நாடக விமர்சனம் – தெனாலிராகவன்

 

நகைச்சுவை வரலாற்றில், உடல் மொழி, வசனம், சம்பவம் என பல கூறுகள் உண்டு. அதின் எல்லாக் கூறுகளையும் அலசி, ஒரு நாடகமாக வந்திருக்கிறது சிருஷ்டி நாடகக் குழுவின் புதிய நாடகம் “ தெனாலி ராகவன்”

மூத்த மேடைக் கலைஞர் கரூர் ரங்கராஜனைத் தவிர மேடையில் எல்லோருமே புதுமுகங்கள். நாடக இயக்குனர் பரவலாக அறியப்பட்ட கிரேசி மோகன் குழுவினரின் ‘அப்பா’ ரமேஷ்.

கதை வசனம் எழுதிய சிருஷ்டி பாஸ்கர் மற்றும் நிர்வாகத்தை கவனிக்கும் பிரியா வாசுதேவனின் தலைமையில் இயங்குகிறது இந்த நாடகக் குழு. எல்லோரும் மென்பொருள் விற்’பன்’னர்கள். ஆனால் அடிமனதில் இயங்குவது என்னவோ மென்நகை பொருள் தான் என்பது நாடகத்தினூடே பளிச் என்று தெரிகிறது.

ஒரு நகைச்சுவை நாடகத்திற்கு வலுவான கதை தேவையில்லை. டிரேசிங் காகிதம் அளவு இருந்தால் போதுமானது என்று வலுவாக நம்பிக் கொண்டு, அப்படியே ஒரு கதையைக் கையில் எடுத்திருக்கிறார் பாஸ்கர். அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார். வாழ்த்துக்கள்.

ஒரு புதிய நாடகக் குழுவின் அரங்கேற்றக் காட்சிக்கு, 11.7.2014 அன்று மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கம் நிரம்பியிருந்ததே அவருக்கு உற்சாக டானிக்காக இருந்திருக்கும். இதில் அப்பா ரமேஷின் பொது ஜன தொடர்பும் முக்கிய அங்கம் வகிக்கிறது.

தனவிலாஸ் வங்கியில் குமாஸ்தாவாக பணிபுரியும் ராகவன் ( கார்த்திக்), பதவி உயர்வுக்கு ஏங்குபவன். ஆனால் அவனது முயற்சியெல்லாம் வீணாகிறது. அவனுடைய அப்பா சுப்பிரமணியம் ( கரூர் ரங்கராஜன்) மற்றும் மனைவி சீதாவின் ( ஐஸ்வர்யா) ஏச்சுக்கு நடுவே அவன் தடுமாறுகிறான். அவனது கிளையில் புதிய மேலாளராக பதவி ஏற்கும் ராமானுஜம் ( சிருஷ்டி பாஸ்கர் ) அவனை ஒரு அறிவு ஜீவி ஆகக் காண்கிறார். ராகவனை தெனாலிராமனோடு ஒப்பிட்டு, ‘தெனாலி ராகவன்’ என்றே அழைக்கிறார். ராகவனின் சேட்டைகளால், இந்தியாவே தேடிக்கொண்டிருக்கும் தீவிரவாதிகள் இருவர் பிடிபட, இந்திய பிரதமர் அவனுக்கு இரண்டு கோடி பரிசும், வங்கியின் பொது மேலாளர் என்கிற பதவி உயர்வும் தர, எல்லாம் சுபமே!

நாடகம் முழுவதும் கோட்டிக் கிடக்கின்றன நகைச்சுவை கண்ணி வெடிகள். பார்த்து காதை வைக்காவிட்டால், வெடிச்சிரிப்பு விலகிப் போகும். சமீபத்தில் வந்த திரைப்படங்களில் “சூது கவ்வும்” இம்மாதிரி தொடர் சிரிப்பை வெளிப்படுத்தியது. நாடக உலகில் இந்த நாடகம் அதைக் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறது. பாராட்டுக்கள்.

அனாயசமாக நடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பெறுகிறார் பாஸ்கர். ஒரு கிறுக்கு மேனேஜரை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய அவருக்கு வளமான எதிர்காலம் உண்டு. அடுத்ததாக கதை நாயகன் கார்த்திக்.. நெடிய உயரமும் ஒல்லி உடம்பும் இவரை பாலே டான்ஸ் ஆட வைத்து, பல சுவைகளை அள்ளித் தர வைத்திருக்கிறது. சபாஷ்! போலிச் சாமியாரின் சீடன் கவர்மென்டானந்தாவாக நடித்த கோவிந்தசாமி, ஒரு நல்ல நடிகர். குரலும் கணீர். இரவு காவலாளி கண்ணாயிரமாகவும், வங்கி அதிகாரி வினாயகமூர்த்தியாகவும் இரு வேறு பாத்திரங்களில் வந்த சங்கர், அசத்தல் நடிப்பை அனாயசமாக தந்திருக்கிறார். பலே!

நாடகத்தில் எல்லோரையும் புருவம் உயர்த்த வைத்த விசயம் ராஜசேகரனின் பின்னணி இசை. குளிர் சாதன வசதி இல்லாத திறந்த கதவுகள் உள்ள அரங்கில் இசையின் ஆதிக்கம் அள்ளிக் கொண்டு போனது. நவீன வசதி உள்ள அரங்குகளில் இது இன்னும் பட்டையைக் கிளப்பும். சூப்பர்! ஒரு நாடகத்திற்கு அருமையான டைட்டில் பாட்டு போட்ட தேவநாதன் பார்த்தசாரதியும் பாராட்டுக்குரியவரே!

வரும் காலங்களில் இன்னும் புதிய நாடகங்களை இந்தக் குழு அரங்கேற்ற வேண்டும். அதைக் கேட்டு தமிழ் நாடக ரசிகர்கள் வாய்விட்டு சிரிக்க வேண்டும். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும். நல்ல வேளை நாடகக் குழுவினர் யாரும் டாக்டர்கள் இல்லை. அதனால் அவர்கள் பிழைப்பில் மண் விழாது!

0

Series Navigation