நறுமுகையும் முத்தரசியும்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 14 of 15 in the series 5 நவம்பர் 2017

கோ. மன்றவாணன்

 

“ஏய் முத்துலட்சுமி… இந்தச் சாக்கடை எத்தன நாளா அடைச்சிக்கிட்டு இருக்கு. சொன்னாத்தான் செய்வீயா?”

“பாக்கலம்மா…”

“என்ன பாக்கலம்மா. இதெல்லாம் நாங்கதான் பாக்கணுமா… நீ பாக்கமாட்டீயா?”

“இல்லம்மா…”

“என்ன இல்லம்மா நொள்ளம்மா. சாக்கடையை ஒழுங்காக் கிளீன்பண்ணு”

“ஒடம்பு முடியலம்மா நாளக்கிச் செய்றேம்மா”

“அதுவரிக்கும் நாத்தம் குடலத்தின்னனுமா. கொசு வேற முட்டப்போட்டு டெங்கு சிக்கன்குனியான்னு நோய் வருதுங்கறாங். இப்பவே செய்யு” என்று கடும்உத்தரவு பிறப்பித்துவிட்டுக் கூடத்துக்குள் போனாள் திலகா.

 

ந்த வீட்டில் முத்துலட்சுமி இரண்டு மூணு வருஷமா வீட்டுவேலை பார்க்கிறாள். வீட்டுவேலை செய்கிற எல்லாப் பெண்களின் கணவன்களைப் போலவே அவளுடைய கணவனும்  வேலை எதற்கும் போகாமல் அவள்கிட்டேய பணம்வாங்கிக் குடிப்பதுதான் தினப்பலன்.

காலை ஆறு மணிக்கெல்லாம் வேலைக்கு வந்துவிட வேண்டும். வாசல் தெளித்துக் கோலம் போட வேண்டும். வீட்டுக்கு முன் வாசல் வழியாக அவள் வரக்கூடாது. பின்வாசல் வழியாகத்தான் வரவேண்டும். முந்தியநாள் பயன்படுத்திய பத்துப்பாத்திரங்களை எல்லாம் கழுவ வேண்டும். பாத்திரத்தில் ஏதாவது ஒட்டி இருந்தால் வீட்டம்மாவின் கடுஞ்சொல் சுடுஞ்சொல் எல்லாம் மனசைப் பாடாய்ப்படுத்தும். “ஏம்மா இப்படி ஏசுறீங்கன்னு” கேட்டால் அந்த நேரமே வேலை போய்விடும்.

மரம் செடி கொடிகளுக்கு எல்லாம் தண்ணீர் ஊற்ற வேண்டும். தினமும் வீடு முழுவதும் பெருக்கி  லைசால் நனைத்த நூல்பஞ்சால் தரைமுழுவதையும் துடைக்க வேண்டும். என்னதான் தரையைச் சுத்தமாகப் பெருக்கித் துடைத்தாலும் “என்ன நறநறன்னுது” என்று கேட்பார் வீட்டய்யா செல்வம். ஞாயிற்றுக்கிழமை என்றால் ஒட்டடை வேறு அடிக்க வேண்டும். வீட்டய்யா டிரைவர் வைத்திருக்கவில்லை. போர்ட்டிகோவில் இருக்கும் அவருடைய பழைய காரையும் அவள்தான் தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும்.

மாதம் 1 ஆம் தேதிதான் அவளுக்கும் சம்பள நாள். எந்த 1ஆம் தேதியிலும் அவள் கைநீட்டிச் சம்பளம் வாங்கியதில்லை. இன்று சம்பளம் தருவாங்க இன்று சம்பளம் தருவாங்கன்னு பல நாள்கள் எதிர்பார்த்துத் தலைசொறிந்து நிற்பாள். வீட்டய்யாவோ வீட்டம்மாவோ அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அவளாகவும் சம்பளம் கேட்க மாட்டாள். “கேட்டா தப்பா நெனச்சுக்குவாங்களோ”ன்னு அவளுக்குப் பயம். ஏழு எட்டுத் தேதியில்தான் சம்பளம் தருவார்கள். சில மாதங்களில் பதினொன்று பன்னிரண்டு தேதிகூட ஆயிடும்.

 

சாக்கடையைச் சுத்தம் செய்துவிட்டு வந்தாள்.

ஓர் உயர் அதிகாரி போன்ற தோரணையில் தோட்டத்துக்கு வந்து ஆய்வு செய்தாள் வீட்டம்மா. “கழிதண்ணி ஏன் வேஸ்டா போவுது. அத வாழமரத்துக்குப் பாய்றமாரி வாய்க்கா பண்ணிவுடு” என்று சொன்னாள். அதையும் செய்தாள்.

வீட்டுக்குப் பின்புற ஜன்னல் விளிம்பில் அவளுக்கென வைத்திருந்த டம்ளரில் காபி ஊற்றிவிட்டு உள்ளே போனாள் வீட்டம்மா.

அங்கேயே குத்துக்காலிட்டு அதைக் குடித்தாள். அதுதான் அவளுக்கு கர்த்தர் இளைப்பாறுதல் தரும் நேரம். கொஞ்சம் காபி ஸ்டிராங்கா இருந்தா தேவலை  என நினைத்தாள்.

இளைப்பாறுதலை முடிவுக்குக் கொண்டுவர உள்ளே இருந்து அழைப்பு வந்தது.

“முத்துலட்சுமி…”

“இதோ வந்துட்டம்மா”

“இந்த டைனிங் டேபிள் கீழே காபி சிந்திடுச்சு. அதைச் சுத்தமா துடைச்சிட்டுப் போ”

இப்போது அவள் நிறைமாத கர்ப்பிணி. பெரிய டைனிங் டேபிள் அது. காபி ஆறாக ஓடி ஒருபுறம் இருந்து மறுபுறம் எட்டிப் பார்த்துக்கிட்டு இருக்கு. அவளால் குனிந்து நிமிருவது சிரமாக இருந்தது. அப்படியே தரையோடு உட்கார்ந்து உள்ளே நுழைந்து துடைத்தாள்.

தானும் ஒரு பெண்ணாக இருந்தும் வீட்டம்மா கர்ப்பிணி என்று அவள் மீது இரக்கப்படவில்லை. எல்லா வேலையையும் வாங்கினாள்.

“முத்துலட்சுமி”

“என்னம்மா… இதோ வந்துட்டம்மா…”

சமையல்கட்டிலிருந்து வந்த வீட்டம்மா, “ஃபிரிஜ்ல தக்காளி இல்ல… இப்பத்தான் பாத்தேன். ரொம்ப அர்ஜெண்ட்.ஓடிப்போய் தெருமுனையில இருக்கற கடையில ஒருகிலோ தக்காளி வாங்கிட்டு வா. சீக்கிரம் வா.

நடக்கவும் முடியாம இருக்கிற அவள் எப்படி ஓடிப்போய் ஓடிவருவாள்?

ஐம்பது ரூபாய்த் தாளை வாங்கிக்கொண்டு பின்வாசல் வழியே வந்து வீட்டைச் சுற்றி வெளியே வரும்போது நாய்க்குச் சோறு வைக்கிற தட்டில் கால்வைத்து விழப்போனவள் நல்ல வேளையாக கேட் கிரிலைப் பிடித்துச் சுதாகரித்துக்கொண்டாள். அப்போது சரிந்த முந்தானையைச் சரிசெய்த படியே கடையை நோக்கி முடிந்தவரை விரைந்தாள்.

 

ந்த வீடே மகிழ்ச்சியில் திளைத்தது. அன்றுதான் லக்னோவில் உள்ள தன் மகளுக்குப் பெண் குழந்தை பிறந்தது எனத் தொலைபேசியில் தகவல் வந்தது. ஆமாம் செல்வம் தாத்தாவாகிவிட்டார். அவர் ஒரு பெரிய எழுத்தாளர். மேடைப் பேச்சாளர். அவரின் கிடுக்கிப்பிடியில் சிக்காத அரசியல்தலைவர்களே இல்லை. தொலைக்காட்சி விவாதங்களிலும் அவர் பங்குபெறுவார்.

செல்வத்திடம் மாப்பிள்ளை பேசினார். “பொண்ணு அனுஷ நட்சத்திரத்துல பொறந்திருக்கா. ந, நி, நு, நே என்ற எழுத்துகளில் தொடங்கும் ஒரு நல்ல பேரைச் சொல்லுங்க மாமா” என்றார்.

ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்ததுபோல் உடனடியாக “நறுமுகை” என்று சொல்லி, அருகிலிருந்த தன்மனைவியைப் பார்த்து குறுநகை செய்தார்.

“டிவி சீரியல்ல பிரியமானவளில் வரும் ஒரு குழந்தையோடப்  பெயர்தான் அது. என்னமோ புதுசா நீங்களே கண்டுபிடிச்சிட்டமாரி கெத்தா பாக்றீங்க” என்று போட்டு உடைத்தாள் அவருடைய மனைவி திலகா.

தனக்குப் பேத்தி பிறந்ததையும் அக்குழந்தைக்கு நறுமுகை எனப் பெயர்சூட்டி இருப்பதையும் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் சேதி பரப்பினார்.

5.5 இஞ்ச் சைசில் இருந்த ஆண்டிராய்ட் போனில் என்ன கமெண்ட்ஸ் வருகிறது எத்தனை லைக் வருகிறது என்பதைப் பேராவலோடு பார்த்துக்கொண்டிருந்தார். இடையிடையே முகநூலில் வாழ்த்துரைத்த அத்தனை பேருக்கும் ஏற்கனவே காப்பி பண்ணித் தயாராக வைத்திருந்த “நெஞ்சினிக்கும் நன்றி” என்பதை பேஸ்ட் பண்ணியபடி இருந்தார்.

நறுமுகை என்று தமிழ்ப்பெயர் வைத்ததற்காகவே நிறைய வாழ்த்துகள் குவிந்தன. பாராட்டியவர்களில் எத்தனை பேருடைய குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர் இருந்திருக்கும் என்று நீங்கள் கேள்வி கேட்டால் என்னிடத்தில் பதில் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் தமிழில் பெயர் வைப்பதே சாதனை ஆகிவிட்டது என்பது மட்டும் புரிகிறது.

சிலர் அவருடைய வீ்ட்டுக்கே அகர்வால் ஸவீட்பாக்ஸோடு வந்து பாராட்டிவிட்டுப் போனார்கள். அப்படி வந்த ஒவ்வொருவருக்கும் கையடக்கத் திருக்குறள் நூலை வழங்கினார். அது அவருடைய வழக்கமும் கூட.

அப்பொழுதுதான் கவனித்தார். அந்தக் கூடத்தில் பொருட்கள் கலைந்திருந்தன. பெருக்காமல் இருந்ததற்கான அடையாளமாகத் தரையில் பழைய பேப்பர்கள் சிதறிக் கிடந்தன.

“எங்க அந்த முத்துலட்சுமி? வீடே குப்பையா கிடக்குது. குழந்தை பிறந்த சேதி கேட்டு நிறைய பேரு வராங்க. அவங்க என்ன நெனப்பாங்க?”

“அவ நேத்திலிருந்து வரலைங்க. சொல்லிட்டும் போவல அந்தக் கழுதை. நானேதான் எல்லா வேலயையும் செஞ்சிக்கிட்டிருக்கேன்.”

“அவ வருவான்னு நா நெனக்கல. வேற ஆளத்தான் பாக்கணும்.”

அப்போது ஜெகதீசன் ஒரு சால்வையைக் கொண்டுவந்து அவருக்குப் போர்த்தினார். “தாத்தாவாயிட்டீங்க பாராட்டுகள்” என்றார்.

“தாத்தா ஆவது கூட ஏதோ ஒரு பெரிய பதவியைப் பிடிச்சிட்ட மாதிரி நெனைக்கிறாங்க. விட்டா தெருவுல ட்யூப் லைட் கட்டி மைக் வச்சு கொடி தோரணம் கட்டி கட்அவுட் செய்து விழாவே நடத்திடுவாங்க போலிருக்கே” என்று உங்களுக்குத் தோன்றலாம்.

“ஜெகதீசன் உங்களால எனக்கொரு வேல ஆகணுமே”

“சொல்லுங்க ஸார். என்ன வேலென்னாலும் செஞ்சிடலாம்”

“இல்ல… நம்ம வீட்ல வேலக்காரி நின்னுட்டா. ஒரு நல்ல வேலக்காரி கிடச்சா நல்லாருக்கும்.”

“அதுக்கென்னங்க…. நம்ம ஆறுமுகங்கிட்ட சொல்லிடுறேன். உடனே ஏற்பாடு பண்ணிடுவான்.”

“வேலக்காரின்னா பிராமணாளா இருந்தா தேவல.”

“வேலக்கி பிராமணாள் யாரும் வரமாட்டாங்கய்யா.”

“தெனமும் பேப்பர்ல வீட்டு வேலைக்குப் பிராமணப்பெண் தேவைன்னு வெளம்பரம் வருதே…”

“வெளம்பரம் வரும். ஆனா பிராமணப்பெண் வரமாட்டாங்க”

“அப்படின்னா பிள்ளைமார் செட்டிமார்ல மட்டும் ஆளப் பாருங்க.”

“நிறைய ஆள் இருக்காங்க ஸார் இதுக்கு ஏன் கவலப்படுறீங்க. நாளக்கியே பாருங்க ஒங்க வீட்ல நீங்க கேட்டமாரியே வேலக்காரி இருப்பா”

 

சொன்னபடியே அடுத்த நாளே அவர் வீட்டுக்கு புதுவேலைக்காரப்பெண் வந்துவிட்டாள். புது துடைப்பம் ஒன்றை எடுத்துக்கொடுத்து வேலையைத் தொடங்கி வைத்தார் வீட்டம்மா திலகா.

பேத்தி பிறந்ததைவிடவும் பேத்திக்கு நறுமுகை என்று பெயர் வைத்ததால் அவருக்குக் குவிந்த பாராட்டுகளில் மகிழ்ந்து தலைகால் புரியாமல் இருக்கிறார் செல்வம்.

இன்றும் அவர் முகநூலில் மூழ்கி இருக்கிறார். பேத்தி நறுமுகை பிறந்ததால் இன்னும் அவருக்கு வாழ்த்து கமெண்டுகளும் லைக்குகளும் தொலைபேசி அழைப்புகளும் வந்தபடியே இருக்கின்றன.

“திலகா இங்க வாயேன். இந்தக் கமெண்ட்ஸ் பாரேன்.”

ராஜன் அனுப்பி இருந்தார்.

“மேடை வேறு வாழ்க்கை வேறு என்றில்லாமல் கொள்கைப் பிடிப்போடு தமிழில் பெயர் வைத்த தங்களைத் தமிழ்த்தாயே நன்றியோடு வாழ்த்துகிறாள்.”

அடுத்து அன்று காலையில் வந்த அவரது கட்சி நாளிதழில் வெளியான விளம்பரத்தையும் காட்டினார். அதில் மைக் முன்னால் கைநீட்டிப் பேசுவது போன்ற செல்வத்தின் படம் பளிச்சென இருந்தது.

நறுமுகை எனப் பேத்திக்குப் பெயர்சூட்டி

நம்தமிழை வாழ வைத்த எங்கள் வழிகாட்டி

செந்தமிழ்க் காவலர்

செல்வம் அவர்களை வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்குகிறோம் என்று கவிதைபோல எழுதி இருந்தார்கள்.

 

அவளும் அதைப் படித்துவிட்டு “இந்தப் புகழ்ப்போதை எப்போதான் தெளியுமோ உங்களுக்கு” என்று சொல்லிவிட்டு உள்ளே போக முனைந்த போது  “அம்மா…” என்று குரல் கேட்டது.

 

வெளியில் வந்து பார்த்தாள்.

முத்துலட்சுமியின் கணவர்தான் வந்திருந்தார்.

வேண்டா வெறுப்பாய் அவரைப் பார்த்து என்ன…” என்று அழுத்திக்  கடுமையாகக் கேட்டாள்.

“முத்துலட்சுமிக்குக் கொழந்த பொறந்திருக்கு. அதான் வேலக்கி வர முடியல. சொல்லிட்டுப் போலாம்ன்னுதான்…”

எந்த எதிர்வினையும் இல்லாமல் இருந்தாள் திலகா.

“கொழந்தைக்கு முத்தரசின்னு பேரு வச்சிருக்கோம்மா. இந்தாங்கம்மா சாக்லெட்டு எடுத்துக்குங்க”

இதைக் கேட்டவாறே வெளியே வந்த செல்வம் காட்டமாகச் சொன்னார்.

“முத்துலட்சுமியை இன்னமே வேலக்கி வரவேணாம்ன்னு சொல்லு. நாங்க வேற ஆள வச்சிக்கிட்டோம். கெளம்பு… கெளம்பு…”

 

Series Navigationமேலான படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *