நாதம்

சருகாகி உதிரும் இலைக்கு

மெத்தை விரித்தது பூமி

காற்று அதை கைப்பிடித்து

அழைத்துச் சென்று

உரிய இடத்தில் சேர்த்தது

கிளைகளெல்லாம் இசைக் காருவியாகி

வேர்களின் பாடலை

ஓயாமல் பாடியது

பூக்களின் நறுமணத்தை

முகர்ந்த வண்டுகள்

தேன் குடித்து

ரீங்காரமிட்டுச் சென்றன

மொட்டுகள் இதழ்விரித்து

வானம் ஆடை

உடுத்திக் கொள்ளாததைப்

பார்த்துச் சிரித்தது

அக்கா குருவி கீதம் பாடி

வசந்தகாலத்தை அழைத்தது

திடீரென மழை பெய்து

தேகத்தை நனைத்தது

புல்லாங்குழலின் துளைகள் வழியே

எப்படி புது நாதம் பிறக்குது

மேக ஊர்வலத்தில்

தானும் கலந்து கொள்ள

நதிவெள்ளம் துடித்தது.

 

Series Navigationஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதைசாகச விரல்கள்