நம்பி கவிதைகள் இரண்டு

Spread the love

நம்பி
கராங்குட்டி முகம்
மிகச் சரியாக சிந்திப்பதாக
நீ
என் மீது
அவிழ்த்து எறிகிற குற்றச் சாட்டுக்கள்
தெற்கிலிருந்து மேற்குவரை பரவியது
கொஞ்சமும் வாய் கூசாமல்
ஒரு நல்லவனை
தீயவனாக்கி விட்டாய்
கெட்டவனான
நீ நல்லவனாகி விட்டாய்
எனக்கான எல்லா உணர்வுகளும்
அதன் பேரமைதியும்
மௌனத்தின்
தடித்த கயிறுகளால் கட்டப்பட்டிருக்கிறது
வேறு வேறு வடிவங்களில்
உலவும் நீ
என் அறைமுழுக்க
மெலிந்த நாகத்தின் தனிமையுடன்
அலைகிறாய்
எண்ணற்ற நாகங்கள்
இப்போது
புறந்து கடக்கின்றன
வேடிக்கை பார்க்கும்
நில ஆட்சியாளர்களின்
காவல் நாய்
நீ என்பதும்
உன் அகத்தின் கண்ணாடியில்
பல்வேறு முகங்களை
நெஞ்சு பிளந்து
மறைக்கப்பட்ட பிரதிகளை
அடையாளம் காணுகின்றேன்
உன் காவியுடைக்குள்
எத்தனை கராங்குட்டி முகங்கள்.

காவல் நாய்
மரத்தடியில்
இவன் செய்த தவம்
எதுவென்று இப்போது புரிகின்றது
சமீப தினங்களாய்
காரணம் ஏதுமில்லாமலேயே
அவனை பார்த்து
குரைக்கும் நாய்களின் ஊளையில்
சிரிப்பு வந்து விட்டது எனக்கு
அனுபவத்தின் போதாத தன்மை
உன் எல்லா நடத்தைகளிலும்
அடையாளம் காணமுடிகிறது.
உன் அவசரப் புத்தி
கன்னத்தில் அறை வாங்கும் ஆசை
பொதுமையாய் யோசி
எல்லா எவனும்
நல்லவனாய் இருக்க மாட்டான்
உன்னை கவனித்துக் கொண்டிருக்கும்
எவனோ ஒருவன்
வாள் கொண்டு
கை நிறைய அள்ளிப் பருக முடியும்
ரத்தப் பிரளயம்.

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – சார்லி சாப்ளின்குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 5