற்றவர்கள் முடிவு செய்ய முடியாது; அது அவளின் தீர்மானத்தைப் பொறுத்தே இருக்கும் என்பதில் நான் அவளின் சுதந்திர மனப்பான்மையைப் பார்க்கிறேன். பெண் விடுதலை விசாலியில் ஆரம்பித்து அம்மணி வரை போகின்றதா? பெண் விடுதலை என்றதும் ஆண்களைக் காலில் போட்டு நசுக்குவதும், இல்லையென்றால் அவர்களின் அந்தரங்க பாகங்களைச் சிதைத்து விட வேண்டும் என்று கூக்குரலிடுவதும்தான் என்று ஒரு அழிவின் அடிப்படையில் புளகாங்கிதம் பெறும் நவீன தமிழ் மரபை விட வலிமையை வலிமையால் எதிர் கொள்ளும் ஒரு constructive மரபு ஜானகிராமனின் எழுத்தில் இடம் பெற்றிருப்பதாக நான் நம்புகிறேன். இது பூடகமாக, அடங்கிய குரலில் வருகிறது. இரைச்சலாக அல்ல. 

தந்தை கொண்டிருக்கும் எண்ணத்துக்கு மாறாகத் தீர்மானம் எடுக்கும் விசாலி ஒரு போதும் அவரை மரியாதைக் குறைவாக நினைப்பதில்லை. அவர் அவளை வழியனுப்பி விட்டுத் திரும்ப வீட்டுக்குப் போகிறார். “தன் வண்டியில் ஏறிக் கொண்ட அவர் வேறு பக்கமே திரும்பிக் கொண்டிருக்கிறார்.. அவருக்குக் கோபமா அல்லது வருத்தமா என்று விசாலி அவர் வண்டியையே பார்த்துக் கொண்டு இருக்கிறாள். அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை. ஹூம் நல்ல அப்பா இது ! என்று விசாலியின் முகத்தில் புன்னகை அரும்புகிறது.” 

கதையின் மற்ற முக்கிய பாத்திரங்களான நீலகண்டனின் உறவு ஜனம் விசாலி நடந்து கொள்வதைப் பார்க்கிறது’ “உலகத் தாயைக் கண்ட மோனத்தில் அந்த உள்ளங்கள் ஒடுங்கிக் கிடந்தன. பெரிய மாமனார் உதட்டைக் கடித்து உணர்ச்சியை விழுங்கிக் கொண்டிருந்தார்” என்று கதை முடிகிறது.

பால்ய காலத் திருமணத்தை எதிர்த்து அல்லவா சமூகப் பொறுப்புடன் இம்மாதிரிக் கதையை எழுதியிருக்க வேண்டும் என்று யாரோ சொன்னார்கள். அது பிரச்சார எழுத்தர்களின் வேலை. நாம் இங்கு காண்பது ஒரு கலைஞன் தனது தரிசனத்தை வெளிப்படுத்துவதை.. 

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 226 ஆம் இதழ்