நித்ய சைதன்யா – கவிதைகள்

நித்ய சைதன்யா

1.சுயம்

கடும் சினத்தில் கூறிய வார்த்தைகள்

என்னுடையதல்ல

அன்பு மிகுதியால்

உன்னை அணைத்துக் கொள்பவனும்

நானல்ல

இங்கிதம் அற்று

உன்னை

வெறும் அங்கங்களாய் வெறிப்பவன்

சத்தியமாய் யாரோதான்

கூடலின்போது தசைதின்ன விழையும் நா

ஆதாமுடையதாக இருக்கலாம்

குரோதமிகுதியால்

உன் உணவில் நஞ்சிடும்

கரம் எனக்கே அந்நியம்

யாசிக்கும் கைகளுக்கு இடுபவனும்

நான் விரும்பும் ஒருவன்தான்

புரிந்து கொள்

கடல் சுமக்கும் அலைகளல்ல

கடலாழம் என்பது.

 

2.முகம் பார்க்கும் கண்ணாடி

இப்பவும் என் கரமைதுனம்

உன் முன்னால்

நடுப்பக்க இதழில்

புத்தம் புதிதாய் உன் உடலன்றி

விரைப்பதே இல்லை குறி

பதினைந்து ஆண்டுகளாய்

துளி வாடல் இல்லை உன்னழகில்

அனுமதியின்றி

உன்தனங்களை முத்தமிட்ட

என்னை மன்னிக்கவேண்டும்

வேட்கை மிகுதியால்

கனவில் புணர்ந்து

ஸ்கலிதமான காலைகளில்

நன்றிக்குரியவன் ஆனேன்

தீராத்தாகம் தீர்த்த பெருங்கருணை

உன்னுடல்

ஒருபிறவியில் பல்லாயிரம் ஆணுலகில்

பேரழகி நீ

காலநதியில் மிதந்தலைகிறது

உடலெனும் உன் படகு

 

 

Series Navigationபுத்தன் பற்றிய​ கவிதைஆறு கலை – இலக்கிய அரங்குகளில் அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா 2015