தொடுவானம்  13. பிரியமான என் தோழியே.

                                                                                                                டாக்டர் ஜி. ஜான்சன்
          13. பிரியமான என் தோழியே.
          உயர்நிலைப் பள்ளியில் முதல் மாணவனாக வர முடியாமல் போனதற்கு அப்பாவே முக்கிய காரணமானார். எனது பாணியில் நிம்மதியாக அவர்  படிக்க விடவில்லை.
          வகுப்பில் முதல் மாணவனாக வரவேண்டும் என்ற ஆவல் அவருக்கு இருந்தது உண்மைதான். ஆனால் அதற்கான  வழி வகைகளையோ ஊக்குவிப்பையோ அவர் தரவில்லை.
          அதற்கு மாறாக நான் லதாவைக் காதலிப்பதால்தான் படிப்பு கெடுகிறது என்று எந்நேரமும் முணகிக்கொண்டிருந்தார். தெரிந்தவர்களிடமெல்லாம் நாங்கள்இருவரும் காதலிப்பதாக அவரே செய்தி பரப்பினார்.
         அதனால் என்னுடைய சுய கெளரவம் பாதிக்கப்பட்டதோடு அவளின் பெயரும் கெட்டது  .
          எதை வைத்து நாங்கள் காதலிக்கிறோம் என்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. சிறு வயதிலிருந்து ஒன்றாக வளர்ந்த காரணத்தினால் அவள் எனக்கு நெருங்கிய தோழியானது உண்மையே.அவள் வயதுக்கு வந்து பருவமடைந்தபின் நான் அவளைத் தொட்டுப் பேசியதில்லை.
          ஆனால் அப்பா   எதையோ கற்பனை செய்துகொண்டு பேசுவது தெரிந்தது. அது எனக்கு கோபத்தை உண்டு பண்ணியது.
          வீடு மாறி வந்தபின்பு நான் லதாவை அடிக்கடி சந்திப்பதில்லை. நாங்கள் முடிவெடுத்தபடி கோவிந்தசாமி மூலமாக கடிதங்கள் பரிமாறிக்கொண்டோம்.
          அவை காதல் கடிதங்கள்  அல்ல. பொதுவான காரியங்கள் குறித்தும்., பள்ளியைப் பற்றியும் அதிகம் பகிர்ந்துகொள்வோம்.கடிதங்கள் எழுதுவது ஒருவித ஆறுதலைத் தந்தது.
          நான் ஆரம்பப் பள்ளியில் முதல் மாணவனாக வந்தவன். உயர்நிலைப் பள்ளியிலும் முதல் மாணவனாக வர முடி யாவிட்டாலும் ஆறாவது நிலையில் இருந்ததை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் தீவிரம் காட்டினேன்.
          அப்போதெல்லாம் ” டியூஷன் ” செல்லும் வசதி இல்லை. சொந்தமாகத்தான் படிக்க வேண்டும். நான் வகுப்புப் பாடங்களைப் படித்ததோடு நூல் நிலையத்திலும் என்னுடைய பொது அறிவை மேலும் வளர்த்துக்கொண்டேன்.
         உயர்நிலைப் பள்ளியில் சில புதுப் பாடங்களைத் தேர்ந்தெடுத்தேன். ஆங்கில இலக்கியமும், கூடுதல் கணிதமும் அந்த இரண்டு புதுப் பாடங்கள்.
          ஆங்கில இலக்கியம் எனக்குப பிடித்திருந்தது. அதில் கீட்ஸ், பைரன்,வோர்ட்ஸ்வோர்த் , மில்டன், டெனிசன் போன்றோரின்  கவிதைகளையும், ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும் படித்தாக வேண்டும். அவற்றில் சில வரிகளை மனனம் செய்தாக வேண்டும். அவை பற்றிய விளக்கங்களும் எழுத  வேண்டும். நான் அவற்றை இரசித்துப் படித்ததால் நன்றாக அவை பற்றி எழுதலானேன். எண்பத்து நான்கு மதிப்பெண்கள் கூட பெறலானேன். ஆங்கில இலக்கியத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டுமெனில் மனதில் ஆர்வமும் மகிழ்ச்சியும் தேவை. எனக்கு அதிகமான ஆர்வம்  இருந்தபோதிலும், போதுமான மகிழ்ச்சி இல்லை. அதற்குக் காரணம் அப்பாவின் நச்சரிப்புதான்!
