துகில்

 

 

வசந்தத்தின்

மகிழ்ச்சியான அழைப்பை

ஏற்காது

நான் வாயிலில் நிற்கிறேன்

சிநேகிதிகளின் கணவன்களுடன்

எப்படி பழக வேண்டும் என

கற்றுக் கொண்டிருக்கிறேன்

எந்தப் பிரச்சனையில்

தலையிடுவது

எந்த சிக்கல்களில்

விலகி இருப்பது என்று

நானே முடிவு செய்கிறேன்

குழந்தைகளின் படிப்பைப் பற்றி

விசாரிக்கும் போது

மனதில் மண்புழு

நெளிகிறது

வரலெட்சுமி விரதத்தில்

அவள் உச்சித் திலகம்

இட்டுக்கொண்ட போது

மனம் ஏனோ

தீப்பற்றி எரிகிறது

மனைவியிடம்

சொல்ல முடியாத ரகசியங்கள்

இன்னும் இருக்கின்றன

தரக்குறைவான எண்ணங்கள்

எழும் போதெல்லாம்

புத்தகங்களில்

புதைந்து கொள்கிறேன்

துகிலுரித்துப் பார்க்கும்

துச்சாதனன் புத்தி

இல்லையென்றாலும்

ஆடை விலகலை நோக்கி

கண்களை கொண்டு

செல்லும்

பெரும்பான்மை நபர்களில்

நானும் ஒருவன்.

 

Series Navigationஆமென்அப்பா என்கிற ஆம்பிளை