தொடுவானம் 121. ஜப்பானியர் சரண்

Nethaji in Conference

          இரண்டாம் உலகப் போரின்போது சிங்கப்பூரைக் கைப்பற்றினர் ஜப்பானியர். அவர்கள் சிங்கப்பூரை ஆண்டபோது புலம் பெயர்ந்து தென் கிழக்கு ஆசியாவில் வாழ்ந்துகொண்டிருந்த இந்தியர்கள் தங்களுக்குகென்று ஒரு தற்காலிக சுதந்திர அரசாங்கத்தை இந்தியாவுக்கு வெளியே சிங்கப்பூரில் 1943 ஆம் வருடத்தில் உருவாக்கினர். இதற்கு ஜப்பானும் தேசிய பொதுவுடைமை ஜேர்மனியும் ஆதரவு தந்தன.
         இந்த அரசுக்கு அசாத் ஹிந்த் ( Azad Hind ) என்று பெயர் சூட்டப்பட்டது. இதன பொருள் விடுதலை இந்தியா என்பது. இதன் தலையாய நோக்கம் ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி ஆகிய எக்சிஸ் கூட்டணியின் உதவியுடன் இந்தியாவை ஆங்கிலேயரிடமிருந்து விடுவிப்பது. அதற்கு அவர்களின் ஆதரவுடன் போரிடுவது. அதற்கு உருவாக்கப்பட்டத்துதான் இந்திய தேசிய இராணுவம்.
Netaji Stamps
          அசாத் ஹிந்த் அரசு நேதாஜியின் தேசப்பற்றையும் அவர் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடவேண்டும் என்ற வேட்கையையும் அறிந்து அவரையே அசாத் ஹிந்த் தலைவராக ஆக்கியது.
         அசாத் ஹிந்த் அரசு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த இந்தியர்களின் மீதும், இந்திய போர்க் கைதிகள் மீதும் உரிமை கொண்டாடி ஆட்சி புரிந்தது.அதற்கு தனி நாணயமும், சட்டங்களும், நீதிமன்றங்களும் இருந்தன. அதன் எல்லைகள் குறிக்கப்படாததால் ஜப்பான் கைப்பற்றிய அந்தமான் நிகோபார் தீவுகளை அதற்குத் தந்தது. பின்பு மனிப்பூர், நாகலாந்து பகுதிகளையும் தந்தது. ஆனால் எல்லா முடிவுகளையும் ஜப்பானியரே எடுத்தனர். சுதந்திரமாகக் செயல்பட விடவில்லை.இது ஒரு குறைபாடாகவே இருந்தது.
          அசாத் ஹிந்த் உருவாக தென் கிழக்கு நாடுகளில் வாழ்ந்த இந்தியர்கள் கூட்டிய இரண்டு மாநாடுகள் முக்கியமானவை. அதன் முதல் மாநாடு தோக்கியோ வில் 1942 ஆம் வருடம் மார்ச் மாதம் கூடியது. அப்போது ஜப்பானில் வாழ்ந்துகொண்டிருந்த ராஸ் பேகன் போஸ் ( Rash Began Bose ) என்பவர் அதைக் கூட்டினார். அப்போது சுதந்திர இந்தியா இயக்கம் உருவானது. அப்போது இந்திய தேசிய இராணுவம் உருவாக்கவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஜப்பான் அரசாங்கம் முழ ஆதரவு தந்தது.இரண்டாம் மாநாடு அதே வருடக் கடையில் இரங்கூனில் கூடியது. அதில் பங்கு கொண்டு தலைமையை ஏற்குமாறு நேதாஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது நேதாஜி ஜெர்மனியில் இருந்தார். அவர் நீர்மூழ்கி கப்பல் மூலம் சுமத்ரா வந்து, சிங்கப்பூர் வழியாக இரங்கூன் சென்றார். விடுதலை இந்திய அரசின் பிரதமராகவும், போர் அமைச்சரராகவும், வெளி உறவு அமைச்சராகவும் பதவி ஏற்றார். உடன் இந்திய தேசிய இராணுவத்தை ஜப்பானியரின் உதவியுடன் தகுந்த பயிற்சி மூலம் சீர் படுத்தினார். இந்திய மண்ணிலிருந்து வெள்ளையர்களை வெளியேற்ற கிழக்கு இந்திய எல்லையில் போர் தொடுக்க வேண்டும் என்றும் சபதம் மேற்கொண்டார்.