          ஆரம்பப் பள்ளியில் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கிய நான், கூடுதல் கணிதம் ( Additional Mathematics ) என்ற பாடத்தை தவறாக எடுத்துவிட்டதால், அதில் என்னால் சிறந்து விளங்க முடியவில்லை. குழப்பமுற்ற மன நிலையுடன் கூடுதல் கணிதத்தை என்னால் கொஞ்சமும் புரிந்து கொள்ள முடியவில்லை. தொடர்ந்து குறைவான மதிப்பெண்களே பெற்று வந்தேன்.
          உயர்நிலைப் பள்ளியில் நான் அறிவியல் துறையில் சேர்ந்திருந்ததால் இயற்பியல் ( Physics ) பாடமும், வேதியியல் ( Chemistry  ) பாடமும் கட்டாயமாக்கப்பட்டிருந்தன. அவை இரண்டும் கடினமானவைதான்.
          அதிகம் கவனம் செலுத்தினால்தான் அவற்றில் சிறப்பாகத் தேர்ச்சியுறலாம். நான் கூடுமானவரை முயன்று பார்த்தும் எதிர்ப்பார்த்த அளவில் மதிப்பெண்கள் பெற முடியாமல் தவித்தேன்.
          இரண்டாம் படிவத்தின் இறுதித் தேர்வுகள்  டிசம்பர் மாதம் நடைபெற்றன. முதல் இரண்டு தவணைகளில் வகுப்பில் ஆறாவது இடத்தில் இருந்த நான் இறுதித் தேர்வில் பதினைந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டேன். நான் நன்றாக எழுதவில்லை என்று பொருள் இல்லை. அப்பா என்னை நிம்மதியாகப் படிக்க விடவில்லை என்பதே உண்மை! நாற்பது சிறந்த மாணவர்களின் மத்தியில்தானே பதினைந்தாவது இடம் என்று என்னால் சமாதானம் அடைய முடியவில்லை. படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்ற என்னுடைய ஆர்வம் அப்படி!
          தேர்வுகள் முடிந்ததும் தொடர்ந்து பள்ளி கொஞ்ச நாட்கள் திறந்திருந்தது. அதிகமான பாடங்கள் இல்லை. நீண்ட விடுமுறைக்காகக் காத்திருந்தோம்.
          மாணவர்களின் பேச்சுகளெல்லாம் பெண்களைப் பற்றியும், காதலைப் பற்றியும் இருந்தது. ஒவ்வொருவரும் தன்னுடைய பெண் தோழியைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் சீனர்கள். சீனப் பெற்றோர்கள் பரந்த மனப்பாண்மைக் கொண்டவர்கள் போன்று தோன்றியது.தங்களுடைய மகன்கள் பெண் தோழிகளை வீட்டுக்கு அழைத்து வருவதும், அவர்களோடு வெளியில் செல்வதையும் அவர்கள் தவறாக எண்ணமாட்டார்கள் என்பதை அறிய முடிந்தது .
          அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது எனக்கு லதாவின் ஞாபகமே வந்தது. அவள் சிறு வயதிலிருந்து பழகியவள்தானே?  அவளைப் பார்க்கக் கூடாது, பேசக் கூடாது என்று அப்பா தடை போடுகிறாரே!
          தடை போட்டது மட்டும் போதாதென்று எந்நேரமும் அவளைப் பற்றியே பேசி என்னுடைய படிப்பையும் கெடுத்து  வருகிறாரே! அப்படி அவளிடம் என்ன உள்ளது? அவளிடம் எதைப் பார்த்துவிட்டு பயப்படுகிறார்?
          ஒரு நல்ல தோழியாக உள்ளவளை காதலி என்கிறாரே! காதலிக்காமலேயே காதலிக்கிறேன் என்ற பழிச் சொல்லுக்கு ஆளாகி வருகிறேனே! அப் பகுதி தமிழர்கள் அனைவருமே நாங்கள் காதலர்கள்தான் என்று நம்பி விட்டார்களே!
         எங்களின் நட்பு காதலை நோக்கிப் பயணப்படுகின்றதா? எங்களின் அன்பு காதலாக மலர்கிறதா? அந்த இளம் பருவத்தில் ஓர் ஆணும் பெண்ணும் பழகினால் அது காதலில்தான் போய்  முடியுமா?
