தோழா – திரைப்பட விமர்சனம்

This entry is part 13 of 16 in the series 3 ஏப்ரல் 2016

– சிறகு இரவி
0
சக்கர நாற்காலியில் வாழும் கோடீஸ்வரனும் அவனது அன்புக்கு பாத்திரமாகும் கேடி ஒருவனும்! நெகிழ்ச்சியான திரைக்கதையுடன் இயக்குனர் வம்சி!
0
Thozha-movie-stilla-8பிரஞ்சு படமான தி இன்டச்சபிள்ஸை தழுவி எடுக்கப்பட்ட தமிழ் படம் மண் மணம் மாறாமல் மனதைக் கவர்கிறது.
ஒரு விபத்தில் முகம் தவிர மற்ற அவயங்கள் செயலற்றுப் போகும் பெரும் தனக்காரர் விக்கிரமாதித்யாவுக்கு பணியாளாக சேர்கிறான் ராயபுரம் சீனு என்கிற ஒழுக்கமற்ற இளைஞன். இருவரின் வாழ்வும் பின்னி பிணைந்து, பாச நதியாக மாறுகிறது. விக்ரமின் காரியதரிசி கீர்த்தியை காதலிக்கும் சீனு தன் காதலில் வெற்றி கண்டானா? விக்ரமின் வாழ்வில் புதிய வெளிச்சம் கிடைத்ததா? என்று சுவையாக விருந்தளித்திருக்கீறார் இயக்குனர் வம்சி.
வெறும் முகபாவங்களிலும், குரல் உச்சரிப்பிலும் கவர்கிறார் விக்ரமாக நாகார்ஜுனா. மணிரத்திரனத்தின் படத்திற்கு முன்னோடியாக இதில் நடித்து ஈர்க்கிறார் சீனுவாக கார்த்தி. அட்டவணை பாவங்களில் கவர்ச்சி கறிவேப்பிலையாக கீர்த்தி வேடத்தில் தமன்னா. விக்ரமின் நண்பன் பிரசாதாக பிரகாஷ்ராஜ் அசத்தல் காமெடிகளை அரங்கேற்றுகிறார். சீனுவை ஜாமினில் எடுக்கும் வக்கீல் நண்பனாக விவேக், அனுபவ முத்திரைகளை பதித்திருக்கீறார். சீனுவின் அம்மாவாக ஜெயசுதா வெகு பாந்தம். கௌரவ தோற்றங்களில் நந்தினியாக அனுஷ்கா! பிரியாவாக ஸ்ரேயா சரண்.
இயல்பான வசனங்களை எழுதியிருக்கும் ராஜா முருகன் பாராட்டுக்குரியவர்.
“ மனுசன் போற எடத்துக்கெல்லாம் மனசு போகாது “
“ காதல்ங்கறது எதிர்பார்க்கறது மட்டுமில்லே! கொடுக்கறதும் தான்”
“ நம்ம கிட்ட அன்பு காட்டறதுக்கு ஒருத்தர் இருந்தா போதும். வாழ்க்கை பூரா சந்தோசமா இருக்கலாம்”
கோபி சுந்தரின் பாடல்கள் வெகு சாதாரணம். பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
“ ஒத்த ஒத்த முத்தத்துக்கே “ என்கீற கார்த்தி, தமன்னா டூயட் பாடலில், பாரிஸின் அழகை அப்படியே அள்ளி வந்திருக்கீறது பி.எஸ். வினோத்தின் கேமரா. கருநீல வான பின்புலத்தில் மஞ்சள் கதிர்கள் ஆடும் வயல்களில் வண்ண உடைகளில் நாயகி ஆடும் ஆட்டம் கவர்ச்சி தேரோட்டம். படம் நெடுக உறுத்தாத ஒளிப்பதிவுக்கு அவருக்கு பாராட்டுக்கள்.
பல இடங்களில் கண்களை துடைத்துக் கொள்ளும்படியான உருக்கமான காட்சிகளை அமைத்த இயக்குனர் வம்சி, பாசமலர் வரிசை படங்களை மீண்டும் கொண்டு வருவார் என்கிற நம்பிக்கை எழுகிறது.
இயல்பான நகைச்சுவையில் கார்த்தியும் பிரகாஷ்ராஜும் சிக்ஸர் அடிக்க, வெறும் பாவனைகளாலே அதிர் சிரிப்பை வரவழைக்கீறார் நாகார்ஜுனா.
ரொம்ப நாளாயிற்று உருகி ஒரு படம் பார்த்து. தோழா நெஞ்சம் தழுவும் காவியம்.
0
பார்வை : மகுடம்
மொழி : வெள்ளாவியை தாண்டி வேற எதிலேயோ செஞ்சிருக்காங்க தமன்னா பொண்ணை!
0

Series Navigationநான்கு கவிதைகள்எஸ் ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *