நான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும்

Spread the love

பாராளுமன்றம், அரசாங்கம், நீதித்துறை மற்றும் நான்காம் தூணாக ஊடகம் (அல்லது பத்திரிக்கை) இவையே ஜனநாயகத்தின் நான்கு தூண்கள். ஜனநாயகம் என்பது வசதிப் படும் போது மையப் படுத்தப்படும் மலினமான தத்துவம் அல்ல. மற்றவர் உரிமையை மதிக்கும் மாண்பு தனிமனிதனிடத்தும், சமூகம், மற்றும் அமைப்புகளிடத்தும் குறிப்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப் படுவதே அதன் சாராம்சம்.

நான்காவது தூண் எவ்வளவு சந்தர்ப்பவாதமும் மிகுந்தது என்பது கூடங்குளத்தில் அவர்கள் எடுத்த நிலைப்பாட்டைப் பார்த்தாலே புரியும். கூடங்குளம் போராட்டத்
தரப்பு அனைத்துமே சரி என்று எடுத்துக் கொண்டால் மகாபலிபுரம் தொடங்கி திருவான்மியூர் வரை அதைப்போல நூறு மடங்கு ஜனங்கள் நெருக்கி அடித்துக் கொண்டு வாழ்கிறார்களே அவர்கள் பற்றி ஏன் யாருக்குமே வேர்த்து வழியவில்லை? கூடங்குளத்தில் நடப்பது பெரிய இயக்கமாகி வெல்லும் என ஊடகங்கள் எதிர்பார்த்தன. பின்னர் பெரியவர் அப்துல் கலாம் தொடங்கிப் பலரும் ஆதார பூர்வமாக விவாதிக்க முன் வந்ததும் ஊடகங்கள் பின் வாங்கின. இப்போது ஒரேயடியாக உதய குமார் வில்லன் என்பது போலச் சித்தரிக்கின்றன. அறிவியல் பூர்வமான, கடந்த கால விபத்துகள் பற்றிய ஒட்டுமொத்த ஆய்வு ரீதியான அணுகுமுறைக்கு இடம் தர முடியாத கட்டாயங்கள் திரு உதயகுமாருக்கு இருக்கலாம். அதே சமயம் அவரது ஆளுமை சமூகத்தின் எந்த ஒடுக்கப் பட்ட குரலின் பிம்பம் என்பதை உள்வாங்கி அவரைத் தாண்டி மக்களின் மனதில் உள்ள விரக்திக்கும் அவநம்பிகைக்கும் பதில் தேட வேண்டியது அனைவரின் கடமை.

தமிழ் கூறும் நல்லுலகில் உண்மையிலேயே நடுநிலை, சமூக நலன் பற்றி மட்டும் பேசுதல் இவையெல்லாம் சாத்தியமே இல்லை என்பதற்கு கூடங்குளம் ஒரு நல்ல உதாரணம். ஊடகங்களின் பச்சோந்தித் தன்மைக்கும், சந்தர்ப்பவாதத்திற்கும் ஆகச் சிறந்த உதாரணமும் கூடங்குளப் போராட்டத்தில் ஊடகங்கள் எடுத்த நிலைப் பாடுகள்.

கல்பாக்கம் தவிர ட்ராம்பே (மும்பைக்கு அருகில்), ஜைய்தாபுர் (மஹாராஷ்டிரா), (கூடங்குளம் போல முடியும் நிலையில் உள்ளது), கைகா (கர்நாடகா),கக்ராபர் (ஸூரத், குஜராத்),நரோரா (புலந்த் ஷஹர், உத்திரப் பிரதேசம்), ராப்ஸ் (கோடா, ராஜஸ்தான்), தாராபுர் (மஹாராஷ்டிரா) ஆகிய இடங்களில் ஜனநெருக்கடி மிகுந்த பகுதிகளில் உள்ளவர் இந்தியர்களா? அவர்களைப் பாதுக்காக்க யார் போவது? அந்த மின்சாரத்துக்கு மாற்று என்ன?

இந்தக் கேள்விகள் எந்த விதமான பரபரப்புக்கோ அல்லது ருசிகரமான வம்புக்கோ தீனியிடா. அதனாலேயே ஊடகங்கள் இந்தக் கேள்விகளை எழுப்பா. ஆனால் உண்மையிலேயே தம்மைப் பாதிக்கும் எல்லா விவகாரங்களையும் பற்றிய பாரபட்சமற்ற முன்முயற்சியான தகவல்களைத் தருவது ஊடகங்களின் கடமை.

சமூக நலன் பற்றிய அக்கறையுள்ள விஷயங்கள், அவை பற்றிய தரவுகள், ஆரோக்கியமான விவாதங்கள் தமிழ்ச் சூழலில் இணைய தளத்தில் மட்டுமே சாத்தியமாகிறது . அங்கும் கூட எதிர்வினைகள் வழியே தமிழ்ச் சூழல் ஏன் இப்படி இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக உலாவரும் வம்பர்களைக் காண இயலும். ஒரு ஆளுமையை அல்லது கொள்கையைத் தூக்கிப் பிடிக்க என்று மட்டுமே இயங்கும் இணைய தளங்களும் ஏனைய ஊடகங்கள் போன்றே எதிர் மறையான வேலையைத்தான் செய்கின்றன.

கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல், இசை, பண்பாடு, ஆரோக்கியமான விவாதம் இவற்றிற்கான இடம் பத்திரிக்கைகளில் 1% மட்டுமே தேடினால் தென்படும். ஆனால் தொலைக்காட்சிகளில் .01% கூட சாரமான, சத்தான, நுட்பமான விஷயங்களுங்களுக்கு இடமில்லை. எதிர்மறையான, மனித உறவுகளைக் கொச்சைப் படுத்திச் சித்தரிக்கும் கதைத் தொடர்கள், துண்டு சினிமா அல்லது முழு சினிமா காட்டுவது மட்டுமே தமது பணி என்று அவை வணிகம் மட்டுமே செய்து வருகின்றன.

சுய சிந்தனை என்பதும் கேள்வி கேட்பது என்பதும் காலங்காலமாக நமக்கு அன்னியப் படுத்தப்பட்ட ஒன்று. மதம், ஜாதி, அரசியல், மொழி என்னும் அடிப்படைகளில் நாடி நரம்பு முறுக்கேற மட்டுமே பழக்கப் படுத்தப் பட்ட நம் வெகுஜனங்கள் ஊடகங்கள் தமது வாழ்வுக்கு வழி காட்டும் என ஒளிபரப்பு அல்லது அச்சில் வருபவற்றை மரியாதை கொடுத்துப் படிப்பவர்கள். இவரது நல வாழ்வில் அக்கறையற்றோர் நாதியற்ற வெகுஜனத்தின் பையிலுள்ள பணத்தைக் களவாடுவது மட்டுமே தொழிலாய் அலைவதும் அதற்குத் தொழில் நுட்பத்தைத் துணையாய்க் கொண்டதுமே யதார்த்தம்.

Series Navigationமுள்வெளி- அத்தியாயம் -4அது, இது, உது –எது? – இலங்கை யாழ்ப்பாண வழக்கில் உகரச்சுட்டின் பயன்பாடு