தேவகி கருணாகரனின் ‘அன்பின் ஆழம்’ நூல் விமர்சனம்

devaki

முனைவர் வாசுகி கண்ணப்பர், சென்னை

 

அன்பின் ஆழம் என்ற நூலின் ஆசிரியர் திருமதி தேவகி கருணாகரன் அவர்கள் மானுடத்தை நேசிக்கும் மாபெரும் மாதரசி. கணவருக்கு இந்நூலைக் காணிக்கையாக்கி தமிழ்குலப் பெண்களின் பண்பாட்டை நிரூபித்து, வருங்கால சமூகத்திற்கு கலங்கரை விளக்கமாகிறார். மனதில் ஏற்பட்ட வடுக்கள், கதைகளாக உணர்ச்சிப் பெருக்காக உருப் பெற்றுள்ளன.   இதுவரை பல இதழ்களுக்காகப் படைக்கப்பட்ட கதைகள் இன்று மலராக “அன்பின் ஆழம்’’ என்ற பெயரில் மலர்ந்துள்ளது. உண்மை மணம் பரப்புகின்றது.

ஆங்கிலத்தைப் பாடமாகப் படித்துப் பட்டம் பெற்ற போதிலும் தமிழ்த்தாய்ப் பாலின் மகிமை இயற்கையாக இரத்தத்தில் ஊறிக்கிடப்பதை இவர் படைப்புகள் பறைசாற்றுகின்றன. இக்கருத்தை திரு..எஸ்.பொ முன்னீட்டில் கணிசமான கதைஞர்கள் வரிசையில் தேவகியும் தனி ஆசனம் பெறுகிறார் என்று முன்மொழிகின்றார். இதை நான் வழி மொழிகின்றேன். இது உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை.

முதல் “நிறைவு’’ கதையின் கருத்து ஆரம்பத்தில் மனதை அலைக் கழித்தாலும் இறுதியில் நிறைவைத் தருகிறது. கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்ற விதம் மிக அருமை. மனம் என்பது ஒரு சிறு சம்பவத்தால் எவ்வாறு பாதிக்கப்படுகிறது. அதனால் வாழ்க்கைப் பாதை எப்படி திசைமாறுகிறது. என்பதுடன் “அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்’’ அதாவது அவரவர் எண்ணம்’’ என்பதையும், “எண்ணமே வாழ்க்கை’’ என்ற பழமொழியை உறுதிப்படுத்துகின்றது.

‘’விடிவு’’ என்ற கதை மிக எதார்த்தமான கதை பலர் வாழ்க்கையில் நடக்கும் உண்மை நிகழ்வுகள். “பாஸ்கரனின் உண்மையான தூய அன்பு இறுதியில் அவனை நிலாந்தியுடன் இணைக்கின்றது’’ உண்மை அன்பு உண்மையா இறுதியில் வெல்லும் என்பதை உறுதி செய்கிறது.

‘’ஒரு வினாடி’’ என்ற கதை, மனம் ஒரு வினாடியில் எடுக்கும் விபரீத முடிவால் ஒரு குடும்பத்தில் ஏற்படும் விளைவுகளைத் தத்தரூபமாக எடுத்துக் காட்டுகிறது. “பொறுத்தார் பூமி ஆழ்வார்’’ என்ற பழமொழியை வலியுறுத்துகிறது. அவசர முடிவு, உணர்ச்சியினால் எடுக்கும் முடிவின் பலனை சித்தரிக்கிறது. இன்றைய கால கட்டத்தில் தேவையான அறிவார்ந்தக் கதையாகும்.

‘’அன்பின் ஆழம்’’ எழுத்தாளரின் புலமையின் ஆழத்தை அளந்து காட்டுகிறது. சிங்களம் படிக்காவிட்டாலும் அதிலுள்ள அனுபவ அறிவும், தமிழ், தமிழ் இலக்கியத்தில், அவருக்குள்ள அறிவாற்றல் வியக்க வைக்கிறது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்ற கணியன் பூங்குன்றனின் கருத்தைப் போற்றும் வகையில் ஜாதி, மதம், இனம், நாடு எனப் பாராது அனைவரும் ஓரினம் என்ற உன்னத கருத்தை வலியுறுத்தும் உயரிய கதை. இயற்கை வர்ணனைகளுடன், மனிதனின் உள்ள உணர்வுகளைத் தத்தரூபமாக மிளிர்கின்ற நிலை பெரிதும் போற்றுதற்குரியது. ஒன்பது ரூபாய் நோட்டுப்பாட்டின் பொறுத்தம் மிக அருமை.

‘’வெற்றிடம்’’ என்ற கதை பலரின் வாழ்க்கையில் அனுபவிக்கும் உண்மை நிலை. குமரேசன் போல்தான் பெரும்பாலோர் இருக்கின்றனர். இருக்கும்போது பாசத்தைக் காட்டாது இறந்தபின் உருகும் நிலை என்பது உலகம் உணர்ந்த உண்மை. அந்தப் பேருண்மையைக் கதையால் அருமையாக வடித்து நெஞ்சை உருக்கவைத்துள்ளார். இக்கதைப் படித்தபின்னாவது வாழும்போதே அன்பை வெளிக்காட்டி மகிழ்ச்சியாக வாழக் கற்றுக் கொள்ளவேண்டும்.

நெஞ்சத்தை உருக்கும் கதை “சொந்தம் விட்டுப் போகுமா’’ என்ற கதை. இதுபோல் எத்தனைப் பெண்களோ? காலத்தின் கொடுமை தோலுரித்துக் காட்டப்பட்டக் கதை. இக்கதையைப் பாதிப்பை உண்டாக்கிய இனம் படிக்க வேண்டும். நூற்றில் ஒருவராவது சிந்திக்கமாட்டாரா? நிச்சயம் ஒரிருவராவது திருந்த நல் வாய்ப்பாக அமையும் என்பது என் கணிப்பு, எதிர்பார்ப்பு.

‘’அதிசயம்’’ என்ற கதை அதிசயமான கதை “அதிகம்’’ கற்பனைதான் என்றாலும் எத்தனைக் கருத்தாழம் மிக்க கதை. உண்மையான மனித நேயமுள்ளவர்களால்தான் இவ்வாறு கற்பனை செய்ய முடியும். பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் இக்கதையைப் படிப்பார்களேயானால் நிச்சயமாக மனம் திருந்துவர். இதற்கான வாய்ப்பை இறைவன் ஏற்படுத்த வேண்டும்.

குடில் செயல் வகை என்றும் 103ஆம் அதிகாரத்தின் 5ஆவது குறளின் (1025) கருத்துக் கேற்ற ‘’குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாய்ச் சுற்றும் உலகு’’ என்ற அருமையான கதை. எழுத்தாளர் தேவகி கருணாகரனின் இலக்கியப் புலமையுடன் திருக்குறளில் அவருக்குள்ள ஆழ்ந்த அறிவினை புலமையினைப் பறை சாற்றும் அற்புதக் கதை. என்னைப் பெரிதும் வியக்க வைத்தது.

‘’முடிவு உண்டா’’ என்ற கதை உண்மையை நிதர்சனமாகக் காட்டும் மனம் உருக்கும் கதை.

தூய அன்பின் முன் ஊனங்கள் என்ன எதுவுமே தடையல்ல என்பதை “நெஞ்சம் மறப்பதில்லை’’ என்ற கதை உணர்த்துகிறது. அன்பின் சக்தி மிக மிக வலியது என்பதையும் நிரூபிக்கின்றது. உண்மை அன்பின் சக்தி வலிமையால் பிரிந்தவர்கள் மீண்டும் சந்திக்கின்றனர் திருமணமும் செய்து கொள்ளும் நல் வாய்ப்பையும் பெறுகின்றனர்.

இறுதிக் கதை ‘’மாதங்கி’’யில் இரட்டைக் குழந்தைகளின் இயல்புகளை ஒரு விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் படைத்து, ஒரு மருத்துவர் கொண்டுள்ள அனுபவ அளவுக்கு மிகச் சிறப்பாக விவரித்திருக்கின்றார்.. முத்தாய்ப்பான இந்தக் கதை மிக மிக விறுவிறுப்பாகவும், எப்படி முடிக்கப் போகின்றார் என்ற ஆவலையும் தூண்டும் வகையில் கற்பனை ஒட்டத்துடன் படைத்துள்ளார். இதை ஒரு சினிமாவாகக் கூட எடுத்தால் மிக நன்றாக ஒடும், பாராட்டைப் பெறும் வாய்ப்பையும் கொண்டுள்ளதாகக் கருதுகின்றேன்.

மொத்தத்தில் இந்த நூலின் ஆசிரியர் திருமதி. தேவகி கருணாகரன் அவர்களின் கற்பனைத்திறன், இலக்கியத்திறன், தமிழ் மொழியின் திறன், நடைத் திறன், வர்ணனையின் திறன், கதை ஓட்டத்தின் திறன், மருத்துவத்துறையில் கொண்ட அனுபவத்திறன், சமுதாயத்தின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் திறன் என்று பட்டியிலிடும் அனைத்துத் திறமைகளின் ஆழத்தையும், அகலத்தையும் “அன்பின் ஆழம்’’ என்ற இந்த ஒரு நூலே பிரதிபலிக்கின்றது. இனனும் இது போல் பல கதைகள் படைத்து வாசகர்களுக்கு விருத்தளிக்க வேண்டும். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் என வேண்டி, வணங்கி வாழ்த்துகின்றேன்.

மொத்தத்தில் “அன்பின் ஆழம்’’ என்ற இந்தப் புத்தகம் உண்மையான உள்ள உணர்வைப் பிரிதிபலிக்கக் கூடிய அருமையான நூலாகும். முருகனின் ஈராறு கரங்கள், ஈராறு கண்கள் போல் 1 வருடத்தின் 12 மாதங்கள் போல், 12 வருடங்களுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி மலர் போல், மலர்ந்து மனோரஞ்சிதம் போல் 12 விதமான மணத்தைப் பரப்பி வாழ்க்கைக்கு அறியதொருப் பாடமாக விளங்குகின்றது. இந்நூலை அனைவரும் வாங்கிப் படிக்கவேண்டும். இந்நூலைப் படித்தவர்களுக்கு வாழ்க்கையின் எதார்த்தமான உண்மையையும், தன்னம்பிக்கையையும் தரவல்லது. அத்துடன் நல்ல மொழிவளம், கற்பனை வளம், தமிழின் நடைவளம் என அனைத்து குண நலவளங்களும் ரசிக்கும் வண்ணம் பொதிந்து கிடக்கின்றன. வாங்கிப் படித்து ரசிப்பதுடன் பயன் பெற வேண்டும் என்பது என் கருத்தாகும். படித்து விட்டால் நீங்களும் இதையே பரிந்துறை செய்வீர்கள் என்பதில் ஐயமில்லை.

நூலின் பெயர்                 – “அன்பின் ஆழம்’’

ஆசிரியர் பெயர்       – திருமதி. தேவகி கருணாகரன்

மின்னஞ்சல்          – thevakiek@hotmail.com

விலை               – ரூபாய் 200/-

கிடைக்குமிடம்        – Mithra art & creations

20/2, zackria, street,

Choolaimedu

Chennai – 600 026

Phone: 23723182 / 25375314

Series Navigationகொடுமுடி கோகிலமும் சீமைக்கருவேலம் முள்ளும்புத்தன் பற்றிய​ கவிதை