நித்ய சைதன்யா – கவிதைகள்

நித்ய சைதன்யா

1.சுடர்

தவித்தலையும் பிரார்த்தனை

யாளிகள் விளிக்கும் பிரகாரத்தில்

நிச்சலனம் கொண்டமர்ந்தது

புறாக்களின் சிறகடிப்பில்

தேங்கிய மௌன நதியில்

கல்லெறி நிகழ்த்திய வளையங்கள்

ஆயிரங்கால் மண்டபத்தில்

ரீங்கரித்தது

சுதைச்சிற்பங்களில் ஒன்று

உதடசைத்த சொல்

குளுமை படிந்த கல்முற்றம்

பசுங்கிளையென்றானது

குழும்பித்திரியும் காகங்களுக்கு

மணிகுலுங்கிய நாதத்தில் பதறி

நின்றெரிகிற தீபச்சுடரில்

சிற்றிடை தேவியின் விசுவரூபம்

கைகூப்பிய என்முன்னால்

கணத்தில் ஒளிர்ந்து மறைந்தது

விழியசைந்த தேவியின் முகம்

 

2.கோட்டை வீடு

அந்த வீடு உண்மையில்

கோட்டை மாதிரி

ஈட்டிகள் பளபளக்கும் இரும்பு கேட்

வாசலில் நிற்பவரை சட்டைசெய்யாது

நான்கு பக்க கல்சுவரின் உச்சியில்

கண்ணாடிச்சில்லுகளின் ஒளிப்படலம்

ஊருக்கே பெருமைசேர்த்த அவ்வீட்டில்தான்

மணமான இரண்டே நாளில்

மாண்டுபோனாள்

பெரிய வீட்டின் மருமகள்

 

 

Series Navigationபொன்னியின் செல்வன் படக்கதை – 12மாறி நுழைந்த அறை