தொடுவானம் 217. தங்கையின் திருமணம்

                    நான் திருப்பத்தூர் வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.  டாக்டர் செல்லையா காரைக்குடியில் தனியாக நர்சிங் ஹோம் ஆரம்பித்து சிறப்புடன் செயல்படுகிறார். டாக்டர் ஃப்ரடரிக் ஜான் தலைமையில் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை தொடர்ந்து இயங்கியது.
          டாக்டர் செல்லப்பாவும் ஆலிஸ் செல்லப்பாவும் மேற்படிப்புக்கு செல்ல விரும்பினார்கள். அவர்களை மருத்துவக் கழகம் பரிந்துரைச் செய்தது. அவர்கள் வேலூரில்தான் பயில விண்ணப்பித்தனர். செல்லப்பா மூன்று வருடங்களும், ஆலிஸ் இரண்டு வருடங்களும் பயில்வார்கள். அங்கு படிக்கும் காலத்தில் அவர்கள் முழுச்  சம்பளம் பெறுவார்கள். படித்து முடித்தபின்பு மூன்று வருடங்கள் கட்டாய சேவை புரிவார்கள்.
          இதுதான் மிஷன்  மருத்துவமனையில் சேவை செய்வதால் கிடைக்கும் நன்மை. இரண்டு வருடங்கள் பணியாற்றிபின்பு மேல் படிப்புக்கு விண்ணப்பம் செய்யலாம். மருத்துவமனைக்குத் தேவையான நிபுணத்துவப் படிப்பாக இருந்தால் மருத்துவக் கழகம் ஒப்புதல் தரும். அப்போது முழுச் சம்பளத்துடன் வேலூருக்கு படிக்கச் செல்லலாம். அதற்கு முதலில் தலைமை மருத்துவ அதிகாரி திருச்சபையின் மருத்துவக்  கழகத்துக்குப் பரிந்துரை செய்யவேண்டும். கோவை, திருச்சியில் உள்ள கண் மருத்துவமனையில் பணியாற்றினால் வியன்னா சென்று கண்ணுக்கு Z. O. என்ற மேல் நாட்டு பட்டம் பெற்று வரலாம். திருப்பத்தூரில் பணி புரிவோர் வேலூருக்குச் செல்லலாம். நான்கூட இரண்டு வருடங்கள் முடித்துவிட்டேன். டாக்டர் செல்லப்பாவும் ஆலிஸும் வந்தபின்பு நானும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் நான் இப்போதே தலைமை மருத்துவ அதிகாரியை நேரடியாக எதிர்த்துக்கொண்டேன். அவர் என்னை மேற்படிப்புக்கு பரிந்துரை செய்வாரா என்பது சந்தேகமே!
          இப்போது இனியும் இங்கே தொடர்வேனா என்பதே கேள்விக்குறியாகிவிட்டது. சிங்கப்பூரில் எழுதப்போகும் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால் திருப்பத்தூர் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்க நேரலாம்!
          டாக்டர் ராமசாமி இரண்டு வருடச் சேவை செய்துவிட்டார். ஆனால் அவர் வேலூர் மாணவர் அல்ல. அவர் திருச்சபை பரிந்துரையில் மருத்துவம் படிக்கவில்லை. அதோடு அவர் ஓர் இந்து.அதனால் அவருக்கு அந்த சலுகை கிடைக்காது. அவரும் மேற்கொண்டு படிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. அனால் அறுவை சிகிச்சையில் ஆர்வம் கொண்ட அவர் சில அறுவைச் சிகிச்சைகளை தனியாகச் செய்யும் திறமை கொண்டவர்,டாக்டர் ஜான் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஒரு சமயம் டாக்டர் ஜான் இல்லாத சமயத்தில் ஒருவருக்கு அறுவை செய்து நோயாளியின் குடல் வாலை வெற்றிகரமாக அகற்றிவிட்டார். அதை டாக்டர் ஜான் பாராட்டவில்லை. அப்படிச் செய்வது ஆபத்து என்று எச்சரித்தார். தான்தான் அறுவை சிகிச்சை நிபுணர் என்றும் கூறிக்கொண்டார். டாக்டர் ராமசாமி அதை என்னிடம் சொல்லி வருந்தினார். நான் ஆறுதல் சொன்னேன்.அதிலிருந்து அவர் என்னோடு நெருக்கமானார்.
          கலைசுந்தரியின் திருமணத்துக்கு நாள் குறித்து விட்டார்கள். நான் ஊர் செல்ல தயார் ஆனேன். கோவிந்தசாமியிடமிருந்து இன்னும் கடிதம் வரவில்லை. அங்கு தேர்வு நாள் இன்னும் குறிப்பிடப்படவில்லை. அது தெரிந்ததும் விடுப்பு எடுக்கச் சொல்லியிருந்தான். அப்போதுதான் தேர்வு எழுதி அதன் முடிவு தெரிந்து ஒரு மாதத்தில் திரும்பிவிடலாமா  அல்லது வேண்டாமா என்பது தெரியவரும்.
          தங்கையின் திருமணத்துக்கு ஒரு வாரம்  விடுப்பு எடுத்துக்கொண்டேன். திருமணம் மாமா வீட்டில்தான். அவர் செல்வராஜூவுக்கும் இன்பராஜூவுக்கும் ஒரே மேடையில் திருமணம் நடத்த தடபுடலாக ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார். அவர்கள் வீட்டின் முதல் திருமணம். உறவினர்கள் அனைவரும் வந்துவிடுவார்கள். மாமா வீட்டு உறவினர்கள் அனைவருமே எங்களுக்கும் உறவினர்கள்தான்.இந்தத் திருமணத்தில் நான் பார்த்திராத உறவினர்களையெல்லாம் தெரிந்து கொள்ளலாம்.
          நான் இரவு துரித பேருந்தில்  ஏறி பிரயாணம் மேற்கொண்டேன். அதிகாலையிலேயே பால்பிள்ளை கூண்டு வண்டியுடன் சிதம்பரம் பேருந்து நிலையத்திற்கு வந்துவிட்டான்.சூடாக தேநீர் அருந்திவிட்டு புறப்பட்டோம்.அவசரம் ஓன்றும் இல்லையென்பதால் எங்கள் வீட்டு இரண்டு காளைகளும் மெல்ல நடந்து சென்றன. நாங்கள்பேசிக்கொண்டே ஊர் வந்தடைந்துவிட்டோம். அதிகாலை வேளையாதலால் சாலையில் போக்குவரத்து அதிகம் இல்லை. ஓரிரு பேருந்துகள் மட்டும் வந்தன.
          வயல்வெளிகளிலெல்லாம் பழுத்த நெற்  கதிர்கள் சாய்த்து கிடைத்தன. அவற்றின் மீது காலைப் பனி படந்திருப்பதைக் கண்டபோது மனதிலும் குளிர்ச்சியுண்டாகியது.
          வீட்டு வாசலில் பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. என்னைக் கண்ட அனைவருக்கும் மகிழ்ச்சி. ராஜகிளியும் உடன் வந்து பார்த்துச் சென்றார். மாமன் வீட்டில் சம்பந்தம் வைத்துக்கொள்வதில் அவருக்கும் மகிழ்ச்சிதான்.அவரும் பெரிய தெருவிலிருந்து வந்தவர்தானே.
          தாம்பரத்திலிருந்து அத்தை வீட்டார், தரங்கம்பாடியிலிருந்து அண்ணனும் அண்ணியும் சில்வியாவும் வந்துவிட்டனர். வீட்டின் முன்பக்கம் வாசலுக்கு அப்பால் ஒரு நிரந்தரமான கொட்டகை கட்டப்பட்டிருந்தது. இரவில்  அங்கு நன்றாக காற்று வீசும். அங்கு சிலர் படுத்துத் தூங்கினர். வாசல் முழுதும் பெரிய பந்தல் இருந்ததால் விருந்தாடிகள் அனைவரும் சிரமமின்றி இடம் தேடிக்கொண்டனர். இரவில் வெகு நேரம் தூக்கம் வரும்வரை கதை பேசிக்கொண்டிருந்தனர்.
          கூண்டு வண்டி அன்றாடம் சிதம்பரம் சென்று வந்தது. பால்பிள்ளைக்கு ஓயாத சவாரிதான். சமையலுக்கான சாமான்கள்,காய்கறிகள், மீன், இறைச்சி வகைகள் அன்றாடம் கொண்டுவந்தனர். சமையற்காரர்கள் தோட்டத்தில் போடப்பட்டிருந்த பந்தலிலேயே சமைத்துக்கொண்டு மூன்று நாட்கள் அங்கேயே குடியிருந்தனர்.
          கிராமத்தில் நடைபெறும் திருமணம்  நிச்சயமாக ஒரு கோலாகலத்  திருவிழாவாகத்தான் நடைபெறுகிறது. திருமணத்தில் அந்த கிராமமே பங்கெடுக்கிறது.  சுற்றி வளைத்தால் ஒரு வழியில் எல்லாருமே ஏதாவதொரு வகையில் சொந்தமாகவே உள்ளனர். அதனால் அனைவரும் உற்சாகமாக விருந்து உபசரிப்பில் பங்கு கொள்கின்றனர்.ஏறக்குறைய கிராமத்தில் நடக்கும் அனைத்து திருமணங்களும் இப்படித்தான் நடக்கின்றன.
          திருமண நாள். அற்புதநாதர் ஆலயம் அலங்கரிக்கப்பட்டு அழகாக காட்சி தந்தது. குமராட்சியிலிருந்து சபைக்குருவும் வந்துவிட்டார். சரியாக காலை ஒன்பது மணிக்கு ஆலய மணி ஒலித்தது. ஆலயம் மக்களால் நிரம்பியிருந்தது.வெளியில் போடப்பப்பட்டிருந்த பந்தலிலும் பலர் அமர்ந்திருந்தனர். மணமகன் செல்வராஜ் முதலில் அழைத்துவரப்பட்டு பீடத்தின் முன் அமர்த்தப்பட்டான்.அதன்பின்பு கலைசுந்தரியை அழகாக அலங்கரித்து அழைத்து  வந்தோம். பாடல்களும் கீர்த்தனைகளும் முழங்கின. சுருக்க அருளுரைக்குப்பின் திருமண நிகழ்வு நடந்தேறியது. மங்கல  நாணை செல்வராஜ் கலைசுந்தரியின் கழுத்தில் மூன்று முடிச்சு இட்டான்.அப்போது சபையோர் வாழ்த்துக் கீதம் பாடினர்.ஜெபத்துடன் திருமணம் சிறப்புடன் நடந்தேறியது. மங்கல  பவனியுடன் மணமக்கள் வெளியேறினார்கள். அங்கிருந்து காரில் மாமா வீடு சென்றனர். நாங்கள் அனைவரும் நடந்து பின் தொடர்ந்தோம்.
          பெரிய தெருவில் மாமா வீட்டின் அருகிலேயே இருந்த இந்து ஆலயத்தில் இன்பராஜூவுக்கும் சுசீலாவுக்கு திருமணம் நடந்துவிட்டது.
          மாமா வீட்டின் எதிரே வீதியில் நீண்ட பந்தல் போடப்பட்டிருந்தது. அதன் உயரத்தில் கட்டியிருந்த ஒலிபெருக்கியில் திரைப்பட ப் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது.பந்தலினுள் தரையில் நீண்ட பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. அதில் உறவினரும் ஊர் மக்களும் அமர்ந்திருந்தனர்.முக்கிய பிரமுகர்களுக்கு நாற்காலிகளும் பெஞ்சுகளும் போடப்பட்டிருந்தன.
          இரண்டு ஜோடிகளும் அருகருகே அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன் ஒரு மேசை .அதன் அருகே வரவேற்பு விழாவில் வாழ்த்துரை வழங்குவோர் அமர்ந்தனர். நானும் அங்கு அமர்ந்தேன். அண்ணனும் என் அருகில் அமர்ந்து கொண்டார். பாலமுத்து மாமா முன்பே அமர்ந்திருந்தார். அப்போது பாராளுமன்ற உறுப்பினர் எல்.இளையபெருமாள் காரில் வந்து இறங்கினார். அவரை அழைத்துவந்து இருக்கையில் அமர்த்தினோம்.அவர் தலைமையில்தான் வரவேற்பு நடைபெற்றது.
          இரு திருமணங்களுக்கு வந்ததில் மகிழ்ச்சியைத் தெரிவித்தார் எம்.பி. அவரைத் தொடர்ந்து நாங்கள் மணமக்களை வாழ்த்திப் பேசினோம். அதன்பின் மணமக்களுக்கு பரிசுப் பொருட்கள் தந்தனர். மொய் எழுதினர்.
          பாயில் நீண்ட வரிசையில் வாழை இலையில் பந்தி பரிமாறப்பட்ட்து.சுடச்சுட சுவையான ஆட்டு பிரியாணி அது! அனைவரும் திருப்தியுடன் உண்டு களித்தனர்.
          கலைசுந்தரியின் திருமணத்தை முடித்த மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினேன். இனி அடுத்தது கலைமகளின் திருமணம்.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationநாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.சோழன்