தீ உறு மெழுகு

Spread the love

                        

நெருப்பில் இடப்பட்ட மெழுகு கொஞ்சம் கொஞ்சமாய் உருகிக் கரைந்து இல்லாமல் போகும். மெழுகு முழுதும் கரைந்து போனபின்னும் அந்த இடத்தில் அந்த மெழுகு இருந்ததற்கான அடையாளம் மிஞ்சி நிற்கும். இந்த மெழுகை உவமையாகக் காட்டி ஐங்குறு நூறு ஒரு காட்சியை விளக்குகிறது.

தலைவன் ஒருவன் தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தையர் வழி செல்கிறான், அங்கே அவர்களுடன் தங்கி இருக்கிறான். பின் ஒரு நாள் அவன் தன் தலைவியை நாடி வருகிறான். அவன் தங்கலை விட்டுவிட்டுப் பிரிந்து சென்றதால் அப்பரத்தையர் வருந்தி இருந்தனராம். இதைத் தலைவி கூறுகிறாள்.

            அம்ம வாழி, தோழி! மகிழ்நன்

            ஒருநாள் நம்இல் வந்ததற்கு, எழுநாள்

            அழுப என்ப, அவன் பெண்டிர்

            தீஉறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே.   [32]

தலைவன் தன்னைத் தலைவியுடன் சேர்த்து வைக்கத் தோழர்களை அனுப்புகிறான். அத்தோழர்கள் கேட்குமாறு இதைத் தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள். “தோழியே! நம் தலைவன் முன்பு ஒரே ஒரு நாள் அவர்களை விட்டுவிட்டு இங்கு வந்தான். அப்படி அவன் ஒரு நாள் இங்கு வந்ததற்கே அவர்கள் அங்கே ஏழு நாள்கள்  தீயிலிடப்பட்ட மெழுகுபோல உள்ளம் நெகிழ்ந்து போய் அழுது கொண்டிருந்தனரே”

 ஒருநாள் வந்ததற்கு எழுநாள் அழுப என்பது நயம் தோன்றும் சொற்றொடராகும்.     

        ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேட் சென்றார்

         வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு [1269]

என்னும் குறள் இங்கு நோக்கத்தக்கது. அப்படி அவர்கள் அன்று துயருற்றார்களே! அவன் எப்படி வருவான் என்பதும் மறைந்துள்ளது. மெழுகு கரைந்து மறைந்தாலும் அதன் சுவடு அங்கிருக்கும் அதுபோல அவன் இங்கு வந்துவிட்டாலும் அவனின் நினைவுகள் அங்கே மீதம் இருக்கும் என்பதும் உணரத்தக்கது. ஒருநாள் பிரிந்ததற்கே ஏழு நாள்கள் வருந்தி இருந்தனரே என்னும் தலைவியின் பொறாமையும் வெளிப்படுகிறது.

ஐங்குறு நூற்ற்றின் மருத்த்திணையில் தோழிக்குரைத்த பத்தில் இப்பாடல் இரண்டாம் பாடலாகும். இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களும் தோழிக்குச் சொல்லப்படுவதால் இப்பகுதி தோழிக்குரைத்த பத்து என்று சொல்லப்படுகிறது

தலைவனின் தோழர்கள் கேட்குமாறு தலைவி, “ தோழி! நம் கூட்டத்தார் கேட்க அவன் இனி நான் அவர்களுடன் உறவு கொள்ளமாட்டேன் என்று சூளுரைத்தான். நம் தலைவன் சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டிய கடமை தனக்கு இல்லையென்று இப்பொழுது கூறிவிடுவானா” என்று கேட்கிறாள்.

தலைவனுக்காகத் தூது வரும் அவன் தோழர்கள் காதில் கேட்கும்படி, தன் தோழியிடம் அவன் மருத மரங்கள் நிறைந்துள்ள நீர்த்துறையில் அனைத்து மகளிரும் அவன் மார்பைத் தெப்பம் போலக் கருதிச் சேர்ந்திருக்கும்படி அன்று நீராடினானே? என்னும் பாட்டும் உள்ளது

”நான் முன்பு எப்படி அழகாய் இருந்தேன் தெரியுமா? இப்பொழுது அவன் பிரிந்ததால் என் நிறமே மாறிவிட்டதே” என்று தலைவி தன் தோழியிடம் உரைக்கும் பாடல் இதுவாகும்.

      ”’அம்ம வாழி, தோழி! நம்ஊர்ப்

      பொய்கை ஆம்பல் நார்உரி மென்கால்

      நிறத்தினும் நிழற்றுதல் மன்னே;

      இனிப் பசந்தன்றுஎன் மாமைக் கவினே”  

இது தோழிக்குரைத்த பத்தின் ஐந்தாம் பாடலாகும். இப்பாடலில் ஓர் உவமை சொல்லப்படுகிறது. ஆம்பலின் நார் உரிக்கப்பட்ட தண்டானது பொன் நிறத்தில் அழகாக இருக்கும். அது போலத் தான் அழகாக இருந்ததாகத் தலைவி கூறுகிறாள்.

தலைவி தலைவனை மிகவும் வல்லவன் என்று வஞ்சப் புகழ்ச்சியாகப் பாராட்டுகிறாள். அவன் ’வல்லன் வல்லன்’ என்று தோழியிடம் உரைக்கிறாள். அதுவும் தான் சொன்ன சொல்லைப் பொய்யாக்கி வருத்தம் தருவதில் வல்லவன் என்று உரைக்கிறாள். 

தலைவன் நாட்டில் ஓர் இயற்கைக் காட்சி ஒரு பாடலில் காட்டப்படுகிறது. அங்கு ஆம்பல் மலரின் மொட்டின் மீது கெண்டை மீன் பாய அதனால் அம்மலர் மலர்கிறது. அந்த மலர் தன்னிடம் வரும் வண்டுகளைப் பிடித்துக் கொள்கிறது.

      ”கெண்டை பாய்தர அவிழ்ந்த

      வண்டுபிணி ஆம்பல் நாடுகிழ வோனே”

என்பது பாடல் அடிகளாகும். தலைவன் மீண்டும் தன் மனைவியிடமே திரும்பி வருகிறான். அதைக் கேட்ட காதற் பரத்தை சொல்கிறாள். ”தோழி! அவன் நாட்டில் கெண்டை மீன் பாய்ந்ததால் மலர்ந்த ஆம்பல் தன்னிடம் வரும் வண்டுகளைப் பிணித்துக் கொள்ளும். அப்படிப்பட்ட நாட்டை உடையவன் நாங்கள் அழும்படி அங்கேயே போய்த் தங்கிவிட்டான் எனக் கூறுகிறார்கள்”

வண்டு எங்கு போனாலும் அவ்வண்டைத் தன்னிடம் மீண்டும் வரவழைக்கும் தேனைக் கொண்டதாம் ஆம்பல். எனவே அந்த வண்டு எப்படியும் திரும்ப ஆமபலிடம் வந்துவிடும். அதுபோல அவன் எங்கு சென்றாலும் அவன் மீண்டும் என்னிடமே திரும்பி வந்துவிடுவான் என்பதை அவள் மறைபொருளாகாச் சொல்கிறாள் எனலாம்.

==================================================================================

Series Navigationஅஸ்திவாரம்சுழன்றும் அவர் பின்னது காதல்