தொடுவானம் 81. ஓலைச்சுவடியில் ஒளிந்திருந்த தமிழ்

 
தரங்கம்பாடியில் தமிழ்த் தொண்டாற்றிய சீகன்பால்க் பற்றி தமிழர்களுக்குத் தெரியாதது வியப்பானது ஒன்றுமில்லை. காரணம் அவரைப் பற்றிய வரலாற்று குறிப்புகள் பாடநூல்களில் இல்லாதது ஒரு காரணம் எனலாம். அதோடு வீரமாமுனிவர்,  தெ நோபிலி போன்ற கத்தோலிக்க இறைத்தூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் சீர்திருத்தச் சபையைச் சேர்ந்த சீகல்பாலுக்குத் தரப்படவில்லை.

ஆனால் என்னைப் பொருத்தவரை தமிழ் மீது அவர் கொண்டிருந்த பற்றுதல் அளப்பரியது என்றுதான் கூறுவேன். அவர் தமிழை விரும்பிப்  படித்தார். அவர் கற்றது பற்றி இவ்வாறு கூறியுள்ளார்.
” எந்தெந்த தமிழ் நூல்கள் என் சொல்லையும் உச்சரிப்பையும் தமிழ்மயமாக்குமோ அவைகளையே நான் மூன்று ஆண்டுகளாகப் படித்தேன். நான் தமிழ் மொழியின் நூல்களைப் படிக்கத் துவங்கியதிலிருந்து ஜெர்மன் இலத்தீன் மொழியில் எழுதப்பட்ட நூல்களைப் படிப்பதை நிறுத்தினேன். தமிழரோடு சேர்ந்து தமிழ் நூல்களையே படித்தேன். இதனால் தமிழை தாய்மொழிபோல் என்னால் பேசவும் எழுதவும் முடிந்தது. ”
அவர் ஓலைச்சுவடிகளைத் தேடித்தேடிப்பிடித்து பத்திரப்படுத்தினார். பத்திரப்படுத்தி அவற்றை வெறும் காட்சிப் பொருளாக மட்டும் வைக்கவில்லை. அவற்றைப் படித்து ஒரு சிலவற்றை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். அதில் குறிப்பிடத்தக்கது உலகநீதி என்பது. அந்நூல் தீமையை விலக்கி நன்நடை பழகுவதை வலியுறுத்தும் கருத்துகள் அடங்கியது.அவர் சேகரித்த மொத்த நூல்களின் ( ஓலைச்சுவடிகள் ) எண்ணிக்கை 112. அவை அனைத்தும் இந்து சமய கலாச்சாரத்தைப் பற்றியவையாகும்.

தொல்காப்பியம், காரிகை, நன்னூல், திவாகரம், நிகண்டு திருவாசகம், திருவள்ளுவர், திருவல்லுவருரை, சிந்தாமணி பாரதம், பாரத உரை, கந்தபுராண உரை, அரிச்சந்திரன் கதை, அரிச்சந்திர புராணம்,வேதாளக் கதை, ,பலஞானச்சுவடி, சினேந்திரமாலை , பாரத அம்மானார், கலிங்கத்துப்பரணி, அலங்கார உதாரணம், திருப்புகழ், வாதூர்ப்புராணம்,கெர்மபரதனுதருளா , அபிராமியந்தாத, ஞானப் பொஸ்தகம், வருனன்வுலாத்தித்தன், மடல், கோயில் கலம்பகம், தேவாரம், பஞ்சதந்திரக் கதை, நாகபாசப்படலம், வள்ளியம்மை வெண்பா, சிதம்பரமாலை, வேன்கிடமாலை, நீலி நாடகம், வல்லியம்மனார், திருவ்வமுருளா, குமாரப்பிள்ளை திருநாமம்,இரஞ்சியனம்மனார், கும்பகாரனப் படலம்,அனுமரம்மனார், ஆசாரக்கோவை, காயாலேராணர் உலா , கீழவளூர்க் .கலம்பகம், நீதிசாரம், தியான வெண்பா.மனைவழி சாஸ்திரம்,உத்திரபோதகம், சிவபாக்கியம்,குமாரர் பேரில் வணக்கம், தத்துவ விளக்கம், நலன் கதை, வாணல் கோவை, அம்பிகை மாலை, பரமராசிய மாலை, குசலவன் கதை,சம்பந்த  திருநாமம்  ஆகிய தமிழ்ச் சுவடிகள் சில உதாரணங்கள்.

இதுபோன்ற ஓலைச்சுவடிகளின்மீது   ஆர்வம்கொண்டு  அவற்றை விலைகொடுத்து வாங்கி படித்ததோடு அவற்றை பத்திரப்படுத்தியும் வைத்துள்ளார்.இவ்வாறு தமிழ் இலக்கியத்தையும் தமிழரின் பழக்க வழக்கங்களையும் அறிய முயற்சி செய்துள்ள அவருடைய ஈடுபாடு நோக்கத்தக்கது.

ஒரு வகையில் அவர் தமிழைப் படிப்பதில் காட்டிய ஆர்வம் அவர் மேற்கொள்ள வந்துள்ள சுவிசேஷப் பணிக்கு மிகவும் தேவை என்றும் கருதியிருக்கலாம்.

தமிழ் மக்களுக்கு இயேசுவின் சுவிசேஷத்தை புரிந்துகொள்ளும் வகையில் கூறவேண்டுமெனில் அவர்களிடம் தமிழில் பேசவேண்டும் என்பதை உணர்ந்தார். அதனால் தமிழை விரும்பிப் படித்தார். தமிழர் போன்றே உடையும் அணிந்துகொண்டார். தலயில் வெள்ளைத் தலைப்பாகை அணிந்து, சட்டைக்குமேல் சிகப்பு கோடிட்ட அங்கவஸ்திரம் தரித்து, காலில் செருப்பு போட்டுக்கொண்டு சென்றார்.

அவர் தமிழைக் கற்றதிலிருந்து திருமறையைத் தமிழில் மொழிபெயர்க்கவேண்டும் என்ற பேரவா கொண்டார். முதலில் புதிய எற்பாட்டை மொழிபெயர்க்கத் துவங்கினார்.( வீரமாமுனிமார்கூட திருமறையை தமிழில் மொழிபெயர்க்க முற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ) ஆனால் அந்த முயற்சி ஒரு சிறு அசம்பாவத்தால் தடைபட்டது.

தரங்கம்பாடியில் ஓர் ஏழை விதவைக்கு ஆளுநரிடம் நியாயம் கேட்டதால், அவர் மீது ஆட்சிக்கு எதிராக வாதாடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு 128 நாட்கள் கோட்டைக்குள் சிறையில் அடைக்கப்பட்டார்!

விடுதலையானதும் மொழிபெயர்ப்பைத் தொடர்ந்து, 1711 ஆம் ஆண்டில் புதிய ஏற்பாட்டை தமிழில் எழுதி முடித்தார். இதன் மூலம் இந்திய மொழிகளில் முதன் முதல் தமிழ் மொழியில்தான் திருமறை மொழிபெயர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சூத்திரர்கள் வேதத்தைப் படிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு உடைய நாட்டில் அனைவரின் கையிலும் ‘ வேதத்தை ‘ தந்து கிறிஸ்துவர்களுக்கு  ‘ வேதக்காரர்கள் ‘ என்ற அடைமொழியை பெற்றுத்தந்த புரட்சியாளர் சீகன்பால்கு ஆவர்.

ஆனால் வேதத்தை கைப்பிரதிகள் மூலமாகவோ அல்லது ஓலைச்சுவடிகள் மூலமோ தருவது இயலாத காரியம். அதை காகிதத்தில் நூலாக அச்சிட்டுத் தரவேண்டும்.அதற்கு அச்சு இயந்திரம் வேண்டும். தமிழ்  எழுத்துக்களை அச்சில் வார்க்கவேண்டும். சீகன்பால்கு இதன் தேவையை கடித வாயிலாக மேலை நாடுகளுக்கு அனுப்பினார்.இங்கிலாந்து நாட்டு அரசி அன்னாள் லூத்தரன் சபையைச்  .சேர்ந்தவர். அவருடைய ஆதரவுடன் இங்கிலாந்து மக்கள் அச்சு இயந்திரம் ஒன்றையும், ரோமன் எழுத்துக்களையும் அனுப்பி வைத்தார்கள் . அது 1712ஆம் ஆண்டு தரங்கம்பாடி வந்தடைந்தது.
தமிழ் எழுத்துக்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை. ஜெர்மனி நாட்டவர் இதற்கு உதவ முன்வந்தனர். தமிழ் மொழியை சிறிதும் அறியாத அவர்கள், தமிழ் எழுத்துக்களின் உருவத்தை மட்டும் பார்த்து, அவற்றை அச்சாக உருவாக்கி, அதை இயக்க இரு உதவியாளர்களையும் அனுப்பிவைத்தனர். அவர்கள் தமிழ் அச்சு எழுத்துகளுடன் 1713 இல் தரங்கை வந்து சேர்ந்தனர்.

1714 ஆம் ஆண்டில் புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு நற்செய்தி நூல்களையும், அப்போஸ்தலர் நடபடிகள் நூலையும் அச்சிட்டு வெளியிட்டார்கள். இந்திய மொழிகளில் முதன் முதலில் தமிழ் மொழியில்தான் திருமறை அச்சிடப்பட்டு வெளிவந்தது.

அச்சில் ஏறிய முதல் தமிழ் நூல் இயேசுவின் நான்கு சுவிசேஷ நூல்கள் என்றாலும், அதன்மூலம் ஓலைச்சுவடியில் ஒளிந்துகொண்டிருந்த நம்முடைய தமிழ் மொழி அனைவரின் கண்களிலும் படும்படி அச்சில் வெளிவந்தது நமக்கெல்லாம் பெருமைதானே! அதுமட்டுமல்ல! இந்திய மொழிகளில் அச்சில் வெளிவந்த முதல் மொழி நம்முடைய தமிழ் மொழிதான்  என்ற பெருமையும் பெற்று விளங்குகிறது!

( இதற்குமுன் தரங்கம்பாடியில் 1542 ஆம் வருடத்தில் போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த இறைத்தூதர் தூய பிரான்சிஸ் சேவியர் வேதத்தைப் போதிக்க வந்துள்ளார். அவர் ஜெசூயிட் சபையைச் சேர்ந்தவர். அது கத்தோலிக்க சபையின் ஓர் அங்கம். அவர் தமிழில் நூல்கள் கொண்டுவர ஆர்வம் உள்ளவர். அவருடைய முயற்சியால் தமிழை ரோமனைஸ் எழுத்தில் முதன் முதலாக 1554 இல் போர்த்துகல் நாட்டில் அச்சடித்தனர். அந்த நூல் புனித பிரான்சிஸ் சேவியர் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பு. நூலின் பெயர் ” தம்பிரான் வணக்கம். “.அதில் தமிழ் எழுத்துகள் இல்லை. அதன்பின் ஜோவோ கோன்சால்வாஸ் எனும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் தமிழ் எழுத்துக்களை 1563 இல் அச்சில் வார்த்தெடுத்தார். ஆனால் அவை அவ்வளவு திருப்த்திகரமாக இல்லை. பின்பு 1578 இல் கொல்லத்தில் அவை மீண்டும் செய்யப்பட்டன. அதைப் பயன்படுத்தி ” தம்பிரான் வணக்கம் ” என்ற தமிழ் நூலை அச்சிட்டனர். அதன் பிரதி ரோம் நகரில் உள்ளது. )

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஉலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்க விழாவும், முதல் கலந்துரையாடல் கூட்டமும் நாள்: 27.09.2015 இடம்: பாரிசு(பிரான்சு)சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 5