நாத்திகர்களும் இஸ்லாமும்.

கடவுள் இல்லை. அல்லாஹ்வும் இல்லை.
முன்னாள் முஸ்லீம்களான நாத்திகர்கள் வெளிப்படையாக பேசத்துவங்கியிருக்கிறார்கள். இருப்பினும், சகிப்புத்தன்மை இன்னும் அரிதாகவே இருக்கிறது.

இந்தோனேஷிய நீதிமன்றம் அலெக்ஸாந்தர் ஆன் Alexander Aan) அவர்களுக்கு “மத வெறுப்பை தூண்டியதற்காக” இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனையை கொடுக்கும் முன்னரே, ஒரு கும்பல் அவரை தாக்கி விட்டது. உலகத்தின் மிகப்பெரிய முஸ்லீம் பெரும்பான்மை நாடான இந்தோனேஷியாவில் உள்ள மினாங் பிரதேசத்தில் உள்ள நாத்திகர்களுக்காக அவர் ஆரம்பித்த முகநூல் குழுமத்தில் (Facebook group) கடவுள் இல்லை என்று எழுதியதுதான் அவரது குற்றம். இஸ்லாமிய பிரதேசங்களில் உள்ள பெரும்பாலானவர்களை போலவே அவரும் முஸ்லீமாகவே வளர்க்கப்பட்டார். தான் நாத்திகன் என்று பகிரங்கமாக சொல்லும் பலரை போலவே அவரும் தண்டிக்கப்பட்டார்.

மிக குறைந்த முஸ்லீம் நாடுகளிலேயே நாத்திகர்கள் பாதுகாப்புடன் வாழமுடியும். அதுவும் வாயைபொத்திகொண்டிருந்தால்தான். துருக்கி, லெபனான் ஆகிய இரண்டு நாடுகளை குறிப்பிடலாம். இந்த இரண்டு நாடுகளிலும் நாத்திகவாதம் ஒரு குற்றம் அல்ல. ஆனால், எந்த நாடும் நாத்திகர்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பும், அங்கீகாரமும் தருவதில்லை. உதாரணமாக இந்தோனேஷியாவில் மக்கள் ஆறு மதங்களில் ஒன்றைச்சார்ந்தவர்களாக அறிவித்துகொள்ளலாம். அவற்றில் நாத்திகவாதமும், அஞ்ஞானவாதமும் சேர்த்தி அல்ல. எகிப்து கொண்டுவர இருக்கும் சட்டத்தில் மூன்று மதங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட இருக்கின்றன. கிறிஸ்துவம், யூதமதம், இஸ்லாம்.

ஷரியா சட்டம், பிள்ளைகள் பெற்றோரின் மதத்தை சார்ந்தவர்களாகவே கருதுகிறது. ஆகவே முஸ்லீம் நாத்திகர்கள் இஸ்லாமிலிருந்து வெளியேறியவர்களாக கருதப்பட்டு கடவுளுக்கு எதிரான குற்றமிழைத்தவர்களாக கருதப்படுகிறார்கள். இதற்கான தண்டனை மிகவும் தீவிரமானது. ஈரான், சவுதி அரேபியா, மௌரிட்டானியா, சூடான் உள்ளிட்ட எட்டு நாடுகளில் இந்த குற்றத்துக்கு மரண தண்டனை என்பது சட்டப்புத்தகங்களிலேயே எழுதப்பட்டுள்ளது.

நடைமுறையில், அப்படிப்பட்ட தண்டனைகள் அரிதாகவே வழங்கப்படுகின்றன. பெரும்பாலான நாத்திகர்கள் மதநிந்தனை என்ற குற்றத்தின் அடிப்படையிலும் வெறுப்பை தூண்டுதல் என்ற குற்றத்தின் அடிப்படையிலும் வழக்குகளில் சிக்க வைக்கப்படுகிறார்கள். (முஸ்லீமல்லாதவர்களுக்கு பிறந்த நாத்திகர்களை “நிராகரித்தவர்கள் apostates” என்று கருதப்படுவதில்லை. இருந்தாலும், அவர்கள் மதத்துக்கு எதிரான மற்ற குற்றங்களின் கீழ் வழக்குகளில் சிக்க வைக்கப்படுகிறார்கள்) சட்டங்கள் கடுமையாக இல்லாத இடங்களிலும், மத குருக்களும், அதிகாரிகளும், சமூக நடைமுறைகளும் கடுமையாகவே இவர்களை எதிர்கொள்கிறார்கள். அதிகாரப்பூர்வமாக இல்லாமல், ஒரு சில மதத்தீவிரவாதிகளும், நாத்திகர்களை அடிப்பதும் தலையை துண்டிப்பதும் நடக்கிறது.

மொராக்கோ நாட்டைச் சேர்ந்த காசெம் எல் -காஸெல்லி என்பவர் தப்பிக்க ஒரே வழி வெளிநாட்டுக்கு தப்பித்து ஓடுவதுதான் என்று கூறுகிறார். இந்த 23 வயது இளைஞர் Atheistica.com என்ற அனாமதேய தளத்தை நடத்தியது இவர்தான் என்று தெரிய வந்ததும், ஸ்விட்சர்லாந்துக்கு தப்பி ஓடினார். முஸ்லீம் பெரும்பான்மை இல்லாத நாடுகளில் கூட முஸ்லீம் நாத்திகர்கள் தைரியமாக வெளியே வந்து கூற அஞ்சுகிறார்கள். நஹ்லா மஹ்மது என்ற 25 வயது சூடானிய நாத்திகர் 2010இல் பிரிட்டனுக்கு தப்பி ஓடினார். “முஸ்லீம் சமூகத்தினர் முன்னாள் முஸ்லீமுடன் பேசுவதை தவிர்க்கிறார்கள்” என்கிறார். மேற்கு நாடுகளில் வாழும் முஸ்லீம் தீவிரவாதிகள் முன்னாள் முஸ்லீம்களை தொந்தரவு செய்கிறார்கள் என்று கூறுகிறார்.

நாத்திகர்களுக்கான முகநூல் குழுமங்கள் எல்லா முஸ்லீம் நாடுகளிலும் அனாமதேயமாக இருக்கின்றன. சமூக வலைத்தளங்கள் முன்னாள் முஸ்லீம்களுக்கு குரலை தந்தாலும், அவர்களை வெளிப்படுத்தவும் உதவிவிடுகின்றன. ஆகையால் இவர்களை பாதுகாப்பில்லாதவர்களாக ஆக்கிவிடுகின்றன. ஆனால், மத சகிப்புத்தன்மை இல்லாமல் இருக்கும் சமூகங்களே இங்கே குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள். 1950களிலும் 1960களிலும் பெரும்பாலான முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் மதச்சார்பின்மையும், சகிப்புத்தன்மையும் பரவலாக இருந்தன. அதே நாடுகளில் இன்று மதம் பொதுவெளியிலும் அரசியல்வெளியிலும் மதம் நீக்கமற நிறைந்துள்ளது. லண்டன் பிர்க்பெக் கல்லூரியை சேர்ந்த சமி ஜுபைதா என்ற ஆய்வாளர்க், “ஒரு புறம் தீவிரமான மத உணர்வும் மறுபுறம் நாத்திகமும் மதசார்பின்மையுமாக” சமூகம் தீவிரமாக பிளவுபட்டுள்ளது என்கிறார்.

அரபு நாடுகளில் நடந்துவரும் புரட்சிகளால் ஆட்சிக்கு வரும் இஸ்லாமிய கட்சிகளால், இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்களின் நிலைமை இன்னும் மோசமாகும். துனிஷியாவிலும், எகிப்திலும் புதிய ஆட்சியாளர்கள், நாத்திகம் பேசிய பல இளைஞர்களை சிறைப்படுத்தியுள்ளார்கள். இந்த புரட்சிகளுக்கு முன்னாலும் இப்படிப்பட்ட நிலைமை இருந்தாலும், இப்போது அதிகரித்துள்ளது. அல்பெர் சபர் அயத் என்ற எகிப்திய கிறிஸ்துவர் நாத்திகர்களுக்கான முகநூல் குழுமத்தை நடத்தியதற்காகவும், “மதத்தை அவமரியாதை செய்ததற்காகவும்” கடந்த செப்டம்பரிலிருந்து சிறையில் இருக்கிறார். இஸ்லாமிய உலகத்தில் கடந்த மாதம் புயலடிக்க வைத்த யூட்யூப் வீடியோவை தனது முகநூல் குழுமத்தில் இணைப்பு கொடுத்ததுதான் அவர் செய்த குற்றம். அவரை கைது செய்தது கிறிஸ்துவ போலீஸ்காரர்களே. எகிப்தின் காப்டிக் கிறிஸ்துவ சர்ச்சும், நாத்திகவாதத்தை கருணையுடன் நோக்குவதில்லை.

நல்ல செய்தி உண்டா?

அரபு கொந்தளிப்புகளும், அதிகரித்துவரும் பகிரங்கமாக வெளிவரும் நாத்திகர்களும் ஓரளவு விவாதத்தை உருவாக்கியுள்ளார்கள். எகிப்தில், காமெடியனும் மருத்துவருமான பாஸம் யூசூப் இவர்களிடம் கடுமையை காட்டுவதை விட விவாதத்தை முன்னெடுக்கலாம் என்று கூறுகிறார். இஸ்லாம் தனது உச்சக்கட்ட அதிகார காலத்தில் விக்கிரகவழிபாட்டாளர்களுடனும் நாத்திகர்களுடனும் இருந்தது என்று எழுதுகிறார். மத்திம காலத்தின் மிகச்சிறந்த அரபிய, பெர்ஷிய கவிஞர்களும், இலக்கண ஆசிரியர்களும் நாத்திகர்களே (இவர்களில் பலர் மரண தண்டனை விதிக்கப்பட்டுகொல்லப்பட்டனர்)

கஸால்லி போன்ற இளம் செயல்வீரர்கள் எந்த கடவுளையும் நம்பாமல் இருப்பதற்கு உரிமை உண்டு என்று உரத்து கூறூகிறார்கள். வெளிநாடுகளில் முன்னாள் முஸ்லீம்களுக்கான அமைப்புகள் மேலும் மேலும் வளர்கின்றன. Council of Ex-Muslims of Britain என்ற அமைப்பு இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதையும், இஸ்லாமை விட்டு வெளியேறுவது ஒரு சாதாரண விஷயமாக்கப்பட வேண்டும் என்பதிலும் செயலாற்றுகிறது.

இஸ்லாமை விட்டு வெளியேறுவதை மரணதண்டனை குற்றமாக்கும் ஒரு சட்டத்தை ஜூன் மாதத்தில் குவாய்த் நாட்டின் அமீர் தடுத்து நிறுத்தியதால், பல நாத்திக செயல்பாட்டாளர்களால் பாராட்டப்படுகிறார். இருப்பினும், இது பிரச்னையின் மூலாதாரத்தை கவனிக்கப்படாமல் போகிறது என்று இபின் வாரக் என்ற புனைபெயர் கொண்டுள்ள எழுத்தாளர் கூறுகிறார். இவர் வெளிநாட்டில் வசிக்கிறார். இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு ஆதரவாக பேசுவதால், கொலைமிரட்டல்களை எதிர்கொண்டு வருகிறார். தற்போதைய இஸ்லாமிய புரிதலின் கீழ் அது முஸ்லீம் நாத்திகர்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று கூறுகிறார். ஒரு ஹதீஸின் அடிப்படையிலேயே நாத்திகர்களுக்கு மரணதண்டனை வாதம் வைக்கப்படுகிறது. “The Prophet said: whoever discards his religion, kill him.”

இருப்பினும், வேறு பல புத்தகங்கள் வேறு செய்திகளை தருகின்றன. குரானின் சகிப்புத்தன்மையை காட்டுவதாக குறிப்பிடப்படும் சுரா 109இல் “உங்களுக்கு உங்கள் மதம், எனக்கு என் மதம்” போன்ற வார்த்தைகள் காணப்படுகின்றன. ஒரு சில சமாதானவாத முஸ்லீம்கள், மதநிந்தனையாளர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று குரான் கூறினாலும், அதற்கு மரணதண்டனையை பரிந்துரைப்பதில்லை என்று கூறுகிறார்கள். ஒருசிலர், இஸ்லாமின் ஆரம்ப காலத்தில் மதநிராகரிப்பு ராஜ துரோகத்துக்கு சமானமாக இருந்தது, அதனால் கடுமையான தண்டனைகளை பரிந்துரைத்தது. ஆகவே அத்தகைய தண்டனைகள் தற்போது சரிப்படாது என்கிறார்கள்.

ஒருசில இஸ்லாமிய சிந்தனையாளர்கள், இஸ்லாமை நிராகரிப்பவர்கள் மறுமையில்தான் தண்டிக்கப்படுவார்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும் என்று கோரினாலும், முன்னாள் முஸ்லீம்கள் மரண தண்டனை கொடுத்து கொல்லப்பட வேண்டும் என்றே பெரும்பாலானவர்கள் பார்க்கிறார்கள். சுன்னி இஸ்லாமிய சட்டத்தின் நான்கு பிரிவுகளிலும் ஆண் நாத்திகர்கள் கொல்லப்பட வேண்டும் என்றே போதிக்கின்றன. இரண்டு பிரிவுகள் பெண் நாத்திகர்கள் சிறைவைக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றன. எகிப்து தலைமை முஃப்டியும், கட்டார் நாட்டு யூசூப் அல் கரளாவி என்பவரும் குற்றம் சாட்டப்பட்ட நாத்திகர் சமூகத்தை கெடுத்தாலோ அல்லது இஸ்லாமை காயப்படுத்தினாலோதான் அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் எல்லோருமே, மனம் வருந்தி திருந்திய நாத்திகர் கொல்லப்படக்கூடாது என்று சொல்கிறார்கள். எவ்வளவு நேரம் இவ்வாறு மனம் திருந்த கொடுக்க வேண்டும் என்பதில் விவாதம் உள்ளது.

ஷரியாவின் படி, நாத்திகவாதமே கொலையை விட முக்கியமான நம்பர் ஒன் குற்றம் என்று இபின் வாரக் கூறுகிறார். நாத்திகவாதத்தை பற்றிய ஒரு மத விவாதம் இன்னும் நடக்கவில்லை. பொதுமக்கள் கருத்துக்கள் வெவ்வேறுவிதமாக உள்ளன. ப்யூ ரிசர்ச் செண்டர் என்ற அமெரிக்க ஆய்வு மையம் எகிப்தில் உள்ள 84 சதவீத முஸ்லீம்கள் நாத்திகருக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்று கூறியதாக கண்டறிந்தது. ஜோர்டன் நாட்டில் 86 சதவீத முஸ்லீம்கள் அவ்வாறு கூறுகிறார்கள். 51 சதவீத நைஜீரிய முஸ்லீம்களும், 30 சதவீத இந்தோனேஷிய முஸ்லீம்களும் அவ்வாறு கூறுகிறார்கள்.

இப்படிப்பட்ட கருத்துக்கள் நாத்திக உணர்வை வளர்ப்பதற்குத்தான் தூண்டுகின்றன. ஓவிய வகுப்பில் அல்லாவின் படத்தை வரைந்ததற்காக (அல்லாவுக்கு படம் வரைவது இஸ்லாமில் தடுக்கப்பட்டது) அவரது ஆரம்ப பள்ளி ஆசிரியர் அவருக்கு தண்டனை கொடுத்ததை மஹ்மூது நினைவு கூர்ந்தார். பரிணாமவியலை கற்றுகொள்வதற்கு தடை இருந்ததாலும், ஆண்களை விட பெண்களுக்கு மிகக்குறைந்த உரிமைகள் இருந்ததாலும், தான் தள்ளி வைக்கப்பட்டதாக உணர்ந்ததாக கூறினார். “இந்த நிகழ்ச்சிகள் என்னை மெதுவாக இஸ்லாமிலிருந்து தள்ளின. ஒரு சமயத்தில் முழுவதுமாக அதனை நிராகரித்து நான் நாத்திகப்பெண்ணானேன்” என்று இவர் கூறினார்.

எகானமிஸ்ட் பக்கம்

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 41 அவள் தந்த பிரிவுப் பரிசு.தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் 70வது சிறப்புப் பட்டிமன்றம் 02 டிசம்பர் 2012 ஞாயிறு மாலை மணி 6.30