நம்பலாமா?

Spread the love

 

அமீதாம்மாள்

 

மருத்துவ உலகின்

மாமன்னன் அவர்

ஆராய்ச்சிக்காகவே

ஆயுளைத் தந்தவர்

உலகெங்கும் வாழ்ந்தாலும்

ஜெர்மனியில் வசிக்கிறார்

அங்குதான் வசிக்கிறார்

என்னுடைய மகளும்         

 

எனக்கும் ஒரு முடக்கு நோய்

 

ஊடு கதிர்

ஊடாக் கதிர்

ஒளிக்கதிர்

ஒலிக்கதிர்

ஆய்வுக் கணைகள்

அக்னிப் பிரவேசங்கள் என்று

ஏராள சோதனைகள்-ஆனாலும்

நோய் நோயாகவே

 

அத்தனை ஆய்வையும்

மகளுக்கு அனுப்பினேன்

அந்த மருத்துவரிடம் காட்ட

 

ஆறேழு நாட்கள்

அத்தனையும் ஆராய்ந்தார்

நோயின் ஆணிவேரை அறுக்கும்

அற்புத மருந்தைத் தந்தார்

 

ஏழுகடல் ஏழுமலை தாண்டும்

சிந்துபாத்போல் பயணித்து

மருந்தோடு வந்தார் மகள்

அந்த ஈரவிழிகளில்தான்

எத்தனை நம்பிக்கை

 

அந்த அற்புத மகளிடம்

‘மருந்தை நம்பலாமா?’ என்று

கேட்பது எவ்வளவு கொடூரம்?

 

ஆண்டு முழுக்க ஆராய்ச்சி செய்து கண்ட

கோவிட்-19 க்கான  ஊசிமருந்தை நம்பலாமாஎன்று

கேட்பவர்களை என்னவென்று சொல்வது

 

Series Navigationகடல் அலை அடிப்பில் மின்சக்தி உற்பத்தி, கடல் நீரைக் குடிநீராய் மாற்றி.வேண்டுதலுக்கு ஓர் இலக்கணம்