தொடுவானம் 142. தடுமாற்றம்

மாதந்தோறும் அப்பா தவறாமல் பணம் அனுப்புவார். ஆனால் அந்த மாதம் பணம் வரவில்லை. கடிதம் வந்திருந்தது. அதைப் பிரித்துப் படித்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன்!

” நான் உனக்கு பணம் அனுப்புவது உன் படிப்புச் செலவுக்காக. அருமைநாதனை உன்னுடன் வைத்துக்கொண்டு  அவனுக்கும் செலவு செய்ய அல்ல. அவன் அங்கு உன்னிடம் இருக்கும்வரை உனக்கு இனி பணம் அனுப்பமாட்டேன்.  ”  என்னும் வரிகள் கண்டு தலை சுற்றியது.

அருமைநாதன் வந்தது அப்பாவுக்கு எப்படித் தெரிந்தது? என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.

அப்பாவைப் பற்றிதான் எனக்குத் தெரியுமே. அவர் எல்லா காரியத்திலும் மிகவும் கண்டிப்பானவர். என்னுடைய மருத்துவப் படிப்புக்காகத்தான் இன்னும் தனிமையில் சிங்கப்பூரில் இருந்து வருகிறார். அங்கு தமிழ் ஆசிரியராக பாரதிதாசன் தமிழ்ப் பாடசாலையில் பணிபுரிகிறார்.  .

அப்பா சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் கழகத்தின் தீவிர உறுப்பினர். ஒரு சமயம் ஆங்கிலப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்கள் தங்களுக்கு தனனியாக கழகம்
ஆரம்பிக்கப்போவதாக முயற்சியில் ஈடுபாட்டனர். தாங்கள் ஆங்கிலப் பள்ளிகளில் வேலை செய்வதால் தங்களை உயர்வாகக் கருதலாயினர். தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களை அவர்கள் தங்களுக்குச் சமமாக மதிக்க அவர்கள் விரும்பவில்லை. அதை கழகத்தின் பொதுக்குழுவில் ஒரு தீர்மானமாகக் கொண்டுவர முயன்றனர். அதை மேடையில் கவுஸ் மரைக்கான் என்ற ஆசிரியர் கொண்டுவந்தார். கீழே அமர்ந்திருந்த அப்பா கிடு கிடுவென்று மேடை ஏறிப்போய் மைக்கைப் பிடுங்கிக்கொண்டு , ” என்னடா உங்களுக்கு தனிக் கழகம்? ” என்று கேட்டவாறு அவரின் வயிற்றில் ஓங்கி குத்திவிட்டார்! கூட்டம் அதோடு நின்றது. காவலர்கள் வந்து அப்பாவைக்  கைது செய்தனர். பின்பு மாலையில் அவர் விடுதலை செய்யப்பட்டார். அப்பாவின் முன்கோபத்துக்கு இது ஓர் எடுத்துக்காட்டு! அவரிடம் நான் பத்து வருடங்கள் தனியாக இருந்தபோது நான் பட்ட பாடுகளை முன்பு எழுதியுள்ளேன். அப்போது அது லதாவால் உண்டானது. இப்போது அருமைநாதனால் உண்டாகியுள்ளது.

கொஞ்சமும் தவறாமல் மாதந்தோறும் பணம் அனுப்பியவர் இப்போது இரண்டு மாதங்களாக பணம் அனுப்புவதை நிறுத்திக்கொண்டார். பணம் இல்லாமல் இங்கு விடுதியில் தங்குவதும், உணவு உண்பதும் இயலாது. கல்லூரியின் தவணைக்  கட்டணமும் கட்டாயம் செலுத்தியாக வேண்டும்.

அண்ணனிடம் உதவி கேட்டேன். அவரால் முழு தொகையையும் அனுப்ப இயலவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினேன். சம்ருதி, பெஞ்சமின், டேவிட் ராஜன் ஆகியவர்களிடம் கடன் வாங்கினேன். மேற்கொண்டு என்ன செய்வதென்று தடுமாறினேன். அருமைநாதன் மீது எனக்கு கோபம் வரவில்லை. இரக்கம்தான் கொண்டேன் இது தவிர்க்க முடியாமல் நடந்துவிட்டது. நாடி வந்த நண்பனுக்கு உதவ முயன்றேன். அதுவே என்னை கடன்காரன் ஆகியதோடு இனி எப்படி கல்வியைத் தொடர்வது என்ற அச்சத்தையும் உண்டுபண்ணியது.

தீர சிந்தனை செய்தபோது ஒரு பொறி தட்டியது!

நான் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபை பரிந்துரை செய்தது. ஒருவேளை இடம் கிடைத்துவிட்டால் வருடம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை தருவதாக திருச்சபை முன்வந்தது. அதற்கு பரிகாரமாக படித்து முடித்ததும் ஒவ்வொரு ஆயிரத்துக்கும் ஒரு வருடம் திருச்சபையின் மருத்துவமனையில் சேவை செய்யவேண்டிய நிபந்தனை இருந்தது. எனக்கு இடம் கிடைத்தபோது அந்த உதவித் தொகையை வேண்டாம் என்றுவிட்டேன். அப்போது பணம் பற்றிய கவலை இல்லை. ஆனால் இப்போதோ நிலைமை வேறு.

உடன் திருச்சியிலுள்ள தரங்கை வாசம் என்ற வளாகத்தில் இருந்த திருச்சபை தலைமையகத்துக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவர்கள் உடன் ஓர் ஒப்பந்தப் பத்திரம் அனுப்பி வைத்தனர். அதில் கையொப்பமிட்டு அனுப்பினேன். மறு வாரமே ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வந்தது. அந்த பணத்தையும் அண்ணனிடம் வாங்கிய பணத்தையும் வைத்து இரண்டு மாதங்கள் சமாளித்தேன்.

மூன்றாம் மாதம் அப்பாவிடமிருந்து வழக்கம்போல் பணம் வந்துவிட்டது.- ஒரு நீண்ட எச்சரிக்கைக் கடிதத்துடன்!  அருமைநாதன் என்னுடன் இல்லை என்பது எப்படியோ தெரிந்து  சமாதானமாகிவிட்டார்.

அருமைநாதன் தவறு செய்தாலும் அவன் இரண்டு மாதம் உடன் இருந்தது நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அவன் மனைவி அவனை ஏன் இன்னும் திரும்பவில்லை என்று கடிதங்கள் அனுப்பிக்கொண்டிருந்தாள். அவற்றை என்னிடம் தருவான். நான் திரும்பிவிடத்தான் சொன்னேன். அவன்தான் வேலை தேடப்போவதாக கூறி தங்கிவிடடான். வேலையும் கிடைத்தது. ஆனால் அதனுடன் காதலும் சேர்ந்தது. அதை நான் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் நிலைமை விபரீதமாகியிருக்கும். அதனால்தான் நானே அவனுடைய மனைவிக்கு விளக்கமாக ஒரு கடிதம் எழுதி தந்தியும் அனுப்பப் சொன்னேன். அவனும் சென்று சேர்ந்துவிட்டான்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. நான்காம் வருடத்தில் சில பாடங்களுக்கான தேர்வுகள் எழுத வேண்டும். அவற்றில் சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியலும், சமூக சுகாதாரம், மருந்தியல், நுண்ணுயிரி இயல், கண்ணியல் ஆகியவை அடங்கின.அதிகமான பாடங்கள்தான்!

நாட்கள் நெருங்கியபோது பழையபடி இரவில் வெகு நேரம் விழித்திருந்து படிப்பது வழக்கமானது. கண் விழிக்க தேநீர் கலக்கிக்கொள்வேன். சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியலும் சற்று கடினமாகத் தெரிந்தது. குறிப்பாக நஞ்சியல்தான் குழப்பத்தை உண்டுபண்ணியது. அதனால் அதில் அதிக கவனம் செலுத்தினேன்.

விடுதியில் அமைதி நிலவியது. அனைவரும் அறைக்கதவுகளைச் சாத்திக்கொண்டு உள்ளே படித்துக்கொண்டிருப்பார்கள். குளியல் நேரத்திலும் உணவு நேரத்திலும் பார்த்துக்கொள்வோம். வேறு பொழுதுபோக்குகளில் ஈடுபடமாட்டோம். எப்படியும் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படுவோம்.வாழ்க்கை மீண்டும் இயந்திர மயமானது. பேசிக்கொண்டிருக்க வரும் செல்வராஜ் கூட என் நிலையைப் புரிந்துகொண்டு வருவதைக் குறைத்துக்கொண்டார்.

கல்லூரி நிர்வாகத்திலும் சில மாற்றங்கள் உண்டாயின. அதில் முக்கியமாக கல்லூரி முதல்வர் டாக்டர் ஜேக்கப் சாண்டி ஒய்வு பெற்றார். டாக்டர் சாண்டி நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபோதிலிருந்து கல்லூரி முதல்வர் பதவி வகித்தவர். அவர் சிறந்த நிர்வாகி. மிகவும் கண்டிப்பானவர். அவர் இந்தியாவின் தலைசிறந்த மூளை நரம்பியல் அறுவை மருத்துவர் ( Neurosurgeon ).

புதிதாக டாக்டர் கே.ஜி. கோஷி முதல்வரானார்.அவரும் மலையாளிதான். மிகவும் எளிமையானவர். நகைச்சுவை உணர்வு மிக்கவர். இவர் எங்களுக்கு சமுதாய வாழ்வியல் ( Sociology ) வகுப்புகள் எடுத்தவர். இந்த பாடத்திற்கு தனித் தேர்வு இல்லை. அதனால் அவருடைய வகுப்புகள் கலகலவென்று இருக்கும். மாணவர்களுடன் நன்றாகப் பழகும் தன்மை கொண்டவர். சமுதாய வாழ்வியல் மருத்துவத் தொழிலுக்கு முக்கியமானது. மருத்துவக் கோட்பாடுகள், மருத்துவ நன்னெறி ( Medical Ethics ) நிறைந்த பாடம். டாக்டர் கோஷி கல்லூரி வளாகத்தில் பெரிய பங்களாவில் ( Big Bungalow )  தங்கியிருந்தார். அவருடைய மனைவியும் மிகுந்த அன்பானவர். எ ங்களை அவ்வப்போது அழைத்து சுவையான உணவு பரிமாறுவார். தேநீரும் கேக்கும் சிற்றுண்டியாகக் கிடைக்கும். கோழி பிரியாணியும் சுவையாக இருக்கும்.

வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் சிறப்பு என்னவெனில் எங்களுடைய  பேராசிரியர்களுக்கு எங்கள் அனைவரையும் நன்றாகத் தெரியும். அதனால் இங்கு ஒரு குடும்பமாகவே நாங்கள் பழகியவாறு கல்வி கற்றோம். மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் இது சாத்தியமானது. அத்துடன் கிறிஸ்துவ அன்பு எங்களை ஒன்றுசேர்த்தது. ஞாயிற்றுக்கிசமைகளில் வேலூர் கோட்டையில் செயின்ட் ஜான் தேவாலயத்தில் ஆங்கில வழிபாட்டுக்குச் செல்வதும், அதன்பின்பு கல்லூரி வளாகத்தில் கிறிஸ்துவ மாணவர் இயக்கத்தின் ஆன்மீகக் கூட்டங்களும் எங்களிடையே நெருக்கமான உறவை உண்டுபண்ணின.

நன்றாகப்  பழகுகினாலும் ஒழுக்கம், கல்வி போன்றவற்றில் கண்டிப்பாகவே இருந்தனர். அதில் டாகடர் கோஷியும் விதிவிலக்கல்ல. அதை நான் நேரடியாகவே ஒருமுறை அனுபவித்ததை என்னால் மறக்கவே முடியாது. ,மருத்துவ மாணவப் பருவத்தில் எனக்கு நடந்த வினோதமான நிகழ்வு அது!

அப்போது நான் நான்காம் ஆண்டில் இருந்தேன். தேர்வுக்காக மும்முரமாக தயார் செய்துகொண்டிருந்த வேளை. இன்னும் இரண்டு மாதங்களில் தேர்வுகள்.

ஒருநாள் நான் நுண்ணுயிரி இயல் வகுப்பில் இருந்தபோது, கல்லூரியிலிருந்து எனக்கு ஒரு கடிதத்தை முதல்வர் அலுவலக பியூன் முனிசாமி கொண்டுவந்தார். அதைப் பிரித்து பார்த்தேன்.

அது கல்லூரி முதல்வரிடமிருந்து வந்திருந்தது. அவர் என்னை உடனடியாக  அன்று மாலை தமது அலுவலகத்தில் பார்க்கும்படி எழுதியிருந்தார்! அதைப் படித்ததும் லேசாக உடல் நடுங்கியது. அது என்னவாக இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. ஆனால் எதோ மிக முக்கியமானதாகத்தான் இருக்கவேண்டும்.பெரும்பாலும் நாங்கள்தான் கல்லூரி முதல்வரைக் காணச் செல்வோம். அவராக எங்களை அழைப்பதில்லை.  வகுப்பு முடிந்ததும் கல்லூரி பேருந்தில் சென்றபோது அருகில் அமர்ந்திருந்த சம்ருதியிடம் அதைக் காட்டினேன். அவனும் குழப்பத்திற்கு உள்ளானான். எங்களைப் பொருத்தவரை நான் எந்தத் தவறும் செய்யவில்லை. பின் எதற்காக எனக்கு இந்தக் கடிதம்?

( தொடுவானம் தொடரும் )

Series Navigationதாய்மொழிதீபாவளி