தொடுவானம் 109. விழாக்கோலம் கண்ட தமிழகத் தேர்தல்

Spread the love
Anna Kalaignar MGR

இயல்பான நிலைக்கு வர கொஞ்ச காலம் ஆனது. கோகிலம் பற்றி யாரிடம் சொல்ல முடியும்? பெஞ்சமின் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அவனிடம் முதலில் சொன்னேன். அவன் இருவர் மேலும் தவறு இல்லை என்றுதான் ஆறுதல் சொன்னான். சம்ருதி அது பற்றி கருத்து கூறாமல் கவலைப்பட்டால் அவள் திரும்பி வரப்போகிறாளா என்று சமாதானம் சொன்னான். என் அறைக்கு அடிக்கடி வந்துபோகும் செல்வராஜ் ஆசிரியரிடம் சொன்னபோது இதை வைத்து ஓர் அருமையான நாவல் எழுதலாமே என்றார்!

இறப்பு என்றாலே நேரடியாகப் பாதிக்கப்பட்டாலேயொழிய வேறு எவராலும் அதன் சோகத்தை முழுதாக உணர இயலாதுதான். யாராலும் எனக்கு சரிவர ஆறுதல் சொல்ல முடியவில்லை. நானும் தனிமையிலேயே அந்த சோகத்தை வெல்ல முயன்றேன். திடீர் திடீரென்று என் கைகளில் அவளுடைய உயிர் பிரிந்ததுதான் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வரும். பாடங்களில் கவனம் செலுத்தினால் ஓரளவு மறையும் என்று முயன்று பார்த்து தோல்வியடைந்தேன்.வேறு வழி தெரியவில்லை. அவளுடைய சோக நினைவுடன் பாடங்களில் கவனம் செலுத்த முடிவு செய்தேன். அவ்வாறே நாட்களும் உருண்டோடின.

இனிமேல் பெண்களிடம் கவனமாப் பழகவேண்டும். சிங்கப்பூரில் லதா இன்னும் காத்துக்கொண்டிருக்கிறாள். அவளால் அப்பாவிடம் பட்ட பாடுகள் அநேகம். அவற்றையெல்லாம் நொடிப்பொழுதில் மறக்கவைத்துவிட்டாள் வெரோனிக்கா. அவளுடைய அழகு அப்படிச் செய்யவைத்தது. இனி அவளுடன் தொடர்பு கொள்வதையும் நிறுத்தியாகவேண்டும். அவளைப் பிரிந்துவந்து இரண்டு வருடங்கள் ஆகப்போகின்றன. இந்த வருடம் அவள் இளங்கலைப் பட்டம் பெற்றுவிடுவாள். அதன்பின்பு அவள் தொடர்ந்து படிக்கலாம் அல்லது வேலைக்குச் செல்லலாம்.அவள் செல்லும் பாதையிலேயே செல்லட்டும். நான் வற்புறுத்தப்போவதில்லை. நான் அவள் பொருட்டு லதாவை கைவிடுவது முறையல்ல. அவள்தானே என்னுடன் சிறு வயதிலிருந்து வளர்ந்தவள்? கடல் கடந்து தொலை தூரத்திலிருந்தாலும் என் நினைவில்தானே அவள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்? அவளை ஏமாற்றக்கூடாது. இனிமேல் அவளுக்கு ஒழுங்காக கடிதம் எழுதவேண்டும். இனி எந்த புதுப் பெண்ணிடமும் நெருங்கிப் பழகக்கூடாது. கவனமெல்லாம் படிப்பில் மட்டுமே இருக்கவேண்டும்.

இரண்டாம் ஆண்டு முடியும் தருவாயில் இருந்தது. உடற்கூறு வகுப்பில் பிரேதத்தின் கால்களை முடித்துக்கொண்டு வயிறுக்குள் சென்றுவிட்டோம்.அங்கு ஒவ்வொரு உறுப்புகளையும் வெளியில் எடுத்து அறுத்து அதன் பாகங்களைத் தெரிந்துகொண்டோம்.கிரேஸ் கோஷி தொடர்ந்து வகுப்பில் பாடங்களை நடத்தினார். உடலியல் பாடமும் தொடர்ந்தது. டாக்டர் சக்கரியா மிக அருமையாக வகுப்புகளை நடத்தினார். ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட முறையில் பாடங்கள் பற்றி கேட்டு உதவுவார். வகுப்பில் விரிவுரைகளைக் கவனமாகக் கேட்டு குறிப்புகள் எடுத்துக்கொண்டாலும், விடுதி அறையில் அன்றாடம் அவற்றை மீண்டும் ஆழ்ந்து படித்தால்தான் ஓரளவு நினைவில் நிற்கும். இந்த இரண்டு பாடங்களும் உண்மையில் மிகவும் சிரமமானவை. அனேகமாக எல்லா மருத்துவக் கல்லூரிகளிலும் இந்த இரு பாடங்களில்தான் நிறைய மாணவர்கள் தேர்வில் தோல்வியடைவார்கள்.

எப்படியோ ஓர் ஆண்டை முடித்துவிட்டோம். கரிம வேதியியல் ( Organic Chemistry )  பாடம் முடிந்து தேர்வும் எழுதினோம். மிகவும் சிக்கலான பாடமாக இருந்தாலும் ஒருவாறு நன்றாகவே எழுதினேன். நிச்சயமாக தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை உண்டானது.

தேர்வுக்குப் பிறகு ஒரு மாற்றத்திற்கு எங்காவது சென்று வரலாம் என்று தோன்றியது. சம்ருதியும் நானும் சித்தூர் சென்றுவர திட்டம் தீட்டினோம். அங்கு தெலுங்கு படம் பார்த்துவிட்டு இரவு ” பார் ” சென்று கொஞ்சம் மதுவும் இரவு உணவும் அருந்தினோம். தமிழ் நாட்டில் அப்போது மதுவிலக்கு அமுலில் இருந்தது. அனால் அண்டை மாநிலமான ஆந்திராவிலும் கேரளாவிலும் அப்படி இல்லை.

1967 ஆம் ஆண்டில் காலடி வைத்தோம். தமிழகத்தில் தேர்தல் சூடுபிடித்தது. தமிழகம் முழுதும் ஒரு புதிய அலை வீசிக்கொண்டிருந்தது கண்கூடு!

குறிப்பாக கல்லூரி மானவர்கள மத்தியில் ஒரு புதிய எழுச்சி தோன்றியிருந்தது. அது இரண்டு ஆண்டுகளுக்குமுன் நடந்து முடிந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் எதிரொலி என்றால் அது மிகையன்று. அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் தீவிரமாக தேர்தல் களத்தில் இறங்கியது. வழக்கத்திற்கு மாறாக கழகத்தின் சார்பாக தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இளைஞர்கள் மட்டுமல்ல, பட்டதாரிகளும்கூட! கழகத்தின் முன்னணித் தலைவர்கள் அனைவரும் போட்டியிட்டனர்.

வீதிகள் அனைத்துமே விழாக்கோலம் பூண்டது. கட்சிக் கொடிகள், அலங்காரத் தோரணங்கள், சுவரொட்டிகள்,தொடர்ந்து முழங்கும் ஒலிப்பெருக்கிகள், பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், வீடு வீடாகச் சந்திப்புகள் என்று அன்றாட வாழ்க்கை அனைவருக்குமே உற்சாகமாக மாறியது.அதேவேளையில் அவ்வப்போது கட்சிகளுக்கிடையே வாய்ச்சண்டைகளும் வன்முறைகளும் வெடிக்கவே செய்தன.

எனக்கு இந்தத் தேர்தல் தீராத ஆனந்தத்தைத் தந்தது. காரணம் எனக்குப் பிடித்த கழகத் தலைவர்கள், பிடிக்காத எதிர் கட்சித் தலைவர்கள் அனைவரையுமே நேரில் காணும் வாய்ப்பு கிட்டும் என்பதால். பெரும்பாலான கூட்டங்கள் வேலூர் கோட்டை மைதானத்தில்தான் நடைபெறும். அவை இரவு பனிரெண்டு மணிவரைகூடத் தொடரும். நான் மாலையிலேயே இரவு உணவை முடித்துக்கொண்டு பாகாயத்திலிருந்து டவுன் பஸ் மூலம் புறப்பட்டுவிடுவேன். கோட்டை மைதானத்தில் தரையில்தான் அமரவேண்டும். அது கட்டாந்தரை.புல் கொஞ்சமும் கிடையாது. சொற்பொழிவுகளைக் கேட்கும் ஆர்வத்தில் அதெல்லாம் அசெளகரியமாகத் தெரியவில்லை.கழகத் தலைவர்ககளின் அடுக்குமொழித் தமிழ் கேட்டு கிறங்கிப்போவேன்! தமிழ் ஆர்வம் உள்ளவர்களுக்குத்தான் நான் சொல்வது புரியும். பேச்சுத் தமிழில் புது உத்வேகத்தைக் கொண்டுவந்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள்தான் . அதைப் பின்பற்றி தமிழகமெங்கும் படித்த பட்டதாரிகள் அந்த புதிய பாணியில் பேசத் தொடங்கிவிட்டனர்.இன்னும் சொல்லவேண்டுமென்றால் எதிர்கட்சியினர்கூட அந்த புதிய பாணியில் பேசக் கற்றுக்கொண்டனர். மொத்தத்தில் மேடைப் பேச்சு தமிழகத்தில் புதிய வடிவம் கண்டது.

இதற்கெல்லாம் காரணகர்த்தா அண்ணா! அவரை மேடையில் பார்க்கவேண்டுமே! அவர் வேட்டியை அவிழ்த்து ஒரு கட்டு கட்டிக்கொண்டு ஒலிவாங்கியைக் கையில் பிடிக்கும் அழகைக் காணவேண்டுமே! ஆகா! அதுவல்லவோ அழகோ அழகு! ( இதைப் பார்க்க விரும்புவோர் பாரசக்தி திரைப்படத்தின் இறுதிக் காட்சியைப் பார்க்கலாம், ) அண்ணாவின் தேர்தல் பிரச்சாரம் கூட ஓர் இலக்கிய நயமிக்க சொற்பொழிவு போன்றுதான் ஒலிக்கும். அவருடைய அடுக்கு மொழி மடை திறந்த வெள்ளம் போன்று செவிகளின் தேனின் இனிமையெனப் பாயும். கேட்போர் அனைவரும் மெய்மறந்து போகும் வகையில் வசீகரம் கொண்டது அவரின் உரை. பேசி முடிக்கும்போது இன்னும் தொடர்ந்து பேச மாட்டாரா என்ற ஏக்கமே மிகும்.

கலைஞர் பேச்சு பற்றி சொல்லத் தேவையில்லை. எப்போதுமே கனல் தெறிக்கும் வசனங்கள் போலவே ஒலிக்கும். அண்ணாவிடம் அடுக்குத் தொடர் என்றால் கலைஞரிடம் கவிதை மழை பொழியும். சில நேரங்களில் நம்முடைய நரம்புகளைக்கூட முறுக்கேறச் செய்துவிடும் அவருடைய ஆவேசம். பராசக்தி, மனோகரா, சாக்ரட்டீஸ் வசனங்கள் நினைவுக்கு வரும். அவர் அவ்வாறு ஆவேசம் கொள்ளும்போது தோளில் உள்ள துண்டு கூட சின்னாபின்னமாகும். அதைக் கையில் பிடித்து முறுக்குவார்.

நாவலர் நிதானமாக அழகாக அரசியல் பேசுவார். அவர் புள்ளி விவரங்கள் சொல்வதில் மன்னர். அனைத்தையும் ஆதாரப்பூர்வமாகச் சொல்லும் கொள்கை கொண்டவர்.

பேராசிரியரின் பேச்சு அவருக்கேயுரிய தனி பாணிதான். அவரிடம் தமிழ் விளையாடும்.

எம்.ஜி. ஆர். பேச எழுந்ததும் கூட்டத்தில் பெரும் அலையென கரகோஷம் எழும். அவர் அப்போது புரட்சி நடிகர்தான். அனால் மக்களை பெரிதும் கவர்ந்திருந்தார். அவருடைய பேச்சைக் கேட்பதைவிட அவரைப் பார்த்து இரசிப்பவர்கள் தான் அதிகம் இருந்தனர். அவ்வளவு வசீகரம் அவரிடம் இருந்தது. அண்ணாவின் முன் அவர் அடக்கவொடுக்கமாகத்தான் காணப்பட்டார்.அண்ணா கூட எம்.ஜி.ஆர். முகத்தைக் காட்டினாலே போதுமானது, வாக்குகள் தானாகக் குவிந்துவிடும் என்றுகூட பெருமிதம் கொண்டுள்ளார்.அவருடைய முகத்துக்கு அவ்வளவு மவுசு இருந்தது!

          அன்று மாலை வேலூர் நகரம் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. இரவு கோட்டை மைதானத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம். ஆனால் மலையிலேயே மக்கள் வெள்ளம் பிரதான சாலையின் இருமருங்கிலும் அலை மோதியது. நானும் கோட்டையின் முன் நின்றிருந்தேன். அப்போது அந்தக் கண்கொள்ளாக் காட்சி கண்டு மகிழ்ந்தேன். மெதுவாக நகர்ந்த திறந்த ஜீப்பில் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். மூவரும் நின்றவண்ணம் கையசைத்து வாக்குகள் சேகரித்தனர். அவர்களை மக்கள் கைகூப்பி வரவேற்றனர்!
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationஅம்மாவின்?இன்னா இன்னுரை!