தொடுவானம் 181. பதிவுத் திருமணம்

காலையில் சீனனின் வாடகை ஊர்தியில் ஜோகூர் பாரு புறப்பட்டோம். நானும் பெண்ணும் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டோம்.அவளின் தந்தை ஓட்டுநர் அருகில் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.அவள் குட்டை பாவாடை ( Skirt ) அணிந்திருந்தாள். .நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.மூன்று மணி நேரப் பிரயாணம்.
அந்தப் பகுதி முழுதும் செம்பனை மரங்ககளால் நிறைந்து பச்சைப்பசேல் என்று காட்சி தந்தது. இடையிடையே சிறு சிறு ஊர்களில் கடைத்தெருக்கள் காணப்பட்டன. அவை பெரும்பாலும் சீனர்களின் கடைகளாகவே தென்பட்டன. அவற்றின் பெயர்ப்பலகைகளில் சீன எழுத்துகள் காணப்பட்டன.இங்குமட்டுமல்ல. மலேசியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வர்த்தகம் சீனர்களின் கைகளில்தான் இருந்தது. தமிழர் கடைகளைப் பார்ப்பது அபூர்வமாகவே இருந்தது. பெரும்பாலான தமிழர்கள் ரப்பர் அல்லது செம்பனைத் தோட்டங்களில்தான் மாதச் சம்பளத்துக்கு இருந்தனர். அவர்களுக்கு வேண்டிய பொருட்களை சீனர்கள்தான் விநியோகம் செய்தனர்.சீனர்கள் மாதச் சம்பளம் வாங்குவதில் ஆர்வம் இல்லாமல் இருந்தனர். சொந்தத்தில் எதாவது ஒரு தொழில் செய்வதையே விரும்புவர்.
ஜான் அண்ணன் ஜோகூர் பாருவில் உள்ள அரசாங்க அலுவல் கட்டிடத்தில் குடிநீர் பிரிவில் குமாஸ்தாவாகப் பணியாற்றுகிறார். அங்குதான் திருமணப் பதிவு அலுவலகமும் உள்ளது.அவர் சிங்கப்பூரில் காமர்ஸ் படித்துவிட்டு மலேசிய அரசு வேலையில் சேர்ந்துள்ளார். ஜான் அண்ணன் எனக்கு பெரியப்பா மகன். பெரியப்பா ஜோகூர் லாபீஸ் எஸ்டேட்டில் இருந்த பதினோரு தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியராக இருந்தார். பெரியம்மா தனமணியும் தமிழ் ஆசிரியைதான். என்னுடைய அக்காளும் ( பெண்ணின் தாயார் ) தமிழ் ஆசிரியைதான். அப்பா சிங்கப்பூரில் பாரதிதாசன் தமிழ்ப் பள்ளியில் தமிழாசிரியாக இருந்தார். ஜான் அண்ணனுக்கு பெண் பார்த்தனர். அப்போது ” ச் சா ஆ ” வில் இருந்த செம்பனை ஆலையில் ( Oil Palm Factory ) நிர்வாகியாகப் பணிபுரிந்த சந்திரன் சேவியர் ராஜா என்பவரின் வீட்டில் அவருடைய தங்கை ரேச்சல் ராணி தங்கியிருந்தார்.அவர்கள் இருவரும் ஜான் தேவ அனுக்கிரகம் என்பவரின் பிள்ளைகள். அந்த அனுக்கிரகம் என்பவர் பெரியப்பா, அப்பாவுடன் சீர்காழி போர்டிங்கில் ஒன்றாகத் தங்கி பயின்றவர். அவரின் பூர்வீகம் தஞ்சாவூர். பெரியப்பாவும் அப்பாவும் ரேச்சல் ராணியை ஜான் அண்ணனுக்கு மணமுடிக்க பேசி முடிவு செய்தனர்.1966 ஆம் வருடத்தில் திருமணம் ” ச் சா ஆ ” பட்டணத்தில் சிறப்பாக நடந்தது. நான் அப்போது தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டில் இருந்தேன்.
நாங்கள் அங்கு சென்றடைந்தோம். அவர்கள் வாடகை வீட்டில்தான் குடியிருந்தனர். பலகைகளினால் ஆன வீடு. நான்கு செங்கல் கால்களின்மேல் வீடு நின்றது. வெள்ளம் வந்தால் நீர் உள்ளே புகாமல் இருக்க அத்தகைய வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றை கம்பத்து வீடுகள் என்று அழைப்பார்கள். கம்பம் என்பது கிராமம். ஆனால் அப் பகுதி கிராமம் இல்லை. பட்டணத்தின் ஒரு பகுதிதான். தரையும் பலகைகளால் உருவாக்கப்பட்டிருந்தது. தகரத்தால் கூரை அமைக்கப்பட்டிருந்தது. நடந்தால் பலகைகளால் ஆன தரை ஓசை எழுப்பும். மூன்று படுக்கை அறைகளும் ஒரு கூடமும் இருந்தன. வீட்டின் அடிப்பகுதியில் சமையல் கட்டும் குளியல் அறையும் இருந்தன. கழிவறைதான் மோசமாக இருந்தது. அது சிறு கொட்டகையில் இருந்தது. கழிவு ஒரு பெரிய சதுர தகரத் தொட்டியில் சேர்ந்ததும் காலையில் அதை எடுத்துக்கொண்டு வேறொன்றை வைத்துச் செல்வார்கள் அதைத் துப்புரவு செய்யும் சீனர்கள். அவர்கள் அதைக் கொண்டுசெல்ல ஒரு லாரியில் வருவார்கள். சில வேளைகளில் சில பன்றிகளும் கழிவறை அருகே சுற்றிக்கொண்டிருக்கும்.
.நாங்கள் வீட்டை அடைந்தபோது அண்ணி மட்டும் இருந்தார். அவர் அழகாக இருந்தார். நன்றாக தமிழ் பேசினார். அதனால் அவரை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. மகன் எட்வின் ஜான் பாலர் பள்ளிக்குச் சென்றிருந்தான். , விரோனிக்கா சுமித்திரி குழந்தையாக தொட்டிலில் உறங்கினாள். எங்களை அண்ணி இன்முகத்துடன் வரவேற்று காப்பி கலக்கிக்கொண்டுவந்தார்.
அண்ணி ஜாசின் என்னும் பட்டணத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை அனுக்கிரகம் ஜாசின் லாலாங் தமிழ்ப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். அவருடைய தாயார் அலிஸ் நேசமணியும் அதே பள்ளியில் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றினார். அவர் சிங்கப்பூரில் மருத்துவராகப் பணியாற்றிவந்த டாக்டர் அனுக்கிரகம் என்பவரின் மகளாவார். பின்பு அவர்கள் குடிபெயர்ந்து [பாகங் மாநிலம் சென்றனர். அங்கு அனுக்கிரகம் ஜெரந்துத் எஸ்டேட்டில் மேலாளராகப் பணியாற்றினார்.
மதிய உணவு நேரத்தின்போது அண்ணன் வீடு வந்தார். நாங்கள் வந்திருப்பதைக் கண்டு அவர் மகிழ்ந்தார். உணவு உண்ணும் வேளையில் நாங்கள் வந்த நோக்கத்தை அவரிடம் சொன்னோம்.உணவுக்குப் பின் உடன் திருமணப் பதிவு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். பொதுவாக மனு செய்தபின்பு இரண்டு வாரங்கள் காத்திருக்கவேண்டும் என்றார்.அதுவரை அந்த திருமணத்துக்கு யாரும் அட்சேபனை செய்யக்கூடாதாம். அதன் பின்புதான் திருமணத்தை பதிவு செய்து தருவார்களாம். ஆதலால் நாங்கள் மீண்டும் இரண்டு வாரம் கழித்து வரவேண்டும் என்றார். எனக்கு ஒரு மாதம்தான் விடுப்பு இருந்தது. நான் மலேசியா வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இதில் இன்னும் இரண்டு வாரம் காத்திருந்தால் சிரமமாகும். ஆகவே வேறு வழிமுறைகள் இருந்தால் அன்றே பதிவுத் திருமணத்தை முடித்துவிடலாமா என்று அவரிடம் கேட்டேன். அவசர திருமணப் பதிவு எனில் ஜோகூர் மாநில முதல்வரின் அனுமதி பெறவேண்டும் என்றார். அவருடைய அலுவலகமும் அதே அரசாங்க கட்டிடத்தில்தான் இருக்கிறதாம். நாங்கள் அவ்வாறு முயன்று பார்க்கலாம் என்றோம்.
மதியம் இரண்டு மணிக்கு அலுவலகம் சென்றோம். அது ஒரு உயர்ந்த குன்றின்மேல் வானளாவி நின்ற பிரமாண்டமான கட்டிடம். அதை ” பாங்குனான் சுல்தான் இப்ராஹிம் ” என்று அழைத்தனர். அதில்தான் அனைத்து அரசாங்க அலுவலங்களும் செயல்பட்டன. திருமண பதிவு அலுவலகத்தில் எங்களைத்தவிர வேறு யாரும் பதிவுக்கு வரவில்லை. நல்ல வேளையாக திருமண பதிவு உயர் அதிகாரியாக தம்பி ஐயா என்னும் ஒரு தமிழர் இருந்தார். நாங்கள் அவரிடம் அவசர திருமண பதிவுக்கு உதவுமாறு வேண்டினோம். அவர் சில பாரங்களை பூர்த்தி செய்துகொண்டு மாநில முதல்வர் அலுவலகம் சென்றார். நாங்கள் காத்திருந்தோம். அவர் திரும்பியபோது சம்மதம் கிடைத்துவிட்டது என்பதை அவரின் முகம் காட்டியது. எங்களை அமரச் சொன்னார். பின்பு வேறு சில பாரங்களைப் பூர்த்தி செய்தபின்பு எங்கள் இருவரின் சம்மதம் கேட்டார். நாங்கள் சம்மதம் சொன்னோம். பின்பு சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டோம். அதன்பின்பு திருமண சான்றிதழ் தயார் ஆனது. அதில் நாங்கள் இருவரும் கையொப்பமிட்டோம். சாட்சி கையெழுத்தை அவளின் தந்தையும் ஜான் அண்ணனும் இட்டனர். அவர் எங்களுக்கு கைகொடுத்து விடை தந்தார். அப்போதே நாங்கள் மலேசிய சட்டப்படி கணவன் மனைவி ஆகிவிட்டோம்! இனி பத்திரிகை அச்சிட்டு ஆலயத்தில் நடைபெறும் திருமணத்தை எப்போது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஜான் அண்ணன் எங்கள் இருவரிடம் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
எங்களை வீட்டில் விட்டுவிட்டு பணிக்குத் திரும்பினார். ராணி அண்ணி எங்களை ஆச்சரியத்துடன் பார்த்து வாழ்த்து கூறினார். வீட்டை விட்டு சென்றபோது நாங்கள் கணவன் மனைவி இல்லை. கொஞ்ச நேரத்தில் நாங்கள் இருவரும் கணவன் மனைவியாகிவிட்டோம் அல்லவா?
ஜான் அண்ணன் மாலையில் திரும்பியபின்பு ஊர் நிலவரம் கேட்டார். நான் பெரியப்பா பெரியம்மா லில்லி அக்காள், தம்பிகள் டேவிட், நெல்சன் பற்றியெல்லாம் விவரமாகக் கூறினேன். அவர் ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருந்தார். அவ்வாறு இரவில் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
மறுநாள் காலையில் நாங்கள் மூவரும் வாடகை ஊர்தி மூலம் லாபீஸ் திரும்பினோம். அக்காள் எங்களை இன்முகத்துடன் வரவேற்றார். நாங்கள் நடந்தவற்றைக் கூறினோம். அவர் அகமகிழ்ந்தார்.
நிச்சயதார்த்தம் என்ற பெயரில் ஒரு விருந்துக்கு நாள் குறித்தனர்.
நான் என்னுடைய நண்பர்களை அதற்கு அழைக்க எண்ணினேன். ஆனால் தூரம் கருதி அழைக்கவில்லை.
நிச்சயதார்த்தம் ஒரு நாள் மாலையில் .நடந்தது. வீட்டின் எதிரே பெரிய பந்தல் போடப்பட்டது. ஆங்கே அமர்ந்து உணவு உண்ண மேசை நாற்காலிகள் போடப்பட்டன. உறவினர்களும் ந்ண்பர்களும் வந்திருந்தனர். அக்காள் வேலை செய்யும் மேல்வேல் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் ஆசிரியர்கள் வந்திருந்தனர். தோட்டத்து மக்களும் பலர் வருகை தந்தனர். எங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. லாபீஸ் லுத்தரன் சபை ஆலயத்தின் சபைகுரு வந்திருந்து சிறப்பு செய்தார். கிறிஸ்துவ கீதங்ககள் பாடினோம். வேத வசனம் வாசித்தோம். சிறு பிரசங்கம் செய்தபின்பு எங்களை ஆசீர்வதித்தார். அதன்பின்பு சுவையான விருந்து நடந்தது. அப்போது பலர் என்னிடம் பேசினார். சிலர் ஏன் தமிழகம் திரும்புகிறீர் என்று கேட்டனர். நான் கொஞ்ச காலம் அங்கு சேவை செய்துவிட்டு திரும்பிவிடுவேன் என்றேன். பெண்ணையும் உடன் அழைத்துச் செல்வீரா என்று கேட்டனர். நான் ஆம் என்றேன்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationகவிநுகர் பொழுது-23 (கவிஞர் தேவேந்திர பூபதியின்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை முன்வைத்து)தமிழ்மணவாளன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ அதற்குத் தக ‘ தொகுப்பை முன் வைத்து …