Japan Surrender
          நேதாஜி இங்கிலாந்து மீதும் அமெரிக்க மீதும் போர்ப்  பிரகடனம் செய்தார். இந்தியாவைக் கைப்பற்ற ஜப்பான் படைகளுடன் பர்மா வழியாக இந்திய தேசிய இராணுவம் முன்னேறியது. இந்தியாவின் வடகிழக்கில் இருந்த மணிப்பூர் வரை ஜப்பான் இராணுவத்துடன் இந்திய விடுதலைப் படையினர் .அங்கு மாராங் என்னும் பட்டணத்தில் இந்திய தேசியக் காங்கிரஸ் மாதிரியான கோடியை ஏற்றினர்.அங்கிருந்து கோகிமா, இம்பால் ஆகிய பட்டணங்களும் கைப்பற்றப்பட்டன. உள்ளூர் மக்களும் படையில்  சேர்த்துக்கொள்ளப்பட்டனர். டெல்லி நோக்கி அவர்கள் முன்னேறுவது என்றும் திட்டம் தீட்டப்பட்டது.
ஆனால் காமன்வெல்த் படைகள் தீவிரமாகப் போரிட்டன. பிரிட்டிஷ் போர் விமானங்கள் கடுமையான குண்டுவீச்சில் ஈடுபட்டன. அதனால் மேலும் இந்தியாவுக்குள் புக முடியாமல் ஜப்பானியப் படைகளும், இந்திய தேசிய இராணுவமும் பர்மாவுக்கு பின்வாங்கின.அங்கு இந்திய தேசிய இராணுவத்தை இரங்கூனைக் காக்கும் பணியில் விட்டுவிட்டு ஜாப்பானியர்கள் மலாயா சென்றுவிட்டனர். பிரிட்டிஷ் படைகளிடம் இந்திய தேசிய இராணுவம் படுதோல்வி அடைந்தது., அவர்களில் பாதி பேர்கள் கொல்லப்பட்டனர். மீதமிருந்தவர் பிரிட்டிஷ் படைகளிடம் சரண் அடைந்தனர். நேதாஜி அதற்குமுன் சிங்கப்பூர் சென்றுவிட்டார். அங்கிருந்து அவர் ரஷ்யா செல்ல திட்டமிட்டார். இனி ஜப்பானால் உதவமுடியாது என்பதை உணர்ந்த அவர் ரஷ்யா சென்று அவர்களின் உதவியை நாட எண்ணியிருந்தார். அவர் தைவான் சென்று குண்டு வீசும் போர் விமானமூலம் ஜப்பான் புறப்பட்டார். அனால் விமானம் மேலே ஏறிய சில நிமிடங்களில் வெடித்து தீப்பிடித்து சிதறி ஓடுபாதையில் விழுந்தது. நேதாஜி தீப்பந்தம் போல் ஓடி வந்தார். அவருக்கு உடனடி சிறப்பான மருத்துவம் செயப்பட்டது. இரத்தம்கூட ஏற்றப்பட்டது. துவக்கத்தில் நிதானமாக இருந்தவர் கொஞ்ச நேரத்தில் கோமா நிலையை அடைந்து மரணம் அடைந்தார்.இது நடந்தது 1945 ஆம் வருடம் ஆகஸ்ட்டு மாதம் பதினெட்டாம் நாள்.
          நேதாஜியின் மரணம் இந்திய தேசிய இராணுவத்தினருக்கும் மலாயா சிங்கப்பூர் வாழ் தமிழர்களுக்கும்  பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியது.
          1945 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் பனிரெண்டாம் நாளன்று ஜப்பானியர் பிரிட்டிஷ் இராணுவத்திடம் சரண் அடைந்தனர். இந்திய தேசியப் படை கலைக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். தேச துரோகம் என்று குற்றம் சாட்டப்பட்டு பலர் விசாரிக்கப்பட்டாலும் இந்தியாவில் பலம் இழந்துபோன பிரிட்டிஷ் அரசாங்கம் அவர்களுக்கு தண்டனை தர முடியவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்தபின்பு அவர்கள் இந்திய சுதந்திரத்திற்காக போரிட்ட விடுதலை வீரர்களாகக் கருதப்பட்டனர்.
         இதுவே சிங்கப்பூரில் ஜப்பானியர் ஆட்சியையும் நேதாஜியின் விடுதலைப் போராட்டமும் ஆகும்.
          நாட்கள் ஓடின.நான் கல்லூரி திரும்பவேண்டிய நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. அப்பா நான் வெளியில் செல்வது பற்றி கவலை கொள்ளவில்லை. பெரும்பாலும் நண்பர்களுடன்தான் நேரத்தை செலவிட்டேன். நான் ஊருக்கு கொண்டுசெல்லவேண்டிய பொருட்களையும் வாங்கி பிரயாணப் பெட்டியில் அடுக்கி வைத்தேன். அப்பா அதற்கு பணம் தந்திருந்தார்.
          ஊர் செல்லுமுன் ஒருமுறை லதாவை தனியாகச் சந்திக்கவேண்டும்.ஆனால் அப்பாவுக்கு தெரியாமலும் இருக்கவேண்டும். சிங்கப்பூரில் எங்கு சென்றாலும் யாராவது கண்களில் படலாம்.அதனால் விபரீதம் வரலாம்.பழைய அனுபவம் பயத்தை உண்டுபண்ணியது!
         ஆதலால் நாங்கள் மலாயா செல்ல முடிவு செய்தோம். அவள் ஒரு நாள் விடுப்பு எடுத்தாள். காலையிலேயே குயீன்ஸ் ஸ்ட்ரீட்டிலிருந்து ஜொகூர் செல்லும் துரித பேருந்தில் ஏறினோம். அதில் தமிழர்கள் யாருமில்லை. எங்கும் நிற்காமல் நேராக ஒரு மணி நேரத்தில் ஜோகூர் பாரு அடைந்தது. நாங்கள் கடற்கரையில் இறங்கிவிட்டோம்.
          அது தீபகற்ப மலாயாவின் தென் முனை. எதிரே கடலுக்கு அப்பால் சிங்கப்பூரின் வட பகுதி தெரிந்தது. மலாயாவையும் சிங்கப்பூரையும் ஒரு கிலோமீட்டர் பாலம் இணைத்தது. அதில் வாகனங்கள் செல்லும் வீதியும், இரயில் செல்லும் தண்டவாளமும், தண்ணீர் கொண்டுசெல்லும் பெரிய குழைகளும் இருந்தன.
         கடற்கரை ஓரத்தில் மரத்து நிழலில் அமர்ந்திருக்க சிமெண்ட் இருக்கைகள் இருந்தன. நாங்கள் தனியான ஓர் இடத்தில் அமர்ந்துகொண்டோம். மிகவும் ரம்மியமான இடம் அது. எதிரே சிங்கப்பூர். பின் பக்கம் ஜோகூர் அரசாங்க கட்டிடங்கள். கடற்கரை நெடுக பூங்காக்களும் மரம் செடிகள் பசுமையாகவும் பல்வேறு வண்ணங்களிலும் காட்சி தந்தன.
          ” அப்புறம்? எப்படியோ இங்கு வந்துவிட்டோம். இங்கே யாருக்கும் பயப்படத் தேவையில்லை. ” அவள் பூரிப்புடன் என்னை நோக்கினாள்
           ” ஆமாம். இனி மீண்டும் எப்போது இப்படித்  தனிமையில் சந்திப்போம் என்பது தெரியவில்லை. அடுத்த வாரம் நான் கல்லூரி திரும்பிவேன். இனி உன்னைப் பார்க்க எப்படியும் மூன்று வருடங்கள் ஆகலாம். ” நான் என் கவலையை அவளிடம் கூறினேன்.
          ” பிறகு என்ன? நான் வழக்கம்போல் காத்திருக்க வேண்டியதுதான். “
          ” முடியும்தானே உன்னால்? “
          ” முடியும்…. அனால் ….”
          ” என்ன ஆனால்? ” நான் வினவினேன்.
          ” என் அக்காளுக்கு கூடிய விரைவில் திருமணம் நடந்துவிடும். “
          ” அதனால்? “
          ” அடுத்தது என் திருமணம் பற்றி பேச்சு நடக்கும். “
          ” நீதான் இப்போ திருமணம் வேண்டாம் என்று சொல்வாயே? “
          ” அப்படித்தான் சொல்லி சமாளிப்பேன். அனால் எனக்குப் பிறகு தங்கைக்கு திருமணம் செய்யவேண்டும் என்று அவசரப்படுத்துவார்களே? அப்போது நான் என்ன செய்வேன்?’
          ” நல்ல கேள்விதான். அப்போதும் நீ வேண்டாம் என்றுதான் சொல்லவேண்டும்.”
          ” அதற்கு காரணம் கேட்பார்களே? “
          ” அப்போது உண்மையைச் சொல்லவேண்டியதுதானே?
          ” ஆமாம். இது நம் இருவரின் வாழ்க்கைப் பிரச்னை.. அப்படித்தான் சொல்லவேண்டும். “
          ” வேறு வழியில்லை. அப்படித்தான் செய்யவேண்டும்.”
          இன்னும் நிறைய பேசினோம்.மதியம் ஆனதும் எதிரே இருந்த தமிழர் உணவகத்தில் மதிய உணவை உண்டோம்.

          சிங்கப்பூர் செல்லும் துரிதப் பேருந்தில் ஏறி அமர்ந்தோம். அந்த ஒரு மணி நேர பிரயாணத்தின்போது நிதானமாக விடை பெற்றுக்கொண்டோம். அவள் கண்கலங்கியபடியே விடை தந்தாள்.

          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationமாயாறு : ஆதிவாசிக் கவிதைகள்வௌவால்களின் தளம்