தொடுவானம் 108. கோகிலத்தின் நினைவலைகள் .

Spread the love

அதுவரை வேகமாக சவாரி செய்த காளைகள் இரண்டும்கூட அசம்பாவிதம் அறிந்ததுபோல் அப்படியே நின்றுவிட்டன!

பால்பிள்ளை பதறினான்!

” என்ன அண்ணே இப்படி ஆகிவிட்டது? நான் கொஞ்ச நேரந்தான் தோட்டத்து  பக்கம் சென்றேன். அதற்குள்ளாக இப்படி செய்துவிட்டது. ” என்று கண்கலங்கினான்.

” சரி….வண்டியைத் திருப்பு . ‘ என்றவாறு அவளுடைய களையிழந்த முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னால் எதையும் நம்ப  முடியவில்லை. இதுபோன்றுகூட நடக்குமா? எதைப் பற்றியும் நினைக்க அப்போது தோன்றவில்லை. பெரும் அதிர்ச்சியான மனநிலை!

வண்டி மீண்டும் அவளின் வீட்டு வாசலில்  நின்றது. ஊர் மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தனர். வண்டிக்குள் எட்டிப்பார்த்துவிட்டு கதறி அழுதனர். நாங்கள் அவளுடைய உடலைத தூக்கிச்சென்று திண்ணையில் கிடத்தினோம். பெண்கள் பலர் சுற்றிலும் உட்கார்ந்து ஒப்பாரி வைத்தனர்.

அவளுடைய கணவன் இன்னும் ஊர் திரும்பவில்லை. ஊர்ப் பெரியவர்கள் வந்து சேர்ந்தனர். என்னிடம் விசாரித்தனர். அவளைக் காப்பாற்ற முடியவில்லை என்பதை மட்டும் சொன்னேன். அவர்கள கூடிப் பேசினார்கள் . இனி கால தாமதம் செய்யாமல் இருட்டுவதற்குள் சுடலைக்குக் கொண்டுசெல்லவேண்டும் என்று முடிவு செய்தனர். காலம் கடந்தால் காவல் துறையினர் வந்துவிட்டால் பிரச்னை என்றனர். தற்கொலை சட்டப்படி குற்றமாகும். அவர்களுக்குத் தெரிந்துவிட்டால் பிரேதத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்வார்கள். எதனால் தற்கொலை செய்துகொண்டாள் என்பதையும் வழக்காகப் பதிவு செய்து விசாரிப்பார்கள்.அதெல்லாம் வீண் பிரச்னை. ஆகவே உடன் உடலை தடயம் இல்லாமல் எரித்துவிடவேண்டும் என்றனர்.

மாலை ஐந்து மணி வரை அவளுடைய கணவனுக்காகக் காத்திருந்தனர். அவன் வருவதாகத் தெரியவில்லை. உடலை பாடையில் வைத்து சுடலைக்குத் தூக்கிச் சென்றனர். பால்பிள்ளையும் நானும் அவர்களோடு சேர்ந்து சென்றோம். அது கட்டை வண்டிகள் செல்லும் வயல் வெளிச் சாலை. குண்டுங் குழியுமாய் கரடு முரடான மண் சாலை. சற்று தொலைவில் ஆண்டவர் கோவில் தெரிந்தது. அவள் பாடிய அந்த சோக கீதம் காதில் ஒலிப்பது போன்றிருந்தது. அதிலும் அந்த கடைசி வரிகள்!

          ” வாழ்க என்று நீங்கள் சொன்னால் வாழும் என் மனம்
            இல்லை மறைக என்று வரம் கொடுத்தால் மறைய சம்மதம்.”
           நான் மறைக என்று அவளுக்கு வரம் கொடுக்கவில்லை. ஆனால் அவளோ மறைந்துவிட்டாள்! அவளுடைய சாவுக்கு நான்தான் முழுக்க முழுக்க காரணம்! அவள் மீது அன்பு செலுத்தியது தவறு. அதை அவள் காதலாகவே கொண்டாள். அதைத் தெரிந்த நான் அதைத் தடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் அன்பு செலுத்துவதாகக் கூறி அவளின் ஆவலைத்தான் அதிகமாக்கினேன். அவள் சாகப்போவதாகக் கூறியபோதெல்லாம் அவளைக் கண்டிக்காமல் அவளுக்கு ஆறுதலாக இருந்து அவளைக் காப்பதாக எண்ணி ஏமாந்தேன். அதனால் அவளின் ஆசை வளர்ந்ததே தவிர குறைந்தபாடில்லை. அவளுக்குள் ஆசையை வளர்த்துவிட்டதோடு அவள் கேட்டதைத் தர முடியாமல் மறுத்தது ஒருவகையில் அவளுக்கு மறைக என்ற வரம்தான்! மனம் உடைத்த நிலையில்தான் உயிரை மாய்த்துக்கொண்டாள். ஒரு சாதாரண கிராமத்துப் பெண்ணுக்குத்  தோன்றிய வித்தியாசமான காதல் இது! அந்தக் காதலுக்காகவே அவள் வாழ்ந்து அதற்காகவே உயிர் துறந்துவிட்டாள்! அவளுடைய உண்மையான காதல் மீதும் அவகளுடைய வைராக்கியம்,  துணிச்சல் மீதும் எனக்கு மரியாதையும் வியப்பும் மேலிட்டது.

சிதையில் உடலை வைத்து வறட்டிகளால்  மூடி தீ மூட்டினர். நெருப்பு குபுகுபுவென்று எரிந்தது. அந்தக் கோரக் காட்சியைக் காணச் சகியாமல் நான் திரும்பினேன்.பால்பிள்ளை எனக்கு ஆறுதல் சொன்னான். இனி யார் ஆறுதல் சொல்லி என்ன பயன். அவள் இனி திரும்பவும் உயிரோடு வரப்போகிறாளா? அவள் போனது போனதுதான். ஆனால் அவள் சொன்னதுபோல் இனி எக்காலத்திலும் அவளை மறக்க முடியாதுதான்!

பிரயாணத்தை நான் தள்ளிப்போட்டேன். மறுநாள் செல்ல முடிவு செய்தேன்.

இரவு உணவு உண்ணவும் விரும்பவில்லை. பால்பிள்ளைதான் உடன் இருந்தான். அன்று இரவு படுத்தபின் வெகு நேரம் விழித்திருந்தேன். தூக்கம் வரவில்லை. கண்களை மூடினால் அவள் வாசலில் நிற்பது போன்ற பிரமை! தூங்கினால் அவள் அருகில் அமர்ந்து எழுப்புவது போன்ற உணர்வு! அதுபோன்று விடிய விடிய மாறி மாறி தோன்றிய நிலையில் இரவும் முடிந்து விடிந்தும் விட்டது.

நல்ல வேளையாக காலையிலேயே பால்பிள்ளை வந்துவிட்டான். இருவரும் ஆற்றங்கரைக்குக் குளிக்க சென்றோம்.வழி நெடுக அவளைப் பற்றிதான் பேசினோம். இதுபோன்ற நிலையில் மனச் சுமையை யாரிடமாவது சொன்னால்தான் பாரம் குறையும். இல்லையேல் மன அழுத்தம் அதிகமாகும்.

இப்போது வயல் வரப்புகளைப் பார்க்கும்போதெல்லாம் அவள் நினைவுதான் வருகிறது. வாய்க்காலைப் பார்த்தாலும் அவள் நினைவுதான். இனி அவள் என்னைத் தேடிக்கொண்டு வரமாட்டாள் கதறி அழ மாட்டாள். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லமாட்டாள்.

எப்போது மாலை வரும் என்று காத்திருந்தேன். உடன் ஊரை விட்டுப் போகணும் போன்று தோன்றியது. இனிமேல் விடுமுறைகளில் முன்புபோல் ஆர்வமுடன் வர முடியாது. எங்கு பார்த்தாலும் அவள் நிற்பது போலவே தெரியும். வயல் வரப்புகளில், ஆற்றங்கைகளில் அவள் காத்திருப்பது போல் தோன்றும்.

          மாலையில் சீக்கிரமே கிளம்பினோம். கூண்டு வண்டியிலேயே சிதம்பரம் இரயிலடி செல்ல முடிவு செய்தேன். பால்பிள்ளையுடன் பேசிக்கொண்டிருக்கலாம் என்றுதான். இரயில் வரும் வரை அங்கு தனியாக இருக்கப் பிடிக்கவில்லை.இரயில் ஏறியபின் பேசாமல் படுத்துத் தூங்கிவிடலாம். கோகிலத்தின் மரண அதிர்ச்சி பெரும் பாதிப்பையே தந்துவிட்டது.அதிலிருந்து எப்போது மீளமுடியும் என்பது தெரியவில்லை. சிதம்பரம் சென்றடையும் வரை கோகிலம் பற்றிதான் பேசிக்கொண்டிருந்தோம். காளைகள் இரண்டும் கவலை ஏதுமின்றி சீராக வண்டியை குலுங்காமல் இழுத்துக்கொண்டு ஓடின.
          இரயில் தாமதமாகவே வந்தது. முன்பதிவு செய்திருந்ததால் முதல் வகுப்பில் என் இருக்கை – படுக்கை இருந்தது.எதிர் இருக்கை காலியாகவே இருந்தது. அமைதியாக படுத்து தூங்கலாம். விழுப்புரத்தில் இறங்கவேண்டிய அவசியமில்லை. விடிந்ததும் வேலூர் அடைந்துவிடும்.
          படுக்கையைக்  கட்டியிருந்த மூட்டையிலிருந்து தலையணையை வெளியே எடுத்து தலைக்கு வைத்துக்கொண்டு சாய்ந்தேன். கண்களை மூடினேன். அப்போதும் கோகிலமே தோன்றினாள். கண் திறந்தாலும் அவள்! கண் மூடினாலும் அவள்! எங்கும் அவள்! இது ஏன் இப்படி? நான் அவளைக் காதலித்தேனா? அது எனக்கே தெரியவில்லை. அது எப்படி அடுத்தவனின் மனைவியை நான் காதலிப்பது? ஆனால் அவள் அடுத்தவனுக்கு மனைவியாக இருந்துகொண்டே என்னைக் காதலித்துள்ளாள். நான் அவளுடைய காதலுக்கு இணங்காதது கோழைத்தனமா? இணங்கி இருந்தால் அவள் வாழ்ந்திருப்பாளா? அவள் விரும்பியதைத் தந்திருந்தால் அவள் வாழ்ந்திருப்பாளே. அந்த தவறைச் செய்தாவது அவளை வாழவைத்திருக்கலாமே. பல முறை என்னிடம் சாவு பற்றி கூறியுள்ளாளே.அப்போதெல்லாம் அதை சர்வ சாதரணமாகத்தானே எடுத்துக்கொண்டேன். அது இப்படி உண்மையாகிவிடும் என்று அப்போது தோன்றவில்லியே! அவள் மறைந்து விட்டாள். ஆனால் மனதிலிருந்து அவள் இனி மறையப்போவதில்லை. இனி நினைவில் வாழ்ந்துகொண்டுதானிருப்பாள்.அவளும் அப்படிதான் சொன்னாள். உயிருள்ளவரை என்னை மறக்காமல் இருக்க என் சாவு ஒன்றுதான் வழி என்றாளே. அவள் சரியான வைராக்கியக்காரிதான்! சொன்னபடியே என்னுடைய கைகளிலேயே உயிரை விட்டுவிட்டாள்! ஒரு சபதம் மாதிரியே அதை நிறைவேற்றி விட்டாள்! அப்படியே கோகிலத்தின் நினைவலைகளோடு கண்ணயர்ந்தேன்.இரயிலின் ஓட்டம் நல்ல தாலாட்டுதான்.நன்றாகத் தூங்கிவிட்டேன்.
          விடிந்துதான் கண்விழித்தேன். இரயில் இன்னும் ஓடிக்கொண்டுதானிருந்தது வட ஆற்காட்டுக் கிராமங்கள் விடிந்துகொண்டிருந்தன.பனி மூட்டம் போர்வையைப்போல் கிராமங்களை மூடியிருந்தது. கண்களுக்குக் குளிர்ச்சியான இயற்கைக் காட்சி அது. புதிய வானம் புதிய பூமி போல்தான் கிராமங்கள் தோன்றி மறைந்தன. இனி நானும் புதிய மனிதனாகக் செயல்பட வேண்டும். கோகிலத்தின் நினைவிலிருந்து விடுபட உடற்கூறு உடலியல் பாடங்களில் முழுமூச்சுடன் இறங்கவேண்டும். ஓடும் இரயிலின் கதவருகில் நின்று ஓடி மறையும் மரம் செடிகொடிகள் சூழ்ந்த வயல்களையும் தொலைவில் ஆடாமல் அசையாமல் நின்ற கருங்கல் மலைகளையும் அனைத்தையும் நனைத்துவிட்ட பனியின் படரலையும் பார்த்து இரசித்தபடியே படிப்பில் அதிக கவனம் செலுத்த சபதம் கொண்டேன்.
( தொடுவானம்  தொடரும் )
Series Navigationஐரோப்பிய ஆசியக் கடல் மார்க்கத்தைச் சுருக்கும் சூயஸ் கால்வாய்ராதையின் தென்றல் விடு தூது