தொலை குரல் தோழமை

குழல்வேந்தன்

இது கனவா? இல்லை நனவா? வெற்று பிரமைதானா? அசரீரியின் ஆளுமைப்பெருங்குரலா? விண்ணகதேவதையின் அழைப்பொலியா?     விடை தெரியா கேள்விகளே இவனைத் திக்குமுக்காடச்செய்தன பாவம்.  அழைத்த குரல் குழைவில் அவனது உள்ளமும் உடல் தானும் ஒரு நாளும் அனுபவிக்காததொரு புத்துணர்ச்சியையும் புளகாங்கிதத் தையும்  அடைந்ததென்றால் அதற்கானதொரு காரணமும் இல்லாமல் இல்லை.

 

ஆம்! அந்தஅனுபவம்! அது அப்படித்தான் இருந்தது.  இவனுக்குள்  (இன் னும் ஓரிரண்டு நாட்களில் நெடுந்துயில் கொண்டுவிடப் போகி றோம்) ”இனி நம் குஞ்சு குழுவான்களின் கதி, வாழ்க்கைத் துணைவியின் விதி, நட்பு வட்டம், நேசித்த நேசிக்கப்பட்ட முகங்கள்,  என உறவுகளுடனான நம் கண்ணாமூச்சியாட்டம் முடிந்துவிடுமோ?செவி நுகர் கனிகளென தேடித்தேடி தொகுத்து வைத்திருக்கும் இசைப்பேழைகளில் சிலவற்றை யேனும் கேட்க முடியாதோ? மிகுந்த  விருப்பத்தால்  வாசிக்கவென ஆசையாசையாய்  தேர்ந்தெடுத்து வைத்துள்ள  புத்தகங்களை வாசிக்க முடியாமலேயே  நம் உடல்கூட்டிலிருந்து உயிர்ப்பறவை பறந்து விடுமோ?” என்ற ஏக்கம் நிறைந்த  எண்ணங்கள்  அலை அலையாய் இவனது உள்ளக்கடலில்  இருந்து மீண்டும்மீண்டும் ஞாபகத்திரையில் மின்னல் கீற்றென ஒளிர்ந்துகொண்டிருந்தன.

 

காரணம், அவனது படுக்கையைச் சுற்றி இருந்த மருந்து சீசாக்களும், அவனுடைய தலையணைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த வண்ண வண்ணமான மாத்திரைப் பொட்டலங்களும், அவ்வப்போது அவன் பாதி மயக்கத்திலும்  விழிப்பு நிலையில் இருந்தாலும் உட்கொண்ட மாத்திரை மருந்துகள் காரணமாக  தூங்கியும் தூங்காமலும் அந்த மருத்துவமனையில் உட்பிரிவு நோயாளியாக இவன் கழிக்கும் அந்த அனுபவம் இவனை இப்படி யோசிக்கவைத்தது.  நான்கைந்து நாட்க ளாக வழக்கத்துக்கு மாறாக இவன் கடும் காய்ச்சலில் வீழ்ந்து கிடக்க, மருத்துவமனையும், அந்த மருத்துவமனையெங்கும் ஒலிக்கும் நோயாளிகளின் விதவிதமான அரற்றலும், மருத்துவரின் கட்டளையை சாவி கொடுத்த  எந்திரம்  போல அவ்வப்போது நிறைவேற்ற இவனுக்கு மாத்திரை மருந்துகளை அளித்தும், இவனது விருப்பத்துக்கு மாறாகக் கட்டாயமாக இவனுடைய உடலுக்குள் ஊசிகளை செலுத்தியும் மருந்துகள் கலந்த குலுக்கோஸ் திரவத்தை செலுத்தியும் செல்லும் செவிலியர்களின் செயல்களும் இவனை குழப்பத்திலும் கலக்கத்தி லும் ஆழ்த்தின. டாக்டரின் அறிவுரையையும், நண்பர்களின் ஆலோச னையையும்,உறவினர்களின் வேண்டுகோளையும் புறந்தள்ளி   தன்னை மறந்து முந்தின நாள் இரவு வெகுநேரம் கண்விழித்து வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் பக்கங்கள் விரிந்துகிடந்தன இவன் மார்பின் மேல். அந்த புத்தகத்தின் ஆளுமையால் விளைந்த பாதிப்பாக இருக் குமோ இது?

விழித்தும் விழிக்காததோர் நிலையில் அழைத்த குரல் யாருடையதாக இருக்குமென அவனுடைய செவிகளும் மூளையும் அவன் அறிந்த உறவினர்கள், நண்பர்கள், அலுவலக ஊழியர்கள்,  பழகிய அண்டை அயலாரென ஒவ்வொருவரையும் யாராக இருக்கலாம்? யாருடைய குரலாக இருக்கும்? என   நினைவுக்கு கொணர முயன்று யார்  என அறியமுடியாமல் யோசித்து யோசித்துக் குழம்பித்  தோற்றுவிட்டன.
அழைத்த குரலோ பனிக்குழைவின் குளுமையையும்,  கேட்ப்போரை வசீகரிக்கச்செய்யும் கருணாமிருதசுவைபொழியும் மாயாமாளவ கௌள வத்தின் இறுக்கத்தையும், கம்பீரநாட்டையை நாயனத்தில் தேர்ந்த கலைஞன் வாசிக்க, அதனைக் கேட்டு   அனுபவிக்கும்போது நல்ல இசை இரசிகன் ஒருவன் அடையும் பேரின்பத்தையும் ஒருங்கே அளிக்கத்தக்கதாக இருந்தது.

{உன்னையே வென்றவன் நீ! மரணக்கன்னியை வெல்லமுடியாதா உன்னால்? விழித்தெழு; புறப்படு; விதியின் விளையாட்டை எத்தி எரி;
உள்ளத்தில்உறுதிகொள்; எழுத்தைத் தவமாக்கு; காலம் போற்றுக.
கவலையை மாற்றுக.}

ஒலித்த குரலில் உள்ள கூற்றின் ஆழமும் நுட்பமும் இவனுக்குள் இருந்த தளர்ச்சியயும்  சோர்வையும் நீக்கி ஊூக்கத்தையும் புது நம்பிக்கையையும் அளித்தது. அழைத்த குரலின் இனிமையும், நேசமும், மென்மையும்,  அந்தக் குரலுக்கே தனித்திருக்கும் இரக்கத் தன்மையும் இது நிச்சயம் ஒரு ஆடவனுடையதல்ல என்பதை உறுதி படுத்தியது இவனுக்கு.

அப்படியானால்! {பாபுவின் மோகமுள்தனைக் களைந்த  யமுனாவா? இல்லை! அரவிந்தனின் அகத்தே குறிஞ்சி மலராய்ப் பூத்த பூரணியா?அப்படியும் இல்லையே! கங்கை வெள்ளத்திலே சங்கமித்து தன்னை புனிதமாக்கிக் கொண்ட கங்காதானா?நிச்சயமாக இல்லையே! கடல் நீரில் மூழ்கிக் கழுவாய் தேடிய கருத்தம்மைதானா? சாத்தியமில்லையே!  முறிந்த சிறகாய்  உறங்கிய செல்மாவா?ஊஹூம் இல்லை, இல்லை!

மேலே சுட்டிய நிலையான சிருஷ்ட்டிக்   கதைத் தலைவியரிலும் அந்த நங்கையின் பனிக்குழைவுக் குரலையோ, மனிதநேயமும் சொற்க ளுக்குள் அடக்கவியலாத தோழமையின் வெளிப்பாட்டையும் கண்ட தில்லை இவன். அந்தக் குரலில் இருந்து எழும்பிய நாதவெள்ளம் இவனுடைய ஆத்தும தாக விடாய்தனைத் தீர்க்கும் பேரருவியின் குளுமையைக்         கொண்டதாய், ஆலைய மணியின் அருள்ஓசையாய், ஒலிக்க ஒலிக்கத் தெவிட்டாதத் தீங்குரலின் தெய்வீக அழைப்பு மொழியில் இருந்ததால்  திக்குமுக்காடிப்போனான் இவன்.

 

எத்தனை விந்தையான அனுபவம் இது? இது எப்படி நடந்தது?ஆம் நேசம் மிக்க அந்த கவிதாயினியின் தீங்குரலென்பதனை இவனுடைய செவிகள் இவனுடைய மூளைக்கு நொடிக்கும் குறைவான நேரத் திலேயே அடையாளப்படுத்திவிட்டன. இவன் எழுதிய  கவிதைகளே இவனுக்கும் அந்த கவிஞருக்கும் இணைப்புப் பாலமாயின. எழில்மதி என்கிற பெயரில் முகநூலிலும் திண்ணை, வார்ப்பு, கீற்று, சொல்வனம் உள்ளிட்ட   இணையதளங்களிலும் எழுதப்பட்ட இவனுடைய  கவிதை களுக்கு இரசிகையான  அந்தக் கவிதாயினி  அவ்வப்போது இவனது படைப்புகளை வாசித்துவிட்டு அளித்த பின்னூட்டங்கள் இவனை மேலும் மேலும் எழுதத் தூண்டின.  இவனும் சளைக்காமல் மிகுந்த ஆத்தும தாகத்தோடு எழுத தொடங்கினான்.

 

முதலில் கவிதைகள் மட்டும் எழுதிக் கொண்டிருந்தவன் அந்த கவிஞரின் ஊக்கத்தாலும் உற்சாகத்தாலும் இவன் எழுத்தை வரமெனவும் தவமெனவும் நம்பி வெவ்வேறு வகை படைப்புகளையும் புதுப்புது கண்ணோட்டங்களோடும் மற்ற படைப்பாளர் சிந்திக்காத கோணங்களிலும் புதுப்புது கருக்களைத் தேர்ந்தெடுத்தும்  எழுதலாயி னான்.   காலப்போக்கில் இவனுக்கும் மேர்ப்படியாந  கவிஞருக்குமான நட்பு என்பது வலைதள பின்னூட்டம் என்பதைத் தாண்டி மின்மடல்,  அலைபேசி, தொலைபேசி,ஸ்கைப்பில் பேசல் என வளர்ந்து வலுப் பெற்றது. இவனுடைய அலைபேசி ஒலிக்கும்போதெல்லாம் அந்த ஆண்டிதாம்ப்பா கூப்பிடுராங்க என்று குழந்தைகளும்,உங்க ரைட்டர் ஃபிரண்டுதாங்க கூப்பிடுராங்க என்று மனைவியும் சொல்லும் அளவுக்கு அவர்களது  நட்பு பரிமளித்தது.  இருவருக்குமான நட்பு என்பது இரு குடும்பத்தாருக்குமான நட்புறவாகவும் வளர்ந்தது. ஸ்கைப்பிலோ அலைபேசியிலோ இவர்கள் பேச ஆரம்பிக்க, பின்பு இருவர்தம்  குழந்தைகளும் பேச என நேரம் போவதுகூட தெரியாமல் இரு குடும்பமும் பேசிக்கொள்ளும் நிலை தொடர்வது