நாய்க்குட்டி

author
5 minutes, 22 seconds Read
This entry is part 9 of 15 in the series 1 ஆகஸ்ட் 2021

 

                             

வேல்விழி மோகன்

 

      அந்த செய்தி வந்தபோது கிச்சான் மாடியில் வியர்க்க.. வியர்க்க உடல் பயிற்சியில் இருந்தான்… கண்ணாடியில் அவ்வபோது வெளியே பார்த்து பூச்செடிகளை தாண்டி பளிச்சென்ற தார் ரோடில் எதிர் வரிசையில் புடவையில் கைகளை கால்களை ஆட்டிக்கொண்டிருக்கும் சுடிதார் பெண்ணின் முதுகுக்கு சற்று கீழே கழுகு கண்களை மேயவிட்டு வியர்வையை துடைத்துக்கொண்டிருந்தான்..

      கதவு தட்டியது.. லேசாக திறந்து உள்ளே எட்டிப்பார்த்து “மாப்ள.. பூசாரின்னு ஒருத்தரு பேசறாரு.. அவசரமாம்..” மொபைலை வாங்கியபோது மாமானார் “இன்னிக்கு லவகுசா போடறான் மாப்ள டிவில.. பெரிசாமி வரு..வா..ரு… படத்த பாக்க” என்று இழுத்தபோது “அவக்கிட்ட சொல்லிடுங்க..” என்று காதில் வைத்து “சொல்லு பூசாரி..” என்றான்..

      “மேடம் வெயிட்டிங்கல இருக்காங்க..”

      “எங்க..?”

      “ஆர்ட்ஸ் காலேஜ் பக்கம்..”

      “சத்தரம் ஹவுஸ்..?”

      “அங்கேதான்.. வேற யாருக்கும் தெரியாது.. வரும்போது பாக்கெட்டல பணம் இருக்கட்டும்.. கார்டு சத்தரத்துல தேய்க்கக்கூடாது.. ஒல்லியாயிடும்.. மேடம் அலங்காரத் தேரு மாதிரி.. பர்ஸூ கூடவே ஒட்டிட்டு போயிடும்..” குரல் நின்றது.. கிச்சான் அவசரமாக அந்த கண்ணாடிக்கருகில் வந்து நின்றான்.. அந்த பெண் அங்கில்லை.. இரண்டு பையன்கள் ஒரு நாயோடு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.. தன்னை வேகமாக சொறிந்துக்கொண்டு “அவளுக்கு முதுகுக்கு கீழ பெரிய கவிதை ..” என்று சொல்லிக்கொண்டு கதவருகே சென்று கதவை திறக்காமல் “கீர்த்தி..கீர்த்தி…”

      “அவங்க தோட்டத்துல இருக்காங்க அய்யா..”

      “மாமனாரு..?”

      “அவரும்.. தண்ணியடிக்காரு செடிக்கு..”

      “பாப்பா..?”

      “தூங்குது.. அந்த நாய்க்குட்டியோட.. “

      “நீ எங்கயிருக்க வேலைக்காரி..?”

      “படியை சுத்தம் பண்ணிட்டிருக்கேன்.. “

      “இங்கேயும் வந்து சுத்தம் பண்ணு..”கதவை திறந்து படியில் ஏறி வரும் அந்த அகலமான கருத்த வியர்த்திருந்தவளை உள்ளே விட்டு “இன்னிக்கு குளிச்சியா.. இல்லையா வேலைக்காரியே..?”

      “எம்பேரு பர்வதம்.. அழகான பேருன்னு எங்கம்மா சொல்லுவாங்க.. எங்க துடைக்கனும்..?”

      “அலமாரிக்கு அடியில.. சேருக்கு பின்னாடி.. அந்த மூளைல.. “ வேடிக்கை பார்த்தவளை பின்னாடி நகர்ந்து ..”அதே கவிதைதான்..ஆனா அதை விட அகலம்”

      “சொல்லுங்க.. வேல நிறைய இருக்கு.. குழந்தை எழுந்திருச்சுன்னா அத வேற கவனிக்கனும்.. அம்மா ஒரு மாதிரி சோம்பலா இருக்காங்க.. நீங்க குளிச்சுட்டு சாப்பிட்டு கெளம்பினா மீன் வறுவல் வரைக்கும் மணி பன்னண்டு.. ஒன்னு ஆயிடும்.. பத்தாத்துக்கு உங்க மாமனார் கூட இன்னொருத்தரு வந்து நல்லாயிருக்கியா பர்வதம்னு ரண்டு நாளைக்கு ஒரு முறை கேட்டு தவறாம பால் குடிச்சுட்டு போயிடறாரு..”

      “பால்..?”

      “சக்கர கலக்காத பால்.. ஏதோ கவிதை.. அது.. இதுன்னு..?”

      “கவிதை எதுக்கு எழுதனும்..? பட்டாம்பூச்சி ஒரு கவிதை.. பாக்கறதை கவிதையா எழுதுப்போது கவிதைல அந்த உணர்வு வராது.. உணர்வுக்கு வேற பேரு இருக்குதா.. அத புடுச்சு வச்சு அடையாளம் காணமுடியுமா..?.. நரம்புகள்ள ஓடும்போது தெரிஞ்சுக்கனும்.. நரம்பு ஒரு அடையாளம்.. “ என்றபோது அவள் கீழே குனிந்து இவன் வெறித்த இடத்தில் ஈரம் பட்டிருப்படை உணர்ந்து கிட்டே நெருங்கி.. “பின்னாடி ஈரமா இருக்குது..”

      அவள் தடவிக்கொண்டு..”பாருங்க.. துடைச்சுட்டேன்..” என்று நிமிர்ந்து பார்த்தாள்.. உருண்டையான முகத்தில் கண்கள் அகலமாக இமைகளில் கருப்பு வழிந்து கன்னங்களில் லேசான அந்த உழைப்பின் வியர்வை பூத்திருப்பதை உணர்ந்து அவள் வெளியே போக முயன்றபோது..”நானும் இனிமே பால் குடிக்கலாமுன்னு இருக்கேன்..”

      “சக்கரை போட்டா.. போடாமலேயா..?”

                                    0000

      கிருஷ்ணன் என்கிற கிச்சான் அந்த சத்தரம் உணவகம் மற்றும் விடுதிக்கு வந்தபோது காரை நிறுத்துமிடத்தில் ஒரு நீலநிற ஆடை மனிதர் ஓடிவந்து அந்த மரத்தை காட்டி கையாட்டினார்.. இவன் நிறுத்துவதற்குள் முன்னாடி வந்து வாயில் விசிலை வைத்து கண்ணாடி வழியே புன்னகைக்க இவன் பின்னாடி கண்ணாடியில் பார்த்து நிறுத்தி அணைத்து இறங்கி தலையை நீவிக்கொண்டான்.. ..

      “சார். சாப்பாடு இருக்கு.. ரூம் இருக்கு..” கைகாட்டி நிறுத்தி ““இந்தா.. இதை வச்சக்கோ..” ஐம்பது ரூபாய் தாளை நீட்டி..”போம்போது தொந்தரவு பண்ணக்கூடாது..”

      “நான் யார்கிட்டேயும் கேட்டதில்லே சார்..”

      “கேக்க தேவையே இல்ல.. “ ஒரு பெட்டியை உருவி மியாவ் சத்தத்தில் கார் கதவுகள் பதில் சொல்ல திரும்பாமல் நடந்து அதே வேகத்தில் மொபைலில் நீவினான்.. “பூசாரி..?”

      “பேரு வரலட்சுமியோ.. அன்னலட்சுமியோ.. உயரமா செவப்பா இருப்பா.. போட்டோ வேணாமுன்னு சொன்னதால அனுப்பலை.. உங்களை பத்தி சொல்லியிருக்கேன்.. சத்தரம்ல இதுக்கெல்லாம் பாஸ் தரமாட்டாங்க.. உங்க பிரச்சன..”

      “நான் லோக்கல்யா.. தெரிஞ்ச முகமெல்லாம் குசலம் விசாரிக்கும்..”

      “அதான் சொன்னேனே.. உங்க பிரச்சன..”

      “நன்றி..” சொல்லிவிட்டு அந்த பூங்கொத்து செடிகள்.. தொட்டிகள்.. வண்ணாத்தி பூச்சி கண்ணாடிக்குடுவை.. இதையெல்லாம் கடந்து அந்த பளபள படிகளில் ஏறி மெதுவான விரிப்புகளில் நடந்து உயரமான மறைப்புக்கு பின்னால் தலை மட்டும் தெரிந்த வெள்ளை உடை பணியாள்..”சார்.. ரூம்..?”

      “ஏசி.. டபுள் பெட்ரூம்.. சன்னல் கதவுங்க பின்னாடி மலைய பாத்த மாதிரி இருக்கனும்.. மூணு மணி நேரத்துக்கு யாரும் சாப்பாட்டு தட்டை தூக்கிட்டு வரக்கூடாது.. கதவ தட்டி குனுஞ்சு வணக்கம் சொல்லக்கூடாது.. பாத்ரூம்ல அந்த பாழாப்போன பாச்ச உருண்ட வாசன வரக்கூடாது.. அப்பறம்.. என்னைய தேடிட்டு சுப்புலட்சுமின்னு.. இல்ல.. இல்ல..அன்னலட்சுமின்னு .. சரியான்னு தெரியல.. ஏதோ ஒரு லச்சுமின்னு ஒரு அம்மா வரும்,, வாசல் வரைக்கும் கூட்டிட்டு வந்து எட்டிப்பாக்காம போயிடனும்.. டிப்ஸ் போம்போது.. பெட்டிய யாரு எடுத்துட்டு வர்றது..?”

      “நீங்க போங்க சார்.. அட்வான்ஸ் ஆயிரம்..;

      “ஒரு நாளைக்கா..?”

      “ஒரு நாளைக்கு மூவாயிரத்து நூறு.. அட்டையா பணமா..?”

      “இப்போதைக்கு பணம்.. “ நூறு ரூபாயை சேத்தி கொடுக்க..”என்ன சார்..?”

      “உங்க சேவைக்கு.. இதுக்கெல்லாம் படிப்பு இருக்கா..?”

      “எதுக்கு சார்..?” என்பதற்குள் அவன் கைக்கு வந்த சாவியை வாங்கிக்கொண்டு “மாடிக்கு போங்க..” என்றான் பெட்டியை தூக்கிக்கொண்டு வந்தவன்..

      திரும்பாமல் “உம் பேரு என்னா?”

      “தீர்த்தகிரி சார்..”

      “தீர்த்தகிரி.. நான் என்ன சொல்றேனோ அதை மட்டும் கேக்கனும்..”

      “சொல்லுங்க சார்..”

      “என்னைய பாத்திருக்கியா..?”

      “இல்லை சார்.. இந்த ஊர் பெருசு.. ஜனத்தொகை  முப்பது லட்சத்துக்கு மேல .. நான் வீடு.. வேலைன்னு சுத்தற எலிக்குஞ்சு சார்..”

      “நல்லது.. ஒரு பொண்ணு வரும்.. இல்ல பொம்பள.. என்னா ரூமு நம்பரு.” சாவியில் பார்த்து..”212.. எந்த மாடி..?”

      “இடது பக்கம் திரும்பி வலது பக்கம் நாலாவது ரூமு சார்..”

      “ஆங்.. என்ன சொன்னேன்.. ம்.. அந்த பொம்பளைய அலுங்காம கூட்டிட்டு வரனும்.. சைட் அடிக்கக்கூடாது.. டிப்சு கெடைக்காது.. எத்தனையாவது படிச்சிருக்கே..?”

      “பதினொன்னு சார். பாதியிலேயே நின்னுட்டேன்..”

      “வெரிகுட்.. ஏன்..?” அந்த அறை பாலிஷ் செய்யப்பட்ட தண்ணீரில் “வாங்க.. வாங்க..” என்கிற அழைப்புக்குரலுடன் நிதானமாக திறந்து உள்ளே நுழையும்போது “சார்.. பொம்பள சமாச்சாரமா..?” என்ற அவனிடம் திரும்பி “எனக்கு கோவத்த வரவழைக்காதே.. நாளைக்கே நான் சென்னை போயாகனும்.. பிசினஸ் சம்பந்தப்பட்டது.. “

      “முதலாளிக்கு புடிக்காது சார்..”

      “எந்த முதலாளி..?”

      “லாட்ஜ் ஓனரு.. ரவிக்குமாரு சார்.. எல்லாருக்கும் தெரியுமே.. ஜெகதேவி பக்கம் சலவைக்கல்லு நோண்டிக்கறேன்னு ஒரு மலையையே காலி பண்ணவரு.. போனமுற சேர்மனுக்கு நின்னு தோத்துப் போனாரு.. அவரு மேல கேசு இருக்குது.. நாலு கொலைய பண்ணியிருக்காருன்னு..”

      கிச்சான் பெட்டியை அந்த படுக்கை மீது போட்டு..”இங்க வா..” என்றான்.. அந்த தீர்த்தகிரி உள்ளே  நுழையும்போது கண்ணாடி ஜன்னல்.. கீழே விரிப்பு.. சுவர்களில் காகித தேதிகள்.. கண்ணாடி அலமாரிகள்.. ஒரு ஸ்டூல்.. இரண்டு சொகுசு சாய்வு நாற்காளிகள் ஆகியவற்றை பார்த்துவிட்டு “பாத்ரூமை திற”

      திறந்தவுடன் கதவை சாத்தி ஒன்னுக்கு போய்விட்டு வாசனைய முகர்ந்து தண்ணீரை பீச்சி வெளியே வந்து.. “இன்னும் நீ போகலையா..?”

      “நீங்கதானே உள்ளாற வரச்சொன்னீங்க.?.”

      “கடைசியா என்ன சொன்ன..?”

      “பொம்பள விழயம்.. முதலாளி.. கேசு.. “ என்பதற்குள் பெட்டியிலிருந்து ஒரு பேனாக்கத்தியை உருவி “போடா..” என்று கத்தினான்.. அவன் “சார்.. வேணாம் சார்..” என்று படபடக்க சட்டென்னு உள்ளே வைத்துவிட்டு சிரித்தபடி “சொன்னத கேக்கனும்.. நான்தான் சொன்னேனில்லையா..?”

      “புரியுது சார்..”

      “அந்த ரண்டு சன்னலையும் திறந்துவிடு.. பாத்ரூம்ல ஒரு பல்லி இருக்குது பாரு.. எடுத்துட்டு போயிடு.. குப்பத்தொட்டில இட்லி வாசனை வருது பாரு.. மாத்திவிடு.. அவ வந்த பிறகு சரியா.. ம்.. இப்ப என்ன மணி.?.. ம்.. பதினொன்னு.. சரியா ஒரு மணிக்கு வந்து கதவ தட்டு.. ஒரு லஸ்ஸியோட..மேல திராட்சை மிதக்கனும்.. ஜில்லுன்னு இருக்கக்கூடாது.. ஒன்னு மட்டும்தான்.. அவளுக்கு இல்லை..”

      “சரிங்க சார்..” என்றபோது பெல் அடித்தது.. அந்த தீர்த்தகிரி வெளியே பார்க்க “இங்கதான் ..” என்று இவன் மொபைலை காதில் வைக்க பள்ளத்திலிருந்து ஒரு குரல் கிளம்பி வாசனையோடு..”நான்  வரலட்சுமி..” என்றது..

                            0000

      பர்வதம் கைகளை முறித்து வெளியில் அந்த மாடிக்கு கீழே செருப்புகளை அணிந்தபோது அகலமான அந்த நகரத்தை விட்டு ஒதுங்கியிருக்கும் கதவுகளை திறக்காத ரோடில் பால் மணி சத்தம் கேட்டது..

      வீட்டு நாய்க்குட்டி “லொள்.. “ என்று மூடின கேட்டுக்குள் இவளிடம் வாலாட்ட பின்னாடியே வந்த அந்த மூன்று வயது குழந்தை இவளிடம்  “பிச்சி.. பிச்சி..” என்றது..

      கீர்த்தி “அது உன்னைய இருக்கச் சொல்லுது..” என்று பின்னாடியே வந்தாள்.. பர்வதம் சிரித்துக்கொண்டு..”அவளுக்கு நான் வேலைக்காரி இல்ல….”

      “கெளம்பாதே பர்வதம்.. கொஞ்சம் இருந்துட்டு போ..”

      “மறுபடியும் நாலு மணிக்கு வரனும்.. வீட்டுக்கு போனா அங்கேயும் வேல இருக்கும்.. “ கிட்டே நெருங்கி..”இங்கபாரு கண்ணு.. நானு போயிட்டு..” எனும்போது அது அழ ஆரம்பித்தது..

      கீர்த்தி கேட் கதவை திறந்தாள்.. வெளியே பச்சை புற்களின் தண்ணீர் பசை காயாமல் நுனியில் தேங்கி வெயிலை சிதறடிக்க.. கிழக்குப் பக்கம் மழை வரலாம் என அறிவிப்பு செய்து நிழலோடு லேசான காற்று புழுதியை பறக்க விட்டது.. வீடுதான் என்றாலும் என்ஜினியரிங் உபயத்தில் நிறம் மாறும் செடிகளை தன் மீது படரவிட்டு பச்சை நிறத்தில் உயர்தர பணக்கார வேழத்தில் சுற்றிலும் வேடிக்கை காட்டியது.. மூங்கில் நாற்காலிகளில் கீர்த்தியும் நாயும் உட்கார்ந்துக்கொள்ள பர்வதம் குழந்தையை பிடித்துக்கொண்டு “இரும்மா வர்றேன்..” என்று முன்னாடி வளைந்து தோட்டத்தில் வரிசையாக இருந்த குட்டை செடிகளை தடவிக்கொண்டே போய் குழந்தையின் முகத்தை பார்த்தாள்.. அது சிரித்தபடி உதட்டோரம் எச்சிலை ஒழுக இவள் துடைத்து அதன் முகத்தை முகர்ந்து அப்படியே முத்தம் கொடுத்து.. நாய் “லொள்..” என்றது..

      “வந்துட்டியா..உனக்கு குழந்தைய விட்டிட்டு இருக்கமுடியாதே..” கீர்த்தியை கவனித்தாள்.. அவள் எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தவள் இவள் கவனிப்பதை கவனித்து புன்னகைத்தாள்..

      இவள் நாய்க்குட்டியை பார்த்து..”அங்க போ.. அம்மா தனியா இருக்காங்க..” என்றபோது அது வேறெங்கோ ஓடி மறைந்து மறுபடி ஓடிவந்து கத்திவிட்டு மறுபடியும் மறைந்தது.. குழந்தை சிரித்து இவளைப் பார்க்க அவள் மறுபடி முத்தமிட்டு பின்வாங்கி கீர்த்தியிடம் போனாள்.. ;நான் கெளம்பறேம்மா.. டைம் ஆகுது..”

      குழந்தையை வாங்கிகொண்ட கீர்த்தி..”நீ இருந்தா ஆறுதலா இருக்கு..”

      “ஏம்மா அப்படி சொல்லறீங்க..?”

      “தெரியல.. “

      “ஒன்டியா இருக்கீங்க இல்லையா.. அதான்.. டிவி பாருங்க.. அப்பாதான் கூட இருக்காரே.. எங்கேயாவது வெளியில போய்ட்டு வாங்க.. பாப்பா இருக்குது.. முன்னாடி பூங்காவுக்கு கூட்டிட்டு போங்க.. “

      “எனக்கு டிவி போதும்,, சீரியல்ல பொம்பளைங்க அடிச்சுக்கறது.. நம்பியார் ரேஞ்சுக்கு கண்ண உருட்டி திட்டம் போடறது.. செயற்கையா சிரிக்கற கணவன். ஒன்னு கவனிச்சியா..? சீரியல்ல வில்லனுங்க எல்லாம் இல்லை.. வில்லிங்கதான்.. அதுவும் அழகா அம்சமா அம்பது வயசுக்கு மேல.. நல்லா உதட்டுக்கு செவப்பு சாயம் பூசிட்டு.. எனக்கு பெரும்பாலும் சிரிப்புதான் வரும்.. அதுக்காகவே பாப்பேன்.. எல்லாம் குப்பைங்க.. அப்படியே தூங்கிடுவேன்..”

      அப்போது அவள் அப்பா அந்த குறுந்தாடி மனிதரோடு உள்ளே நுழைந்தார்.. “வந்துட்டாங்க..” என்ற பர்வதம் அவசரப்பட்டு..”நான் போறேம்மா.. பெரியவரு வேல வச்சிருவாரு.. டீ.. காபின்னு.. டிவி பாக்கும்போது தட்டு நெறைய சிப்ஸ கொட்டிட்டு ரண்டு பேரும் சத்தம் போட்டு பேசிட்டே சாப்புடறாங்க.. பாப்பா சிரிச்சுட்டே இருக்குது இதையெல்லாம் பாத்து.. ஒடம்புக்கு ஏதாவது ஆயிடப்போகுது.. வாரத்துக்கு நாலு முறை வந்து உங்க வீட்டுக்காருக்கிட்ட வழிஞ்சுட்டே தலையை சொறியறாரு.. நூறு.. இருநூறுன்னு வாங்கிட்டு பாப்பாவுக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டு கெளம்பிடறாரு.. என்னம்மா பொழப்பு இது..” என்றபோது கீர்த்தி ஒரு சில நொடிகள் யோசித்து..”எங்கப்பாவும் சீரியல் மனுசன் மாதிரிதான்.. காமெடியா எடுத்துக்க வேண்டியதுதான்.. எங்கம்மா போன போட்டு அங்க அவரு வந்தா சேத்தாதேன்னு சொல்லுவாங்க.. அதை சொன்னா விழுந்து விழுந்து சிரிக்கறாரு.. பாப்பாவுக்கு நல்ல துணை.. அதனாலதான் எதுவும் சொல்றதலை..”

      பாப்பாவிடம் கொஞ்சிய அவள் அப்பா அந்த குறுந்தாடியுடன் தோட்டத்தில் ஏதோ சொல்லி சிரித்து பாப்பாவை வாரியணைப்பது தெரிந்தது.. குறுந்தாடி இவளைப் பார்த்து சிரித்தபோது பர்வதம் கண்டுக்காமல் கீர்த்தியிடம்..”நான் கெளம்பறேம்மா..”

      “குறுந்தாடி உன்னைய பாக்குதுதானே..?”

      வியப்புடன்..”ஆமா..”

      “அப்படியே என் வீட்டுக்காரன் மாதிரியே.. ஆனா பாரு பர்வதம்.. என்னைய விட உன்னைதான் அந்தாளுக்கு புடிச்சிருக்குது..” என்றதும் கிளம்பும் யோசனையில் இருந்த பர்வதம்..”என்னம்மா சொல்லறீங்க..?..” என்று ஒரு நாற்காலியில் உட்கார்ந்தே விட்டாள்..

      “உக்காரு.. உக்காரு.. மனுசிதானே நீ.. பல முறை சொல்லுவேன் உக்காருன்னு.  நின்னுக்கிட்டே இருப்பே.. ஆமா பர்வதம். .கருப்புன்னாலும் அழகு.. வேல செய்யற உடம்பு.. சொதசொதன்னு இல்லாம கை.. காலெல்லாம் தடித்தடியா இருக்கும்போது யாருக்குதான் ஆச வராது.. செவப்பா அலங்காரம் பண்ணிட்டாலும் என் வீட்டுக்காரன் உன்னைத்தானே பாக்கறான்..”

      “அம்மா.. “

      “தெரியாம இல்ல.. தெரிஞ்சாலும் என்ன செய்ய சொல்ற?.. குறுந்தாடி மறுபடியும் உன்னைய பாக்குது..” லேசாக சிரித்த கீர்த்தி.. “அந்தாளு ஏன் நம்மைய பாக்காம உன்னைய பாக்கனமுன்னு நினைப்பேன்.. அப்பா வயசுன்னாலும் அந்த எண்ணம் வரும்.. உன்னைய விட நான் அழகா இல்லையோன்னு தோணும்.. அந்த எண்ணமே தப்புன்னு தெரிஞ்சாலும்.. இதெல்லாம் ஏன் நான் உங்கிட்டே சொல்லறேன்னா உள்ளுக்குள்ள கொதிக்குது எனக்கு.. ஆனா வெளிக்காட்டிக்க மாட்டேன்.. நான் ஏமாத்தப்படறேன்னு தெரிஞ்சு நாமளும் ஏன் அப்படி இருக்கக்கூடாதுன்னு நெனைப்பேன்.. கொழந்த இருக்குது.. ஒரு குடும்ப தலைவி.. குப்பையோட குப்பையா ஆயிடக்கூடாது பாரு.. காலைல அந்தாளு உன்னைய மேல மாடில தடவினான்தானே..?” கேட்டுவிட்டு இயல்பாக இருந்த கீர்த்தியை இயல்பாகவே எதிர்கொண்டாள் பர்வதம்.. தரையில் ஒரு நொடி பார்த்து “ஆமான்னு வச்சுக்கோங்களேன்.. வேலைய விட்டு நிறுத்திடுங்க..”

      “இல்லை.  நீயில்லைன்னா இன்னொருத்தி.. ஒடம்பு பெருசா இருந்தா சேத்திக்குவாரு.. எனக்கு புடவை எடுக்கும்போது இன்னொன்னு சேத்தி எடுப்பாரு.. நீ நல்லவன்னு தெரியும்.. எப்படி முடியுது உன்னால..?.. ஆயிரம் ஆயிரமா கொடுப்பான்.. புடிக்கலைன்னா வெளியே தொரத்திடுவான்.. உனக்கெல்லாம் அள்ளித்தருவான்.. ஏன் விருப்பமில்லை.. ?.. அவனை அலட்சியமா நீ புறக்கணிக்கறது வெளிப்படையாவே தெரியுது.. இன்னும் ஏன் உன்னைய வெளிய அனுப்பாம இருக்கான்னு தெரியல.. நாளைக்கு செய்யலாம்.. வேற பொம்பளைய பாக்கலாம்.. இவ சாப்பாடு கசக்குதுன்னு சொல்லுவான்.. இரு..இரு.. குறுந்தாடி வருது..” என்று சொல்லிவிட்டு அப்பாவை பார்த்து சிரித்து குறுந்தாடியிடம்..”மாமா.. பாப்பா என்ன சொல்லுது..?”

      “அது எங்க பேசுது.. பிச்சு..பிச்சு..ன்னு.. உங்களுக்குதான் தெரியும்.. நாய்க்கு புரியுது.. அது சொன்னா லொள்ளுன்னு எங்கேயோ ஓடுது.. வருது..” பர்வதத்திடம் “கெளம்பியாச்சா..?”

      “உம்..”

      “பர்வதம் ரொம்ப சுறுசுறுப்பு.. உக்கார்றது.. எழறது.. காய் நறுக்கறது.. டீ வக்கறது.. அப்பப்பா.. நாமெல்லாம் ஒன்னுமேயில்ல கீர்த்தியம்மா.. ஒடம்பெல்லாம் வியாதி.. ரண்டு வாய்க்கு மேல சாப்புட முடியறதில்ல.. பத்தடி நடக்க முடியல.. தண்ணி கொடம் தூக்க முடியல..பர்வதம் மாடி ஏறி இறங்குனா சாதாரணமா இருக்கா.. எனக்கு எரைக்குது..” சொல்லிவிட்டு “வாப்பா.. லவகுசா போயிடப்போகுது..” என்று உள்ளே போனார்..

      கீர்த்தி அப்பாவை பார்க்க அவர் “மாப்ளக்கிட்ட சொல்லிட்டேம்மா..இவரு வருவாருன்னு..”

      “பாத்தியா பர்வதம்.. அவரோட பர்மிஷன் இருந்தா போதும்னு சொல்லறாரு..”

      “வரவேணாமுன்னு நீங்க சொல்லுங்க..” என்றதும் பர்வதத்தை முறைத்தபடி உள்ளே போனார்..  கீர்த்தி வியப்பாக பார்த்துவிட்டு “என்னா.. எங்கப்பாவ அப்படி சொல்லற..?”

      “உங்க வீட்டுக்காரை பத்தி அவருக்கு தெரியுமா..?”

      “தெரியாம இருக்குமா..?”

      “தெரிஞ்சு இப்படி இருக்காருன்னா அவரு மனுசனே இல்லன்னு அர்த்தம்.. இப்ப ஏன் என்னைய முறைச்சாருன்னு சொல்லுங்க..?”

      ;அப்படி பேசனதுக்கு..”

      “இல்ல.. சேர்ல உக்காந்துட்டு இருக்கறதுக்கு.. அவரு எப்படின்னா உங்க வீட்டுக்காரு என்னைய தொட்டா ஏத்துக்குவாரு.. ஆனா சேர்ல உக்காந்தா வேலக்காரிக்கு இவ்வளவு திமிரான்னு பாப்பாரு.. எனக்கு பாப்பாவ நினைச்சாதான் கவலையா இருக்கு.. அது வளர வளர புரிய ஆரம்பிக்கும்.. உங்கப்பா மாதிரியா எடுத்துக்கும்.?. கோவம் வரலாம்.. உள்ளுக்குள்ள பாதிக்கலாம்.. உங்களையும் வெறுக்கலாம்.. தனியா போக பாக்கலாம்.. அப்பாவ பத்தி பேச  வெக்கப்படலாம்.. நாமளும் அதே மாதிரி ஆயிடக்கூடாதுன்னு நினைக்கலாம்.. “

      “அப்படி பாத்தா நானும் அப்படி நினைச்சிருக்கலாம் இல்லையா..?”

      “கண்டிப்பா.. “

      “ஆனா  எல்லாம் ஆரம்பத்துலதான்.. அவனை சுத்தி பத்து பேரு இருப்பாங்க.. ரௌடிங்க.. நல்லவங்க.. கெட்டவங்கன்னு கலப்படமா வச்சிருப்பான்.. வாரத்துக்கு மூணு நாளு சென்னை.. பெங்களூருன்னு போவான்.. ரியல் எஸ்டேட் பிசினஸா இருந்தாலும் கையும் பெட்டியும் பயணமுமா இருப்பான்.. எனக்கு எந்த குறையும் வச்சதில்லை.. எது சொன்னாலும் செஞ்சிடுவான்.. அந்த விழயத்துல கூட.. மாசத்துக்கு ரண்டு நாளு பேப்பர்ல வந்துடுவான்.. சாய்பாபா அனாத இல்லத்துக்கு டோனேஷன் தருவான்.. தலைவரு.. செயலாளரு.. இணைத்தலைவரு.. துணைத்தலைவருன்னு பட்டம் வாங்கி வச்சிருக்கான்.. மால போட்டு போட்டோ எடுத்துட்டு அனுப்புவாங்க.. ஞாயித்துக்கிழம  ஆனா அந்த பொம்பள வீட்டுக்கு போயிடுவான்.. நைட்டு தங்கிட்டு மறுநாள்தான் வருவான்.. அவளை கார்ல.. பைக்ல.. கூட்டிட்டு போறத பாத்தவங்க வந்து சொல்லும்போது அழுவேன்.. அப்பறம் பழகிருச்சு.. ஏன் அதே தப்ப நாம செய்யக்கூடாதுன்னு தோணும்.. குழந்தைங்க.. எதிர்காலம்னு சமாதானப்படுத்திக்குவேன்.. அவன் பொறுக்கித்தனம் பண்ணும்போது நாம ஏன் பண்ணக்கூடாது பர்வதம்..?”

      பர்வதம் பேசவில்லை.. குழந்தையை திரும்பிப்பார்த்தாள்.. அது தொட்டத்தில் குதித்துக்கொண்டிருந்தது… நாய்க்குட்டி கீழே படுத்து உருண்டுக் கொண்டிருந்தது.. “நீங்க ஏன் இப்படி நினைக்கக்கூடாது..?” தன்னுடைய உதடுகளை நீவிக்கொண்டு கேட்டாள்..

      “எப்படி?”

      “அந்தாளை வேணாமுன்னு ஒதுக்கலாமே..இல்லன்னா போராடி பாக்கலாமே..”

      “நான் இதுவரைக்கும் அப்படி செய்யலை..”

      “ஏன்..?”

      “தெரியலை.. எனக்கு அந்தாளோட ஸ்டேட்டஸ் புடுச்சுருக்குது.. பத்து போரோட வீட்டுக்கு வந்தா அவங்க எனக்கு தர்ற மரியாத புடுச்சுருக்குது.. பொறுக்கியா இருந்தாலும் நான்தானே பொண்டாட்டி.. ஏதாவது விசேழத்துக்கு போனா கூட்டிட்டு போயி அறிமுகப்படுத்தி அவங்க என்னைய கௌரவிக்கறது புடிக்குது.. லேடிஸ் கிளப்புல என்னைய தலைல தூக்கி வச்சுக்கிட்டு ஆடறாங்க.. நிறைய ரெகமன்டேஷனுக்கு வந்து என்கிட்ட கேப்பாங்க.. அவன் வச்சிருக்கற ஆபிசுக்கு போனா எல்லாரும் எழுந்து நிக்கறாங்க.. மரியாதையா பேசறாங்க.. ஒரு முற மந்திரி பேசறாருன்னு போன கைல கொடுத்து பேச சொன்னாரு.. வெலவெத்து போச்சு..ஏதோ ஒரு சங்கத்துக்கு கூட்டிட்டு போயி பெரிய குஷன் சீட்ல உக்கார வச்சு அவ்வளவு பெரிய ரோசாப்பூ மாலைய போட்டு பெரிய கிப்ட்டோட வழியனுப்பி வச்சாங்க.. மறுநாளு பேப்பர்ல வந்தது.. காரணமெல்லாம் எதுக்கு..?.. எனக்கு பத்து நாளு தூக்கமில்ல.. போன் மேல போனு.. அந்த பேப்பர் கட்டிங்க கிழிச்சு ஆல்பத்துல ஒட்டி வச்சுருக்கேன்.. எனக்கு இதெல்லாம் வாசனையா இருக்குது.. புடிச்ச செண்டு வாசனைய மேல தெளிச்சுக்கிட்டா எப்படி இருக்கும்.. அந்தமாதிரி.  கார்ல போனா அவனோட  எதிர்பார்ப்பா இருக்கும்.. சொல்லமாட்டான்.. ஒரு பெரிய பங்களாவுக்கு கூட்டிக்கிட்டு போயி ஏதோ கம்பெனி பேர சொல்லி அந்த குடும்பத்தோட உக்காந்து சாப்பிடவைப்பான்.. பிரமிப்பா இருக்கும்.. உண்மையிலேயே பணக்காரங்க இப்படித்தானா இருப்பாங்கன்னு.. பளபளன்னு இருக்கும் எல்லாமே.. வேலக்காரங்க.. காருங்க.. சினிமா ஸ்கிரின் மாதிரி டிவிங்க.. உள்ளேயே லிப்டுங்க.. மெத்து மெத்துன்னு சோபாங்க.. அந்த பொம்பளைங்க இருக்காங்க பாரு.. அம்மாடி.. ஒருத்தி கூட்டிட்டு போயி காட்டுனா அவளோட ரூம..  நாலு பீரோ.. பூராவும் வாசனை.. ஜிகினா மாதிரி… குப்பி குப்பியா செண்டுங்க.. செருப்புங்க.. தோடுங்க.. வளையலுங்க.. அதுவும் அந்த பாத்ரூமு இருக்கு பாரு.. படுத்துக்கிட்டு பாட்டு பாடிக்கிட்டே குளிக்…” நிறுத்திவிட்டு.. “போரடிக்கிறனா பர்வதம்..?”

      “உங்களை பத்தி பேசற மாதிரியே இருக்கு..” என்றாள் பர்வதம்..

                            0000

      “என்னடா ஆச்சு..?” வந்து நின்ற தீர்த்தகிரியை பார்த்து கத்தினான் கிச்சான்.. பெட்டியை திறந்து “எடுக்கட்டா பிச்சுவாவ..?” என்று தேடுவதற்குள் வேட்டி கட்டின ஒரு ஆள் உள்ளே வந்தார்.. “நீ போப்பா..” என்று அந்த பையனை அனுப்பியவர் இவனைப் பார்த்து..” அந்த பொம்பளைய அனுப்பிச்சிட்டேன்.. “ என்றபோது இவனுக்கு அடித்த மொபைலை எடுத்து காதில் வைத்ததும். .”பூசாரியா..? நீயெல்லாம் ஒரு மனுசனாய்யா.. கழுத்த புடுச்சு வெளிய தள்ளாதது ஒன்னுதான் பாக்கி.. இனிமே போன் பண்ணினா செருப்பாலேயே அடிப்பேன்..’’ சொல்லிவிட்டு அந்தாளை பார்த்து சிரித்தான்..

      நிமிர்ந்து பார்த்து “இப்பதான் பேண்டை கழட்டலாமுன்னு இருந்தேன்.” என்றவன் “த்சொ..” என்று சலித்துக்கொண்டு பெட்டியை தூக்கினான்.. “ஆயிரத்து நூறு ரூபாய கொடுத்திருக்கேன்.. திருப்பி கொடுத்துருவீங்க இல்ல..?”

      “தாராளமா..”

      “நீதான் ரவிக்குமாரா..?”

      “நீங்க..”

      “ஓ.. நீங்கதான் ரவிக்குமாரா..?”

      “இல்ல.. அவரோட தம்பி.. அவரு மலேசியாவுல இருக்காரு.. எலக்சன் வந்தா வருவாரு. தோத்துட்டு போயிடுவாரு.. அவரோடதுதான் இது.. ஆனா நான்தான் பொறுப்பு.. லைவ்வா அங்க பெட்ல இருந்தே இங்க என்னவெல்லாம் நடக்குதுன்னு பாத்துக்கிட்டு இருப்பாரு.. பாக்கறீங்களா..?” மொபைலை எடுக்க இவன் “ இல்ல வேணாம்.. உங்களை பாத்ததில்லையே.. என்னை தெரியுமா..?”

      “ரியல் எஸ்டேட் பிசினஸ்.. பேரு கதிரேசன்..”

      “இல்ல கிச்சான்..அதாவது கிருஷ்ணன்..”

      “பூங்கா நகர்ல லேட்டஸ்ட் வீடு.. 12 லட்ச ரூபாயில காரு.. கிராமங்கள்ள விவசாயிங்கள ஏமாத்தி அடிமாட்டு வெலைக்கு நெலத்த வாங்கி..”

      “போதும்,, போதும்.. என்னோட வரலாற படிக்காதீங்க.. கண்ணு பட்டுடும்.. அந்த லச்சுமி வந்திருந்தா கவிதை எழுதியிருப்பேன்.. கெடுத்துட்டீங்க.. சத்தரம்னு ஓட்டலுக்கு பேரு வச்சா இப்படித்தான் வருவாங்க.. மாத்திடுங்க.. அதுசரி.. ஜெகதேவி மலைய கொடையறது யாரு..?.. நானு நெலத்த விக்கறேன்.. நீங்க மலைய விக்கறீங்க..ரண்டும் ஒன்னுதான்.. நீங்கெல்லாம் இங்க ரூம்பு போடறதில்லையா..?”

      “போட்டாப் போச்சு..”அந்தாள் கதவுக்கு வெளியே தலைநீட்டி யாரிடமோ பேச…

                                  0000

      கீர்த்தி குழந்தையை படுக்கவைத்துவிட்டு குளித்து உடை மாற்றி அந்த மீன் வறுவலை இன்னொரு முறை ருசி பார்த்துவிட்டு கார் வந்த சத்தம் கேட்டு அப்பாவுக்கு சைகை செய்து டிவியை நிறுத்தி நல்ல பிள்ளையாட்டம் அந்த குறுந்தாடியை வெளியே அனுப்பிவிட்டு சிரித்தபடியே பின்பக்கமாக வந்து காரை நிறுத்திவிட்டு வந்த அவனை வரவேற்கும்போது “அச்சச்சோ.. என்னாங்க கையெல்லாம் வீங்கியிருக்குது.. கன்னத்துல ஒரு பக்கம் அதென்னங்க அங்கேயும் வீக்கம்.. கீழ விழுந்திட்டீங்களா..?”

      கிச்சான் சட்டென்று..”ஆமா..” என்றான்.. ஒரு பக்கம் காலை இழுத்துக்கொண்டு நடக்க..”நிஜமாலுமா..?”

      “ஆமா.. சூடா பால் கெடைக்குமா..?” என்றபோது கன்னத்தை பிடித்துக்கொண்டு “என்னா அடி..” என்றான்..

      “என்னது..?”

      “இல்ல.. கீழ விழுந்ததுல அடிபட்டுருச்சுன்னு சொன்னேனில்லையா.. வெளிய எப்படி தலகாட்டறதுன்னு யோசிக்கறேன்.. இதெல்லாம் கோட்டு சூட்டு போட்டு அடுத்த போட்டோவுக்கு போஸ் கொடுக்கற வரைக்கும்தான்.. “

      “ஒன்னுமே புரியல..”

      “சூடா பால் கேட்டேனே.. அங்கென்ன சத்தம்..?”

      “எங்கப்பா இருக்காரு..”

      “அவர வெளிய அனுப்பிச்சுட்டு பால் கொண்டா.. பர்வதம்..?”

      “போயிட்டா..”

      “அவள மாத்திடலாம்.. சீக்கரம் போயிடறா.. நாய்க்குட்டி அவ கொண்டாந்ததுதானே.. அவக்கிட்டேயே கொடுத்தனுப்பிச்சிடு.. இங்க வா..” அவள் அருகில் வந்தவுடன் திருப்பி ஜாக்கெட்டுக்குள் அந்த பிராவை தள்ளிவிட்டு “ஈரமா இருக்குது.. இப்பதான் குளிச்சியா..?”

      “ஆமா..”

      “அப்படின்னா வா படுத்துக்கலாம்.. குளிச்சுட்டு ஈரமா இருக்கற பொம்பளைக்கிட்ட படுத்தா நரம்புக்கு புத்துணர்ச்சின்னு அறுபத்து நாலு கலைகள்ள சொல்லியிருக்காங்க.. அங்கென்ன மறுபடியும் சத்தம்..?”

      “எங்கப்பன்தான்.. “

      “அந்தாளை வெளியே அனுப்புச்சுட்டு உடனே வா..”

      “பாலு..?”

      “வேணாம்.. மொதல்ல நீ. அப்பறம் பாலு.. “பெட்டியை எங்கேயோ நழுவவிட்டு அந்த தொட்டிலில் இருந்து குழுந்தைக்கு முத்தம் கொடுத்துவிட்டு மாடி ஏற முயன்று வலிக்கு அங்கேயே ஒரு சேரில் உட்கார்ந்து “அந்த லச்சுமிய தொடமுடியாம போயிடுச்சே..” என்றபோது கீர்த்தி முன்னாடி வந்து நின்று “வாங்க போலாம்..”

      “எங்க..?”

      பெட்டுக்கு..”

      “இங்கேதான்.. அங்கங்க படுத்துக்கனும்.. இப்படியே.. இப்படி இருக்கற மாதிரியே.. உன்னோட உதவி தேவை.. இன்னிக்கு எனக்கு அமைதி தேவை.. உரிக்கறது தடவறது எல்லாம் நீதான்.. ஏழு மணிக்கு மேல அந்த தியேட்டர்காரன் வரச்சொல்லியிருக்கான்.. “

      “எதுக்கு..?” என்றவள் அவன் சட்டையை கழட்டி உதடுகளில் புன்னகையை வரவழைத்து ஒரு கையை..

      “இப்பேவா.. இன்னும் கொஞ்சம் தடவின பிறகு.. புது தியேட்டரு அது.. திறப்பு விழாவுக்குதான்.. நீதான் ரிப்பன் வெட்டப்போற.. “ 

      “ஆங்.. உண்மையாவா..?”

      “ஆமா.. அந்த சந்தன கலர் புடவைய கட்டிக்கோ.. போற எடத்துல எல்லாம்.. இரு.. கொஞ்சம் நிதானமா.. போற எடத்துல எல்லாம் உம்மேல கண்ணு  வைக்கிறாங்க.. அழகா இருக்கேன்னு.. யாறாச்சும் உங்கைய புடிச்சுருவாங்களோன்னு பயமா இருக்குது.. உங்கப்பன் போயிட்டானா..?”

      “ம்..ம்.. உம்…”

      “மறக்காம பர்வதத்துக்கு சொல்லிடு.. இதான் கடைசி நாளுன்னு நாளைக்கு சம்பளத்த கழிச்சுடு.. கைல கால்ல விழுந்தா பாத்துக்கலாம்..”

      “அவ கெடக்கறா.. நம்ம வேலைய பாப்போம்..” என்று கீர்த்தி சொன்னபோது  சொன்னமாதிரி ஒரு கட்டையாகவே கிடந்தான் அவன்..

                             0000

      ஒரு சில நொடிகள் கழிந்தது.. கண்களை திறந்து பார்த்தான்.. அவள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.. “ஏன் செல்லம்.. ஏதாவது கப்பு அடிக்குதா..? குளிச்சிட்டு வந்திரட்டா..?”

      “அதில்லை.. ஏதோ சொன்னீங்களே ?”

      “பர்வதம்..?”

      “ஓ.. ஆமா.. என்னை அப்படியே நினைச்சுக்கோங்க..” என்றதும் அவன் புரியாமல் “புரியல..”

      “அதாவது நான்தான் பர்வதம்..” என்றதும் சிரித்து..”பர்வதத்தை உனக்கும் புடிக்குமா..?”

      “உங்களுக்கு..?”

      “அதனாலதானே சொல்ற.. அவளைய கூட்டிக்கிட்டு சிறுவர் பூங்கா போயிட்டு வந்துடலாமா..? அங்க பெரியவங்கதான் இருப்பாங்க.. பொதருக்கு மறைவுல.. அப்படியே நாம மூணு பேரும் ரங்கராட்டனம் சுத்திட்டு வரலாம்.. இப்ப இருவது பர்சண்டுதான் தாண்டியிருக்கேன்.. உலகத்திலேயே கொடுமையானது ஒருத்திக்கு காத்திருந்து மிஸ் ஆகறது.. இன்னொன்னு தொடங்கிட்டு பேச ஆரம்பிக்கறது.. “ அவன் ஒரு கையை அங்கே போட்டு தடவி அவளது முகத்தை இழுத்து கன்னத்தில் நக்கி..”நான் ஒரு நாய்.. அதைய பாத்துதான் நக்கறதுக்கே கத்துக்கிட்டேன்.. உன்னைய பர்வதமா நினைச்சு நூறு முறை படுத்துட்டேன்.. நீ ரொம்ப லேட்டு..உனக்கும் அவளுக்கும் ஆறு வித்தியாசம் சொல்லட்டா.?.. என்ன பாக்கறே..” கொஞ்சம் உடல் வலிக்கு “ஆங்…ங்..” என்று பல்லைக் கடித்தவன்.. “நீ கூட அப்படி இருந்துக்கலாம்.. என்னைய வேற ஒருத்தனா நினைச்சு.. ஒரு ராதாகிருஷ்ணனா.. ஒரு ஜானகிராமனா.. ஒரு சந்தோஷ் குமாரா.. உனக்கு அந்த கோயிந்தசாமி தெரியுமில்ல.?. அதான் போன மாசம் ஒரு கல்யாணத்துக்கு போனப்போ ரோட்டரி கிளப்பு தலைவருன்னு அறிமுகப்படுத்தி வச்சேனே.. அவன்தான்.. நாம்ப கெளம்பற வரைக்கும் உன்னையேதான் பாத்துக்கிட்டிருந்தான்.. பொண்டாட்டிய ஒருத்தன் வளைச்சு வளைச்சு பாத்தா பயம்தானே வரனும்..?.. வரும் சில சமயம்.. அன்னைக்குன்னு பாத்து ஒரே சந்தோசம்.. அவனைய கூப்புட்டு இந்தாடா.. எம்பொண்டாட்டிதானே வேணும்.. கூட்டிட்டு போடான்னு சொல்லனும்னு தோணுச்சு.. நீ கூட அவனைய அப்பப்ப திரும்பி பாத்தே.. கவனிச்சேன்.. அந்த மாதிரி என்னைய ஒரு கோயிந்தசாமியா கூட நினைச்சுக்கலாம்..“ நிறுத்திவிட்டு அவன் மீது இருந்த அவளை ஒதுக்குவது போல புரண்டு அவள் ஒதுங்கியதும் எழுந்து மாடிக்கு திரும்பி பெட்டியை பத்திரமாக பற்றிக்கொண்டு நிதானமாக ஏறினான்..

      வெளியே பகல் இருப்பதை உணர்ந்தான்.. தாடையை தடவிக்கொண்டான்.. அந்த தீர்த்தகிரி நினைவுக்கு வந்தான்..

      “தீர்த்தகிரி.. இந்த வேலையெல்லாம் செய்யாதே.. போயி படி பிளஸ் ஒன்ன மறுபடியும்..” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்..

      அந்த அறையில் அவனுடைய உடல் கட்டுக்கோப்புக்கு தேவையான பொருள்கள் மீது காறித்துப்பிவிட்டு அந்த சன்னலுக்கு அருகில் போய்..”காலைல பாத்த அந்த பொம்பளைய மறுபடியும் காலைல பாக்க முடியுமா..?” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான்..

      கீர்த்தி பின்னாடி வந்து நின்று.. “பர்வதம் சொல்லிட்டு போயிட்டா.. நான் இனிமே வரமாட்டேன்னு.. பணத்தை கணக்கு போட்டு வாங்கிட்டு போயிட்டா..”

      இவன் பேண்ட் ஜிப் கழண்டு இருப்பதை கவனித்து அவளுக்கு நேராக திரும்பி.. “      இது ஏன் தொறந்துகெடக்குது..? உனக்கு என்ன சொன்னேன்.. தொறந்துட்டு பூட்டாம இருந்தா எப்படி..? மனிதாபிமானம் இல்ல உனக்கு..அந்த லச்சுமி கெடைக்கல.. தீர்த்தகிரி வெளிய வரும்போது என்னைய பாத்து சிரிக்கறான்.. நீ பர்வதம் இனிமே வரமாட்டான்னு சொல்லற.. கோயிந்தசாமிய பத்தி பேசறேன்.. இன்னும் இருட்டு வரலை..  குழந்தை நான் வரும்போதெல்லாம் தூங்கிட்டேயிருக்குது.. பதினஞ்சு கிலோ மீட்டரு தாண்டி உங்கப்பன் இங்க வந்து டிவி பாத்துட்டு போறான்.. கூட வர்றவன் பர்வதத்த  பாக்கும்போதெல்லாம் கண்ணால ரேப்பு பண்ணறான்.. அந்த நாய்க்குட்டி.. ஆமா.. அது எங்க.?..” அவளை கிட்டே நெருங்கி “அது எங்க..?”

      “அது பர்வதம் கொண்டுவந்தது.. எடுத்துக்கிட்டு போயிட்டா போகும்போது..”

      “நிஜமாலுமா..?”

      “நாளைக்கு வேற ஒருத்திய பாத்துக்கலாம்.. வேற நாய்க்குட்டிய..கூட வாங்கிக்கலாம் நாமளே..”

      “அப்ப இனிமே அவ வரமாட்டாளா..? “

      “ஆமா.. .”

      “ஏன்..?”

      “அவளுக்கு என்னைய புடிக்கலை.. “

      “ஏன்..?”

      அவள் நிதானித்து “என்னையும் அந்த கோயிந்தசாமியையும் அவ..” என்று இடையில் நிறுத்தி கன்னத்தை ஒரு விரலால் நீவியபடி வேறெங்கோ பார்த்தாள்..

      அவன் கொஞ்ச நேரம் அப்படியே இருந்தான்.. அவனுடைய கண்கள் சுருங்கி விரிந்து உதடுகளில் ஒரு புன்னகையை வரவழைக்க தடுமாறியது.. தானாக ஒரு கை பேண்ட் ஜிப்பை போட்டுக்கொண்டு கால்கள் வேறு பக்கம் நகர்ந்தது..

      இவள் தொடர்ந்தாள்..”அப்ப யாருமில்ல.. எங்கப்பா இல்லை.. குழந்தை தூங்கிருச்சு.. பர்வதம் மீனு வாங்க மார்க்கெட்டுக்கு போயிட்டா.. திடீருன்னு வந்துட்டா.. அப்பதான் நாங்க நீங்க நிக்கற எடத்தலதான்..” நிறுத்திவிட்டு “நான் வேணாமுன்னு சொன்னேன்.. அந்த கோயிந்தசாமிதான் அஞ்சு நிமிசத்துலன்னு சொல்லிட்டு.” அவள் தன்னுடைய புடவையின் ஒரு பக்கத்தை திருப்பி கன்னத்தை துடைத்துக் கொண்டாள்..

      அவனுடைய கால்கள் நின்றது.. திரும்பிப்பார்த்து. “உனக்கு நடிக்க தெரியலை..நீ ரொம்ப நல்லவன்னு பர்வதம் பேசும்போது சொல்றதை கவனிச்சிருக்கேன். நீ என்னைய சோதிக்கறதுக்கு அப்படி பேசற.. என்னைய பர்வதமா நினைச்சுக்கோங்கன்னு சொன்னதுக்கு காரணம் கூட அதுதான்.. ம்.. ஆனா நான்..’ நிறுத்திவிட்டு அவளை உற்றுப்பார்த்து..’’அப்ப அந்த நாய்க்குட்டி போயிடுச்சி.. அப்படித்தானே..?”

      அவள் சோர்வுடன் சன்னல் வழியாக பார்த்தாள்.. அருகிலிருந்த ஏசி பட்டனை தட்டிவிட்டாள்.. கீழே விழுந்திருந்த அந்த பூனை பொம்மையை எடுத்துக்கொண்டு கதவருகே நகர்ந்து தாண்டி படியில் இறங்கும்போது அவன் இருந்த அறையில் ஏதோ கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது.. பிறகு ஏதோ சரியும் சத்தம்.. மறுபடியும் கண்ணாடி சுவரில் தாக்கும் சத்தம்.. நடுவில் அவன் வாயிலிருந்து ஒரு உறுமல்.. சுவரை எட்டி உதைக்கும் சத்தம்..கெட்ட வார்த்தை.. கீழே வந்து குழந்தைக்கு அருகில் அந்த பொம்மையை வைத்துவிட்டு அந்த நீள தாழ்வாரத்தில் நடந்து தோட்டத்துக்கு திரும்புகையில் “குழந்தை தூக்கம் கெடாம இருந்தா சரி.. விடியும்போது என்ன வித்தியாசம் தெரியப்போகுது..? அதேதான்..” என்று தனக்குள் முனகிக்கொண்டாள்.. 

      ஒரு தாழம்பூ செடிக்கு பின்னாடியிருந்து அதனிடத்தில் அரைத்தூக்கத்தில் இருந்த அந்த குட்டி நாய் இவளைப்பார்த்து ..”லொள்..” என்று ஓடி வந்தது..

                             0000

     

     

Series Navigationதியானம்இறுதிப் படியிலிருந்து – காந்தாரி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *