தொடுவானம் 243. பத்து பெர்சன்ட் 

டாக்டர் ஜி. ஜான்சன் 
        
          புதிய நிர்வாகத்தின் கீழ் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை சிறப்புடன் இயங்கியது. பேராயர் மாமறைதிரு ஜெயசீலன் ஜேக்கப் அவர்களும் புதிய செயலர் அதிஷ்டம் பிச்சைப்பிள்ளையும் மைத்துனர்கள். அதனால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக செயல்படலாயிற்று. எனக்கு இருவரும் பழக்கம் என்பதால் நல்ல சலுகையும் இருந்தது. மருத்துவமனையில் தலைமை மருத்துவருக்கு இது தெரிந்ததால் அவரும் என்னிடம் எச்சரிக்கையுடன் இருந்தார். மருத்துவமனை ஊழியர்களும் என்னிடம் தைரியத்துடன் பழகினார்கள். ஆரோக்கியநாதர் ஆலயத்திலும் எனக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. மதுரை மறை மாவடடத்திலும் என்னை பலருக்கு தெரிந்திருந்தது. இன்னும் சொல்லப்போனால் திருச்சபை முழுதும் என்னை பலர் தெரிந்திருந்தனர்.அதற்குக் காரணம் நான் லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் மினி தேர்தலில் போட்டியிட்டது. அதில் தோல்வியுற்றாலும் பரவாயில்லை. அதன் மூலம் என்னை நான் அறிமுகம் செய்துகொண்டேன். வருங்காலத்தில் அது கை கொடுக்கும்.
          ஒரு நாள் மாலையில் மேகநாதன் என்னைத் தேடி வந்தார்.அப்போது அவர் ராயல் என்பீல்ட் மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார். கையில் ஒரு துணிப் பை கொண்டுவந்தார். ஹாலில் அமர்ந்தவர் அதிலிருந்து ஒரு பெரிய விஸ்கி பாட்டிலையும் நான்கு சோடா பாட்டில்களையும்  வெளியில் எடுத்து டீப்பாய் மீது வைத்துவிட்டு சிரித்தார்.
          ” எதற்கு இது? ” நான் அவரைப் பார்த்து கேட்டேன்.
          ” நம்முடைய ஆட்சி வந்துவிட்ட்து அல்லவா? அதைக் கொண்டாட. ” என்றவாறு சிரித்தார்.
          அப்போது சமையல் கட்டியிருந்து என் மனைவி வந்தாள்.
          ” இரண்டு கிளாஸ் வேண்டுமே. ” அவளைப் பார்த்து சொன்னார்.
          அவள் மீண்டும் சமையல் கட்டுக்குச் சென்று திரும்பினாள். மேகநாதன் கிளாசில் விஸ்கியை ஊற்றி சோடா கலந்தார்.
           நாங்கள் விஸ்கி அருந்தியபடி பேசிக்கொண்டிருந்தோம்.
          உண்மையில் ஆட்சிக்குழு வெற்றிக்கும் மேகநாதனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் உறுப்பினர் இல்லை. ஆலய காரியங்களில் அவரின் பங்கு ஏதும் இல்லை. வாக்களிக்க மட்டும் வருவார். நான் சொல்வதுபோல்தான் வக்களிப்பார். அவர் சிஸ்டர் வசுந்தராவின் கணவர்.வசுந்தரா மருத்துவமனையில் ஸ்டாஃப் நர்ஸ். டியூட்டர் ஆவதற்கு பயிற்சி பெற வேலூர் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றுள்ளார். அங்கு இரண்டு வருடம் பயின்றபின்பு திரும்புவார். மேகநாதன் இரு பிள்ளைகளுடன் மருத்துவனை வளாகத்தில் தாதியர் இல்லத்தில் தங்கியுள்ளார். நிறைய குடிக்கும் பழக்கம் கொண்டவர். அவருடைய கண்கள் எப்போதும் போதையில் சிவந்துதான் காணப்படும்.
          விஸ்கி, ரம், பிராந்தி போன்றவற்றுடன் பட்டைச் சாராயமும் குடிப்பார். என்னுடன் அவர் குடிப்பது அதுவே முதல் தடவை. என் மனைவி முட்டையில் தக்காளி சேர்த்து பொரித்து கொண்டு வந்தாள்.  விஸ்கிக்கு அது சுவையாக இருந்தது. மேகநாதன் ஊறுகாய் கேட்டார்.நான் அதை சாப்பிடவில்லை.
          அவருக்கு போதை  ஏறியது. அப்போது அவர் வந்த நோக்கத்தை தட்டுத்தடுமாறிச் சொன்னார்.
          அவருக்கு திருச்சபையில் காண்ட்ராக்ட் வேலை வேண்டுமாம். தற்போது கூட அவர் அரசாங்க வேலைகள் சிலவற்றைச் செய்கிறாராம்.அதனால் கட்டிடங்கள் கட்டுவதில் அனுபவம் உள்ளதாம். திருச்சபையில் இனிமேல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு தனக்கு காண்ட்ராக்ட் வேண்டுமாம்.
          ” இதற்கு நான் என்ன செய்யவேண்டும்? அவரிடம் கேட்டேன்.
          ‘ நீங்கள் மனது வைத்தால் முடியும் டாக்டர். ” என்றார்..
          ” எப்படி? ” நான் கேட்டேன்.
          ” மிகவும் சுலபம் டாக்டர். என்னை நீங்கள்  செயலரிடம் அறிமுகம் செய்தால் போதும். நான் அவரிடம் பேசிக்கொள்வேன். அப்படி அவர் சம்மதம் தெரிவித்து எனக்கு காண்ட்ராக்ட் கொடுத்தால் உங்களுக்கு பத்து பெர்சன்ட் தந்துவிடுவேன்.  அது உங்களுக்கு உதவியாக இருக்கும். ” என்றார்.
        மேகநாதன் எவ்வளவு உண்மையானவர் என்பது எனக்குத் தெரியாது. அவருடைய தொழிலுக்கு என்னை உதவச் சொல்கிறார். அதற்கான சன்மானமாக வரும் லாபத்தில் எனக்கு பத்து சதவிகிதம் தருவதாகவும் சொல்கிறார். இதில் என்னுடைய பங்கு ஒருவகையில் அவருக்கு முக்கியம்தான். என்னுடைய பங்கு என் வகையில் குறைவுதான். நான் அறிமுகம்தான் செய்யவேண்டும். மற்றவற்றை அவரே பார்த்துக்கொள்வார்.
          நான் யோசித்தேன்.
          ” இப்படிச் செய்வது தவறு இல்லையா? அது திருச்சபையின் பணம் அல்லவா? ” நான் அவரிடம் கேட்டேன்.
          அவர் எனக்கு இன்னொரு கிளாஸ் விஸ்கி ஊற்றினார்.
          ” இதில் தவறு எங்கே உள்ளது. நான் செய்யும் வேலைக்கு எனக்கு பணம் வருகிறது.அதில் உங்கள் பங்குக்கு பத்து பெர்சன்ட் நான் என் பணத்திலிருந்துதானே தரப்போகிறேன்? இது நீங்கள் எனக்கு செய்யும் உதவிக்காகத்தானே நான் உங்களுக்குத் தரப்போகிறேன்? இதை ஏன் வேண்டாம் என்கிறீர்கள்? நீங்கள் இப்போது மாதச் சம்பளம்தானே  வாங்குகிறீர்கள்? இந்த எக்ஸ்ட்ரா வருமானம் உங்களுக்கு வேண்டாமா? ” அவர் வாதிட்டார் .
          அவர் சொல்வதும் சரியெனப் பட்டது.. அவருக்கு வருவதிலிருந்துதானே எனக்குத் தருவதாகச் சொல்கிறார். அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.
          நான் சரி என்றேன். அவர் கைகளைப் பற்றி நன்றி கூறினார்!
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationமருத்துவக் கட்டுரை- புட்டாளம்மை ( MUMPS )நாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு நாற்பது ஆண்டு பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும்.