துணைவியின் இறுதிப் பயணம் – 3

சி. ஜெயபாரதன், கனடா

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

[Miss me, But let me go]

++++++++++++++

என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன்

தோற்றம் : அக்டோபர் 24, 1934

மறைவு : நவம்பர் 18, 2018

++++++++++++++++++

[18]

இறுதிப் பயணம்

முப்பதாவது நாளின்று !

போன மாதம்

இதே நேரம், இதே நாளில்,

ஓடும் காரில்

பேரதிர்ச்சியில் அவள்

இரத்தக் குமிழ் உடைந்து

உரத்த குரல்

எழுந்தது என்னருகே !

ஃபோனில்

911 எண்ணை அடித்தேன் !

அபாய மருத்துவ

வாகனம் அலறி வந்தது

உடனே !

காலன் துணைவியைத்

தூக்கிச் செல்ல கால குறித்தான் !

ஏக்கத்தில் தவித்தது

நவம்பர் 9 ஆம் நாள்,

இதுவுமோர் 9/11 ஆபத்துதான்

மாலை மணி 6 !

நடுத்தெரு நாடக மாகி,

சிறுகதை யாகி

பெருங்கதையாய் விரிந்து,

இறைவன்

திருவிளை யாடல்

துன்பியல்

வரலாறாய் முடியும் !

++++++++++++++

[19]

[டிசம்பர் 9 ஆம் நாள்]

அந்த வெள்ளிக் கிழமை

அற்றைத் திங்கள்

அந்த வெள்ளிக் கிழமை

எந்தன் துணைவியும் இருந்தாள் !

அவளோடு

அருகில் நானும்.

வீட்டு விளக்கு வாடிக்கையாய்

வெளிச்சம் தந்தது !

இற்றைத் திங்கள்

இந்த வெள்ளிக் கிழமை

என் துணைவியும் இல்லை !

தனியனாய் நானும்,

பிரிவு நாள் அது.

இதயம் பிளந்த நாள் அது !

பெரிய துக்க நாள் அது !

+++++++++++++++++++

என் இழப்பை நினை !

ஆனால் போகவிடு எனை !

ஆங்கில மூலம் : ராபின் ரான்ட்சிமன்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

பயண முடிவுக்கு நான் வந்த பிறகு

பரிதி எனக்கு அத்தமித்த பிறகு,

கருமாதி எதற்கு ஓர் துக்க அறையில்,

கதறல் ஏன் விடுபடும் ஆத்மா வுக்கு ?

என்னை இழப்பது சிறிது காலம், ஆனால்

இழப்பை நீடிக்காதே உன் சிரம் தாழ்த்தி,

நினைவில் உள்ளதா நம் நேசிப்பின் பங்கு,

இழப்பை நினை, ஆனால் போகவிடு எனை.

இப்பயணமே நாமெலாம் எடுக்க வேண்டியது,

இப்படித்தான் ஒருவர் தனியாகப் போக வேண்டும்,

ஊழித் தலைபதி இடும் திட்டம் இவையெலாம்.

ஓர் எட்டு வைப்பிது நம் இல்லப் பாதை மீது.

தனித்து நீ தவித்து இதயம் நோகும் போது

உனக்குத் தெரிந்த நண்பரிடம் போய் நீ,

உன் துயர்களைப் புதை, நல்வினை புரிந்து.

என் இழப்பை நினை, ஆனால் போகவிடு எனை.

+++++++++++

ஆங்கில மூலக் கவிதை :

image.png

++++++++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன், கனடா

Series Navigationதுணைவியின் இறுதிப் பயணம் – 4