          அந்த வயதில் நான் காதல் என்பதை ஒரு புனிதமான உறவாகத்தான் எண்ணினேன். நான் படித்த தமிழ் நூல்கள் அப்படித்தான் கூறின . வள்ளுவரின் காமத்துப்பாலிலும், அகநானூற்றுப்  பாடல்களிலும் நான் காதலைப் பற்றி ஓரளவு அறிந்திருந்தேன். உலகப் புகழ் ஷேக்ஸ்பியரின் ” ரோமியோ – ஜூலியட் ” காதல் காவியம் படித்துள்ளேன்  இத்தனை நூற்றாண்டுகள் ஆனபின்பும் கூட காதலுக்கு உதாரணமாக அவ்விருவரும் இன்னும் பேசப்படுகின்றனர். வெறும் கற்பனைப் பாத்திரங்களான அவர்கள் இன்று கற்றவர்களின் மனங்களில் உயிர் பெற்றவர்களாகவே வாழ்கின்றனர்!
          ஆனால் அதைவிட காதலுக்காக உலகே வியக்கும் வண்ணம் ஒரு நினைவுச் நினைவுச் சின்னத்தைக் கட்டி அதை உலக அதிசயங்களில் ஒன்றாக ஆக்கிய பெருமை இந்தியாவை ஆண்ட முகலாய சக்கரவர்த்தி ஷாஜகானையே சேரும். அந்த தாஜ்மகால்தான் இன்றும் உலகின் புனிதமான காதல் சின்னமாக பெருமை கூறுகிறது.
          காதலைப் பற்றிய சிந்தனை எனக்கு அப்போது  உண்டானது போல்தான் லதாவுக்கும் ஏற்பட்டிருக்குமோ? வீடு மாறிச் சென்ற பின்புதானே அவள் என்னை அதிகம் காண விரும்புவதாகக் கடிதங்கள் எழுதுகிறாள்? வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நெருங்கியும் அதிகம் பேசுகிறாளே!
          இன்னுமொரு புதுமையையும் அவளிடம் கண்டேன். நூலகத்திலிருந்து ஆங்கில நாவல்கள் எடுத்து படித்துவிட்டு என்னிடம் தந்து படிக்கச் சொல்வாள். அவை அனைத்துமே காதல் கதைகள்தான்.
          நான் படித்து முடித்துவிட்டு திருப்பித் தரும்போது, ” கதை எப்படி? ” என்பாள்.
          ” நன்றாக இருந்தது.”  என்பேன்.
          ஒரு நாள் பேருந்து நிற்குமிடத்தில் அவளுக்காகக் காத்திருந்தேன் கையில் வைத்திருந்த புத்தகங்களை நெஞ்சோடு அணைத்தவாறு அவள் பேருந்திலிருந்து இறங்கினாள். என்னைக் கண்டதும் அவளின் முகம் மலர்ந்தது.
          நாங்கள் இருவரும் அவளின் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தோம்.
          ” லதா. ஏழு வருடங்கள் நாம் ஒன்றாகவே இருந்தோமே. இப்போது  இந்த புது வீட்டில் தனியாக இருக்கவே முடியலை தெரியுமா? ” சோகத்துடன் கூறினேன்.
          ” ஆமாம். எவ்வளவு இன்பமாகப் பழகினோம்! ” என்றாள்.
          ” நீ என்னை மறந்து விடுவாயா? “
          ” எப்படி மறப்பேன்? நீ தான் என்னை மறந்துவிடுவாய். ” என்றாள் .
          ” இல்லை. நீ தான் என்னை மறப்பாய். சரி, ஏன் இப்படி  இருவருமே மறக்க வேண்டும்? மறக்கமேலேயே இருப்போமே. இந்தா இதில் .மனதில் தோன்றுவதை எழுதிக் கொடு. ” என்றவாறு என்னுடைய புதிய ” ஆட்டோகிராபை ” அவளிடம் நீட்டினேன். அப்போதெல்லாம் நண்பர்கள் ஆட்டோகிராப் பரிமாறிக்கொண்டு வாழ்த்தி எழுதிக்கொள்வது வழக்கில் இருந்தது.
          புன்னகையுடன் பெற்றுக்கொண்டவள் அதை புத்தகங்களுக்குள் வைத்துக்கொண்டாள். நான் அவளுடைய வீடுவரை சென்றுவிட்டுத் திரும்பினேன்.
          1961 ஆம் வருடம் ஜூன் மாதம் நான்காம் நாளன்று அவள் என்னிடம் அந்த ” ஆட்டோகிராபை ” திருப்பித் தந்தாள்
          ” Bad friends are many
            Good friends are few
            So be careful how you choose,
            If you choose the wrong one,
            Don’t regret . “
என்று எழுதியிருந்தாள். அதோடு அவளுடைய ” ஆட்டோகிராபை ” என்னிடம் தந்தாள்.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigation