தொடுவானம் 114. தேர்வுகள் முடிந்தன .

தொடுவானம்

டாக்டர் ஜி. ஜான்சன்
114. தேர்வுகள் முடிந்தன .

மூன்று மாதங்கள் ஓடி மறைந்தன. தேர்வு நாட்களும் வந்தன.
Sunken Garden இரண்டாம் ஆண்டின் இறுதித் தேர்வு. உண்மையில் நாங்கள் கல்லூரியில் சேர்த்த மூன்றாம் ஆண்டு இது. இரண்டாம் ஆண்டில் தொடங்கிய உடற்கூறு, உடலியல் ஆகிய இரு பாடங்களையும் இரண்டு வருடம் பயின்றோம்.ஆதலால் இரண்டாம் வருடத்தை இரண்டு வருடம் கழித்தோம். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் மூன்றாம் வருடம் சென்றாலும் உண்மையில் அது நான்காம் வருடம்தான்.
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் தொடர்ந்து மருத்துவம் பயிலலாம். தோல்வியுற்றால் திரும்பத் திரும்ப இரண்டாம் வகுப்பிலேயே பின்தங்கி மீண்டும் மீண்டும் தேர்வு எழுதலாம். சிலர் இவ்வாறு இரண்டாம் ஆண்டிலேயே பல வருடங்கள் தஞ்சமைடைவதுண்டு. இந்தத் தேர்வு அவ்வளவு கடினமானது. காரணம் மனித உடலையும் அது செயல்படும் விதத்தையும் முழுக்க முழுக்க பயிலவேண்டியுள்ளது. நூற்றுக்கணக்கான மருத்துவக் கலைச் சொற்கள் கொண்ட பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. உடலின் உறுப்புகளை மிகவும் துல்லியமாக அறிந்திருப்பதோடு அவற்றுக்கு இரத்தம் கொண்டு செல்லும் இரத்தக் குழாய்கள், அவற்றை இயங்கச் செய்யும் நரம்புகள் அனைத்தின் பெயர்களையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.உடலியலில் கண்ணுக்குத் தெரியாததையெல்லாம் கற்பனை செய்து நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.சந்தேகத்துக்கு இடமின்றி இந்தத் தேர்வு மிகவும் கடினமானதுதான்!
இந்த மூன்று மாதங்களும் நாங்கள் பைத்தியக்காரர்கள் போல்தான் படித்தோம். உடற்கூறு நூல் சுமார் ஆயிரம் பக்கங்கள் கொண்டது.அதன் எல்லாப் பக்கங்களையும் படித்து முடிக்க ஆசைதான். ஆனால் முடியவில்லை. முக்கியமான பகுதிகளில் அதிக கவனம் செலுத்தினேன். எந்தக் கேள்விகள் வரலாம் என்று மனதில் தோன்றியதைத் தனியாக எழுதித் திரும்பத் திரும்ப படித்தேன். படங்களை வரைந்து பழகினேன். பதிலுடன் படங்களும் வரைந்து விளக்கம் தந்தால் இன்னும் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.என்னைப் பொருத்தவரை திருப்தியாகவே தயார் செய்திருந்தேன்.
தேர்வு நாள் வந்தது.காலையிலேயே எழுந்து தயாரானேன். அழகாக உடை உடுத்தித்கொண்டு நம்பிக்கையுடன் நடந்து சென்றேன்.தேர்வுக் கூடம் கல்லூரி அலுவலகத்தின் அருகில் இருந்தது. அது திறந்த மண்டபம். முதல் நாள் உடற்கூறு. தேர்வுத் தாட்கள் தரப்பட்டன. பதில்கள் எழுத இரண்டு மணி நேரம் தரப்பட்டது. நான் ஒருமுறை கேள்விகளைக் கண்ணோட்டமிட்டேன். ஏறக்குறைய அனைத்து கேள்விகளுக்கும் என்னால் சிறப்பாக பதில் எழுத முடியும் என்ற நம்பிக்கைப் பிறந்தது. சிறு கேள்விகளில் இரண்டு சிரமம்போல் தோன்றியது. ஆனால் அதையும் சமாளித்துவிடலாம்.
முக்கிய பதில்களை அந்தத் தாளிலேயே குறித்துக்கொண்டேன். நிதானமாக நிறுத்தி அழகாக பதில் எழுதலானேன். படங்களும் வரைந்தேன்.எழுத எழுத படித்தவை அப்படியே நினைவில் வந்துகொண்டிருந்தன. எதையும் யோசித்துக்கொண்டிருக்கவில்லை. தெளிவான சிந்தையுடன் அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதி முடித்துவிட்டேன்! தடுமாறிய இரண்டு சிறு கேள்விகளுக்கும்கூட பதில் தானாக வந்து உதவியது. மலர்ந்த முகத்துடன் விடைத் தாட்களை தந்துவிட்டு சம்ருதிக்கு காத்திருந்தேன். அவனும் கொஞ்ச நேரத்தில் வந்துவிட்டான்.
” எப்படி இருந்தது? ” அவனைப் பார்த்துக் கேட்ட.
” பரவாயில்லை. ஒரு கேள்வியில்தான் கொஞ்சம் தடுமாற்றம்.” சற்று கவலையுடன் கூறினான்.
” நீண்ட கேள்வியா? ” நான் மீண்டும் கேட்டேன்.
” ஆமாம்.. உனக்கு எப்படி? ” என்னிடம் கேட்டான்.
” இரண்டு சிறு கேள்விகளை சுமாராகத்தான் செய்தேன்.” நான் பதில் சொன்னேன்.
நாங்கள் இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்ததால் இரவில் ஒரே நேரத்தில்தான் படிப்போம். ஏறக்குறைய ஒரே மாதிரியான கேள்விகளைத்தான் தயார் செய்தோம். அது தவிர தனியாகவும் சிலவற்றை தேர்வு செய்தோம்.இருவருமே கொஞ்சம் வருத்தத்துடன்தான் விடுதி திரும்பினோம். எல்லாக் கேள்விகளுக்கும் திருப்தியாக பதில் எழுதியிருந்தால் மன நிறைவு கொண்டிருப்போம்.
” பரவாயில்லை. ஆறு கேள்விகளில் ஐந்துக்கு நல்ல மார்க் கிடைத்தாலும் பாஸ் செய்துவிடலாம் ” அவன் ஆறுதல் சொன்னான். அவன் சொன்னது உண்மைதான். ஐந்து கேள்விகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைத்தாலும் தேர்ச்சி பெற்றுவிடலாம்.
” சரி பரவாயில்லை. நாளை உடலியல். விடுதி சென்று அதை ஒருமுறை புரட்டிப் பார்ப்போம் . ” நான் சமாதானம் சொன்னேன். மற்ற மாணவர்களும் எங்களுடன் சேர்ந்துகொண்டனர். விடுதி செல்லும்வரை உடற்கூறு தேர்வுத்தாள் பற்றிதான் பேச்சு, மதிய உணவின்போது உடலியல் பற்றிய பேச்சு ஆரம்பமானது. என்னென்ன கேள்விகள் வரலாம் என்று அவரவர் யூகத்தைக் கூறிக்கொண்டு உணவருந்தினோம்.
மதிய உணவுக்குப்பின்பு கொஞ்ச நேரம் படுத்து உறங்கினோம். மாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்துவிட்டு மீண்டும் உடலியல் நூலுடன் அமர்ந்தோம்.இரவு உணவையும் முடித்த பின்பு மீண்டும் தொடர்ந்தோம்.
அடுத்த நாள் உடலியல் தேர்வில் அமர்ந்தோம். வினாத் தாட்கள் தரப்பட்டதும் நோட்டமிட்டேன்.கேள்விகள் எளிதாகவே இருந்தன. கடகடவென்று பதில்களை எழுதலானேன். உடற்கூறு போன்றுதான் மூன்று நீண்ட பதில்களும், மூன்று சிறு பதில்களும் எழுதவேண்டும்.நிதானமாக பதில்கள் எழதி முடித்துவிட்டு வெளியேறினேன்.சம்ருதி எனக்கு காத்திருந்தான்.
” இன்று பரவாயில்லை. எல்லா கேள்விகளுக்கும் நன்றாக பதில் எழுதினேன். ” மலர்ந்த முகத்துடன் கூறினான்.
” நானும் அப்படித்தான்.” என்றேன்.
பேசிக்கொண்டே விடுதி சென்றோம். பெரிய மனச் சுமையை இறக்கிவிட்டது போன்ற ஓர் உணர்வு! எவ்வளவு சிரமப்பட்டு இந்தத் தேர்வுக்குப் படித்தேன்! என்னால் நம்பமுடியவில்லை!
மதிய உணவுக்குப்பின் நன்றாக மாலை வரை தூங்கினோம்.இரவு தினகரன் திரையரங்கில் ஆங்கிலப் படம் பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். இன்று ஒரு நாளை இப்படிக் கழித்தால் மூளைக்கு நல்ல ஓய்வு கிடைக்கும்.நாளை மீண்டும் உடற்கூறு, உடலியல் நூல்களுடன் மீண்டும் அமர வேண்டும் அல்லவா?
இந்த இரண்டு பாடங்களுக்கும் செய்முறைத் தேர்வுகளும் ( Practical Examinations ) உள்ளன. அது சென்னையில் நடைபெறும்.
இந்தத் தேர்வுகள் அனைத்தும் சென்னைப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது.சென்னைப் பலகலைக்கழகதின் கீழ் தமிழ் நாட்டில் அப்போது சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி ஆகிய ஆறு மருத்தவக் கல்லூரிகள் இயங்கின.இவற்றில் பயிலும் மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வு அந்தந்த கல்லூரியில் நடைபெறும். அனைவருக்கும் பொதுவான வினாத்தாள்கள் சென்னையிலிருந்து வந்து சேரும்.அனால் செய்முறைத் தேர்வுகள் அனைவருக்கும் சென்னையில்தான் நடைபெறும். அது சென்னை மருத்துவக் கல்லூரியிலும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலும் நடைபெறும்.தேர்வுகள் இரண்டு நாட்கள் நடக்கும்.நாங்கள் முதல் நாளே சென்னை சென்று தங்கும் விடுதிகளில் ( ஹோட்டல் ) தங்குவோம். தேர்வு முடிந்தபின்புதான் திரும்புவோம்.
செயல்முறைத் தேர்வுக்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது. நாங்கள் படித்திருந்த பாடங்களை மீண்டும் ஒருமுறை புரட்டினோம்.செயல்முறையில் என்ன கேட்பார்கள் என்ற யூகத்தில் நான் சிலவற்றின் மீது அதிகம் கவனம் செலுத்தினேன்.
கல்லூரி பேருந்தில் எங்கள் வகுப்பு மாணவ மாணவிகள் சென்னை புறப்பட்டோம். ஒரே தங்கும் விடுதியில் அறைகள் எடுத்துக்கொண்டோம். ஒரு அறையில் இருவர் தங்கலாம். சம்ருதியும் நானும் ஒரு அறையில் தங்கினோம்.
முதல் நாள் உடற்கூறு செயல்முறைத் தேர்வு. எனக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் தேர்வு.தேர்வு நடந்தது சென்னை பொது மருத்துவமனை. அங்குதான் உடற்கூறு பிரிவு உள்ளது.அங்கு பிரேத அறுவைக் கூடத்தில்தான் தேர்வு. புதிய பிரேதங்கள் அங்கு வரிசை வரிசையாக நீண்ட மேசைகளில் கிடந்தன. எனக்கு எந்த பிரேதம் என்பதைத் தெரிந்துகொண்டேன். அங்கு சென்று அதன் அருகில் நின்றேன். என்னுடன் அந்த பிரேதத்தைப் பங்குபோட்டுக்கொள்ள இன்னும் மூவர் நின்றனர். அவர்கள் வேறு கல்லூரி மாணவர்கள்.பிரேதத்தை அறுக்கத் தேவையான ” ஸ்கேல்ப்பல் ” ( அறுவைக் கத்தி ) , ” போர்செப்ஸ் ” ( பிடிக்கும் குறடு ) ஆகியவை இருந்தன.நான் என்ன செய்யவேண்டும் என்னும் குறிப்பு என்முன் வைக்கப் பட்டிருந்தது. செய்யவேண்டிய அறுவை செயல்முறையை ஒரு மணி நேரத்தில் முடித்துக்கொள்ளவேண்டும். அவ்வேளையில் தேர்வாளர் அங்கு வந்து நேரில் அதைப் பார்த்து, அதுபற்றிய கேள்விகளையும் கேட்பார். அதற்கு சரியான பதில்கள் கூறவேண்டும். தேர்வில் வெற்றியா தோல்வியா என்பது அப்போதே அவர் பேசும் விதத்திலிருந்து தெரிந்துவிடும்.
எனக்கு ” பெமோரல் முக்கோணம் ” ( Femoral Triangle ) என்னும் பகுதி தரப்பட்டிருந்தது. அது தொடையின் உட்பகுதியில் அமைந்தள்ளது. அதனுள் பெமோரல் நரம்பு, பெமோரல் தமனி, பெமோரல் சிரை ஆகிய முக்கிய உறுப்புகள் உள்ளன. நான் அந்தப் பகுதியை அடையாளம் கண்டு அறுத்து உள்ளேயுள்ள உறுப்புகளைத் தனித்தனியாக பிரித்தெடுத்து தேர்வாளரிடம் காட்டி விளக்கவேண்டும். அவர் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் கூற வேண்டும்.நான் சரியாகத்தான் அந்தப் பகுதியைக் கண்டு அறுத்து நரம்புகளையும் இரத்தக் குழாய்களையும் பிரித்துக்கொண்டிருந்தேன். அப்போது தேர்வாளர் என்னிடம் வந்தார். நான் செய்துள்ளதைப் பார்த்தார். அது பற்றிய கேள்விகளைக் கேட்டார். நான் அவருடைய முகத்தைப் பார்த்தேன். அதில் அவ்வளவு உற்சாகம் இல்லை! நான் எங்கோ தவறு செய்துவிட்டது போன்று உணரலானேன்! அவர் வேறு ஏதும் சொல்லாமல் அடுத்த மாணவரிடம் சென்றவிட்டார். எனக்கு குழப்பமும் அதிர்ச்சியும் மேலோங்கியது.வாடிய முகத்துடன் அறுவைக் கூடத்தை விட்டு வெளியேறினேன்.
மதிய உணவுக்குப் பின் Oral Examination நடந்தது. அப்போது ஒவ்வொரு மாணவராக அழைத்து நேரடியாக கேள்விகள் கேட்பார்கள்.இரண்டு தேர்வாளர்கள் இருப்பார்கள். இதுவும் கடினமான தேர்வுதான். உடற்கூறு நூலிலிருந்து எதை வேண்டுமானாலும் கேட்கலாம். தெரிந்ததைக் கேட்டால் நலம். இல்லையேல் சோகம்.
என்னிடம் பத்து நிமிடங்கள் கேள்வி கேட்டார்..நரம்பியல் ( Neurology ) கேள்விகளில் தடுமாறினேன். உடற்கூறில் நரம்பியல் சிரமமானது. உடற்கூறு, உடலியல் பாடங்களில் எழுத்துத் தேர்வில் தேறினாலும் செயல்முறைத் தேர்விலும் தேர்ச்சி பெற்றால்தான் வெற்றி பெற முடியும். ஒன்றில் தோல்வியடைந்தாலும் மொத்ததில் தோல்வி என்றே கருதவேண்டும்.
அன்று சம்ருதியும் கவலையுடன்தான் காணப்பட்டான். கேள்விகள் அவ்வளவு சுலபம் இல்லை என்றான். அவனுக்கு சிறுநீரகம் பற்றி கேட்கப்பட்டதாம். மனதைத் திடப்படுத்திக்கொண்டு உடலியலில் கவனம் செலுத்தினோம்.
மறு நாள் காலை உடலியல் செயல்முறைத் தேர்வில் தவளை தரப்பட்டது.அதன் இதயத் துடிப்பை பதிவு செய்ய வேண்டும்.நான் அதைச் செய்தேன். தேர்வாளர் அது பற்றி கேள்விகள் கேட்டார். சரியாகத்தான் பதில் சொன்னேன். மதியம் நேர்முகத் தேர்விலும் நன்றாகத்தான் பதில் கூறினேன். என்னிடம் கேள்விகள் கேட்டவர்களின் முக பாவனையை வைத்து என்னால் எதையும் யூகிக்க முடியவில்லை. சம்ருதி இன்று நன்றாகச் செய்ததாகக் கூறினான்.இந்தத் செயல்முறைத் தேர்வில் வெற்றி பெற முடியுமா என்பதில் குழப்பம் மேலோங்கியது.
மாலை வேலூர் திரும்ப அறையைக் காலி செய்தோம்.செயல்முறைத் தேர்வுக்கு வந்தபோது இருந்த உற்சாகமான மனநிலை திரும்பும்போது அவ்வளவாக இல்லை!
எப்படியோ தேர்வுகள் முடிந்துவிட்டன. தேர்ச்சி பெற்றால் மூன்றாம் ஆண்டு. இல்லையேல் ஆறு மாதங்கள் பின்தங்க நேரிடும்! அது பெரும் சோகம்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஎஸ் ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழாஎனக்குப் பிடிக்காத கவிதை