‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……22 வல்லிக்கண்ணன் – ‘வல்லிக்கண்ணன் கடிதங்கள்’

Spread the love

 

    கதை எழுதுவது எனக்குப் பிடிக்கும். அதைவிட அதிகம் பிடிக்கும் கடிதங்கள் எழுதுவது.

 

    கதை எழுதினால், அது அச்சாக பத்திரிகையைத் தேடவேண்டும். அப்படியே கதை அச்சில் வந்தாலும் அதை எத்தனை பேர் படித்து ரசிப்பார்கள் என்று சொல்வதற்கில்லை.

 

    சில கதைகள் எவராலும் படிக்கப்படாமலே கூடப் போகலாம்.  ஆனால் கடித விஷயம் அப்படி அல்ல. அதைப் பெறுகிறவர் அதைப் படித்தே தீர்வார். அவர் அதில் உள்ள விஷயங்களை ரசித்து மகிழ்கிறாரா, படித்து விட்டு வெறுப்போ கோபமோ அல்லது வேறு ஏதோ உணர்ச்சி கொள்கிறாரா என்பது வேறு விஷயம். எழுதி அனுப்பப்படும் கடித்துக்கு நிச்சயமாக  ஒரு வாசகர் உண்டு. எனவே நான் கடிதங்கள் எழுதுவதில் மிகு விருப்பமும் ஈடுபாடும் கொண்டேன்.

 

    நான் அதிகம் பேசுகிறவன் அல்லன். ஆனாலும் கடிதங்களில்தான் நான் அதிகம் பேசினேன். நான் கண்டது, கேட்டது, படித்தது, படிக்க விரும்பியது, எனது கனவுகள், ஆசைகள், பயணங்கள், எனக்குப் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், என்னைச் சுற்றிலும் நடந்தவை நடந்ததாகப் பிறர் சொன்னவை – இப்படி சகல விஷயங்கள் பற்றியும் நான் என் கடிதங்களில் பேசுவது உண்டு. ஆகவே, என் கடிதங்களை வரப் பெற்றவர்கள் அவற்றை மேலும் எதிர்பார்த்தார்கள்.

 

    நான் என் அண்ணாவுக்கு எழுதினேன். அன்புச் சகோதரர் தி.க.சிவசங்கரனுக்கு நிறைய நிறைய எழுதினேன். நான் வெளி உலகத்தில் திரியத் தொடங்கிய 1943ஆம் வருடம் முதலே இவர்களுக்கு எழுதினேன். பிற நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியதவர்கள், என்னோடு தொடர்பு கொண்டு பல்வேறு தகவல்கள் – விளக்கங்கள் பெற விரும்பியவர்கள் என்று எண்ணற்ற பேர்களுக்குக் கடிதங்கள் எழுதினேன்.

 

    என் கடிதங்கள் தங்களுக்கு உற்சாகம் ஊட்டுகின்றன என்றார்கள். சந்தோஷமும், நம்பிக்கையும், ஆறுதலும் தருகின்றன என்றார்கள். இலக்கியம், புத்தகம், பத்திரிகைகள், எழுத்தாளர்கள், மனிதர்கள் பற்றி சுவையான விஷயங்களைத்  தெரிந்து கொள்ள அவை உதவுகின்றன என்றார்கள்.

 

    என்மீது அன்பு கொண்டு தங்கள் புத்தகங்களையும் சிறு பத்திரிகை களையும், தொடர்ந்து பலரும் அனுப்பலானார்கள். புத்தகங்களைப் படித்து விட்டு என் அபிப்பிராயத்தை அவர்களுக்கு எழுதினேன். பத்திரிகைகளைப் பாராட்டியும் வாழ்த்தியும் எழுதினேன். அவை தங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக அதைப் பெற்றவர்கள சொன்னார்கள்.

 

புத்தகம் – பத்திரிகை அனுப்பினால் வரப்பெற்றேன் என்று கடிதம் எழுதித் தெரிவிக்கக் கூட மனமில்லாத எழுத்தாளர்கள் பெருத்த இந்த நாட்டிலே கிடைத்த்தும் படித்து விட்டு கடிதம் எழுதுகிற என் பண்புக்காக மகிழ்ச்சி அடைந்தவர்கள், கடித வாசகங்களை தங்கள் பத்திரிகைகளிலும் பத்தகங்களிலும் அச்சடித்து மகிழ்ந்தார்கள்.

 

இவன் எல்லோரையும், எல்லாவற்றையும், எப்பவும் பாராட்டிக் கொண்டிருக்கிறான் என்று எழுத்துலகத்தைச் சேர்ந்தவர்கள் பரிகசிக்கலானார்கள்; குறை கூறினார்கள். ஆனாலும், என் கடிதங்களை எதிர்பார்த்து எனக்கு வரும் பத்திரிகைகள், புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன.

 

இச்சிறு தொகுப்பில் உள்ளவை வல்லிக்கண்ணன் கடிதங்களின் சிறிய ‘சாம்பிள்’ தான். பல்வேறு ரசங்களையும், சுவைகளையும், குணாதிசயங்களையும் கொண்ட எண்ணற்ற கடிதங்கள் – தி.க.சிவசங்கரன், ‘முத்தமிழ் கலாவித்வ ரத்ன’ அவ்வை டி.கே.சண்மும், எழுத்தாளர் ஆதவன்(கே.எஸ்.சுந்தரம்), வண்ணதாசன் மற்றும் சில நண்பர்களுக்கு, வெவேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை – கால வெள்ளத்தோடு அடிபட்டுப் போனவைதான்.  ‘இழப்பு’ கணக்கில் எழுதப்பட வேண்டியவை அவை.

 

வல்லிக்கண்ணன்.

 

Series Navigationகாணிக்கைவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -2 மூன்று அங்க நாடகம்