தொடுவானம் 166. சிறகொடிந்த பைங்கிளி

         

பிரசவ அறையில் பயிற்சி மனோகரமாக மாறியது. பட்டு மேனியும் பருவ பரவசமும் மலர்ந்த புன்னகையும் கொண்ட மேரியின் துணையுடன் பிஞ்சு குழந்தைகளை வெளியில் கொண்டுவந்து உலகைக் காட்டும் பணி இன்பமாக மாறியது. இனி பிரசவம் எப்படியெல்லாம் பாப்போம் என்பதை விவரிப்பேன்.

          பிரசவ வலி வந்ததும்தான் பெண்களை வார்டிலிருந்து பிரசவக் கூடத்துக்குக்  கொண்டு வருவோம். வலி வந்ததுமே பெரும்பாலும் பிரசவம் ஆகிவிடும். கட்டிலில் படுத்துள்ள பெண்களின் பிறப்பு உறுப்பில் விரலை விட்டு கருப்பையின் வாய் எவ்வளவு விரிந்துள்ளது என்பதை  நாங்கள் பார்க்க வேண்டும். அதை வைத்து பிரசவம் எப்போது சம்பவிக்கும் என்பதை யூகிக்கலாம். அதன்படி அங்கேயே இருந்து குழைந்தையை வெளியில் எடுக்கும் வரை இருப்போம். சிலருக்கு முதல் பிரசவ வேளையின்போது குழந்தையின் தலையை வெளியே கொண்டுவர பிறப்பு உறுப்பில் ஒரு வெட்டு போடுவோம். அதன் பின்பு குழந்தையை எளிதில் எடுத்துவிடலாம். எடுத்தபின்பு வெட்டிய பகுதியை மீண்டும் தைத்துவிடவேண்டும். பயிற்சியின்போது இதை நாங்கள்தான் செய்யவேண்டும். இதற்கு ” எப்பிசியோட்டமி ” ( Episiotomy ) என்று பெயர்.

          ஒரு சிலருக்கு குறடு ( Forceps ) என்னும் ஆயுதம் போட்டு குழந்தையின் தலையை வெளியே இழுக்கவேண்டும். இதையும் நாங்கள் செய்து பழகிக்கொண்டோம். அதைச் செய்யும்போது எனக்கு அச்சமாக இருக்கும். குழந்தையின் தலை நொறுங்கிவிடுமோ என்ற பயம் அது! காரணம் அந்தக் குறடுகளை உள்ளே விட்டு இரண்டையும் சரியாக ஒன்று சேர்த்து மாட்டவேண்டும். அப்போது கொஞ்சம் பலம் தேவைப்படும். அதுபோன்றே வெளியில் இருக்கும்போதும் அதிக பலம் தேவை.
          வேறு சிலருக்கு குறடுக்கு பதிலாக உறிஞ்சு எக்கி  (Suction Pump ) பயன்படுத்தி குழந்தையின் தலையை வெளியே இழுத்துவிடலாம். ஆனால் இப்படி செய்யும்போதும் நான் பயப்படுவேன். தலையின் தோல் பிய்த்துக்கொண்டு தனியாக வந்துவிடுமோ என்று அஞ்சுவேன்!
          இதுபோன்ற உதவியுடன் கூடிய பிரசவம் பெரும்பாலும் முதல் பிரசவத்தின்போதுதான் தேவைப்படும். இரண்டாவது மூன்றாவது பிரசவம் தானாக இயற்கைப் பிரசவமாகிவிடும். அப்போது அதிக உதவி தேவைப்படாது.
          சிலருக்கு பிரசவ காலம் வந்தும்கூட பிரசவ வலி வராது. இவர்களை பிரசவ அறைக்குக் கொண்டு வந்து ட்ரிப் மூலம் ஊசி மருந்து ஏற்றி வலியை உண்டுபண்ணுவோம். இதை தூண்டிய பேற்று வலி ( Induced Labour ) என்போம். வலி வந்தபின் பிரசவம் உண்டாகும். அப்படி வலி வந்தும் பிரசவம் ஆவதில் தாமதம் உண்டானால் அறுவை சிகிச்சை மூலமே பிரசவம் தேவைப்படும். அவர்களை உடனடியாக அறுவை மருத்துவ அறைக்குக் கொண்டுசெல்வோம்.
          அறுவை மருத்துவ அறையில் நாங்கள் அதிக நேரம் செலவிடுவது சிசேரியன் அறுவை மூலம் குழநதையை வெளியில் எடுக்கும்போதுதான். இதற்கு ஒரு சிலருக்குதான் நேரம் குறிக்கப்பட்டு செய்யப்படும். பெரும்பாலும் இது அவசர நெருக்கடியில்தான் ( Emergency ) நடைபெறும். அது குழந்தைக்கு ஆபத்து உண்டாகி அதன் இதயத் துடிப்பு அதிகமானாலும், அல்லது பனிக்குடம் உடைந்து வலி உண்டாக தாமதமானாலும், அல்லது இன்னும் தாமதிப்பது குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்று கருதினாலும் உடனடியாக இத்தகைய அவசர அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும். இது எந்த நேரத்திலும் நடைபெறும். நள்ளிரவுக்குப் பின்பும், விடியல் காலையிலும், பகலில் எந்த நேரத்திலும் இது நடைபெறும். அப்போது செய்துகொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு உடனடியாக அறுவைக் கூடம் சென்றுவிடவேண்டும். இரவில் நல்ல உறக்கத்தில் இருக்கும்போதும் இத்தகைய அவசர அழைப்பு வரும். தூக்கக் கலக்கத்துடன் அங்கு நடந்து செல்லவேண்டும்.
          இதில் வயிற்றின் தோலையும் சதையையும் கிழித்து கருப்பையை அடைவோம். கருப்பையின் சுவரை வெட்டியதும் இரத்தம் குபுகுபுவென்று வெளியேறும். அதை ஒருவகையாக கட்டுப்படுத்திக்கொண்டு குழநதையை வெளியில் எடுத்துவிடவேண்டும். அதோடு சேர்த்து தொப்புள் கொடியுடன் நஞ்சுக்கொடியையும் ( Placenta ) எடுத்துவிடவேண்டும். பிறகு கவனமாக கருப்பையில் தையல் போடவேணதசைகளைத் தைத்தபிறகு தோலில் தையல் போடுவோம்.
கருவுற்ற பெண்ணுக்கு முதல் இரண்டு மாதத்தில் இன்னொரு ஆபத்தான அவரச அறுவை மருத்துவமும் தேவைப்படும். இது தாயின் உயிரைக் காக்க செய்யப்படுவதாகும். அப்படி செய்யும்போது சிசு அழிந்துவிடும்.அதைக் காப்பாற்ற இயலாது. இது கருப்பைக் குழாயில் ( Fallopian Tube ) கரு தரிப்பதாகும் ( Tubal Pregnancy ).கரு  கருப்பைக்குள் வளராமல் கருப்பைக் குழாயில் வளரும். இரண்டு மாதத்தில் கரு பெரிதானதும், குழாய் விரிந்து கடுமையாக வலிக்கும். உடனடியாக அதை அறுவை மூலம் அப்புறப்படுத்தாவிடில், குழாய் வெடித்து இரத்தம் வெளியேறி தாயின் உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணிவிடும்! இப்படி குழாயில் வளரும் ஆபத்தான கருவை அல்ட்ராசவுண்டு மூலம்  கண்டறியலாம்.
அறுவை மருத்துவ அறைக்கு  நான் வேறு காரணத்துக்காகவும் அடிக்கடி சென்று வருவதுண்டு. பிரசவமான தாய்மார்கள் சிலருக்கு கருத்தடை அறுவை செய்ய நான் கற்றுக்கொண்டேன். அதன்பின்பு நானே நிறைய பேர்களுக்கு அதைச் செய்துவந்தேன். அதை அரை மணி நேரத்தில் செய்துவிடலாம்.
          மகளிர் நோய் இயலில் கருப்பை தொடர்புடைய நோய்கள் கொண்ட சிலருக்கு அறுவைச் மருத்துவம் தேவைப்படும். அப்போதும் நான் அறுவை மருத்துவ அறைக்குச் சென்று உதவுவேன். ஃபைப்ராய்டு கட்டிகள் ( Fibroid ), சினைப்பையில்  நீர்க்கட்டிகள் ( Ovarian Cysts ), கருப்பை புற்றுநோய் ( Cancer Uterus ), கருப்பை கழுத்து புற்றுநோய் ( Cancer Cervix  ) ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு அறுவை மருத்துவம் செய்யப்படும். பலருக்கு கருப்பையுடன், சினைப்பையும் அகற்றப்படும். சிலருக்கு கட்டிகள் மட்டும் அகற்றப்படும்.
          பிரசவ வார்டு பணி முடியும் மூன்று மாதங்களை  நெருங்கிக்கொண்டிருந்தேன்.அந்த முதல் பிரசவத்துக்குப்பின்பு ஏராளமான பிரசவங்களையும் தனியாகப் பார்த்துவிட்டேன். அப்போதெல்லாம் மேரியும் உடன் இருப்பாள். அந்த முதல் நாள் விருந்துபோல இன்னும் பல விருந்துகளுக்குச் சென்று வந்தோம். நாங்கள் நெருக்கமாக பழகலானோம். அடிக்கடி இப்படி சந்தித்தால் அது இயல்புதானே. நாங்கள் அடிக்கடி ஆலமரத்து அடியில் சந்தித்து வெளியே செல்வது பலரின் கண்களை உறுத்தியது. ஒரு வளாகத்தில் இப்படி ஒரு செய்தி பரவுவதும் இயல்புதானே. அப்போதுதான் ஒரு நாள்   ” விருந்தின்போது ‘ அவள் அதைச் சொன்னாள்.
          அவளுக்கு முன்பே நிச்சயம் ஆகிவிட்டதாம். அவனும் ஒரு மலையாளியாம். தற்போது லண்டனில் டெக்னீஷனாக பணியில் உள்ளானாம். அவனை பெற்றோர் பார்த்து முடிவு செய்தார்களாம். அவனுடன் பழகியதில்லையாம். என்னுடன் பழகியபின்பு அவன் மீது பற்று வரவில்லையாம்.
          இதுதான் அவளின் பிரச்னை.
          என்னிடம் இதைச் சொன்னபோது அவளுடைய கரு விழிகள் கலங்கின. முன்பே இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று நான் அவளைக் கடிந்துகொள்ளவில்லை. என் நிலையும் அப்படிதானே? நானும் என்னைப்பற்றி அவளிடம் எதையும் சொல்லவில்லை அல்லவா? ஆகவே அவளுடைய பிரச்னைக்குத் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டேன்.
          ” நிச்சயிக்கப்பட்டுவிட்ட அவனை நீ இப்போது வேண்டாம் என்று சொன்னால் உன் பெற்றோரும், அவனும் அவனுடைய பெற்றோரும் அதை ஏற்றுக்கொள்வார்களா? இதை நீ யோசிக்கவில்லையா? ” அவளிடம் கேட்டேன்.
          ” யோசித்தேன்.ஆனால் உங்களிடம் பழகிய இந்த கொஞ்ச நாளில் என் மனதை உங்களிடம் பறிகொடுத்துவிட்டேன். இப்போது நான் என்ன செய்வது? ” அவள் உள்ளதை உள்ளபடிதான் கூறினாள் . இது கேட்டு நான் அதிர்ச்சி அடையவில்லை.
          ” உன் நிலை எனக்குப் புரிகிறது. நாம் இப்போதான் கொஞ்சம் நெருங்கிப்  பழகுகிறோம்.நீ முன்பே நிச்சயிக்கப்பட்டவள் என்பதை இன்றுதான் தெரிந்துகொண்டேன். இதை ஏன் இன்று என்னிடம் சொன்னாய்? ஏதாவது காரணம் உள்ளதா? ” நான் அவளிடம் கேட்டேன்.
          ” உள்ளது. நாம் பழகுவது அவனுக்குத் தெரிந்துவிட்டது.” அது கேட்டு நான் அதிர்ச்சிக்கு உள்ளானேன்! நாங்கள் பழகுவது லண்டன் வரை தெரிந்துவிட்டதா?
          ” எப்படி இதை நம்புவது? ” அவசரமாக அவளிடம் கேட்டேன்.
          ” அவன் எனக்கு ட்ரங்க் கால் செய்தான். “
          ” என்ன சொன்னான்? “
          ” நீ அங்கு ஒரு டாக்டருடன் பழகுவதாக எனக்கு சேதி வந்தது. நமக்கு நிச்சயம் ஆகியுள்ளதை நீ மறந்துவிட்டாயா? நீ எனக்கே சொந்தம். உன்னை யாருக்கும் தியாகம் செய்ய நான் தயாரா இல்லை எனக்காக இன்னும் உன்னால் காத்திருக்க முடியாவிட்டால் உடன் நான் நமது  திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்.மனதை இப்படி அலைய விடாதே. ” என்று சொன்னான்.
          அவன் சொன்னதிலும் நியாயம் இருப்பது தெரிந்தது.
          ” நீ என்ன சொன்னாய்? “
          ” என்னை மறந்துவிடு. உன்னை இப்போது எனக்குப் பிடிக்கவில்லை என்றேன். ” துணிச்சல்காரிதான் இவள்.
          ” அதற்கு அவன் என்ன  “சொன்னான்?
          ” அது இந்த ஜென்மத்தில்  முடியாது. நீ அந்த டாக்டருடன் படுத்திருந்தாலும் பரவாயில்லை. நீ எனக்குதான் மனைவி என்றான். அதோடு நான் போனை வைத்துவிட்டேன். ” என்றாள் .

           அது கேட்டு அவளிடம் மேலும் என்ன கேட்பது என்று தெரியாமல் தடுமாறினேன்!

          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationபால்வீதி ஒளிமந்தையின் கருந்துளை, கரும்பிண்டம் வடிவெடுக்கும் நுணுக்கத் திறன் முதன்முதல் வெளியாகி உள்ளதுஉமர் கயாம் ஈரடிப்பாக்கள்