முள்வெளி- அத்தியாயம் -4

This entry is part 1 of 44 in the series 15 ஏப்ரல் 2012

“ராஜேந்திரன் ஊருக்குள்ளே இருக்கறப்போ சுமாராத்தான் தகவல் தந்தீங்க. அவரு காணாமப் போன பிறகு உங்களாலே ஒரு தகவலும் தர முடியலியே?” மகேந்திரன் எரிச்சலுடன் கேட்டான்.

“அவரா இஷ்டப்பட்டு எங்கேயோ போயிருக்காரு. அவ்வளவு தான் சொல்ல முடியும்”

“ரொம்ப நல்லாயிருக்கு. உங்களுக்கு வசதியா ஒரு பதிலைச் சொல்லாதீங்க. ராஜேந்திரன் என் சொந்தத் தங்கச்சி புருஷன். வேற பொம்பளைங்க யாருக்கும் அவனுக்கும் தொடர்பு இருக்கான்னாக்க நிச்சயமா சொல்ல முடியலேன்னுட்டீங்க”

“ஸார். ராஜேந்திரன் பிஸினஸ் விஷயமா எத்தனையோ பேரை சந்திக்கிறாங்க. இதுக்கு மேலே எங்களாலே கண்டுபிடிக்க முடியலே”

“அப்புறம் ஏன் டிடெக்டிவ் ஏஜென்ஸி வெக்கறீங்க?” அவரோட ஈமெயிலை “ஹாக்” பண்ணச் சொன்னேனே? செஞ்சீங்களா?”

“ஸார். அவுரு உங்களுக்கு மெயில் அனுப்புற ஐடியை ஓபன் பண்ணினோம். அதுல ரிலேடிவ்ஸை மட்டும் தான் டீல் பண்ணியிருக்காரு. பிஸினெஸ்ஸுக்கோ மத்தபடி பர்ஸனலாகவோ வேற ஐடி வெக்சிருக்கலாம். டிடெயில்ஸ் தெரியல”

“சரி. அவரைக் கண்டுபிடிங்க”

“ஸார், சென்னைக்கு வெளியில அவரு இருக்காருங்கற அளவு தெரியுது. அவருடைய பிரெண்ட்ஸ் கிட்டேயும் விசாரிச்சிக்கிட்டிருக்கோம். கூடிய சீக்கிரம் கண்டு பிடிச்சிடுவோம்.”

“ஹல்லோ ராஜேந்திரன் எப்படி இருக்கீங்க?”

“குட். உங்களைப் பாக்கலாம்னு தோணிச்சு”

‘ஷ்யூர். இன்னிக்கி முழுக்க திருவான்மியூர் பீச் தான் லொகேஷன். வாங்க”

திருவான்மியூர் கடற்கரை மாலை நான்கு மணி முதலே நடைப் பயிற்சி செய்பவர்களால் களை கட்டிக் கொண்டிருந்தது. தான் மட்டும் கேட்கிற மாதிரி சிலர் காதிலிருந்து “ஐ பாட்”டுக்கு ஒயர்களை மாட்டியிருந்தனர். சிலர் மொபைலிலிருந்து ஒயரே இல்லாமல் “ப்ளூ டூத்” தில் பேசியபடி நடந்தனர். சிலர் குட்டிச் சுவரின் மீது அமர்ந்து அகப்பட்டவர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். உதிரியாக மணல் நெடுக ஏகப்பட்டவர் அமர்ந்திருந்தனர். கட்டு மரங்கள், ‘மோட்டர் போட்’டுகள், தூரத்தில் ஒரு கப்பல்.

“ராஜேந்திரன் ஸாரா” வெள்ளை பேன்ட் சட்டை அணிந்த ஒருவன் அழைத்தான். ‘மேடம் ஸ்பாட்டுல இருக்காங்க. வாங்க”.

நடைப் பயணிகளின் குறுகிய சாலையை ஒட்டி அவர்கள் உள்ளே சென்றார்கள். ‘போர்ட்டிகோவில்’ பளீர் வெளிச்சமும் காமிராவும். ஒரு கார் முன்னேயும் பின்னேயும் நகர்ந்து கொண்டிருந்தது. வலது பக்கம் நோக்கிக் கையால் சைகை காட்டினான் வெள்ளை சட்டை. மாடிப் படிகள். முதல் மாடி தாண்டி, இரண்டாம் மாடிப் படி முடிவில் மொட்டை மாடிக் கதவு திறந்திருந்தது. ராஜேந்திரனை விட்டு விட்டு அவன் கீழே இறங்கிச் சென்றான்.

