நம்மாழ்வாரின் அன்னை அவதரித்த திருத்தலம்

             

                                                         

பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வார் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்னும் பெயராலே வழங்கப்படுகிறார். அவர் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் நான்கு பிரபந்தங்களை அருளிச் செய்துள்ளார். அவை ருக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்கு வேதங்களின் சாரமாக அமைந்துள்ளதால் அவருக்கு ”வேதம் தமிழ் செய்த மாறன்” என்னும் பெயர் வந்தது.

நம்மாழ்வார் திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரியில் வைகாசி விசாக நாளில் அவதரித்தார். அவர் தந்தையார் திருநகரியைச் சேர்ந்த காரி என்பவராவார். நம்மாழ்வாரின் தாயாரின் திருநாமம் உடையநங்கை என்பதாகும். உடையநங்கை திருவண்பரிசாரம் என்னும் திவ்யதேசத்தில் தோன்றினார். இத்தலத்தைத் திருப்பதிசாரம் என்றும் வழங்குவார்கள்.

தற்பொழுது கேரளம் என்று வழங்கப்படும் மலையாள நாட்டில் உள்ள பதின்மூன்று திவ்ய தேசங்களில் திருவண்பரிசாரமும் ஒன்றாகும். நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்திவ்ய தேசம் நாகர்கோவில் நகரத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இந்தத் திவ்யதேசம் பற்றிப் பல புராணங்களில் கூறப்பட்டுள்ளது.. இத்தலத்தின் கோயில்களில் காணப்படும் குறிப்புகளிலிருந்து இது மிகத் தொன்மையானது  என அறிய முடிகிறது.

இங்கு பெருமாளைச் சுற்றிலும் ஏழு ரிஷிகள் அமர்ந்துள்ள கோலத்தை இன்றும் காணலாம். அதற்கு ஒரு புராணக் கதை வழங்கி வருகிறது. முன்பொரு காலத்தில் சப்தரிஷிகள் எழுவரும் திருமாலின் தரிசனம் வேண்டித் சுசீந்திரம் அருகில் ஓர் இடத்தில் தவம் செய்தனர். தற்பொழுது அந்தக் கிராமம் ஆஸ்ரமம்   என்றழைக்கப்படுகிறது. அவர்களின் தவத்தை மெச்சிய திருமால் அவர்களுக்குச் சிவவடிவில் காட்சியளித்தார். ஆனால் ரிஷிகள்  பெருமாளை மஹாவிஷ்ணு ரூபத்திலேயே கண்டு சேவிக்க விரும்பினர்.

எனவே அவர்கள் மீண்டும் சுசீந்திரம் அருகில் உள்ள சோமதீர்த்தம் என்னும் இடத்தில் தவம் புரிந்தனர். அங்கு எம்பெருமான் அவர்களுக்கு மகாவிஷ்ணுவாகக் காட்சியளித்தார். அவர்கள் மகிழ்ந்தனர். சப்த ரிஷிகளும் இத்திவ்ய தேசத்தில் இதே கோலத்திலேயே பெருமாள் காட்சி தர வேண்டும் என வேண்டிக் கொண்டனர். திருமாலும் அதற்கிசைந்தார். அதனாலேயே இங்கு பெருமாளைச் சுற்றிலும் ஏழு ரிஷிகள் சூழ்ந்துள்ளனர்.

இத்திருவண்பரிசாரம் குறித்து வேறொரு கதையும் உண்டு. தசாவதாரங்களில் ஒன்று நரசிம்ம அவதாரம் ஆகும். அந்த அவதாரத்தில் இரணியனை வதம் செய்த பின்னும் திருமாலின் சினம் தணியவில்லை. அதைக் கண்ட திருமகளே அச்சம் கொண்டார். பெருமாள் கோபம் தணிந்து அமைதியாக வேண்டுமென்று அவர் இத்தலத்திற்கு வந்து தவம் செய்தார். பிரகாலாதனின் வேண்டுதலுக்கிணங்க பகவானின் கோபம் தணிந்தது. அவர் அமைதியானார். பின் இலட்சுமிப் பிராட்டியைத் தேடி இங்கு வந்தார்.

பெருமானைக் கொண்டதும் தேவி  மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர் திருமாலின் திருமார்பில் என்றும் அகலாமல், நிரந்தரவாசம் செய்ய எண்ணி அவர்தம் திருமார்பில் அமர்ந்து கொண்டார். பெருமாளும் மகிழ்ந்து ஆசியுடன் ஏற்றுக் கொண்டார். திருவான திருமகள் பெருமாளின் திருமார்பில் நிரந்தரமாக வாழ்வதால் இங்கு மூலவருக்குத் திருவாழ்மார்பன் என்னும் திருநாமம் வழங்கி வருகிறது. மேலும் திருமகளான இலக்குமிபிராட்டி தம் பதியான திருமாலை இந்தத் திவ்ய தேசத்தில் சேர்ந்ததால் இவ்வூருக்குத் திருப்பதிசாரம் என்று பெயர் வந்ததாகவும் கூறுகின்றார்கள்.

இவ்வாறு தாயாரானவர் பெருமாளுடன் அவர் மார்பில் சேர்ந்திருந்து தரிசனம் தருவதால் இத்தலத்தில் தாயாருக்குத் தனியாகச் சன்னதி இல்லை. இத்திருக் கோயிலில் தாயாருக்குத் தனியாக விக்ரகமும் இல்லை.

இங்குள்ள மூலவருக்குத் தனியாக ஒரு சிறப்பு உண்டு. அத்திருஉருவம் மலைதேசத்து மூலிகைகள், கடுகு மற்றும் சருக்கரை ஆகியவை சேர்த்துச் செய்யப்பட்டுள்ளது. ஆதலால் அவருக்குத் திருமஞ்சனம் கிடையாது.            

இத்திருக்கோயிலின்  மூலவருக்கு வலப்புறத்தில் இராம இலக்குவர்கள், சீதாபிராட்டியுடன் இருக்கிறார்கள். அதற்கும் ஒரு புராணக்கதை சொல்லப்படுகிறது. வீடணன், இராமபிரான் பட்டாபிஷேகம் முடிந்து இலங்கை திரும்பும்போது, எடுத்துச் சென்ற பெருமாள் திருவரங்கத்தில் பள்ளிகொண்டு விடுகிறார். பின் வீடணன் இவ்வூர் வழியாக இலங்கை செல்கிறார். ”என்னால் இராமாவதாரத்தை மறக்க முடியவில்லையே” என்று அவர் வேண்ட பெருமாள், இலக்குவ சீதாபிராட்டி சமேதராகக் காட்சி தந்தருளினார் என்று கூறுவர்.

குலசேகரப் பெருமாள் கி.பி எட்டாம் நூற்றாண்டில் இத்திருக்கோயிலைப் புதுப்பித்து, கொடிக்கம்பம் அமைத்து, மதில் வாகனம் போன்றவற்றை அமைத்தார் என்று கூறப்படுகிறது. இங்கு நான்கு கரங்களுடன் சங்கு சக்கரங்களுடன் திருமால் காட்சி அளிக்கிறார். நம்மாழ்வார் மட்டும் ஒரே ஒரு பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ள திவ்ய தேசம் இதுவாகும்.

            ”வருவார் செல்வார் வண்பரி சாரத் திருந்தஎன்

             திருவாழ் மார்வற்கு என்திறம் சொல்லார்; செய்வதென்

            உருவார் சக்கரம் சங்கு சுமந்திங் கும்மோடு

            ஒருபா டுழல்வான் ஓரடி யானும் உளனென்றே”   [8-3-5]

இப்பாசுரத்தில், “எம்பெருமானிடம் அன்பு கொண்ட அடியவர்கள் பலர்  ஆழ்வார் திருநகரியிலிருந்து திருவண்பரிசாரம் செல்கிறார்கள்; அந்தத் திவ்ய தேசத்திலிருந்தும் இங்கு வருகிறார்கள்; இப்படி இந்த இரு திவ்யத் தேசங்களுக்கும் வருவோரும் செல்வோருமாய் இருக்கிறார்கள். ஆனால் அங்கே எழுந்தருளியிருக்கும் எம்பெருமானிடம் என்னைப் பற்றிக் கூட ஒருவருமே இல்லையா? நான் என்ன செய்வேன்? அங்கே அழகான உருக்கொண்ட சக்கரம், மற்றும் சங்கு இவற்றைத் தாங்கிக் கொண்டு தாங்கள் இவ்வுலகைக் காக்கத் திரிகின்ற பொழுது தங்களுடன் பணி செய்ய அடியவன் ஒருவனும் உள்ளேன் என்று என்னைப் பற்றிக் கூற மாட்டார்களோ? நான் என்ன செய்வேன்?” என்று நம்மாழ்வார் கவலைப்படுகிறார்.

 அதாவது கண்டிப்பாய் என்னைப் பற்றி இறைவனுக்கு அடியவர்கள் அறிவிப்பார்கள் அவன் வந்து என்னை ஆட்கொள்வான் என்பது மறைபொருளாகும்.

===================================================================================

Series Navigationதிருட்டு மரணம்புலம் பெயர் மனம்