தொடுவானம் 83. இறை நம்பிக்கை

 Vel1Vel2Vel4

பேருந்து நிலையத்திலிருந்து தேவாலயம் செல்லும் வீதியின் இருமருங்கிலும் வரிசையாக கடைகள் இருந்தன. பெரிய கடைத்தெரு போன்ற  காட்சி அது. அழகுப் பொருள்களும், அலங்காரப் பொருள்களும், மாதா சிலைகளும் படங்களும், வேதாகம வசனங்களும், கிறிஸ்த்துவ கீதங்களின் குருந்தட்டுகளும், மெழுகுவர்த்திகளும், மணிமாலைகளும், தின்பண்டங்களும் என பலதரப்பட்ட கடைகள் அங்கு இருந்தன.

தேவாலயத்தின் எதிர்புறத்தில் வரிசைவரிசையாக பூக்கடைகள் இருந்தன. அங்கு ஏராளமான மாலைகள் விற்றனர். அங்கும் நீண்ட மெழுகுவர்த்திகள் விற்றனர். வேண்டுதலுக்காக வருபவர்கள் மெழுகுவர்த்திகளும் மாலைகளும் வாங்கிச் செல்கின்றனர்.

தேவாலயத்தின் முன்புற வாசலில் நின்று உள்ளே பார்த்தால் தொலைவில் குழந்தை இயேசுவை அணைத்தபடி அன்னை மரியாளின் பெரிய சிலையைக் காண முடிந்தது. அதற்கு வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாலைகள் போடப்பட்டிருந்தன. அருகில் நீண்ட மெழுகுவர்த்திகள் எரிந்துகொண்டிருந்தன.

நான் தேவாலயத்தினுள் நுழைந்தேன். அங்குள்ள இருக்கைகளில் பலர் அமர்ந்திருந்தனர். சிலர் தலை சாய்த்து தியானத்தில் இருந்தனர். சிலர் இரு கைகளையும் உயர்த்தியவாறு ஜெபம் செய்த்தனர். சிலரின் உதடுகள் ஓசை வெளிவராமல் வேண்டுதல் செய்தன.

நானும் காலியான ஓர் இடத்தில் அமர்ந்து அந்த பரிசுத்தமான சூழலில் கண்களை மூடினேன். என்னை இங்கு கொண்டுவந்த கடவுளுக்கு நன்றி சொன்னேன் எனக்கு வேண்டிய சகலவிதமான ஆசீர்வாதங்களுக்காவும் மன்றாடினேன்.

எழுந்து பீடம் நோக்கி நடந்தேன். என்னைச் சுற்றிலும் நிறைய பேர் வந்தனர். அவர்கள் கொண்டுவந்த மெழுகுவர்த்திகளை அங்கே இருந்த பெரிய அகலமான தண்டில் கொளுத்தி வைத்தனர். பீடத்திலிருந்து ஒரு உதவியாளர் வந்து அவர்களிடமிருந்த பூ மாலைகளை வாங்கிக்கொண்டு ஆரோக்கிய மாதா வைக்கப்பட்டிருந்த பெரிய சதுர கண்ணாடிப் பெட்டியிடம் சென்று அந்த மாலைகளை  அதில் தொட்டுவிட்டு மீண்டும் திரும்பி வந்து அவர்களிடம் அதைத் தந்தார். அந்த மாலைகள் மாதாவால் ஆசீர்வதிக்கப்பட்டவை என்று கருதுகிறார்கள். அவற்றை வீட்டுக்கு எடுத்துச்செல்லலாம். அல்லது மாலைகளை வைக்கும் இடத்தில் வைத்துவிட்டுத்  .திரும்பலாம்.அங்கிருந்து வெளியே செல்லும் வழி உள்ளது. அது ஆலயத்தின் இடது பக்கம்.

வலது பக்கத்தில்தான் அருங்காட்சியகம் உள்ளது. அங்கு மிக நேர்த்தியாக கன்னாடிப்பெட்டிகளுக்குள் நேர்த்திக்கடன் செலுத்தியவர்களின் காணிக்கைகள் அவர்களுடைய குறிப்புகளுடன் பாதுகக்கப்பட்டிருந்தன. அவை பெரும்பாலும் உடல் தொடர்புடைய  நோய்கள் பற்றியது. கால் குணமானவர்கள் வெள்ளியிலும் தங்கத்திலும் கால் மாதிரி செய்து வைத்துள்ளனர். அதுமாதிரி விதவிதமான உடல் உறுப்புகளின் வடிவங்களை அங்கு காண முடிந்தது. சில சிக்கலான மருத்துவப் பிரச்னைகள்கூட வேண்டுதலால் இங்கு குணமானதாக அங்கு காணமுடிந்தது. சிலவற்றைப் பார்த்தால் நம்பமுடியாதது போன்றிருந்தது. அறுவைச் சிகிச்சையால் முடியாத சில பிரச்னைகள் இங்கு வேண்டுதலால் குணமாகியுள்ளது வியக்கவைத்தது! இவ்வாறு நூற்றுக்கணக்கானவை பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றையும் படித்துப் பார்க்க நேரமாகும். பின்பு நேரம் வாய்க்கும்போது மீதத்தைப் பார்க்கலாம் என்று நான் வெளியேறினேன்.

அங்கிருந்து கடற்கரைக்கு செல்லும் மணல் வீதியில் நடந்து சென்றேன்.  இடது புறத்தில் இருத்த கடைகளில் சிலர் தலைக்கு மொட்டை போட்டுக்கொண்டிருந்தனர். திருப்பதியில் மொட்டை போடுவதுபோல்தான் இருந்தது. வீதியின் இருபுறமும் தரையில் அங்காடிக் கடைகளிலும் வியாபாரம் நடைபெற்றது. சங்குகள, கடல் சிப்பிகள், பாசிமணிகள் போன்றவை அதிகம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.  அந்த வீதி கடலில் சென்றுதான் முடிந்தது. கடலின் ஓரத்தில் சிலர் குளித்து மகிழ்ந்தனர்.

மதியம் கரைந்து மாலையாகிவிட்டது. நான் திரும்பி பேருந்து நிலையம் சென்றேன்.  நாகப்பட்டினம் செல்லும் பேருந்தில் ஏறினேன். நாகப்பட்டினத்தில் பேருந்து நிலையம் எதிரிலுள்ள உணவகத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு மாயவரம் பேருந்தில் ஏறி தரங்கம்பாடி திரும்பினேன்.

வேளாங்கண்ணி சென்றதை அண்ணியிடம் கூறினேன். அவர், ஏன் சொல்லாமல் போனாய் என்று கேட்டார். தெரிந்திருந்தால் தானும்  வந்திருக்கலாமே என்றார். நான் திட்டம் போட்டு செல்லவில்லை என்றேன். பரவாயில்லை, அடுத்த தடவை போகலாம் என்றார். அவருக்கு வேளாங்கண்ணி மாதாமீது ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. வீட்டில்கூட மாதா படமும் புனித அந்தோனியார் படமும் மாட்டி வைத்திருப்பார். கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் இதுபோன்று சில புனிதர்களை நம்புவார்கள். சீர்திருத்தச் சபையினர் அப்படி இல்லை. அண்ணி சீர்திருத்தச் சபையைச் சேர்ந்தவராக இருந்தாலும் இதுபோன்றும் நம்பிக்கைக் கொண்டவர்.

இதுபோன்று கடவுள் மீது வெவ்வேறான நம்பிக்கைகள் நிலவினாலும், என்னைப் பொறுத்தவரை அனைவருக்கும் கடவுள் ஒருவர்தான் என்பதில் நான் திடமாக இருந்தேன். அதைத்தான் ” ஒன்றே குலம், ஒருவனே தேவன். ” என்று கூறினார் திருமூலர்.

திருவள்ளுவர்கூட கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் எந்த கடவுளின் பெயரையும் குறிப்பிடாமல் பொதுவான ஒரு தேவனின் குணாதிசயங்களைத்தான் குறிப்பிட்டுள்ளார். கடவுள் வாழ்த்தைப் படிப்போர்க்கு அது புரியும். ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இருள்சேர் இருவினையும் சேரா இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான், இறைவன் என்று பத்து விதமான குணநலன்களைக் கொண்டவரே அந்த ஒரே கடவுள் என்பதை அவருடைய கடவுள் வாழ்த்தில் வலியிறுத்தியுள்ளார்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின் அகில நாட்டு அணுமின் உலைகளின் நிலைமை என்ன ?ஸ்பரிஸம்