த. அறிவழகன் கவிதைகள்

This entry is part 10 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

விருத்தாசலம் வட்டம் வெளிக்கூனங்குறிச்சி என்ற ஊர்க்காரர் அறிவழகன். ‘ போக்குமடை ‘ என்ற கவிதைத் தொகுப்பில் கிராமத்து
அழகையும் உயிர்த் துடிப்புள்ள வாழ்க்கையையும் பதிவு செய்துள்ளார். திரைப்படத் துறையில் இருக்கும் இவர் கவிதைகள் யதார்த்தப்
போக்கில் மனிதம் பேசுகின்றன. மண்மணம் வீசும் தொகுப்பிது !
‘ வெட்டவெளிச் சாமி ‘ கிராமத்துத் தெய்வத்தைப் பற்றிப் பேசுகிறது. அவர் எப்படிப்பட்டவர் ?
உருட்டு முழி
முரட்டு மீசை
கொடுவாக் கத்தி
கனத்த தேகத்துடன்
ஊருக்குள் யாரையும்
அச்சுறுத்த விரும்பாத அவர்
—— அவர் இயல்புகள் எப்படி ? எனக் கேட்டால் விடை தருகிறார் அறிவழகன்.
குடிக்கச் சாராயம்
கடிச்சுக்க கருவாடு
புகைக்கச் சுருட்டு
வேட்டைக்கு நாய்
வலம் வரக் குதிரையென
காட்டுக்குள் கம்பீரமாய்த் திரிவார்

—— எனப் பலவாறாக முனியப்பர் சிறப்பியல்புகளைப் பேசுகிறது இக்கவிதை.
‘ கூடு ‘ என்ற கவிதை , காதலைக் கிராமியப் பாங்கில் முன் வைக்கிறது.
வயல் வரப்புகளில்
கடந்து செல்லும்
கால்களைத் தீண்டும்
சுனைக் கீரயாய்
உன் இருப்பு
தினவடங்காது
கூர் நகங்கள் பிராண்ட
ரணநீர் வடியும்
உன் நினைவுத் தீண்டல்
—— ஆசைகள் கற்பனையில் மிதந்து போகும் துயரத்தைச் சொன்ன பின் அடுத்து ஒரு படிமம் காணப்படுகிறது.
உழன்று கிடக்கிறேன்
உன் ஞாபக வளையிலே
நஞ்சைவெளி நண்டென நான்
—— கடைசியில் நண்டு நாரைக்குப் பலியாகிறது !
வரப்பு மேட்டில்
நொறுங்கிக் கிடக்கிறதாய்
என் கூடு
——- என்று கவிதை முடிகிறது. வித்தியாசமான காதல் கவிதை !
கூத்து பார்ப்பது அந்தக்காலத்தில் முக்கியமான பொழுதுபோக்கு ! ‘ கூத்தாடி ‘ என்ற தலைப்பில் ஒரு கவிதை.
திருவிழாக் கூத்து
உள்ளூர் சமா
விடிய விடிய ஆடுவார்
மெயின் வேசம் கட்டும்
பெரியப்பா
—— விடிந்ததும் பள்ளிக்கூடம் அனுப்ப மகனைத் தேடி வருகிறார் ஒரு தந்தை. அரிதாரம் பூசியுள்ளதால் அவருக்கு மகனை அடையாளம்
தெரியவில்லை.
‘ நெல் சோறு ‘ – ஏழைச் சிறுவனின் ஏக்கத்தைக் காட்டுகிறது. விருந்தாளிக்குக் கிடைத்த நெல் சோறு அச்சிறுவனுக்குக் கிடைக்கவில்லை.
வீட்டின் நடுத்தூண் பற்றி
சாப்பிடும் வரை
அவர்களையே வெறிப்பேன்
மீதச் சோறு போகும்
வயசான தாத்தாவுக்கு
—— என்ற வரிகளில் ஏழ்மை மனத்தைப் பிழிகிறது ! கம்மங்கூழும் , வரகுச் சோறும் தொடர்ந்து சாப்பிட்டால் அலுக்கத்தானே செய்யும் !
இது நல்லதொரு யதார்த்தக் கவிதை.
‘ இழப்பின் வலி ‘ —- கிராமத்துச் சிறப்புப் பண்பு பற்றிப் பேசுகிறது. துக்கம் விசாரித்தல் உரிய நேரத்தில் அனுசரிக்கப்படுகிறது.
ஆயிரம்தான்
வேலையெனினும்
வீட்டுக்கொருவரேனும் வந்து
அக்கறையுடன் கடைப்பிடிப்பர்
துக்க சம்பிரதாயம்
—— இதனால் பிரிந்த உறவுகள்கூட சரியாகிவிடும்.
திட்டித்தீர்த்து
மண்வாரித் தூற்றி
சாபங்கள் சகிதமாய்
முறிந்துபோன உறவுமுறைகளும்கூட
முறைப்பாடு தள்ளி வைத்து
முந்திக்கொண்டு வரும்
துக்கப் பங்கேற்க
‘ மறப்போம் மன்னிப்போம் ‘ என்ற குணம் உளவியல் நிபுணர்களும் வரவேற்கும் நல்ல பண்பாகும். பிள்ளைப் பருவத்து விளையாட்டின்
பசுமை நினைவுகளைப் பதிவு செய்துள்ளது ‘ வேண்டும் ‘ என்ற கவிதை.
கொட்டாங்குச்சி
இட்டிலி சுட்டு
மரத்தடி நிழலில்
அடுக்கி விற்க
—– என்ற தொடக்கம் களை கட்டுகிறது.
ஈர அரிசியுடன்
வறவோட்டில்
வறுத்துத் தின்ன
ஈசல் பொறுக்க
—– சரி , இதெல்லாம் எப்போது சாத்தியம் ?
ஏங்கும்
ஏக்கங்கள்
பூர்த்தியக
எல்லாக் கோடையிலும்
வேண்டும் ஒரு மழை

யானையைப் பழக்கிக் காசு வாங்க வைக்கும் பாகனின் செயலைக் கண்டிக்கிறது ஒரு கவிதை. இதற்குத் துணை போகும் மனிதர்களையும்
கண்டிக்கிறது ‘ சூழ்ச்சி ‘ என்ற கவிதை ! கிராமத்துப் பிள்ளையாருக்கு எண்ணெய் அபிஷேகம் பற்றிக் குறிப்பிடுகிறது ‘ முழுக்கு ‘ என்ற
கவிதை.
எள்ளு மல்லாட்ட
தேங்காய் என
எப்போ காணம் ஆட்டினாலும்
முதல் எண்ணெய்
அவருக்குத்தான்…

வட்டாவில் எடுத்து வந்து
தலை வழிய ஊற்றி
கும்பிடு போடுவாள் அம்மா
மனசுக்குள் ஏதேதோ வேண்டி….
ஊர்க்காரர்களும்… அப்படியே

—– எதற்கெடுத்தாலும் பழமொழிகள் சொல்லும் மூதாட்டியைப் பற்றிப் பேசுகிறது ‘ பாட்டி மொழி ‘ !
கிராமிய அழகைக் கவிதைக் கோப்பைகளில் நிரப்பி நம் முன் வைத்துள்ளார் அறிவழகன். விரல்களைத் தயாராக வைத்துக்கொண்டு
வண்ணத்துப்பூச்சி பிடிக்கும் குழந்தையின் சுவாரஸ்யத்தை வாசகன் மனத்தில் உருவாக்குகிறது இவரது கவிதைகள். படித்து ரசிக்கலாம் !

Series Navigationஆறுமுக நாவலரின் வாழ்வும் பணிகளும்சுந்தரி காண்டம் 3. வித்யா ரூபிணி சரஸ்வதி
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *