தேன்மாவு : மூலம் : வைக்கம் முகமது பஷீர்

மொழி பெயர்ப்பு : மலையாள மொழி சிறுகதை

மூலம்   : வைக்கம் முகமது பஷீர்

ஆங்கிலம் : மினிஸ்தி நாயர்

தமிழில்  :தி.இரா.மீனா         

                

“நீங்கள் கேள்விப்பட்டிருப்பது  எல்லாமே முட்டாள்தனமானது .நான் எந்த மரத்தையும் பூஜிக்கவில்லை;இயற்கையையும் வழிபடுவதில்லை.ஆனால் இந்த மாமரத்தோடு எனக்குத் தனியான நெருக்கமிருக்கிறது.என் மனைவி அஸ்மாவுக்கும் கூட.விதிவிலக்கான ஒரு பெருமுயற்சியின் அடையாள வில்லைதான் இந்த மரம்.அதை நான் நுட்பமாகச் சொல்கிறேன்…”

நாங்கள் அந்த மாமரத்தினடியில் உட்கார்ந்தோம்.அது மாங்கனிகளால் நிறைந்திருந்தது.சுற்றிலும் பெரிய வட்டமாக வெள்ளை மணல் பரவி யிருந்தது.அங்கு சிமிண்ட்  மற்றும் கற்கள் பாதுகாப்பாகச் சுற்றி யிருக்க பலவகையான ரோஜாச் செடிகள் நடப்பட்டிருந்தன.

அவர் பெயர் ரஷீத்.தன் மனைவி ,மகனோடு அருகாமையிலுள்ள வீட்டில் வசித்து வந்தார்.அந்தத் தம்பதியினர் அருகிலுள்ள பள்ளியில் ஆசிரியர்கள். அந்தப் பெண் தோல் சீவி ,நேர்த்தியான துண்டுகளாக வெட்டப்பட்ட மாம் பழத் துண்டங்களை ஒரு தட்டில் வைத்து தன் மகனிடம் கொடுத்திருந் தாள்.அது தேனைப் போல மிக இனிப்பாக இருந்தது.நாங்கள் ருசித்துத் தின்றோம்.

“மாம்பழம் எப்படியிருக்கிறது ?”

“சந்தேகமில்லாமல் அந்த மரம் தேன்மாவுதான்”.

“இந்த மாம்பழத்தின் நறுமணத்தை எங்களால் உணரமுடிந்தது… அற்புதமான உணர்வு என்னுள் எதிரொலித்தது.

’இந்த மரத்தைப் பயிரிட்டது யார் ?”

“நானும் அஸ்மாவும்தான் இந்த இடத்தில் பயிரிட்டோம்.நான் அந்த மரத் தின் கதையைச் சொல்கிறேன்.அதைப் பலரிடம் நான் சொல்லியிருக்கி றேன். ஆனால் அவர்கள் அந்தச் சம்பவத்தை மறந்து விட்டு,அதை மர வழிபாடு என்பதாகப் பரப்பத் தொடங்கி விட்டனர்! அது எந்த வழிபாட்டுத் தொடர்புமில்லாத ஓர் உன்னதச் செயலின் ஞாபகம்தான்.

என் இளைய சகோதரன் போலீஸ் இன்ஸ்பெக்டர்.இந்த இடத்திலிருந்து ஏறக்குறைய எழுபத்திஐந்து மைல் தொலைவிலுள்ள ஒரு டவுனில் வேலை செய்து கொண்டிருந்த அவனைப் பார்க்கப் போயிருந்தேன்.அது கோடையின் உச்ச கட்டம். ஒரு நாள் நான் உலாவப் போயிருந்தேன் காற்று கூட உஷ்ணமாக வீசியது.தண்ணீர்த் தட்டுப்பாடும் அப்போதிருந் தது.சாலையின் ஓரத்திலுள்ள ஒரு மரத்தினடியில் முதியவர் ஒருவர் மிகச் சோர்வாகப் படுத்திருந்தார்.

ஏறக்குறைய எண்பது வயது மதிக்கத்தக்க அவர் தலைமுடி,மீசை எல்லாம் அதிகமாக வளர்ந்திருக்க, மிகச் சோர்வாக ,சாவின் எல்லையிலிருப்பவ ராகத் தெரிந்தார்.

என்னைப் பார்த்ததும் “அல்லாவிற்கு வணக்கம்!மகனே ,கொஞ்சம் தண்ணீர் கொடு “ என்றார்.

உடனே நான் அருகிலிருந்த வீட்டிற்குப் போனேன். அங்கு செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் சிறிது தண்ணீர் கேட்டேன்.அந்த அழகான பெண் ஒரு செம்புத் தம்ளரில் தண்ணீர் தந்தாள்.நான் அதை எடுத்துக் கொண்டு நடப்பதைப் பார்த்ததும்,நான் போக வேண்டிய இடம் பற்றி விசாரித்தாள்.சாலையில் ஒருவர் சாய்ந்து கிடப்பதையும்,அவருடைய தாகம் தணிக்க நான் தண்ணீர் எடுத்துக் கொண்டு போவதையும் சொன் னேன். அவளும் உடன் வந்தாள்.நான் முதியவருக்குத் தண்ணீர் தந்தேன்.

மெதுவாக எழுந்த அந்த முதியவர் ,அதிர்ச்சியடையச் செய்கிற  ஒரு செயலைச் செய்தார். சாலையருகே காய்ந்து, தொங்கிக் கொண்டிருந்த மாங்கன்றின் அருகே தள்ளாடி நடந்து, பிஸ்மியைப் பாடியபடி பாத்திரத்தி லிருந்த பாதியளவு தண்ணீரை அதன் மீது ஊற்றினார். [ பிஸ்மி– எந்தச் செயலைத் தொடங்குவதற்கு முன் னாலும் கடவுளைப் போற்றிப் பாடுவது] 

யாரோ ஒருவர் மாம்பழத்தைத் தின்று விட்டுக் கொட்டையைச் சாலையில் வீசியெறிந்து விட்டிருக்கிறார்.அது கன்றாக வளர்ந்திருக்கிறது.வேரின் பெரும்பான்மை, நிலத்தின் மேல் பகுதியில் கண்ணுக்குத் தெரிவதாக இருந் தது.அந்த முதியவர் இழுத்து இழுத்து நடந்து மரநிழலுக்குப் போனார். பிஸ்மியைப் பாடிவிட்டு மீதமிருந்த தண்ணீரைக் குடித்தார்.மீண்டும் கடவுளைத் தொழுதார்.

“என் பெயர் யூசுப் சித்திக்.எனக்கு எண்பது வயதுக்கு மேலாகி விட்டது. எனக்கு யாரும் உறவினர் கிடையாது. நான் ஒரு பக்கீராக உலகம் முழுவதும் அலைந்திருக்கிறேன்.நான் மரணிக்கும் நேரம் வந்துவிட்டது. உங்கள் பெயர்களைச் சொல்லுங்களேன் ”என்றார் அவர்.

“என் பெயர் ரஷீத். நான் ஒரு பள்ளி ஆசிரியர்.”என்று நான் சொல்ல,”நான் அஸ்மா ,ஒரு பள்ளி ஆசிரியை “என்று கூட இருந்த அந்தப் பெண் சொன் னாள்.

“அல்லா எல்லோரையும் காப்பாற்றட்டும்’,என்று சொல்லிவிட்டு அந்த முதியவர் தரையில் படுத்துக் கொண்டார்.யூசுப் சித்திக் எங்கள் கண் முன்னாலேயே இறந்து போனார்.நான் என் சகோதரனைத் தேடிப்போக  அஸ்மா காவலாக நின்றாள்.நாங்கள் வாடகைக்கு ஒரு வண்டி பிடித்து, அவர் உடலை மசூதிக்கு எடுத்துச் சென்றோம்.உடலைக் குளிப்பாட்டி புதிய உடையைச் சுற்றி, முறைப்படி புதைப்பதற்கான சடங்குகளைச் செய்தோம்.

அந்த முதியவரின் பையில் ஆறு ரூபாயிருந்தது.நானும்,அஸ்மாவும் ஆளுக்கு ஐந்து ரூபாய் போட்டு அந்தப் பணத்திற்கு இனிப்புகள் வாங்கி அதைப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கொடுத்தோம்.

சிறிது காலத்தில் நான் அஸ்மாவைத் திருமணம் செய்து கொண்டேன். அவள் அந்தச் செடிக்கு தொடர்ந்து நீரூற்றிக் கொண்டிருந்தாள்.நாங்கள் இந்த வீட்டிற்குக் குடி வருவதற்கு முன்பாக ,அந்த மாங்கன்றை மிக கவனமாக வேரோடு எடுத்து மண் நிரம்பிய சாக்கில் பாதுகாப்பாக வைத்தி ருந்தோம்.இரண்டு அல்லது மூன்று நாட்கள் அது, அஸ்மாவின் படுக்கை யறைச் சுவரில் சார்த்தி வைக்கப்பட்டிருந்தது.பிறகு அதை இங்கு கொண்டு வந்து நட்டோம்;எரு,சாம்பல் போட்டு ,தொடர்ந்து தண்ணீர் ஊற்றியதால், புதிய இலைகள் முளை விடத் தொடங்கின ; பிறகு எலும்புத் துகள்,உரம் சேர்தோம்.அந்த மரக்கன்று அப்படித்தான் இன்று மரமாகியிருக்கிறது.

“தன் தாக வேட்கையை வெளிப்படுத்த முடியாத மாங்கன்றிற்கு அந்த முதியவர் தான் சாவதற்கு முன்னால் தண்ணீர் தந்தார்!அந்த அற்புதம் எனக்கு நினைவிலிருக்கிறது.’

விடைபெற்றுக் கொண்டு நடக்கத் தொடங்கினேன்.பின்னால் யாரோ அழைப்பது கேட்டு நான் திரும்பிப் பார்த்தேன்.

ரஷீத்தின் மகன் என்னருகே வந்து கொண்டிருந்தான்.நான்கு மாம்பழங் களை ஒரு தாளில் சுற்றி என்னிடம் தந்தான்.’இது உங்கள் மனைவிக் கும்,குழந்தைகளுக்கும் “என்றான்.

“நீ படிக்கிறாயா ?”

“ஆமாம்,கல்லூரியில்.”

“உன் பெயரென்ன ?”

“யூசுப் சித்திக்.”

“யூசுப் சித்திக்?”

ஆமாம்,யூசுப் சித்திக்.”

                          ——————————–

Series Navigationஆர்.சூடாமணி – இணைப் பறவை – சிறுகதை ஒரு பார்வை!தமிழிய ஆன்மீக சிந்தனை