நித்ய சைதன்யா கவிதைகள்

Spread the love

நித்ய சைதன்யா

1.நிசி
இருள் நகர்ந்த நதியில்
விழுந்து கிடந்தது வானம்
விண்மீன்கள் நீந்த
படித்துறையில் தேங்கின
பால்வீதியின் கசடுகள்
நிலாவைத் தின்னத்தவித்த
கெழுத்தி மீனை
பாய்ந்து தாக்கியது எரிகல் ஒன்று
இலைமீதமர்ந்து விட்டில்தேடிய தவளை
ஒளிப்புள்ளிகளை அஞ்சியது
சுடுகாட்டு தகரக்கூரையைத் தீண்டி
துயில் கலையச்செய்தன
நகரும் பெருக்கில் நனையாத நிழல்கள்
கால்கழுவி மேம்பாலம் ஏறி
கருத்த உருவொன்றைக் கண்டவனை
இறுக்கிக்கொண்டது பௌர்ணமி இரவு

2.அகாலம்

நண்பனின் வருகை முடிந்து
டி.வி.பார்த்து
உண்டு கிளம்பும்போதுதான்
கண்டுகொண்டேன்
கைக்கடிகாரமற்ற இடதுகை இருப்பை
புத்தக அலமாரியைத் துழாவி
அலுவலகக் கோப்புகளை பரிசோதித்து
கழிவறைக்குள் சென்று வந்தபின்னும்
சிக்கவில்லை
டி.வி.பெட்டிக்குள் ஒளிந்து
வண்ண வண்ண உருக்கொண்டு
ஒளிர்ந்து அசைந்தது
நீண்ட தேடலுக்குப்பின்
ஆங்காரம் கொண்டு
உருவி எடுத்தேன்
தலைநரைத்து மீசை வெளுத்து
மிகச்சோர்ந்திருந்தது
கண்ணாடியில் என்முகம்

நித்ய சைதன்யா
108 பி வைகைத்தெரு
திருவள்ளுவர் நகர்
விக்கிரமசிங்கபுரம்
7418425626

Series Navigationராஜஸ்தான் முதல் பழனி வரை – மாட்டுக்கறி வன்முறைகவிநுகர் பொழுது-16 கவிஞர் பிருந்தாசாரதியின்,’எண்ணும் எழுத்தும்’, நூலினை முன்வைத்து