நாவற் பழம்

Spread the love

1960களில்

நாவற்பழம் விற்கும்

பாட்டியின் நங்கூரக் குரலால்

தெருக்கோடி அதிரும்

 

‘நவ்வாப்பழோம்……’

 

உழக்கரிசிக்கு உழக்குப் பழம்

பள்ளிக் கூடத்திலும்

ஒரு தாத்தா

நாவற் களிகளை

கூறு கட்டி விற்பார்

 

செங்காயை

உள்ளங்கைகளில் உருட்டி

கனிந்துவிட்ட தென்று

களித்த காலங்கள் அவை

 

ஒரு நாள் விளையாட்டாய்

விதைத்து வைத்தேன்

ஒரு நாவல் விதையை

இரண்டே மாதத்தில்

இரண்டடி வளர்ந்தது

புதிதாய்ப் பிறக்கும்

பொன்தளிர் கண்டுதான்

என் பொழுதுகள் புலர்ந்தன

இருபது ஆண்டுகளில்

இருபதடி வளர்ந்தது

நானாமூனா என்ற என் வீடு

நவ்வாமர வீடானது

 

ஒரு நாள்

அழுதுகொண்டே

உதித்தது சூரியன்

அன்றுதான்

அன்பைக் கொட்டி

வளர்த்த மரம்

வெட்டி வீழ்த்தப்பட்டது

 

அப்பா சொன்னார்

‘கக்கூஸ் கட்ட

இடம் தேவை’

 

அன்று சாய்ந்தது

மரம் மட்டுமல்ல

என்  மனமும்தான்

 

2000ல்

சென்னையில் வாசம்

கருவிழிகளைக் குவித்ததுபோல்

பழக்கடைகளில்

நாவற் கனிகள்

அடிக்கடி வாங்குவேன்

 

ருசிப்பதற்காக அல்ல

என் இறந்த காலங்களை

சுகிப்பதற்காக

 

2010ல்

சிங்கப்பூரில் வாசம்

சிராங்கூன் சாலையில்

சிண்டாவுக்கு அருகே

புல்வெளி யெல்லாம்

நசுக்கப்பட்ட நாவற் கறைகள்

அன்னாந்து பார்த்தேன்

அட !

ஆல்போல் ஒரு நாவல் மரம்

உடையாத பழங்களை

ஊதி ஊதிச் சேர்த்தேன்

 

ருசிப்பதற்காக அல்ல

என் இறந்த காலங்களை

சுகிப்பதற்காக

அமீதாம்மாள்

Series Navigationமுக்கோணக் கிளிகள் [2]திட்டமிட்டு ஒரு கொலை