தொடுவானம் 47. நாத்திகமா? ஆன்மீகமா ?

Anna and Kalaignar
தொலைக்காட்சிகள் இல்லாத காலம் அது. வானொலிகளில் பாடல்கள் கேட்கலாம். நான் வானொலி கொண்டுவரவில்லை. பத்திரிகை வாங்கினால்தான் செய்திகள் தெரியும். அப்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. திரு. பக்தவத்சலம் தமிழக முதல்வர். கலைஞர் மு. கருணாநிதி எதிர் கட்சித் தலைவர். அறிஞர் அண்ணா பாராளுமன்ற உறுப்பினர். எதிர் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்திகள் அதிகம் பத்திரிகைகளில் வெளிவராது. விடுதலை,முரசொலி, தென்றல், மன்றம் போன்ற இயக்க பத்திரிகைகள்தான் கழகத்தின் செய்திகளை வெளியிட்டன.
ஆனால் தாம்பரம் டவுனில் உள்ள கடைகள் வீடுகள்  ஆகியவற்றின் சுவர்களில் சுவரொட்டிகளுக்கு பஞ்சமில்லை. அவற்றைப் பார்த்தாலே போதும், எங்கே எந்த அரசியல் கட்சியின் கூட்டம் நடைபெறுகிறது என்பது. தெரிந்துவிடும். அடிக்கடி தாம்பரத்திலும், பல்லாவரத்திலும், சைதாப்பேட்டையிலும் தி. மு. க. வின் பொதுக்கூட்டங்கள் நடைபெறுவதை அந்த சுவரொட்டிகள் மூலம் அறிந்துகொள்வேன். அக் கூட்டங்களில் அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், கலைஞர் மு. கருணாநிதி, புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர். போன்ற கழகத் தலைவர்கள் பேசுவார்கள். நான் கூடியமட்டும் நண்பர்களுடனோ அல்லது தனியாகவோ அக் கூட்டங்களுக்குச் சென்றுவிடுவேன். மின்சார இரயில் இருந்ததால் சைதாப்பேட்டை வரைகூட சிரமம் இல்லாமல் சென்று திரும்பலாம்.
ஒரு முறை சைதப்பெட்டைக் கூட்டத்தில் அண்ணா பேசுகிறார் என்பதை அறிந்து இரவு சென்றிருந்தேன். அண்ணா வரும் வரை கூட்ட ஏற்பாட்டாளர்கள் மேடையில் பேசிக்கொண்டிருந்தார்கள். கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களும் பெசிக்கொண்டுதானிருந்தார்கள். மேடையில் பேசியவர்கள் அது பற்றி கவலைப் படாமல் தொடர்ந்து பேசினார்கள். அப்போது அண்ணாவின் கார் வந்தது. கூட்டத்தில் பெரும் சலசலப்பு உண்டானது. அண்ணா வேட்டியை அவிழ்த்து ஒரு முறை இறுக கட்டிக்கொண்டு மேடையில் ஏறினார்.( அவர் அவ்வாறு வேட்டி கட்டும் பாணியை கலைஞரின் பராசக்தி திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் காணலாம். )  கடல் அலை போல் ஆர்ப்பரித்த மக்கள் அப்படியே கப் சுப் என்று ஆகிவிட்டனர்! எனக்கு ஒரே ஆச்சரியம்! மக்கள் அண்ணா மீது கொண்டுள்ள மரியாதையை அன்று கண்டு வியந்து போனேன் எனில் அது மிகையன்று! சுமார் அரை நூற்றாண்டு கழிந்தபோதும் அந்தக் காட்சி அப்படியே என்னுடைய மனதில் பதிந்துள்ளது! அவருடைய  அடித்தொண்டையிலிருந்து வரும் தனித் தன்மையான குரலில் சொற்பொழிவைக் கேட்டு நான் கிறங்கிப்போனேன்!  தேனுண்ட வண்டாக மயங்கிப்போனேன்! சிங்கப்பூரில் இருந்தபோது அண்ணாவின் சொற்பொழிவுகளை தமிழ் முரசு பத்திரிகையில் நான் படித்து மகிழ்ந்துள்ளேன்.ஆனால் இப்போதோ அவரின் பேச்சாற்றலை நேரில் கேட்டு வியந்துபோனேன்!
அண்ணா ஒரு திரைப்பட நடிகர் அல்ல! ஆனால் திரைப்பட கதாநாயகர்களுக்கும் இல்லாத கவர்ச்சி அண்ணாவிடம் இருந்தது! அவர் அங்கு பேசத்தான் வந்தார். அவர் பேச்சைக் கேட்க மக்கள் வெள்ளம்போல் திரண்டு வழிந்தனர். அப்படி அவர் என்ன பேசிவிடப் போகிறார்? அவர் அப்போது தமிழக முதல்வர் இல்லை.  பகுத்தறிவையும் சமுதாய மறுமலர்ச்சியையும் குறிக்கோள்களாகக் கொண்டுள்ள ஒர்  இயக்கத்தின் பொதுச் செயலாளர்தான் அண்ணா!
அவர் என்ன சாதாரண பேச்சாளரா? அதுதான் இல்லை! 1940,1960 களில் அவர்தான் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்.அவருக்கு நிகர் அவரே எனலாம். மேடைப்பேச்சில் புதியதொரு சொற்பொழிவு பாணியை உருவாக்கிய முன்னோடி. அவரால்தான் தமிழ்ச் சொற்பொழிவு புதிய வடிவும், பொலிவும் பெற்றது. கருத்தாழம் மிகுந்த அவருடைய சொற்பொழிவுகளில் உவமைகளும், அவருக்கே அமைந்த அடுக்கு மொழியும்,கிண்டலும் கேலியும் இயல்பாக மடை திறந்த வெள்ளமென ஊற்றெடுக்கும்.  அவரின் அழகுத் தமிழ் தமிழர்களின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது. அவருடைய சொற்பொழிவுக்குக் காத்திருந்ததுபோல வேறு எவரின் சொற்பொழிவுக்கும் தமிழர்கள் காத்திருந்ததில்லை. அவருக்காகக் கூடிய மக்கள் வெள்ளம்போல் வேறு யாருக்காவும் அதுவரை திரண்டதில்லை.
அண்ணா நாவன்மை கொண்ட சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல. அவர் கைவண்ணம் கொண்ட மறுமலர்ச்சி எழுத்தாளர். அவருடைய உரைநடை, தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனை.அவருடைய எழுத்துக்களில் புதுமை பூத்துக் குலுங்கின. அது எதுகை மோனை விளையாடும் வீறுநடை. அவர் கையாண்ட சொல்லாக்கங்களும், தொடராக்கங்களும் சாகா வரம் பெற்றவை. மாற்றான் தோட்டத்து மல்லிகை, எதையும் தாங்கும் இதயம், எங்கிருந்தாலும் வாழ்க என்பன போன்ற பல நூறு தொடர்களைப் பயன்படுத்தியவர் அண்ணா. நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளும் பல நாவல்களும் எழுதி இளைஞர்கள், மாணவர்கள், வாசகர்களின் மனதில் நிலைத்த இடம் பெற்றவர். அவருடைய சிறுகதைகள் சீர்திருத்தக் கதைகளாகவும், புதிய கருத்துக்களையும், செய்திகளையும்  சொல்லுபவையாகவும் அமைந்தன. சில பிரச்சாரக் கதைகளிலும் பிரசார நெடி இல்லாது நாசூக்காக எழுதும் ஆற்றல் மிக்கவர் அண்ணா. அவருடைய கதைகள் வெறும் பொழுதுபோக்குக் கதைகளாக இல்லாமல், புதிய சமுதாயம் காண வழிவகுத்தவை.
அண்ணாவின் நாவல்களில் மறுமலர்ச்சிக் கருத்துக்களும், புதிய களங்களும், நடைச்சித்திரங்கள் போன்ற பாத்திரங்களும் விறுவிறுப்பான நடையும் வெளிப்பட்டன. அவருடைய பல நாவல்கள் நாடகங்களாகவும், திரை ஓவியங்களாகவும் வெளிவந்துள்ளன.
அண்ணாவின் வேலைக்காரி, ஓர் இரவு நாடகங்கள் அவரை நாடக ஆசிரியராக புகழூட்டின . சந்திரோதயம், சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் போன்ற நாடகங்களும் மறக்க முடியாதவை..சிவாஜி கண்ட இந்து ராஜ்யம், இன்னும் சில நாடகங்களில் அண்ணா நடித்துள்ளார். தமிழ் நாட்டின் தலைசிறந்த நாவலாசிரியர் கல்கி அவர்கள் அண்ணாவை தென்னாட்டு பெர்னார்ட் ஷா என உளமகிழ்ந்து பாராட்டியுள்ளார்.
அண்ணா தமது சமுதாய சீர்திருத்த எண்ணங்களையும், அரசியல் பிரச்சாரத்தையும் சுவை நல்கும் விதத்தில் கட்டுரைகள் வாயிலாக வெளியிட்டு புரட்சி செய்தார். அவர் விடுதலை, திராவிட நாடு, நம்நாடு, காஞ்சி முதலிய இதழ்களின் ஆசிரியராக இருந்தபோது அவற்றில் கடித இலக்கியத்தைத் தோற்றுவித்து பெருமை சேர்த்தார். இதன்மூலம் அவர் ஒரு சிறந்த கட்டுரை ஆசிரியர் எனவும்,  நல்ல இதழாசிரியர் என்றும் போற்றப்பட்டார்.
இவ்வாறு எழுத்துலக வேந்தராக விளங்கிய அண்ணா முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி திராவிடப்பண்ணை என்னும் நிறுவனத்தின் மூலமாக வெளியிட்டுள்ளார். அவர் சிறந்த நூலாசிரியர் என்பதையும் தமிழகம் உணர்ந்தது.
இயல் இசை நாடகங்களில் ஆழ்ந்த கருத்தைச் செலுத்திவரும் அண்ணா ஒரு பல்துறை அறிஞர்.
அண்ணாவை சிங்கப்பூரில் பத்திரிகை வாயிலாகவும் நூல்களின் மூலமாகவே அறிந்திருந்த நான் இப்போது அவரை  நேரில் கண்டும் அவருடைய சொற்பொழிவுகளைக் கேட்டும் உவகை கொண்டேன். அண்ணாவை என்னுடைய வாழ்கையின் வழிகாட்டியாகக் கொண்டுள்ளதை நான் எண்ணி மகிழ்ந்தேன்.
சனி ஞாயிறுகளில் நான் நண்பர்களுடன் சென்னை சென்று வந்தாலும், சில நாட்களில் தனியே செல்வதையும் விரும்பினேன். அப்போதெல்லாம் நான் மெரினா கடற்கரைக்கு செல்வதையே பெரிதும் விரும்பினேன். அங்கு ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளின் ஓசையில் தூரத்தில் தெரியும் தொடுவானத்தில் தோன்றும் வண்ணங்களின் மாற்றத்தைக் கண்டு மகிழ்வேன். அப்போது தங்கத் தகடு போன்று அஸ்தமிக்கும் சூரியன் நீல நிறக் கடலில் மெல்ல மெல்ல மூழ்கி மறையும் அதிசயத்தைக் கண்டு மகிழ்வேன். அப்போது சிறுகதைக்கான கரு கூட தோன்றும். அதுபோன்றுதான் ‘ காதல் அலைகள் ” எனும் ஒரு சிறுகதை எழுதி தமிழ் நேசனுக்கு அனுப்பினேன். அப்போது அதன் ஆசிரியர் ப. சந்திரகாந்தம் அதை பிரசுரித்து என்னுடைய பெயருக்கு அடியில் சென்னை என்று குறிப்பிட்டிருந்தார். அந்தக் கதையை அப்பா எனக்கு அனுப்பி வைத்ததோடு,  கதைகள் எழுதுவதோடு நில்லாமல் பாடங்களிலும் கவனம் செலுத்துமாறு அறிவுரை .கூறியிருந்தார். இருட்டிய பிறகு மெரினா புஹாரியில் சுவையான பிரியாணி அருந்திவிட்டு தாம்பரம் திரும்புவேன். அப்போதெல்லாம் கைவசம் நிறைய பணம் இருந்ததால் கவலையில்லாமல் காலம் கழிந்தது.
ஒரு நாள் விடுதி நண்பர் பிரான்சிஸ் என்னைத் தேடி வந்தார். அவர் பி.எஸ்.சி. இயற்பியல் மாணவர். ஆம்பூரைச் சேர்ந்தவர். கிறிஸ்தவர். தமிழ் ஆர்வத்தால் எனக்கு நண்பனானவர்.
கல்லூரியில் மாணவர் கிறிஸ்துவ  இயக்கம் இயங்கி வந்தது. அதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அதில் என்னைச் சேர்ந்துகொள்ளச் சொன்னார். நான் தயங்கினேன். என்னுடைய திராவிட இயக்க ஈடுபாட்டை அவர் அறிந்தவர்தான். அதனால் எனக்கு இருந்த தமிழ் ஆர்வத்தை அவர் மாணவர்  கிறிஸ்துவ இயக்கத்தில் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். நான் அதில் சேர்ந்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். அவர் அவர்கள் நடத்தும் ஓய்வு நாள் பள்ளியில் ஆசிரியராக வேண்டும் என்றார். ஓய்வு நாள் பள்ளி என்பது ஞாயிறுகளில் கிறிஸ்துவ பிள்ளைகளுக்காக நடைபெறும் வேதாகமப் பள்ளி. அங்கு சிறு பிள்ளைகளுக்கு பைபிள் கதைகள், ,கிறிஸ்துவப் பாடல்கள், ஜெபம் போன்றவை சொல்லித் தரப்படும்.இவற்றில் எனக்கு உண்மையில் கொஞ்சமும் அனுபவம் இல்லை. சிறு பிள்ளையில் நான் தெம்மூர் கோவிலில் அவ்வாறு பயின்றிருக்கலாம். சிங்கப்பூரில் அதைத் தொடரவில்லை.
நான் கிறிஸ்துவனானாலும் ஆலயத்துக்குச் செல்வதில்லை. என்னிடம் பைபிள் கூட இல்லை. ஞானப்பாட்டுகள்,கீர்த்தனைகள் எதுவும் தெரியாது!
” பரமண்டலங்களிளிருக்கிற எங்கள் பிதாவே … ”  என்ற ஜெபம் கூட தெரியாமல் இருந்தேன்! எப்போதாவதுதான் அப்பா என்னை கோவிலுக்கு கூட்டிச் செல்வார். அதிலும் முக்கியமாக ஈஸ்டர், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதுதான் கட்டாயம் கோவில் செல்வோம். இளம் வயதில் பள்ளிப் பருவத்தில்  என் ஆர்வம் அனைத்தும் தமிழ் மீதுதான் இருந்தது.அத்துடன் திராவிட இயக்கத்தின் கொள்கைகளின்மீது அளவுக்கு அதிகமான பற்றுதல் கொண்டிருந்தேன்.
தந்தை பெரியார் கடவுள் இல்லை என்பவர்! அறிஞர் அண்ணாவும் கலைஞரும், இதர கழகத்தின் தலைவர்களும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்! ஆனால் ” ஒன்றே குலம் ஒருவனே தேவன். ” என்று அவ்வப்போது கூறிக்கொள்வார்கள். எந்தக் கடவுளின் பெயரையும் சொல்லி இவர்தான் அந்த ஒரே கடவுள் என்றும் அவர்கள் சொன்னதில்லை.அத்துடன் கணியன் பூங்குன்றனாரின்  ” யாதும் ஊரே, யாவரும் கேளீர் ” என்ற பாடல் வரியையும் கூறிக்கொள்வார்கள். எனக்கு இவை மிகவும் பிடித்திருந்தன. இவை இரண்டுமே பகுத்தறிவுக்கு ஒத்தவையாகத் தோன்றின.
          கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவு பாசறையில் வளர்ந்துவிட்ட நான், கடவுள் நம்பிக்கைக் கொண்ட ஒரு நல்ல கிறிஸ்துவனாக வாழ்வது என்பது முரண்பட்டதாகத் தெரிந்தது. கிறிஸ்துவர் யார் திராவிட இயக்கத்தில் இருக்கிறார் என்று எண்ணிப் பார்த்தேன். வலம்புரி ஜான் நினைவு வந்தது. ஆனால் அவர் எந்த அளவுக்கு கிறிஸ்துவ கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர் என்பது எனக்குத் தெரியவில்லை.அதுபோன்றே இஸ்லாமியர் யாராவது திராவிட இயக்கத்தில் உள்ளனரா என்றும் எண்ணிப் பார்த்தபோது சாதிக் பட்சா நினைவுக்கு வந்தார். இவர்கள் இருவரும் இறை நம்பிக்கையுடன் எவ்வாறு பெரியாரின் நாத்திகக் கொள்கையையும் ஏற்றுக்கொண்டனர் என்பது எனக்கு அப்போது தெரியவில்லை.
          அப்போது அப்பாவின் நினைவு வந்தது. அவர்கூட இளம் வயது வரை கிராமத்து கோவிலிலும், கிறிஸ்துவ போர்டிங்கிலும் பயின்றவர்தான். அனால் பெரியாரின் கொள்கைகளின் மீது அழ்ந்த பற்று மிக்கவர். அவர்தான் எனக்கு துவக்க காலத்தில் பெரியார் பற்றியும், அண்ணா பற்றியும், கலைஞர் பற்றியும் அறிமுகம் செய்தவர். அதன்பின்புதான் நான் அவர்களின் நூல்களை வாங்கிப் படித்து அவர்களின் வசமானேன்.
          நான் சிறு வயதிலிருந்து கடவுளை எண்ணி எதையும் வேண்டிக்கொண்டதில்லை. கடவுள் பற்றி யாரும் என்னிடம் போதித்ததும் கிடையாது. நான் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு நாத்திகனாகவே வாழ்ந்துள்ளதை அப்போதுதான் உணர்ந்தேன்.
          உலகைப் படைத்தது கடவுளா அல்லது இயற்கையிலேயே உருவானது உலகமா என்ற ஐயம் என்னுடைய மனதில் எழேவே செய்தது. உலகைப் படைத்தது கடவுள் எனில், அதோடு தொடர்புடைய கோளங்களையும், பரந்த வானவெளியையும் கோடிக்கணக்கான விண்மீன்களையும் அந்தக் கடவுள்தானே படைத்திருக்கவேண்டும்? இது சாத்தியமான ஒன்றா? அப்படியே கடவுள்தான் படைத்தார் எனில் அவர் ஒருவராகத்தானே இருக்க முடியும்? பல கடவுள்களால் இருக்க வாய்ப்பில்லையே? ஒவ்வொரு மதமும் ஒரு கடவுளை வழிபட்டு அவர்தான் உண்மையான கடவுள் என்று போதிக்கிறது.அது உண்மையானால் அத்தனைக் கடவுள்களும் கூட்டணி அமைத்தா உலகையும் வான்வெளியையும் படைத்து இன்றுவரை பராமரித்து வருகிறார்கள்? அந்தக் கடவுள்கள் ஒற்றுமையாக இருக்கும்போது அவர்களின் பெயரைச் சொல்லிக்கொண்டு மனிதர்கள்  ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு சாகிறார்களே! சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை பற்றி கேள்விப்பட்டிருந்தேன். அனால் அதை நான் படித்ததில்லை.  வாய்ப்பு வரும்போது அதையும் படிக்க வேண்டும்.
           இத்தகையச் சூழலில்தான் பிரான்சிஸ் என்னை மாணவர் கிறிஸ்துவ இயக்கத்தில் சேரச் சொல்கிறார். அவருக்கு நான் உடன் பதில் சொல்வதற்கு தடுமாறினேன்! அது பற்றி யோசித்து பதில் சொல்வதாகவும், எதற்கும் ஒரு வாரம் அவகாசம் தருமாறு வேண்டினேன்.
          அன்று இரவு அறையில் படுத்ததும் கடவுள் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தவாறு உறங்கிவிட்டேன்!
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationமு கோபி சரபோஜியின் ஆன்மீக சாண்ட்விச்சுசீலாம்மாவின் யாதுமாகி