தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -8

Spread the love

ஸிந்துஜா 

ஸ்ரீராமஜெயம்  

ஆமாம். ராகவாச்சாரி திருடி விடுகிறார். அச்சாபீஸில் ப்ரூப் ரீடராக அவர் வந்து இருபத்தி ஆறு வருஷமாகிறது. வயது, ஊழிய காலம் இரண்டிலும் முதலாளிக்கு அடுத்த பெரியவர் அவர்தான். அவருடைய திருட்டைக் கண்டுபிடித்து விடுவது காவலாளி

வேலுமாரார். அவன் வேலைக்குச் சேர்ந்து இருபது வருஷங்களாகிறது. இந்த இருபது வருஷங்களில் ஒருநாள் கூட ராகவாச்சாரி ஆபீஸ் ஆரம்பிக்கிற எட்டரை மணிக்கு முன்னால் வந்து அவன் பார்த்ததில்லை. ஒரே ஒருநாள் அவர் இரண்டு நிமிஷம் நேரத்துக்கு முன்னால் வந்தார். அன்று ஜப்பான்காரன் சென்னை மீது குண்டு வீசிவிட்டுப் போனான் !  

ராகவாச்சாரி எட்டு முப்பத்தைந்திலிருந்து ஒன்பதேகால் மணிக்குள் ஏதாவது ஒரு நிமிஷத்தில் ஆபீசுக்குள் வருகிற வழக்கம். ‘ஏன் லேட்?’ என்று அவரிடம்  யாரும் கேட்டதில்லை. அவருடைய ஒட்டுப் போட்ட சட்டையையோ இடது கண்ணையோ (அம்மை போட்டுப் பழுதாகிவிட்டது) பார்த்து அதன் பின்னால் மறைந்து ஏங்கின நாலு பெண் குழந்தைகளையும் மூன்று ஆண் குழந்தைகளையும் முதலாளி பார்த்து விட்டாரோ என்னவோ….சாய்த்தாற்போல இருந்து விட்டார். இன்று வரை  அவரை ஏன் தாமதம் என்று கேட்டதில்லை.

வேலுமாராருக்கு அவர் மேல் தனி அபிமானம். ஒரு மணி நேர மதிய இடைவேளையில் மற்றவர்கள் மகாவிஷ்ணுவே வந்தாலும் மரியாதை காட்டாமல் வேலையில் இருந்து விடுபட்டு ஓடுவார்கள். ஆனால் ராகவாச்சாரி அதில் சேர்த்தியில்லை. தன் இடத்திலேயே உட்கார்ந்து, வீட்டிலிருந்து கொண்டு வந்த டிபன்பாக்சில் இருக்கும் சாதத்தைச் சாப்பிட்டு முடிக்க ஐந்து நிமிஷம் எடுத்துக் கொள்வார். அவ்வளவுதான். அவ்ருடைய இந்தப் பெருந்தன்மைக்காக  வேலுமாராரின் மனதில் அவருக்காக ஒரு பெரிய இடமே ஒழித்து வைக்கப்பட்டு இருந்தது. அவர் கேட்கும் வெற்றிலை பாக்கைக் கர்மசிரத்தையோடு வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பான். என்னவோ அவர் மேல் அவனுக்கு ஒரு தனிப் பரிவு, தனி அனுதாபம், வறுமை இப்படிப் பொறுமையும் பெருமையாக நடமாடுகிற வித்தை அவனைக் கவர்ந்து விட்டிருந்தது.    

ஒருநாள் ராகவாச்சாரி எட்டு மணிக்கே வேலைக்கு வந்து  வேலுமாராரை ஆச்சரியப்படுத்துகிறார். அந்த நேரத்துக்கு ஆபீசில் வேறு யாரும் வந்திருப்பதில்லை.  வேலுமாராரின் ஆச்சரியத்துக்கு “ஒரு நாளாவது ஒழுங்காயிருப்போமே!” என்று ராகவாச்சாரி சிரிக்கிறார். நாலு நாட்களாய் இது நடக்கிறது. நாலாம் நாள் அவர் மறுநாள் ஆபீஸ் வரப்போவதில்லை, லீவு என்று  வேலுமாராரிடம்  சொல்லி விட்டுப் போகிறார். ஆனால் மறுநாள் ஏழேமுக்காலுக்கே வந்து விடுகிறார். வேலுவின் கேள்விக்கு அவர் கறிகாய் வாங்க வெளியே வந்ததாகவும் முதலாளியிடம் பணம் கேட்க என்று ஆபீசுக்கு வந்திருப்பதாகவும் சொல்லுகிறார்.

ஆபீசில் ராகவாச்சாரி எங்கு வேண்டுமானாலும் போகலாம் வரலாம். அந்த உரிமை அவருக்கு இருந்தது. ஒவ்வொரு இடமாகப் போய் உட்கார்ந்து விட்டு கடைசியில் முதலாளியின் அறைக்குள் போய் உட்கார்ந்து கொள்கிறார்.  வேலுமாரார் சற்றைக்கு ஒருதரம் வந்து அவரைப் பார்த்துவிட்டுப் போகிறான். ஆபீசில் எட்டு பத்துக்கு சிலர் வந்து விடுகிறார்கள். ராகவாச்சாரி வேலுவிடம் வீட்டுக்குப் போய் காய்கறியைக் கொடுத்து விட்டுத் திரும்ப வந்து முதலாளியைப் பார்க்க வருவதாகக் கூறிவிட்டுக் கிளம்புகிறார். அவர் தெருவில் இறங்கும் போது  வேலுமாரார்  அவரைத் தடுத்து உள்ளே வரச் சொல்லுகிறான். அவர் கையில் உள்ள பையைப் பிரித்துக் காண்பிக்கச்  சொல்லுகிறான். அவர் அவனை உருட்டியும் லேசாகக் கெஞ்சியும் அவன் அவரை விடுவதாயில்லை. சத்தம் போட்டால் மற்றவர்கள் கவனமும் வந்து விழும் என்று அவன் எச்சரித்ததும்  அவர் அவன் பையைப் பார்க்க அனுமதிக்கிறார். மேல் கைத்துண்டைப் பிரித்து உள்ளே இருப்பதை பார்த்ததும்  வேலுமாரார்  அவர் முதலாளி வந்த பிறகுதான் போக வேண்டும் என்று சொல்லி விடுகிறான்.. 

முதலாளி வந்ததும்  வேலுமாரார் நடந்ததைக் கூறுகிறான். முதலாளியிடம்   ராகவாச்சாரி “தப்பா நடந்து போயிடுத்து.  வேலுமாரார் 

பொய் சொல்லுகிறான்” என்கிறார். முதலாளி ராகவாச்சாரியிடம் “வேலுவைப் பொய் சொல்ல வைக்க அவன் கழுத்தை அறுத்தால்தான் உண்டு. எனக்கு என்னமோ நீர் வேணும்னுதான் எடுத்திருக்கிறதாய்த்தான்  படுகிறது. நான் இந்த மாதிரி தவறை யெல்லாம் மன்னிக்கிறதில்லை. கணக்கைப் பார்த்து வெளியே போகச் சொல்லறதுதான் வழக்கம். இருபத்தாறு வருஷம் கழிச்சு உம்மை இப்படி அனுப்புவேன்னு நான் எதிர்பார்க்கலே” என்கிறார். 

ராகவாச்சாரி இந்த முறை மன்னித்து விடச் சொல்கிறார்.  “மன்னிப்புதான் கேட்டுக்கிறேன். இது வெளியே தெரியப்படாது. ரொம்ப சிரிப்பாணியாப் போயிரும். என் ஜீவனத்தையும் கெடுக்கப்படாது.  இத்தனை வயசுக்கு மேலே….” மேலே பேச முடியவில்லை. கண்ணில் முத்திட்டதைக் காக்கிச்  சட்டை  நுனியால் துடைத்துக் கொள்கிறார். 

“எனக்கும் உம்மைப் போகச் சொல்ல மனசு வரலே…இங்கேயே இருந்து தொலையும்” என்று மன்னித்து விடுகிறார்.

அப்படி என்னதான் ராகவாச்சாரி திருடினார்?  நீங்களே சென்று “ஸ்ரீராமஜெயம் கதையைப் படியுங்கள்.  

(இந்தக் கதை அந்தக் காலத்து.அமுதசுரபியில் வந்தது. இன்று நமது பெருமைமிகு பாரதத்தில்  ரூ.1.76 லட்சம் கோடி சுருட்டப்பட்ட கதையைப் பார்த்தும், படித்தும், கேட்டும் நடமாடிக் கொண்டிருக்கும் ஜனத்துக்கு “ஸ்ரீராமஜெயம் படித்ததும்  தூக்கி வாரிப் போடும்.)      

Series Navigationகவிதைகவிதைகள்