துணைவியின் இறுதிப் பயணம் – 3

Spread the love


[13]

உயிர்த்தெழுவாள் !

விழித்தெழுக என் தேசம்

என்னும்

கவிதை நூல்

எழுதி வெளியிட்டேன்.

ஆனால்

என் துணைவி,

அறுவை சிகிட்சையில்

விழிதெழ வில்லையே என

வேதனைப் பட்டேன்.

இந்துவாய் வாழ்ந்து

பைபிள் பயின்று

கிறித்துவை நம்பும்

உன் துணைவி

உயிர்த் தெழுவாள் என்று

ஓர் அசரீரிக் குரல்

ஒலித்தது உடனே

வெளி வானில் !

+++++++++++++

[14]

நேற்று

நேற்று

ஒளிகாட்டி, வழிகாட்டி

நடமாடிய தீபம்

புயல்

காற்றில் அணைந்து,

ஓவியமாகி

வீட்டுச் சுவரில் நினைவுப்

படமாகித்

தொங்குகிறது

இன்று

மாலையோடு !

++++++++++++


[15]

பெருங் காயம் !

உயிர்மெய்க் காயம்

பொய்யாம் !

மண்ணிலே தோன்றிய

பெண்மணிக்கு

எத்தனை,

எத்தனை அணிகள் !

ஜரிகைப் பட்டு

ஆடைகள் !

ஒப்பனைச் சாதனம் !

அனைத்தையும்

விட்டுப்

போனது துணைப் புறா,

இப்போது,

துருப்பிடிக் காத

ஒரு கும்பா வுக்குள்

எரி சாம்பலாய்,

நீடித்த

குடியிருப்பு !

+++++++++++++++


[16]

தொட்ட இடம் !

இவ்வுலகில்

முப்பத்தாறு ஆண்டுகள்

மூச்சிழுத்த

இல்லத்தைப் பூட்டி விட்டுப்

போனவள்,

மீண்டும் திறக்க இங்கு

வரவில்லை !

வீட்டில்

தொட்ட இடம், துடைத்த இடம்

தூய்மை இழந்தன !

சுட்ட சட்டி, அறைத்த

அம்மி

விம்மி, விம்மி

அழுதன !

துவைத்த உடை காயாமல்

ஈரமாய் உள்ளது !

பண்ணிய வடை

புண்பட்டுச்

சின்னமாகி,

ஊசிப் போகுது !

மண்ணாகி

மீளாத் துயிலில்

அவள்

தூங்கும் இடம் இப்போது

விண்ணாகிப்

போனது !

++++++++++++++++

[17]

ஆபரணங்கள்

பெண்ணுக்குப்

பொன்னாசை உள்ளது !

உயிர் உள்ளவரை மேனியில்

அணிகள் ஒளிவீசும் !

உயிர் போன பிறகு

எதுகை, மோனை

எதற்கு ?

உபமானம், உபமேயம்

எதற்கு ?

உடை யில்லாத

உயிர்மெய்

சொல்லுக்கே

வல்லமை அதிகம் !

உயிர்மெய்

உலகை விட்டுப் போன

பிறகு

உன் சோக வரலாறு

சொல்ல

இலக்கணம் எதற்கு ?

தலைக் கனம்

போதும்.

+++++++++++++++++++

[18]

இறுதிப் பயணம்

முப்பதாவது நாளின்று !

போன மாதம்

இதே நேரம், இதே நாளில்,

ஓடும் காரில்

பேரதிர்ச்சியில்

இரத்தக் குமிழ் உடைந்து

உரத்த குரல்

எழுந்தது என்னருகே !

ஃபோனில்

911 எண்ணை அடித்தேன் !

அபாய மருத்துவ

வாகனம் அலறி வந்தது

உடனே !

காலன் துணைவியைத்

தூக்க கால நேரம் குறித்தான் !

ஏக்கத்தில் தவிப்பது நான் !

நவம்பர் 9 ஆம் நாள்,

இதுவுமோர் 9/11 ஆபத்துதான்

மாலை மணி 6 !

நடுத்தெரு நாடக மாகி,

சிறுகதை யாகி

பெருங்கதை யாகி,

இறைவன்

திருவிளை யாடல்

துவங்கும் !

++++++++++++++

[19]

[டிசம்பர் 9 ஆம் நாள்]

அந்த வெள்ளிக் கிழமை

அற்றைத் திங்கள்

அந்த வெள்ளிக் கிழமை

எந்தன் துணைவியும் இருந்தாள் !

அவளோடு அருகில்

நானும் இருந்தேன்.

வீட்டு விளக்கு வாடிக்கையாய்

வெளிச்சம் தந்தது !

இற்றைத் திங்கள்

இந்த வெள்ளிக் கிழமை

என் துணைவியும் இல்லை !

தனியனாய் நானும்,

பிரிவு நாள் அது.

பெரிய துக்க நாள் அது !

+++++++++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன், கனடா

Series Navigationநேபாள் மதச்சார்பின்மை பற்றி ஒரு கிறிஸ்தவரின் கருத்துமழைசிந்தும் குடை