தொடுவானம் 144. வென்றது முறுக்கு மீசை.

டாக்டர் ஜி. ஜான்சன்

144. வென்றது முறுக்கு மீசை.

விடுதி திரும்பியதும் சம்ருதி எனக்காக காத்திருந்தான். என்ன ஆயிற்று என்று ஆவலுடன் கேட்டான். நான் நடந்தவற்றைக் கூறினேன். அவனால் நம்பமுடியவில்லை.அன்னம்மாவா அவ்வாறு புகார் செய்தார் என்று திரும்பத் திரும்பக் கேட்டான். அவர் மிகவும் சாதுவாச்சே என்று கூறினான். அதனால்தான் என்னுடைய முறுக்கு மீசையைக் கண்டு பயந்துவிட்டார் போலும். அதோடு அவரை நான் பார்த்த பார்வை அப்படி இருந்திருக்கலாம் என்றும் கூறினேன். பரவாயில்லை, கூடுதல் வகுப்புத்தானே, அதனால் பாடத்தில் மேலும் கவனம் செலுத்த நல்ல வாய்ப்பு. ஆனால் ஓர் எச்சரிக்கையும் செய்தான். வகுப்பறையில் அன்னம்மாவும் நானும் தனியாக ஒரு மணி நேரம் இருக்கும்போது மிகவும் கவனமாக இருக்கச் சொன்னான். மேற்கொண்டு ஏதாவது விபரீதமாக புகார் செய்துவிடப்போகிறார் என்று எச்சரித்தான். ஆமாம். நான்கூட இதை எண்ணிப் பார்க்கவில்லை. அப்படி அவர் ஏதாவது கூறினால் அவர் சொல்வதுதான் எடுபடும். அவர் பெண் என்பதால்!
முதல் நாள் மாலை.
வகுப்பிலிருந்து அனைவரும் வெளியேறிவிட்டனர். அன்னம்மா தன் இருக்கையில் அமர்ந்திருந்தார். நான் வழக்கமான என் இடத்தில இருந்தேன். அவர் என்னைப் பார்க்கவில்லை. நானும் அவரைப் பார்க்கவில்லை. அறையில் நிசப்த்தம்.
அவர் எழுந்து கருப்பலகைக்குச் சென்றார். அதில் கார்னிபேக்டீரியம் டிப்திடீரியா ( Corynebacterium Diptheriae ) கிருமி பற்றி அரை மணி நேரம் படிக்கச் சொல்லி எழுதிவிட்டு அமர்ந்துகொண்டார். நான் பாட நூலில் அந்த பகுதியைப் புரட்டி படிக்கலானேன். அவரும் ஒரு பிரிட்டிஷ் மருத்துவச் சஞ்சிகையை ( British Medical Journal )படிக்கலானார். அந்த கிருமி மிகவும் சிக்கலானது. அதுதான் டிப்த்தீரியா வியாதியை உண்டுபண்ணுவது.இதை தொண்டையடைப்பான் நோய் என்போம். இது ஆபத்தான நோய். உடனடி மருத்துவம் செய்யாவிடில் உயிருக்கு ஆபத்தாகிவிடும். அநேகமாக இது தேர்வில்கூட கேட்கப்படலாம். ஆதலால் கவனமாக குறிப்புகள் எடுத்து படித்துக்கொண்டிருந்தேன்.நான் குனிந்து படித்துக்கொண்டிருந்தேன். இருபது நிமிடங்கள் ஓடிவிட்டன. அவர் என்ன செய்கிறார் என்று பார்க்க ஆவல் மேலிட்டது. மெல்ல தலையை உயர்த்தினேன்.அவர் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. அந்த ஒரு வினாடியில் எங்கள் கண்கள் சந்தித்தன! அவர் உடன் சஞ்சிகையில் குனிந்துகொண்டார்!
அரை மனை நேரம் ஆனது.
” படித்து முடித்தாயா? ” அவர் குரல் கேட்டு நிமிர்ந்தேன்.
” படித்துவிட்டேன். முன்பே படித்ததுதான். ” அவரை நோக்கி கூறினேன்.
” நல்லது. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறவும். ” என்றார் .
நான் சரி என்றேன்.
அதன்பின் அவர் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். அனைத்துமே பயனுள்ள கேள்விகள்தான். நான் ஒவ்வொன்றுக்கும் பதில் கூறலானேன். அவருக்கு நான் கூறிய பதில்களில் திருப்தி போன்று தெரிந்தது. அதை முகம் காட்டியது. அவரின் முகம் நல்ல நிறத்தில் அழகான வடிவில் இருக்கும். எந்த விதமான சலனமும் அதில் காண முடியாது. சிரித்தால் மலரும் மலர் போன்றிருக்கும். ஆனால் இப்போது முகத்தில் சிரிப்போ கோபமோ ஏதுமின்றி ஒரே நிலையில் இருந்தது.அதில் எந்தவிதமான களங்கமும் இல்லை. அதோடு என்னுடன் தனியாக அங்கிருப்பதால் பயம் உள்ளதுபோன்றும் தெரியவில்லை. பின் எதனால் என்னைப் பார்த்தால் பயமாக உள்ளதென்று முதல்வரிடம் முறையிட்டார்? ஒன்றும் புரியவில்லையே?
” சரி போகலாம். ” என்றவர் அறையைவிட்டு வெளியேறினார். நான் பின் தொடர்ந்தேன். கல்லூரி பேருந்துகள் இல்லை. நான் மருத்துவமனையை விட்டு வெளியேறி பாகாயம் செல்லும் பேருந்தில் ஏறினேன்.
இரண்டாம் நாள் மாலை .
இருவரும் அறையில். இன்று அவர் கரும்பலகையில் எழுதவில்லை. நேரடியாக என்னைப்பார்த்தே டெட்டனஸ் பேசில்லஸ் ( Tetanus Bacillus ) பற்றி படிக்கச் சொன்னார். இதனால் உண்டாவது விஷ ஜன்னிக் காய்ச்சல் என்போம். இதை வாய்ப் பூட்டு நோய் ( Lock Jaw ) என்றும் கூறுவோம். இது வீதியில் விபத்து, முள் குத்துவது. ஆணி குத்துவது, தீக் காயங்கள் போன்றவற்றால் உண்டாகும். தோலில் உண்டாகும் காயத்தின் வழியாக இக் கிருமிகள் உடலினுள் புகுந்து நேராக மூளையையும் நரம்பு மண்டலத்தையும் தாக்குகிறது. வாயைத் திறக்க முடியாமல் இறுக்கிக் கொள்ளும். அதோடு வலிப்பு உண்டாகி முதுகு வில் போல் வளையும். இது மிகவும் கொடிய நோய். மருந்துகளால் குணமாக்குவதும் சிரமம். மரணம் நேரும். இதனால்தான் முள் அல்லது ஆணி குத்தினால் டெட்டனஸ் தடுப்பு ஊசி போடுகிறோம்.
இந்தப் பாடத்தையும் நான் முன்பே படித்துள்ளேன். அரை மணி நேரத்தில் இதை மீண்டும் படிப்பதில் சிரமம் இல்லை. சீக்கிரமாகவே முடித்துவிட்டேன். அவரைப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தார். டெட்டனஸ் கிருமி பற்றி கேள்விகள் கேட்டார். நான் சிறிதும் தயக்கமின்றி பதில் கூறினேன். அவர் லேசாக புன்னகைத்ததுகூட தெரிந்தது. அது எனக்கு கொஞ்சம் தைரியத்தை உண்டுபண்ணியது.
நான் எழுந்து அவரிடம் சென்றேன். அவர் திடுக்கிட்டார். புன்னகை மறைந்து அச்சம் அவர் முகத்தில் பரவியது.
” நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா? ” பணிவுடன் அவரிடம் கேட்டேன்.
அவர் தயங்கியபடி தலையாட்டினார்.
” உண்மையில் என்னைப் பார்க்க உங்களுக்கு பயமாக உள்ளதா? ” என்றேன்.
அவர் ஒரு கணம் திகைத்தார். முகத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் என்னையே பார்த்தார்.
” நான் நீங்கள் நினைப்பது மாதிரி இல்லை. நல்லவன். இந்த மீசையை நான் விரும்பி வைத்துள்ளேன். அதற்கும் என்னுடைய குணத்திற்கும் தொடர்பு இல்லை. அதை முறுக்குவது எனக்கு பழக்கமாகிவிட்டது. மீசையை முறுக்கிக்கொண்டு பார்த்தால் முறைப்பதுபோலத்தான் தெரியும். அதைக் கண்டுதான் நீங்களும் பயந்துள்ளீர்கள். நான் உங்களை தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பேனா? நீங்கள் என் ஆசிரியை அல்லவா? இதை நீங்கள் நம்பவில்லை என்றால் என் வகுப்பு மாணவிகளிடம் என்னைப் பற்றிக் கேட்டுப்பாருங்கள. அவர்கள் சொல்வார்கள். ” தலை குனிந்திருந்த அவரிடம் நானும் தலை குனிந்தபடியே கூறினேன்.
கொஞ்ச நேரம் அவர் ஏதும் பேசவில்லை. அறையில் மீண்டும் நிசப்தம்.
” நான் சொன்னதை நம்புகிறீரா? “அவரைப் பார்த்து கேட்டேன்.
” என்னையே முறைத்துப் பார்ப்பது போலிருந்தது . அதனால்தான் பயந்துபோனேன். இப்போது அந்த பயம் இல்லை . ”
” மிக்க நன்றி . ” என்றவாறு வலது கையை அவரிடம் நீட்டினேன். அவர் அதைப் பற்றினார். அது பட்டு போன்று இருந்தது. நாங்கள் கை குலுக்கினோம்.
தண்டனையின் இரண்டாம் நாளே நான் அவரின் அச்சத்தைப் போக்கிவிட்டேன். ஒரு வேளை இப்படி ஆகவேண்டும் என்றுதான் முதல்வர் கோஷி இத்தகைய வினோத தண்டனையைத் தந்தாரோ? அவருக்கு மனதுக்குள் நன்றி சொன்னேன்.
அன்றும் ஆறு மணிவரை அறையில் இருந்துவிட்டு இருவரும் வெளியேறினோம்.
மூன்றாம் நாள் மாலை. இப்போது அவர் முகம் மலர்ந்திருந்தது. என்னை டியூபர்கல் பேசில்லஸ் ( Tubercle Bacillus ) பற்றி படிக்கச் சொன்னார். இதை மைக்கோபேக்டிரியம் டியூபர்குலோசிஸ் ( Mycobacterium Tuberculosis ) என்றும் அழைப்போம். இது காசநோய்க் கிருமி. இது குச்சி வடிவில் இருக்கும். இதுவும் தொழு நோய்க் கிருமியும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை.. காசநோயும் தொழுநோயும் தமிழகத்தில் பரவலாகக் .காணப்படுபவை. இந்தப் பகுதியை நான் முன்பே படிந்திருந்ததால் எளிதாக மீண்டும் ஒருமுறை படித்து குறிப்புகளும் எடுத்துக்கொண்டேன். தேர்வில் இந்தக் கேள்வி வந்தால் சிறப்பாகவே பதில் எழுதுவேன்.
அன்னம்மா சில கேள்விகள் கேட்டார். நான் சொன்ன பதில்களில் அவர் திருப்தி கொண்டு புன்னகைத்தார்.
” நன்றாகப் படித்துள்ளாய் .” என்று பாராட்டியபின்பு, நான் சற்றும் எதிர்ப்பாராதவண்ணமாக, ” ஆமாம்.நீ சிங்கப்பூரில் இருந்துதானே வந்துள்ளாய்?” என்று கேட்டார்.
நான் ” ஆம் ” என்றேன்.
சிங்கப்பூர் பற்றி கேட்டார். நான் அதன் சிறப்புகளைக் கூறினேன். அவர் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். அதற்குள் நாங்கள் வெளியேறும் நேரம் வந்தது. அவர் இனி எனக்கு பயப்படமாட்டார். அவர் சமாதானமாகிவிட்டார். நானும் அவர்மீது கோபம் கொள்ளவில்லை.
” இப்போது என்மீது பயம் இல்லைதானே? ” அறையை விட்டு வெளியேறும்போது அவரிடம் கேட்டேன்.
” இல்லை ” அவர் பதில் கூறினார்.
” அப்படியானல் இதைக் கொண்டாட நாம் தேநீர் அருந்த செல்வோம். ” தயங்கியபடிதான் அவரிடம் கூறினேன்.
” அதனாலென்ன? போவோமே> ” அவர் சம்மதித்தார்!
நாங்கள் நேராக ஒய். டபிள்யூ. சி. ஏ. உணவகத்திற்கு நடந்து சென்றோம் அது மருத்துவமனையின் வளாகத்திலேயே உள்ளது. அப்போது பலரின் கண்களில் பட்டொம். அவர்களில் எங்களுக்குத் தெரிந்த சில சீனியர் மாணவர்களும் விரிவுரையாளர்களும் அடங்குவர்.
நான்காம் நாள் மாலை வகுப்பு முடிவதற்குள் கல்லூரி முதல்வர் அலுவலகத்திலிருந்து பணியாளர் முனுசாமி எனக்கு ஒரு கடிதத்துடன் வந்தார். அதில் அவரை உடன் வந்து பார்க்குமாறு முதல்வர் எழுதியிருந்தார்! என்ன விபரீதம் காத்துள்ளதோ என்று குழம்பினேன்.
அன்று கூடுதல் வகுப்பில் நாங்கள் சரளமாகப் பேசிக்கொண்டிருந்தோம். தொழுநோய்க் கிருமி பற்றி படித்துவிட்டு அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறினேன். முதல்வரைப் பார்க்க்கவேண்டுமே என்ற எண்ணமே மனதில் குடிகொண்டிருந்தது. அவருடைய கடிதம் பற்றி அன்னம்மாவிடம் கூறவில்லை. இன்று அவரை தேநீர் அருந்தவும் அழைக்கவில்லை.
அவரிடம் விடை பெற்றுக்கொண்டு பேருந்து பிடித்து முதல்வரின் அலுவலகத்திற்கு விரைந்தேன்.
என்னைப் பார்த்ததும், ” வா.மிஸ்டர் ரோமியோ. வந்து உட்கார். ” என்று முதல்வர் சொன்னதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை.
” உன்னை நான் கூடுதல் வகுப்புக்கு அனுப்பியது தண்டனைக்காக.. ஆனால் நீ மூன்றே நாட்களில் அன்னம்மாவையே தேநீர் அருந்த கூட்டிச் சென்றுவிடடாய்! உன் முறுக்கு மீசை வென்றுவிட்ட்து! அதனால் இனியும் உனக்கு தண்டனை கிடையாது. இன்றோடு தண்டனை ரத்து செய்யப்படுகிறது! .” அவர் புன்னகைத்தபடியே கூறி என்னுடன் கைகுலுக்கி விடை தாந்தார்.
இது கனவா அல்லது நனவா என்ற குழம்பிய நிலையில் நான் விடுதி நோக்கி நடக்கலானேன்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஆசாரச்சிமிழுக்குள் மலர்ந்த “புதுமைப்பிரியை” பத்மா சோமகாந்தன்தமிழ்மணவாளன் கவிதைகள்