நனி நாகரிகம்

                                                                                                                    சோம.அழகு                                                 

                              எளியவர்களிடமிருந்து மிக இயல்பாக போகிற போக்கில் நிதானமாகத் தெறித்து விழும் வார்த்தைகளில் இருக்கும் வலிமையை, தெளிவை, அதில் குறும்புடன் எட்டிப் பார்க்கும் அழகியலை உணர்ந்து ஒரு கணம் ஆடி அசந்து போயிருக்கிறீர்களா? தாம் சொல்வது எவ்வளவு பெரிய விஷயம் என்ற பிரக்ஞையோ அலட்டலோ அதிகப்பிரசங்கித்தனமோ இல்லாமல் ‘இவ்ளோதாங்க வாழ்க்கை…’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி விட்டுப் போகிறவர்களின் அருகில் போதி மரங்களே போன்சாய்களாக மாறிப் போகும் அதிசயத்தைக் காணப் பெற்றிருக்கிறீர்களா?

                        அம்மா – அப்பாவை அழைத்து வர ரயில் நிலையம் சென்றேன். சென்றேனா….? இந்திய ரயில்வே துறையின் வரைமுறைகள், விதிகள்,…… எல்லாவற்றின் படி மிகச் சரியாக வழக்கம்போல் ரயில் தாமதமாக வந்து சேரும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக (!) ஒரு ஆன்டி குற்றவுணர்வே இல்லாமல் அறிவித்துக் கொண்டிருந்தார். குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும் என்று அம்மாவின் அலைபேசி அழைப்பின் மூலம் அறிந்தேன். பையினுள் இருந்த சிறுகதைத் தொகுப்பே உற்ற துணை என பெஞ்சில் சம்மணமிட்டு அமர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். இதமான காலைப் பொழுது மறைய ஆரம்பித்து, வெயில் கொஞ்சம் ஏறத் துவங்கியிருந்தது.

                        சிறிது நேரத்தில் ஒரு கூட்டம் பெஞ்சின் அருகில் வந்து அமர்ந்தது. தங்களது வாழ்வுமுறையை மற்றவர்களுக்கு அறிவிக்க ‘நாடோடிகள்’ என்னும் பதாகை அவர்களுக்குத் தேவைப்படவில்லை. “ஊக்கு, பாசி…. ஏதாவது வாங்கிக்கிறியா அக்கா ?” – குரலுக்குச் சொந்தக்காரியான அந்தப் பெண்ணை…. இல்லை! குழந்தையை….. அட ! தெரியலைங்க! முகம் 17 அல்லது 18 என்றது; வயிறு 6 அல்லது ஏழு மாதம் என்றது. “இல்லம்மா… வேண்டாம்” –சொல்லும் போதே அவளது குழந்தை முகம் என் முகத்தில் புன்னகையை வரைந்து சென்றது. இன்னொரு நிஜமான குழந்தை (வயது 2 இருக்கலாம்) அழுது கொண்டே இவளிடம் தஞ்சம் அடைய, அக்குழந்தையை வாரியணைத்து மடியில் கிடத்தி ஓராட்ட ஆரம்பித்தவள், அங்கு வந்து நின்ற ஒரு பையனைப் (20 வயது இருக்கலாம்) பார்த்து, “என்ன ஆச்சு? பிள்ளை ஏன் அழுது?” என்று கேட்டவாறே குழந்தையிடம், “அப்பாவ அடிச்சுடலாமா?” எனச் செல்லங்கொஞ்சிக் கொண்டே அவனைக் கடிதோச்சி மெல்லெறிந்து விளையாட்டுக் காட்டினாள்.

                        இதற்குள் அந்தக் குடும்பத்திலிருந்த ஒருவர் அங்கிருந்த அனைவருக்கும் உணவுப் பொட்டலங்கள் வாங்கி வந்தார். நாகரிகம் கருதி புத்தகத்தினுள் தலையை விட்டாலும் கூட செவிகள் மனதோடு ஒத்துழைத்து அவர்களைக் கவனிக்கலாயின. கண்கள் அவர்கள் பக்கம் அவ்வப்போது ‘ஏதேச்சையாகப்’ பார்ப்பது போல் படம் காட்டிக் கொண்டிருந்தன.

                        “பூரி காலியாயிட்டு… ஒரு பொட்டலம்தான் பூரி…. இந்தா ஒனக்கு. இது ரெண்டும் இட்லி…” என்று கூறி அவளிடம் தந்தார் அந்தப் பெரியவர். இட்லியும் சாம்பாரும் அவள் கைவண்ணத்தில் சிறிது நேரத்தில் சாம்பார் சாதம் ஆனது. அதைக் குழந்தைக்கு ஊட்டியவாறே தானும் சாப்பிட்டாள். அவன் பூரி பொட்டலத்தைப் பிரித்து அவளிடம் தர, “ஒனக்குதான் பூரி புடிக்குமே… நீ தின்னு…” என்றாள். “அய்யே ! வயித்துப்புள்ளக்காரி ஒன்ன வச்சிக்கிட்டு எனக்கு என்ன பூரி வேண்டிக்கெடக்கு? நான் நாளைக்கு சாப்பிட்டுக்குறேன். நீ இப்ப சாப்பிடு…” – கடுகடுத்தான்.  அவன் குரல் அப்படித்தான் ஒலித்தது. “ஏய் லூசு ! எனக்கு இப்ப இந்த எண்ணெ மக்கு வேண்டாம்; ஓங்கரிக்கும்” என்று அவனை உண்ண வைக்க முயன்றாள். “அப்ப நேத்து மட்டும் எண்ணெ இல்லியா மக்கு” என்று சிரித்தான். இருவரும் மாற்றி மாற்றி செல்லச் சண்டையிட்டு உணவையும் அன்பையும் அவ்வளவு அழகாகப் பரிமாறிப் பகிர்ந்து கொண்டார்கள்.

                        ஓர் அருமையான கவிதை கண்ணுக்கெதிரே அரங்கேறிக் கொண்டிருந்ததில் கையிலிருந்த புத்தகம் ரசிக்காமல் போனதில் வியப்பில்லை. அக்கவிதையில் கரைந்து போகும் ஆவலில் சிறுகதைகளை என் வாசிப்பிற்குக் காத்திருக்கும்படி பணித்துப் பையினுள் அனுப்பினேன். சிறிது நேரம் அவளிடம் கதைக்கும் ஆவல் எழுந்தது. உரையாடலைத் தொடங்க வேண்டும் என்ற ஆவலில் பதில் தெரிந்த கேள்வியையே கேட்டேன்.

                        “கொழந்த ஒங்களோடதா ?”

                        “ஆமாக்கா… அடுத்தது இன்னும் மூணு மாசத்துல கையில வந்துரும்…. அப்புறம் ஒரு எடத்துல நிக்க நேரம் இல்லாம வெளயாட்டுதான்” – மடியில் கிடந்த குழந்தையின் நாடியை வருடிய தன் விரல்களை முத்தமிட்டுக் கொண்டாள். குழந்தை பலமாக இருமியது கண்டு, “குழந்தைக்கு உடம்பு சரி இல்லியா? டாக்டர்ட்ட அழைச்சிட்டு போனீங்களா?” எனக் கேட்டேன். “டாக்டர் எதுக்கு? அருவாமூக்கு பச்சிலைலருந்து நஞ்சறுப்பான், தழுதாரை வர தேவையான மூலிகை எல்லாம் ஓரளவு தெரியும். பெரும்பாலும் எங்க வைத்தியத்துலயே சரியாயிரும். இதுக்கும் கேக்கலேனா அப்புறம் கூட்டிட்டுப் போகவேண்டியதுதான்”

            அடுத்து என்ன கேள்வி கேட்டுத் தொடர்வது என யோசித்துக் கொண்டிருக்கையில், “அக்கா… எப்படியும் ஒன்ன விட ஏழு எட்டு வயசாவது எனக்குக் கொறச்சலாதான் இருக்கும். நீங்க வாங்கன்னு சொல்லாம சும்மா நீ வா போன்னே சொல்லேன்” என்று அவளே பேச்சு கொடுத்தாள்.

                        “ஏ கிறுக்கு ! அவங்க படிச்சவங்க…. அப்படித்தான் இருப்பாங்க. ஒனக்கு சுட்டுப் போட்டாலும் வராது” – அவள் கணவன் பொய்யாகக் கடிந்து கொண்டான்.

                        “அப்போ கொஞ்சம் படிப்பு தலைக்கேறுனா எல்லார்ட்ட இருந்தும் தூரமா போயிருவாங்களோ ?” – அவள் அப்பாவியாகத்தான் கேட்டாள். எனக்குத்தான் “அரைகுறையா படிப்பு ஏறுனா தலைக்கேறிருமோ?” என்று கேட்டது. “நல்லவேள…. அந்த எழவு ஏறுறதுக்குள்ள நான் நிப்பாட்டிட்டேன்” என்றாள். தன் படிப்பையா அல்லது நம் திமிரையா, எந்த ‘எழவைச்’ சொன்னாள் என்று தெரியவில்லை. அவனது ‘அவங்க படிச்சவங்க…. அப்படித்தான் இருப்பாங்க’ என்பது கூட வஞ்சப் புகழ்ச்சியாகத் தோன்றியது.

                        “நீ எதுவரைக்கும் படிச்ச?” – ஒருமையில் நான் வினவியதைக் கண்டு கடைக்கண்ணால் புருவம் உயரப் புன்னகைத்தவாறே, “பாரு… இப்ப எப்பிடி இருக்கு கேக்க? என்னமோ பெருசா பேசுனியே?” – இது அவனுக்கான பதில். பின் என் பக்கம் திரும்பி,

“ரெண்டாப்பு வர போனேன் அக்கா….புடிக்கல”.

                        “ஏன் புடிக்கல?”

                        “ஒனக்கு ஏன் புடிச்சுது?”

                        “ம்ம்… எனக்கும் அந்த வயசுல புடிச்ச மாதிரி ஞாபகம் இல்லியே..” – வார்த்தைகள் வந்து விழுந்த பிறகுதான் என் கேள்வி மடமையாகத் தோன்றியது. “அப்புறம் எதுக்குப் போனியாம்?” என்ற அவளது கேள்வி வார்த்தைகளாக அல்லாமல் சிரிப்புச் சிதறல்களாக அவ்விடத்தை நிரப்பிக் கொண்டிருந்தன. இவளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் பேச வேண்டும் போலும்.

                        “சில விஷயங்கள புடிக்கலங்குறதுக்காக…….”

                        “அது எவ்ளோ நல்ல விசயமா இருந்தா என்ன? புடிக்கலன்னா கருமத்த என்னத்துக்கு சொமந்துட்டுத் திரியணும்?”

                         “இப்ப hardwork பண்ணி படிச்சா நாளைக்கு lifeல settle ஆகிறலாம்ல…. நல்ல job opportunities இருக்கு… ஒங்களுக்காக government எவ்ளோ schemes மூலமா help பண்றாங்க… use பண்ணிக்க வேண்டியதுதானே?” – சத்தியமாக இதை நான் கேட்கவில்லை. அவர்களது வாழ்வியலைப் புரிந்து கொள்ளாமல் யதார்த்தம் என்னும் சாயம் பூசிக்கொண்டு இப்படி அரைவேக்காட்டுத்தனமாகக் கேட்கும் அளவிற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை. அதற்காக இக்கேள்வியைக் கேட்ட, அருகில் இருந்த அந்த நவநாகரிக யுவதியைக் குற்றம் சாட்டவும் இல்லை. அந்த யுவதிக்கு வந்த தொலைபேசி அழைப்பு அவளது கேள்வியை இடைமறித்தது. “Project deadline….. appraisal submission……HR…….” இவ்வார்த்தைகள் அவளது உலகை வெளிச்சம் போட்டுக் காட்டின. பாவம்! வளர்ச்சி, அக்கறை என்று நினைத்துதான் கேட்டிருப்பாள். கேள்விக்கு பதில் எதிர்பாராமல் தொலைபேசியில் பேசியவாறே நடந்து கொஞ்சம் தள்ளிச் சென்று விட்டாள்.

                        மடியில் கிடந்த பிள்ளையைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே இருவரும் அந்த யுவதியை ஆவென பார்த்துக் கொண்டிருந்தனர். அலைபேசியில் மூழ்கியிருந்த அவளுக்குக் கேட்காத தூரத்தில்தான் இருக்கிறோம் என்பதை உறுதி செய்து கொண்டவளாய், பிள்ளையைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டே, “யப்பா… ! தகர ஷீட்ல மழ பேஞ்ச மாரி…ச்சை!” (ஆமாம் ! உவமையை கொஞ்சம் மாற்றித்தான் எழுதியிருக்கிறேன். அதான் கண்டுபிடிச்சிட்டீங்கள்ல…அப்புறம் என்ன?) என்று அங்கலாய்த்தாள். அந்த சொலவடையைக் கேட்டதும் சிரிப்பு வந்தது எனக்கு.

                        “யக்கா… என்ன சொல்லீட்டுப் போகுது அந்தப் பொண்ணு?” அவன் கேட்டான்.

                        “இல்ல…. ‘பிள்ளைங்கள படிக்க வச்சா நாளைக்கு நல்ல வேலைக்குப் போவாங்களே?’னு கேட்டாங்க”.

                        “நல்ல வேலைன்னா…?”

                        “நல்ல சம்பளம் கெடைக்குற வேலைய சொல்லீருக்கலாம்”

                        “நல்ல சம்பளம்னா…?”

போச்சு போ!    “தெரியலியேப்பா…”

                        “சரி விடுக்கா…. நல்ல சம்பளம் கெடைச்சு…?”

                         கிராதகி ! போகிற போக்கில் அந்த அலைபேசிக்காரி கேட்ட முத்தான(!) கேள்விக்கு அநியாயமாக என்னை பதில் சொல்லும் அவல நிலைக்கு ஆளாக்கிவிட்டுப் போனதை எண்ணி கிட்டத்தட்ட அவளைச் சபிக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் இவனுக்குப் பதில் சொல்ல வேண்டியிருந்ததால் கொஞ்சம் ஒத்திப் போட்டேன். எதற்கெடுத்தாலும் பளிச்சென்று பதிலுரைக்கும் அல்லது எதிர் கேள்வி கேட்கும் இவர்களிடம் எவ்வளவு யோசித்தும் இதற்கு என்ன சொல்வதென்று தெரியாததால் பொதுஜனத்தின் மூளையாகவே பதிலுரைத்தேன்.

                        “நல்ல சம்பளம் கெடச்சா… வசதியா… நிம்மதியா… சந்தோஷமா…”

                        “இப்பவும் அப்படித்தான இருக்கோம்”

                        பளார்! பெரும் சத்ததுடன் எல்லா மனிதர்களின் கன்னங்களிலும் அறை விழுந்ததில் ஒரு கணம் உறைந்து போனது உலகம்.  தாயின் மடியிலிருந்து தந்தையின் மடிக்குத் தாவிச் சென்று இவ்வுலகத்தை உறைநிலையிலிருந்து மீட்டது அக்குழந்தை.

                        “ஒரு நாளைக்கு எப்படியும் ரெண்டு வேள சாப்பிடக் கிடச்சிருது. கெடச்ச எடத்துல பிள்ளைய மேல போட்டு குறுக்க சாய்ச்சா தன்னால கண்ணு சொருகுது. இத விட வேற என்ன சந்தோசம், நிம்மதி, வசதி….?”

                        வாழ்வில் முதன்முறையாக மனதார பொறாமை என்னும் உணர்வால் ஆட்கொள்ளப்பட்டேன்.  குழந்தை அவன் மீது ஏறி அவனது தலைக்குப் பயணப்பட்டது. லாவகமாகத் தூக்கித் தோளில் அமர வைத்துக் கொண்டான். அவனது முடியையும் காதுகளையும் பிய்த்து எறியாத குறையாகக் குழந்தை அவனை பொம்மையாக்கி அதன் போக்கில் அவனை ஆட்டிப் படைத்தது.

                        “எழுத படிக்கத் தெரியுற வரைக்குமாவது…?” – இதற்கு எந்த அணுகுண்டை வீசப்போகிறானோ என்று தயங்கித் தயங்கித்தான் கேட்டேன்.

                        “அதெல்லாம் வளரும்போது நான் பாத்துக்குவேன் அக்கா…. நாங்க போடுற கணக்க பாத்தே அதுவும் கத்துக்கும். அப்புறம்….. நானும் போனேன் எட்டாப்பு வரைக்கும்… எம்பிள்ள போனாலும் என்னிய மாதிரி கீழ ஒரு ஓரமாத்தான் அதுவும் ஒண்டிக்கெடக்கணும்…. இப்ப பாரு எம்மேல ராசாவாட்டம் ஒக்காந்துருக்குறத… நாள் முழுக்க நாலு சுவத்துக்குள்ள கெடந்து அது என்ன படிப்பு? என் தோள்ல ஒக்காந்து ஒலகத்த பாக்குதே… அந்தப் படிப்பு போதாது…?”

                        எப்பேர்ப்பட்ட விஷயம்? படுபாவி ! இவ்வளவு லேசாகச் சொல்லிவிட்டானே! என் புருவங்கள் வில்லாய் வளைந்து நிமிர்ந்து நின்றதில் என் முகமெங்கும் அம்புகள் ஆகிப்போயின ஆச்சரியக்குறிகள்!

                        அலைபேசி அழைத்தது. “இன்னும் பத்து நிமிஷத்துல வந்துருவோம்” என்றாள் அம்மா.

                        “அதுக்குள்ளயா?”

                        “என்னது?”

                        “ஒண்ணுமில்லை. வாங்க… நான் வந்துட்டேன்.” என்று அம்மாவிற்குப் பதிலளித்துவிட்டு மீண்டும் அவர்கள் பக்கம் திரும்பினேன்.

                        “இப்ப ஒரு வண்டி வருது. கெளம்பீருவோமா? அப்பாகிட்ட கேக்கட்டா?” அவளிடம் கேட்டான்.

                        “என்ன அவசரம்? இப்பதானே சாப்பிட்ட…. கொஞ்சம் இரு… எனக்கு கொஞ்சம் இருந்திட்டு போலாம்னு இருக்கு. மதிய வண்டிக்குப் போவமே…”

                        உடனடியாக உடன்பட்டான். திட்டமிடலோ அட்டவணையோ இல்லாத வாழ்க்கையில் உள்ள நிதானத்தை இவ்வளவு சுகமாக அனுபவிக்க இயலுமா ? வாழ்ந்து காட்டிக் கொண்டிருந்தார்கள்.

                        இந்த ரயிலுக்கு நேரம் காலமும் கிடையாது; விவஸ்தையும் கிடையாது. சரியாக இப்போதுதான் வந்து தொலைக்க வேண்டுமா? இன்னும் இவர்களிடம் பேசவே ஆரம்பிக்கவில்லையே?

அவசர அவசரமாக அவளிடம் கேட்டேன், “எங்க இருந்து வர்றீங்க?”

“நெறைய எடத்துல இருந்து…”

“எங்க போறீங்க?”

“நெறைய்ய்ய்ய எடத்துக்கு…” – கறை படிந்த பற்கள் தெரியச் சிரித்தாள்.

தன்னிடம் மிஞ்சியிருக்கும் குழந்தைத்தனத்தின் மிச்ச சொச்சத்தை விட்டுக்கொடுப்பவளாகத் தெரியவில்லை. அவள் பதிலில் இருந்த அழகியலைக் குலைக்க விருப்பமில்லை எனக்கு.

                        ரயில் வந்து பயணிகள் இறங்க ஆரம்பித்தனர். என் கால்கள் அவ்விடத்தை விட்டு நகர்ந்து அம்மா அப்பாவைத் தேட மறுத்து, கண்கள் மட்டும் இடமும் வலமும் துழாவிக் கொண்டிருந்தன. அவள் கிளம்பும் மதிய நேரம் வரை அவளோடு அளவளாவ வேண்டும் போல் இருந்தது.

                        “அக்கா! நீ எங்க போற?”

                        “நான் உங்க அளவுக்குக் குடுத்து வச்சவ இல்லம்மா… எங்க இருந்து வந்தேனோ அங்கயேதான்… வீட்டுக்கு”. ‘வீட்டுக்கு’ என்ற சொல்லில் அதுவரை இல்லாத சலிப்பு தொனித்ததை உணர்ந்திருப்பாளோ?

                        “எதுக்கு வீடுன்னு ஒண்ண கட்டி வைப்பானேன்; அதக் கட்டிக்கிட்டு அழுவானேன்”, முதிர்ந்த சிரிப்பொன்று உதிர்ந்தது.

                        “If we were meant to stay in one place, we’d have roots instead of feet” என்ற Rachel Wolchinன் வரிகளை சத்தியமாக இவள் அறிந்திருப்பாளில்லை. நான் அவர்களிடம் முட்டாளாகித் தோற்றுக் கொண்டிருந்த அந்த அற்புதத் தருணத்தில், அம்மா அப்பா நான் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டார்கள். அவளது குழந்தையிடம் ஒரு சாக்லேட்டை நீட்டினேன். தத்தித் தத்தி என்னருகில் வந்து என் கைப்பிடித்து  நின்று அந்த 20 ரூபாய் சாக்லேட்டுக்கு விலை மதிப்பில்லா ஒரு மென் புன்னகையைப் பரிசளித்துச் சென்றது. அவளும் புன்னகையிலேயே நன்றி சொன்னாள் அல்லது மகிழ்ந்தாள். குழந்தை அம்மாவைத் தயக்கத்துடன் பார்ப்பது, அம்மாவின் கண் அசைப்புக்கு இணங்க வாங்கிய பின் அனிச்சையாக “Say thank you! Come on” என்ற கட்டளை  என அரங்கேறும் செயற்கைத்தனங்கள் எதுவும் அங்கு இல்லை.

        விடைபெற்றுக் கொண்டு வேர் பிடித்து என் கால்களைப் பிடித்திழுக்கும் கூட்டிற்குத் திரும்பினேன்.   அவர்களோடு கதைத்தது, எனது மிகச் சாதாரண கேள்விகள், அதற்கு அவர்களின் அலங்காரமில்லாத ஆனால் ஆழமான பதில்கள், அவர்களிடம் நான் முழுமையாகத் தோற்க விழைந்து அதிலும் தோற்றுப் போய் பாதியிலேயே வந்தது வரை ஒவ்வொன்றையும் அப்பாவிடம் சிலாகித்துக் கொண்டிருந்தேன். “பின்னிட்டான் பின்னி… பிரமாதம்” என்று வெகுவாக ரசித்தார்கள் அப்பா.  ‘என்ன ஒரு அழகான கவலையில்லாத எளிய வாழ்க்கை? நாம ஏன் அப்படி இல்ல?’ என்றெல்லாம் பினாத்தி கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே சிலாகித்து விட்டேன் போலும். சிரிப்பு – புன்னகை – குறுநகை என்று அப்பாவின் முகம் பரிணாம வளர்ச்சி பெற்றது. இறுதியாக ‘புருவங்களைச் சுருக்கவா? வேண்டாமா?’ என்று மனது நடத்திய பட்டிமன்றத்தின் விளைவாக, “இவளிண்ட போக்கே சரி இல்லையே. ஒருவேளை பையைத் தூக்கிட்டு கிளம்பினாலும் கிளம்பிருவா போலயே” என்னும் வரிகளைப் புருவங்கள் ஏறி இறங்கி முகத்தில் எழுதிவிட்டுச் சென்றன.

                        பொதுவாக ரசனையான கவித்துவமான விஷயங்களை நிதர்சனத்திற்கு உட்படுத்தி நீர்த்துப் போகும் வேலையைச் செய்யக் கூடாது என்று சொல்லாமலேயே சொல்லிக் கொடுத்த அப்பா எனக்காக அதை மீறினார்கள். “நமக்கு அவர்கள் வாழ்க்கை பழக்கமில்லை. அவர்களுக்கு நமது வாழ்க்கைமுறை பழக்கமில்லை. அவ்வளவுதான்”

                        அட போங்கப்பா ! சில நேரங்களில் சரியான பதிலைக் கேட்க மனம் விரும்புவதில்லை.

                        “ஆமா… அவங்க ரெண்டு பேர் பெயர் என்ன?” – அம்மா.

                        உலகிலேயே சிறந்ததொரு வாழ்வியலைக் கொண்டிருக்கும் அவர்களிடம் நான் அதைக் கேட்கவே இல்லை.

                        அட ! பெயரில் என்னங்க இருக்கு?

                        What’s in a name ? That which we call a rose by any other name would smell as sweet.

                        “ஆனா படிச்சு அறிவியல் ரீதியா இவ்ளோ வளர்ச்சி அடஞ்சதாலதான வேற கிரகத்துக்குக் குடி ஏறுற வழியைத் தேடுற அளவுக்கு முன்னேறி இருக்கோம்?” என்று சிலர் கேட்பார்களானால், “வேற கிரகத்துக்குப் போற அளவுக்கு இந்த பூமிய பாழ்படுத்துனது அவங்களா? நாமளா?” என்று முட்டாள்தனமான வளர்ச்சிகளைச் சாடுவதுதான் பதிலாக அமையும். ‘மனிதத்தைக் குலைக்கும் வளர்ச்சியில் உடன்பாடில்லை’ என்பதில் அவர்களுடன் உடன்படுகிறேன். ‘அப்படியென்றால் அவர்கள் அப்படியேதான் இருக்க வேண்டுமா?’ என்று சில முற்போக்கர்கள் கேட்கலாம். மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு ‘அப்படியேதான்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவதே தவறு. ஏதோ அவர்கள் நாகரிகம் அடையாதது போலவும் நாம் நாகரிகர்கள் எனவும் வரித்துக் கொள்வதே மதியீனம்தான். கார்ப்பரேட்டுகளின் பிடியில் சிக்காமல் எவ்விதச் செயற்கைத்தனங்களுக்கும் வளைந்து கொடுக்காமல் வாழும் அந்நனி நாகரிகர்களை அவர்கள் போக்கில் விட்டுவிடலாமே ! அல்லது கிறுக்குத்தனமாக அவர்களை முன்னேற்றுகிறேன் பேர்வழி என்று வலியச் சென்று அவர்கள் கையால் அம்புகளை நெஞ்சில் வாங்கி உயிர் துறக்கும் பேற்றினைப் பெறலாம். கடலைமிட்டாயோ எள்ளுருண்டையோ அல்லாமல் சாக்லேட் கொடுத்ததற்கு அவர்களின் கவணில் இருந்து நான் தப்பிப் பிழைத்ததே அவர்களது கருணையில்தானோ?  இன்னமும் இவர்களது வாழ்க்கை முறையை நமது அற்பமான வாழ்க்கை முறையுடன் ஒப்பிட்டுப் பார்த்து கேள்விகள், சந்தேகங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றை முன் வைக்கும் ஒவ்வொருவரும் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விடக் கடவதாக !

                        இவர்களது இந்தச் சுதந்திரமான நிறைவான வாழ்க்கை மேலும் மொழியும் செய்தி ஒன்று உண்டு. சகமனிதனுக்கு உண்டான மரியாதையைக் கொடுத்தால் போதும். எவனுக்கும் கூழைக்கும்பிடு போட்டு காலை நக்கும் நாயின் வேலையைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதிகார வெறியர்களிடம் அடங்கிப் போய் பயந்து பயந்து சாக வேண்டியதுமில்லை; தான் அதிகாரத்திற்கு வந்த பிறகு அடுத்தவனை அடக்கிச் சாகடிக்க வேண்டியதுமில்லை. தம்மை உணர்ந்த இவர்களுக்குத் தேவைகள் அதிகம் இல்லாத காரணத்தால் சொந்தங்களின் மீது பொறாமை துளிர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. எனவே அடுத்தவரின் சிறு வெற்றியைக் கூட மனதார பெரிதாய்க் கொண்டாடத் தெரிந்தவர்கள். வாழ்க்கையைக் கொண்டாடத் தெரிந்தவர்கள். அந்தக் கொண்டாட்ட மனநிலையில் உலகமே கேளிக்கைகளுக்கான சொர்க்கமாகிப் போனதையும் இயல்பாய், பக்குவமாய்ப் பார்க்கத் தெரிந்தவர்கள்.

                        அவர்கள் மட்டுமே மனிதர்கள்;  பாதம் உள்ள மனிதர்கள்; சிறகு முளைத்த பறவைகள். அவர்களுக்கு நிழல் தரும் தகுதியோ அவர்களது கூட்டைச் சுமக்கும் தகுதியோ கூட நமக்கில்லை. ஏனெனில், நாம் வேர் பிடித்த வெற்று மரக்கூடுகள்.

  • சோம.அழகு
Series Navigationதமிழ் நுட்பம் – Episode 9 – கால் செண்டர்கள் -Call center and Marketing Bots use case Bots use