அவ்விரு குடும் பத்தாருக்கும் இயல்பான சங்கதியாகிப்போனது. கவிஞரும் இவனோடு மேற்படி ஊடகங்கள் வாயிலாக தொடர்பு கொள்ளும்போதெல்லாம் {அவசியம் ஒருமுறையாவது எங்க வீட்டுக்கு நீங்க உங்க குடும்பத்தோடு  வரணும்} என முறுவல் பூத்த முகத்தோடு இவனை அழைப்பதும்,இவனும்{ஒருமுறைமட்டும்தான் வரணுமா? இரண்டாம் மூன்றாம் முறை  வந்தா என்ன செய்வீவிங்க?வேணாம்னு வெரட்டி விட்டுடுவிங்களோ?} என வேடிக்கையாகவும் விளையாட்டாகவும்  கேட்க, {நீங்க எத்தனை முறை வந்தாலும் உங்களுக்காக எங்க இல்லக் கதவும் உள்ளக்கதவுகளும் எப்போதும் நிச்சயமாகத்  திறந்தே இருக்கும்}னு சொல்லிக்      கூப்பிடுவதும் இவனும்{நாங்க  எத்தன நாள் தான் இப்படி உங்களையும் உங்க குடும்பத்தாரையும் பாக்காமலே பேசிக்கிட்டு இருக்கிறது?ஏனோ சமயம் வாய்க்கமாட்டேங்குது. கண்டிப்பா வர்ரோம்}னு சொல்லி முடிப்பதும் நெடுநாளைய தொடர் கதையாக இருந்தது. கவிஞர்          இவனுடைய படைப்பாற்றலைப் புரிந்துகொண்டு தோழமையோடு வாங்கி அனுப்பிய இன்றய   படைப்பாளர்களின் புதுப்புது கவிதைத்தொகுப்புகள், கதைத்தொகுப்புகள், நவீன விமர்சன நூல்கள் என்பனவற்றால்  இவனுடய ஆழமான  வாசிப்பு அனுபவமும் எழுத்தாளுமையும் கூர்மையும் நுண்மையும் பெற்றதென்றால் அதில் இவனோ இவனைச் சுற்றியுள்ள சக படைப் பாளர்களோ ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. இவனுடைய படைப்பு களை வாசித்து      ஊக்கப்படுத்தியும் உற்சாகமூட்டியும் இவனைத் தொடர்ந்து  எழுதத்  தூண்டிய  அந்த பெண் கவிஞரும் நவீன  தமிழ் இலக்கியத்துறையில் முத்திரை பதித்த மேதமை மிக்க பேராளுமை தான். கவிதை எழுதுவதோடு, கட்டுரை, சிறுகதை, புதினம், விமர்சனம், பக்தி சொற்பொழிவுகள்,  இசை என பல தளங்களிலும் தனித்துவமும் பேரும் புகழும் பெற்றவர்.

 

வழக்கம்போல அன்றும் இவனுடைய அலைபேசி மென்மையான குயில் குரலில் குழரியது. இவன் அந்த குரலை மேற்படி கவிஞரின் அழைப்பொலிக்காகவே  தன் அலைபேசியில் பதிந்து வைத்திருந்தான்.  “ஹலோ வணக்கம். உங்களுக்கு வாழ்த்துக்கள். செய்தியை பாத்திங் களா? நீங்க எழுதின தொலை குரல் தோழமை என்னும் சிறுகதைத் தொகுப்புக்கு தமிழக அரசாங்கத்தின் விருது கிடைச்சிருக்கு.  எனக்கே விருது கிடைச்சாப்புல இருக்கு”. என சொல்ல “அப்படியா?உங்களுக்கே விருது கிடச்சமாதிரி இருக்கா? அப்படியானா நீங்களே மகிழ்ச்சியாக விருதை என் சார்பா  வாங்கிக்கொள்ளுங்க. அப்படிமட்டும் நடந்தா எனக்கு நாலு மடங்கு சந்தோஷம்.” என இவன் கூறிட, கவிஞரும் ”சரி, சரி விருதோட மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கம். தவிரவும் பெரிய பதக்கமும் பாராட்டு பத்திரமும்”? என கூற, “நான் அதிஷ்டசாலிதான். அதுவும் இந்தத் தகவல உங்க வாயால கேக்கறதுதான் உண்மையிலேயே பெரிய அதிர்ஷ்டம்!     என்ன எழுதத் தூண்டியவங்களே நீங்கதானே. என்னோட கதைத்தொகுப்புக்கு விருது  கெடச்ச தகவலையும் உங்க வாயால கேக்கறதுதான் உண்மையி லேயே எனக்கு கெடச்ச பெரிய விருது. விருத நான் வாங்கினாலும்  அந்த விருதுக்கான முழு கௌரவமும் உங்களுக்குதானே சேரும்.” என இவன் கூற, “உங்கக் கிட்ட திறமை இருக்கு. அந்தத் திறமைய வெளிக் கொணர நான் ஒரு வினை ஊக்கியா இருந்திருக்கிறேன். அவ்வளவு தானே. இதுக்குப் போய் ஏன் என்னை நீங்க பெருசா புகழறீங்க” என மறுமொழி கூறிவிட்டு அலைபேசியை மனைவி குழந்தைகள் இடம் தரச்சொல்லி அவர்களுக்கும் இவனுக்கு விருது கிடைத்த தகவலை மிகுந்த குதுகுலத்துடன் பகிர்ந்துகொண்டதில், கவிஞருக்கு முழு நிறைவும் பெருமகிழ்ச்சியும். கடைசியாக இவனோடு பேசியபோது விருது அளிக்கப்படும் தேதியையும் கூறி   “எப்படியும் நீங்க  விருது வாங்கற நாளன்னைக்கி நாம சந்திக்க முடியும்னு நெனைக்கிறேன். நானும் நீங்க பாராட்டப்படும் காட்சிய நேரில பாக்கமுடியும்னு நம்புறேன். காரணம் நிகழ்ச்சி நடக்கும் சபேரா ஹோட்டலுக்கும்  எங்க வீட்டுக்கும் உள்ள தூரம் நடந்தேகூட  வருமளவு தூரம்தான். அதனால நீங்க குடும்பத்தோட எங்க வீட்டுக்கு அண்ணைக்காவது கண்டிப்பா அவசியம் வரணும்”னு சொல்லி அலைபேசியைத் துண்டித்தார் கவிஞர்.

 

விருது வாங்கும் நாளும் வந்தது. இவனும் கவிஞரை பார்க்கவும் விருதினை வாங்கும் ஆர்வத்தோடும் சென்னைக்குச் சென்றான். சரியாகக்  குறித்த நேரத்தில் சபேரா ஹோட்டலில்  விழாவும் தொடங்கி யது. விழா மேடையில் பல துறை பிரமுகர்களும், அரசியல் தலைவர் களும் கம்பீரமாக அமர்ந்திருக்க, இவனோ கூச்சத்தோடு தன் உடம்பைக் குறுக்கிக்கொண்டு இருக்கையின் விளிம்பில் அமர்ந்திருந் தான். ஏனோ விழா நிகழ்வுகளிலும் சிறப்பு விருந்தினர் உட்பட விழாக் குழுவினர் இவனை பற்றி பேசிய பாராட்டு மொழிகளிலும் இவனது மனம் ஈடுபடவே இல்லை. இவனுடைய கண்கள் தோழமை மிக்க அந்தக்  கவிஞரையே தேடிக்கொண்டிருந்தன. ஒரு வேளை பின் வரிசையில் அமர்ந்திருக்கலாம் என தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டான் இவன். எப்படியோ ஒரு வழியாக விருது வழங்கும் விழாவும் நடந்துகொண்டிருந்தது. இவன் அந்த மேடையில் ஒரு எந்திரம் போலவே ஒவ்வொரு நிகழ்விலும் செயல்பட்டுக்கொண் டிருந்தான்.   உண்மையில் இவனுடைய மனைவியும் குழந்தைகளும் தான் விழா நிகழ்வில் உர்ச்சாகமாக இருந்தனர். சிறப்பு விருந்தினரும் தம் சொற்பொழிவை முடித்து இவனைக் கௌரவப்படுத்த அழைத்த போதுதான் இவன் சற்று குழப்பத்திலிருந்து விடுபட்டான்.

 

கடமையே என்று விருதினைப் பெற்றுக்கொண்டு ஏற்புரை நிகழ்த்த அழைத்தபோது “அடியேன்  எளியவன். என்னுடைய பெற்றோரும் அதிகம் படிக்காதவர்கள். ஏதோ படித்து பட்டம் பெற்று இன்று வயிற்றுப்பிழைப்புக்காக ஒரு நிறுவனத்தில் ஊழியம் செய்து வருபவன். ஆனால் நீங்கள் என்னைக் கொண்டாடுவதற்கு காரணம் ஒரு கவிஞர்தான் அடிப்படை. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பதாக கூறப்படும் பொன்மொழி எனக்கும் பொருந்தும். ஆக என் இலக்கிய பயணத்தில் கைக்காட்டி மரமாகவும் இந்த எளியவன் சுடர் விட்டு ஒளிரத் திரியாகவும் எண்ணையாகவும் தீச்சுடராகவும் திகழும் நாம் அனைவரும் அறிந்த நட்புக்குரிய கவிஞர் நித்தியமதி  அவர்கள்தான் காரணம் என்றால் அதுவே உண்மை. கவிஞரைப் பற்றி அடியேன் சொல்லிய வார்த்தைகள் சத்தியமான வையே. புகழ்ச்சிக்காகவோ முகமன் கூறும் பொருட்டோ சொல்லப் பட்டவை இல்லை. விருது எனக்கு அளிக்கப்பட்டாலும் அந்த விருதுக்கு உரிய முழு கௌரவமும் கவிஞர் நித்தியமதி  அவர்களுக்கே உரித்தாகும். அடியேன் இந்த விருதினை கவிஞரின் பொற்பாத கமலங்களுக்கே சமர்ப்பிக்கிறேன். கண்டிப்பாக அவர் இந்த விழா நிகழ்வுக்கு வருவதாக எனக்கு வாக்களித்திருக்கிறார். ஆகவே அவர் இந்த ஹோட்டலில்  எங்கிருந்தாலும் விழா மேடைக்கு வரவும்.” என இவன் ஒலி பெருக்கியில் பேசியபோது எழுத்தாளர்கள், இலக்கிய வாசகர்கள், இவனுடைய மனைவி, குழந்தைகள், ,நண்பர்கள், படைப் பாளர்கள், விழா குழுவினர்என  அனைவருமே கண் கலங்கிவிட்டனர்.

 

மேடையின் பின் வரிசையிலிருந்து இவன் அறிந்த பெண் கவிஞரும் எழுத்தாளருமான   சூரியதீபா  இவன் அருகே வந்து மெதுவாக முதுகினைத் தடவி  காதருகே கிசுகிசுத்தக் குரலில் “தயவு செஞ்சி சீக்கிரமா நன்றி சொல்லி ஏற்புரையை முடிச்சுக்கோங்களேன்.” என வர்ப்புறுத்த  இவனும் வேண்டா வெறுப்போடு வேறு வழி இல்லாமை யால் பேச்சை முடித்துக்கொண்டான். இவனுடைய மனத்தில் ”கவிஞர் நித்தியமதி  ஏன் விழாவுக்கு  வரவில்லை? கண்டிப்பாக வருவதாக வாக்களித்தாரே? அவங்க குடும்பத்தில் யாருக்காவது உடம்பு சரியில் லாமல் இருக்குமோ? சரி அலைபேசியிலாவது கூப்பிட்டுப் பார்க்க லாமா? என்றெல்லாம் யோசித்தபடி விழா நடந்த சபேரா ஹோட்டலை விட்டு வெளியே நடந்துகொண்டிருந்தான். சரி நாம் நேரிலேயே நித்தி யமதியின் வீட்டுக்கே ஒரு ஆட்டோவைப்  பிடித்து போய்விடுவோம் என தீர்மானித்தான்.

 

இவன் தனக்கும் கவிஞர் நித்தியமதிக்கும்  பரிச்சயமான  கவிஞர் சூரியதீபாவிடம்   “நித்தியாதேவியின் வீட்டுக்கு எப்படி போகணும்? உங்களுக்கு அடையாளம்  தெரியுங்களா?“    என வழி  கேட்டான். அப்போதுதான்   இவனுக்கு சூரியதீபாவின்மூலம்  உண்மை தெரிய வந்தது. நித்தியமதி  விழாவுக்கு வராமைக்கான காரணமும் இவனுக்கு  புரிந்தது. இவன் அறிந்த அந்த செய்தியால் இவனும் மனைவி குழந்தைகளும் இடிந்தே போனார்கள். விழா நடந்துகொண்டிருந்தபோது தான் ஒரு  sms வந்தது. அந்த குறுந்தகவலில் நித்தியமதி  குழந்தை தீபிகாவை ஸ்கூலுலவிட்டுட்டு திரும்புறப்போ எதுருல வேகமா வந்த லாரி மோதிய விபத்தால  அந்த எடத்துலயே நித்தியமதி  உடல் நசுங்கி இறந்துட்டாங்களாம்.  கவிஞரின் அகால மரணம் குறித்த தகவல் கிடைத்ததாலதான் ஏற்புரைய சீக்கிரம் நன்றி சொல்லி முடிக்க வற்புறுத்தியதாகவும் சூரியதீபா கூறக்கேட்டு செய்வதறியாமல் கலங்கி னான் இவன்.

 

அந்த அதிர்ச்சித் தகவலை தாங்கமுடியாமல் நொடிக்குள் மயங்கி விழுந்துவிட்டான். இவனுடைய மனைவியும் குழந்தைகளும்என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர். மேற்படி தகவல்களைத் தெரிவித்த சூரியதீபாவும் வேறு சிலரும்  இவன்முகத்தில் தண்ணீர் தெளித்து தேற்றி எழுப்பவேண்டியதாயிற்று. கடைசிவரை கவிஞர் நித்தியமதியை நேரில் பார்க்கமுடியவில்லை ஒரு வார்த்தையாவது பேசமுடியவில்லை  என்ற  ஏக்கமே  இவனை மயக்கத்துக்கும் சோர்வுக்கும் உள்ளாக்கியது. சூரியதீபாவும் வேறு சில படைப்பாளர் களும் இவனுக்கு ஆறுதல் கூறி “இந்தசந்தர்ப்பத்தைத் தவறவிட்டு விட்டால் கவிஞரின் முகத்தைக் கூட நம்மால பார்க்கமுடியாது. நாம் எல்லாரும்  ஒன்றாகவே   கவிஞரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளதான் போகிறோம்”  எனக் கூறி இவனையும் இவனுடைய மனைவி குழந்தைகளையும் அழைத்துக்கொ்ண்டு  உறிய இடத்துக்கு ஒரு ஆட்டோவில் கிளம்பினர்.

 

அங்கு சென்றபோதுதான் துக்கம் விசாரிக்க வந்தவர்களின் வாய்மொழி யாக  நித்தியமதியைப் பற்றிய பல செய்திகள் தெரியவந்தன.  குழந்தை தீபிகாவுக்கு   நித்தியமதியைத்  தவிர வேறு துணை இல்லை என்பதும், நித்தியமதியின்  கணவரும் சில மாதங்களுக்கு முன்புதான் நெஞ்சு வலியால் இறந்துவிட்டார் என்பதும்,  நித்தியமதியும் சுரேந்திரனும்  காதலித்து மணந்தவர்கள் என்பதும், இருவரும் இலட்சிய தம்பதியராக வாழ்ந்தவர்கள் என்பதும், விளம்பரங்கள் இல்லாமல் தம்மால் முடிந்த உதவிகளை நலிந்தோருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் செய்து வந்தவர்கள்  என்பதும், இருவரும் சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் என்பதோடு சுற்றுச் சூழல் கருத்துக்களை ஓய்வு நேரங்களில் தாம் வாழ்ந்த பகுதியிலுள்ளோருக்கு எடுத்து கூறி சூழல் விழிப்புணர்வுக்கு உழைத்தவர்கள் என்பதும், தேசிய தினங்களிலும் தேசத் தலைவர் களின் பிறந்த நாட்கள் நினைவு நாட்களிலும் அவற்றை போற்று வதற்கு அடையாளமாக தம் குடியிருப்புப் பகுதியில் பயன் தரும் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்துவந்தவர்கள்  என்பதும், சுரேந்திரனும் நித்தியமதியும் தம் கண்களை தானம் செய்தவர்கள் என்பதும்   இவனுக்குத் தெரியவந்தது.

 

இவன் நித்தியமதியின் முகத்தைமூடி இருந்த துணியை விலக்கிப்  பார்த்தபோது தாய் பசுவை இழந்த கன்றைப் போல கதறிவிட்டான்.   குழந்தை தீபிகாவின் கண்ணீர் உருகாத உள்ளங்களையும் உருக்கு வதாக இருந்தது. கரையாத மனங்களையும் கரைப்பதாக இருந்தது. ஆனால்?  “அனாதையாகிவிட்டேனே” என குழந்தை அழுதபோது?  இவன் ஒரு முடிவுக்கு வந்தான். ”இனி தீபிகா நீ அனாதை இல்லமா. நானும், அம்மாவும் இதோ இருக்காங்களே உன் தங்கைகள்  வளர்மதி நிறைமதி நாங்க எல்லாம் இருக்கப்போ நீ ஏன் கவலைப்படுற” எனத் தன் கையால் குழந்தையின் கண்ணீரைத் துடைத்து குழந்தையை வாரி மார்போடு அணைத்துக்கொண்டான்.  நித்தியமதியின்  தூரத்து உறவினர் களோடும் சக படைப்பாளர்களோடும்  சேர்ந்து தன் உள்ளம் கவர்ந்த கவிஞருக்கு  செய்யவேண்டிய  இறுதி யாத்திரைக் காரியங்களில் இவனும் குடும்பத்தாரும் துணை நின்றனர்.

 

நல்லடக்கம் முடிந்த நிலையில் படைப்பாளர்களும் அண்டை அயலாரும் நித்தியமதியின் உறவினரும்ஒவ்வொருவராக புரப்பட்டுச் சென்றுவிட்டனர்.  நித்தியமதிக்கு  சொந்த வீடோ நிலபுலன்களோ இல்லாததால் வந்த தூரத்து உறவினர்கள்  நமக்கு ஏன் வம்பு என தீபிகாவைப் பற்றிய தம் கவலையை சொட்டுக் கண்ணீர்த்துளியோடு கரைத்துக்கொண்டு சென்றுவிட்டனர்.    இவன் தீபிகாவையும் தன்னு டன் அழைத்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பினான். முதல் வேளை யாக தான் வாங்கிய அந்த ஒரு இலட்ச ரூபாய்க்கான காசோலையை தீபிகாவின் கல்விக்காக குழந்தை பெயரில் பாங்கில் ஃபிக்சட் டெபாசிட் செய்தான்.

 

இப்போது மருத்துவமனையில் இருக்கும்போது நடந்த சம்பவங்கள் எல்லாம் இவனுடைய மனத்திரையில் நிழல் காட்சிகளாக விரிய,  தீபிகாவின் மழலை மொழியில் நேரில் காணாத கவிஞரின் தொலை குரல் தோழமையை இவனால் உணராமல் இருக்க முடியுமா?  இவன் மீண்டெழுந்ததின் இரகசியம் ”அப்பா அப்பா உங்களுக்கு என்னப்பா செய்யுது? பயப்படாதிங்கப்பா நான் ஸ்கூலுக்கு இண்ணைக்கு போகல.  உங்களுக்கு காய்ச்சல் நல்லா  குணமானப்புரம் ஸ்கூலுக்கு போறேம்பா அப்பா ப்ளீஸ்பா. ..” என்ற தீபிகாவின் மழலை மொழிக்குத்தான் எத்தனை மகத்துவம்!

 

Series NavigationHarry Belafonte வாழைப்பழ படகு