மொட்டை மாடியில் மூன்று நான்கு பிளாஸ்டிக் நாற்காலிகள் வரிசையின்றி இருந்தன. பெரிய தளம். காற்றில் பறக்கும் தலை முடியை ஒதுக்கியபடி லதா யாரோடோ போனில் பேசிக் கொண்டிருந்தாள்.

கூர்மையான சிறிய மூக்கு. அதற்கேற்ற சிறிய மூக்குத்தி. முகத்தில் பரவும் புன்னகை. அதுவே கண்களிலும். மெலிந்த தோற்றம் அவள் வயதை யூகிக்கவே விடாது. எதற்காக என்னைப் பார்க்க வந்தீர்கள் என்றால் எங்கிருந்து தொடங்குவது?

மொட்டைமாடி வாயிலில் நிழலாடியது. லதாவின் உதவியாளர் அவள். ஏற்கனவே லதா வீட்டில் அவளைப் பார்த்திருக்கிறான். அவள் லதாவின் கண் படும் இடத்தில் பேசி முடிக்கும் வரை காத்திருப்பதாக நின்றாள்.

அன்பு நண்பரே, இரண்டு நாட்கள் முன்பு நீங்கள் திருவான்மியூரில் எங்கள் “ஷூட்டிங்க் ஸ்பாட்டு”க்கு வந்திருந்தீர்கள். இங்கிதமாகவோ அல்லது எரிச்சலுற்றோ நீங்கள் எப்போது திரும்பிப் போனீர்கள் என்று கூட கவனிக்க இயலாத வேலைப் பளு. சரி, எனக்கு நினைவிருக்குமளவு உங்கள் கதைகளை நானே கேட்டு வாங்கி, கருத்துக் கூறாதது உங்களை வருத்தப் படுத்தி இருக்கும். ஆனால் நான் முனைவதே இல்லை. இந்த மெயிலைக் கூட சற்று தாமதமாகத்தான் எழுதுகிறேன். உங்கள் கதைகளில் கொஞ்சம் தான் படித்திருக்கிறேன். ‘தாயுமானவள்’ கதையில் எனக்குப் பிடித்த பகுதிகளை நீங்கள் அனுப்பிய ‘யூனி கோட்’ டிலிருந்து கீழே வெட்டி ஒட்டியிருக்கிறேன். வாழ்த்துக்கள்.

இரவு மணி ஒன்று.

சசிகலா படுக்கையை விட்டு எழுந்து குளியலறைக் கதவைத் திறந்து ஆடையை நீக்கி கண்ணாடியில் அடிவயிற்றைப் பார்த்தாள். சற்றே மேடிட்ட மாதிரி இருந்தது. உள்ளே இருப்பது ஆணோ பெண்ணோ என் குழந்தை. கர்ப்பம் தரித்ததாலேயே நான் இப்போது தாய் தான். உள்ளே ஒரு உயிர் வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்த இடத்தை ஆசையாய்த் தடவிக் கொடுத்தாள். விரல்கள் நடுங்கின. உண்மையில் என் விருப்பம் என்ன? ‘மாடல்’ ஆகவும், வரும் நாளில் புகழ் பெற்ற ‘ஃபாஷன் டிஸைனர்’ ஆகவும் உருவாகும் என் லட்சியத்தை ஏன் கைவிட வேண்டும்? இந்த முறை இல்லா விட்டால் மறுபடி கருத்தரித்துக் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதா? நாளை காலை கருவைக் கலைக்க எல்லா ஏற்பாடும் செய்தாகி விட்ட நிலையில் ஏன் இந்த மனப் போராட்டம்?

ஹாலுக்கு வந்து மொபலைக் கையிலெடுத்தாள். கடிகாரத்தைப் பார்த்து விட்டு திரும்ப வைத்தாள். சோபாவில் அமர்ந்து ‘மொபைலையே’ உற்றுப் பார்த்தாள். பிறகு அதை எடுத்து டயல் செய்தாள்.

‘மஞ்சு… திஸ் ஈஸ் சசீ. ஹாவ் ஐ வோகன் அப் யூ? …ஸாரி..’

“கம் மான். சசீ. காலேஜிலேயிருந்து இன்னி வரை நான் எப்போ நைட் ரெண்டு மணிக்கி முன்னே பெட்டுக்குப் போயிருக்கேன்? தென்? பெங்களூர் ஃபாஷன் பேரேடுக்கு செலக்ட் ஆயிட்டியாமே? லல்லி சொன்னா. கன்கிராட்ஸ்.”

“தேங்க்ஸ் மஞ்சு… ஆக்ட்சுவலி நான் அதைப்பத்தித்தான் ஜஸ்ட் உன்னோட கவுன்ஸலிங்க்காக இப்ப போன் பண்னேன்”

“வாட்? கவுன்ஸலிங்க்? என்னை எதுக்கு ஆன்டி ஆக்கறே? நாம ப்ரண்ட்ஸ் … கம் ஆன்”

“ஐயாம் ப்ரெக்னன்ட் மஞ்சு…. ”
மறுமுனையில் பதிலில்லை.
“மஞ்சு ஆர் யூ தேர்?”
“யா… ஜஸ்ட் எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல.. எவ்வளவு மன்த்ஸ் ஆகுது?”
“டென் வீக்ஸ்”
“பட் பெங்களூரு ஃபாஷன் ஷோவுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கே”
“யா.. யூ காட் த பாயிண்ட்”
“என்ன டிஸைட் பண்ணியிருக்கே”
“இன்னும் ஃப்யூ அவர்ஸ்ல அபார்ட் பண்ணலாம்னு”
“கரெக்ட்.. திஸ் கேன் வெயிட்.. யூ வோன்ட் கெட் அனதர் சான்ஸ் லைக் திஸ்.. கோ அஹெட்”
“பட்.. முதல்ல அஸ்வின் ஒத்துக் கிட்டான். இப்பத் தகறாரு பண்ணறான்”
“ஒய்?”
“அவனோட பாரண்ட்ஸ்கிட்டே சொல்லாதேன்னு பிராமிஸ் கேட்டேன். சரின்னான். இப்ப உளறிட்டான். நேத்திக்கி ஒரே தகறாரு. குழந்தை வேணுமாம்.”
“டெல் ஹிம் இட் ஈஸ் மை ப்ரீடம்.. மை லைஃப்.. அன்ட் மை கேரியர்..”
“ஓ கே மஞ்சு.. இப்போ எனக்கே தப்புப் பண்ணறோமோன்னு நடுங்குது” சசி அழத் துவங்கினாள்.
“லுக் சசி.. என்ன வில்லேஜ் கர்ல் மாதிரி அழறே? ஹீ ஈஸ் என் க்ரோசிங் யுவர் டொமேன். கோ அஹெட். இந்த ரப்பிஷ் சென்டிமென்ட்டாலத்தான் நம்ம மம்மியெல்லாம் லைஃபையே தொலைச்சாங்க”
“புரியிது” தொடர்ந்து அழுதாள் சசி.
“முதல்ல அழுகையை நிறுத்து. இட்ஸ் நாட் த பேபி அட் ஸ்டேக். இட்ஸ் யுவர் ஃப்யூசர். அண்ட் யுவர் ட்ரீம்ஸ் சசி.. டோன்ட் பி ஸ்டுபிட்”
“தேங்க்ஸ் .. ஐ வில் கால் யூ லேடர்.. குட் நைட்”
“குட் நைட்”

ஸ்ரீரங்கம் ரயில் நிலைய நடை மேடை நீண்டிருந்தது. தண்டவாளங்களில் சூரிய ஒளி பிரதிபலித்துத் தகதகத்துக் கொண்டிருந்தது.

மிக அருகே உள்ள தண்டவாளத்தின் இரும்பு தனியாகவும் சிறு பிரதிபலிப்புத் தனியாகவும் அடையாளம் காண முடிந்தது. தள்ளிப் போகப் போக தகதகக்கும் வெள்ளி போன்ற ஒளியே தெரிந்தது. காவிரி ரயில் பாலத்துக்கு முன் உள்ள வளைவு தனியே தெரியவில்லை.

ஒளியால் ஒரு பாதையைப் பற்றிக் கொண்டு தன் மீது மேலும் ஒளி ஏற்றிக் கொள்ள இயலும். ஒளியும் ஒளிர்வும் வேறு படும் புள்ளி அது எதைப் பற்றிக் கொண்டது என்பது தான். ராஜேந்திரன் நடை மேடையிலிருந்து தணடவாளத்தில் இறங்கி நின்றான். ஒளிர்வு பன் மடங்காகி மிக அருகிலும் வந்து கண்கள் கூசின. தான் எதிர்கொள்வதை வைத்து ஒளி தன் திசையைத் தீர்மானிக்கிறது. எண்ணற்ற தோற்றங்களில் வடிவில் ஒளி அசலாகவும் பிரதிபலிப்பாகவும் இரண்டின் கலவையாகவும் வெளிப்படுவதில் பெருமிதம் கொள்கிறது. ஒளியை வழி பட்டாலும் இல்லையென்றாலும் அதன் முடிவே இறுதி. இருளின் இருப்பே ஒளி ஒளிந்து கொள்வதில் தான். ஒளிதான் ஒரே ராஜா. எல்லா இடமுமே ஒளியின் ராஜ்ஜியந்தான். சுறுசுறுப்பான உலகத்தை விட்டு ஓரமாக எதுவும் செய்யாமல் உட்காரு என்பவரும் உள்ளொளி என்று தான் பேசுகிறார்கள். என்னுடைய தோற்றம் உன்னுடைய தோற்றம் எல்லாமே ஒளியின் தயவு தான். நானும் நீயும் தோற்றங்களும் மாயை என்றால் அது ஒளியின் பிள்ளை தான். ஒளியின் பிள்ளை மாயை. உதட்டு ஓரச் சிரிப்புடன் மேலே நடந்தான்.

“புடியா அந்த ஆளை ” ரயில்வே போலீஸ் கத்திக் கொண்டே ஓடி வந்தார். ரயில்வே கேட் அருகே இருந்த இரு ஆண்கள் ராஜேந்திரனைப் பாய்ந்து பக்கவாட்டில் இழுத்தார்கள். ஒரு கூட்ஸ் வண்டி விரைந்து மறைந்தது.

“உன் பொண்டாட்டியும் புள்ளே குட்டிகளும் எங்கே இருக்காங்களோ.. யாரோ வெச் ச செய்வென நீ இப்டித் திரியறே.. ரயிலுல அடி பட்டா ஆருப்பா பதில் சொல்லுறது? இருக்கறுதே வெச்சு ஏதேதோ ஆக்கிப் போடுறேன். என்ன சாதி என்ன குலமின்னு பாக்காம ஆரு ஊட்டுல வேணுமின்னாலும் சாப்பிடுறே” செல்லாயி புலம்பினார்.

“வணக்கம் மேடம்” , நடுவயது தாண்டியவர் கை கூப்பினார். கூடவே பத்து வயது மதிக்கத் தக்க பெண் குழந்தை.

“ஐ நோ. ஷி இஸ் வெரி க்யூட் அன்ட் டாலன்டட்” லதா அவளை அணைத்துக் கொண்டாள். “ஸார்.. வீ யார் ஆன் அ யுனீக் ப்ராஜக்ட். ஒரு வித்தியாசமான ஸீரியல் டிவியில வரப் போகுது. ஒவ்வொரு வாரமும் ஒரு தமிழ் க்ளாஸிகல் டைட்டில் ஸாங்க். உங்க டாட்டருக்கு ‘ குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா பாட்டுத் தெரியுமா?”

“செமி ஃபைன்ல்ல அவ வின் பண்ணினதே அந்தப் பாட்டு தான் மேடம். பாடும்மா. ”

“குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றும் இல்லை கோவிந்தா”. உடனே தரையில் அமர்ந்து தாளமிட்டபடி குழ்ந்தை பாடத் துவங்கியது.

பத்து வயதில் எல்லாமே குறையின்றி தான் இருந்தது. அம்மாவை முன்மாதிரியாக எளிதாக ஏற்க முடிந்தது. அப்பாவைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

அப்போது இருந்த பிடிமானங்களில் துணி உடுத்தி மகிழ்வதும் நகை அணிந்து மகிழ்வதும் மட்டுந்தான் இப்போது எஞ்சியது. ‘பார்பி பொம்மைகள்’ காலாவதியாகி விட்டன.

சைக்கிள் ஓட்டியது பெருமிதமாக இருந்தது. தோழிகளுடன் மணிக்கணக்கில் பேச விஷயம் இருந்தது. அம்மா சிறு வயது முதல் சேர்த்து வைத்திருந்த பொருட்கள் எல்லாமே அதிசயமாக இருந்தன. புகைப் படங்களைக் காட்டி குடும்பக் கதையை அம்மாவிடம் கேட்டு லயிக்க இயன்றது.

“ஆர் யூ இம்ப்ரெஸ்ட் மேடம்?” என்றார் குழந்தையின் அப்பா. குழந்தை பாடி முடித்து பவ்யமாய்ப் பார்த்தது.

“பன்டாஸ்டிக்” கைத் தட்டி குழந்தையை எழுப்பி மீண்டும் அணைத்துக் கொண்டாள். “ஐ வில் கால் யூ ஃபார் ஷூட்டிங்க்”

————

Series Navigationநான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *