நண்பனின் அம்மாவின் முகம்

குமரி எஸ். நீலகண்டன்

ஒரு நெருங்கிய நண்பனின்

அம்மாவை முதன்முதலாக

இப்போதுதான்

பார்க்கிறேன்.

சில வருடங்களாக

என் நட்பு வட்டத்தில்

வந்தவன் அவன்.

அம்மாவின் பொலிவான

முகத்தில்

வயதான நண்பனின்

ஆளுமை வழிந்தோடியது.

பால்ய காலத்தில் நான்றியாத

நண்பனின் அந்த

பால் வடியும் முகம்

எனது கற்பனையில்

வியாபித்து திரிந்தது.

அம்மா பால்ய

நண்பனுக்கு பாலூட்டினாள்.

சிரித்தாள்.

கோபத்துடன் கண்டித்தாள்.

வாழைத் தண்டின்

நார் பட்டையால்

மகனை வலிக்காமல்

அடித்தாள்.

மகனைக் காணாமல்

மகனின் பெருமை கூறி

சிலாகித்தாள்.

மகனுக்காக பிரார்த்தித்தாள்.

மகன் ஏதோ

சொன்னபோது

வெட்கப் பட்டாள்.

இப்போது

மகன் பணிவோடு

கைகட்டி

நின்று கொண்டிருக்கிறான்.

அம்மா அமைதியாக

தூங்கிக் கொண்டிருக்கிறாள்

பெருவிரல் கட்டப்பட்ட

கால்களுடன்.

Series Navigationஉள்ளத்தில் நல்ல உள்ளம்இயலாமை !