நினைப்பு

This entry is part 9 of 29 in the series 18 நவம்பர் 2012

மாநகரத்து மைய்யமாய்ப்பார்த்து அந்த பிரம்மாண்ட மண்டபத்தைத்தான் இயக்கத்துக்காரர்கள் த்தேர்வு செய்திருக்கிறார்கள். அவருக்கு எண்பது வயது நிறைந்தமைக்கு ஒரு விழா ஏற்பாடு.

அவர் என்றால் அது யார் என்று கேட்பீர்கள். நான் பெயர் சொல்வதாயில்லை

அந்த அவர்.தான் அது .

‘ எனக்கு எண்பது நிறைவுக்கு வருகிறது ஒரு விழா எல்லாம் ஏற்பாடு செய்யுங்கள்’ அவரா கேட்டார் என்றால் அதுதான் இல்லவே இல்லை. பின் எதற்கு இந்த விழா.

அவர் சார்ந்திருக்கும் ஒரு இயக்கத்துக்குச் சொந்தக் கட்டிடம் எழுப்பும் ஒரு முயற்சி.. அந்த முயற்சி இன்னும் முடிவுக்கு வராமலே இப்பெரு நகரில் ஆண்டுக்கணக்காய் நொண்டி அடித்துக்கொண்டு இருக்கிறதே. அதனை எப்படி முடிப்பது. ஆகத்தான் வந்தது இப்படியொரு முடிவு,. அவர் பெயரைச்சொல்லிக்கொண்டு மக்களிடையே ஒரு பெரிய வசூல்.

அந்த அயோத்தி ராமனை விட அவன் நாமாதான் சக்தி கூடியது என்கிறார்களே. மெய்யாய் இருக்கலாம். கிடைக்கும் வசூலை அவரின் இயக்கம் பெற்றுக்கொண்டு அந்த இயக்கத்தின் நீண்ட நாள் கனவாய் இருக்கிற சொந்தக் கட்டிடமும் ஒரு வழியாய் நிறைவுக்கு வரலாம் . அதுதான் திட்டம்.

அவர் எழுதிய பாரதியும் சாதிகளும் என்னும் புத்தகம் படித்துத்தான் அவன் அவரைப்பற்றி ஒரு தீர்மானத்துக்குக்கு வந்தான்.. எழுத்தில் எரிமலையை த்தரிசிக்க அவனுக்குக்கிட்டிய ஒரு வாய்ப்பு அது. ஏதேனும் ஒரு தலைப்பு எடுத்துக்கொண்டு அவரே பேசக்கேட்டிருந்தால் உங்களுக்கு த்தெரியும். அத்தனை ஈர்ப்பு. அத்தனை மனோகரம் . கேட்போர்க்குத்தெளிவு க்கொடையாக்கும் ஒரு பூரணம். ஒரு நிறைவு.

பாரதியை அவன் ஒரு பார்ப்பான் ஆக ஒதுக்கி ஒரமாக வைத்துவிட்டு வாழும் சமூகத்தில் வலம் வந்தால் நல்லதொரு மரியாதை. இது தமிழகத்தில் மட்டுமாவது மிக நல்லபடிக்குச் செலாவணி ஆகும் சூத்திரம்..

பார்ப்பனர்கள் பாரதி வாழ்ந்த காலத்திலும் சரி இன்றும் சரி அவரை ஒரு வக்கிரம் பிடித்த மனிதனாய் மட்டுமே பார்ப்பது என்பதனை மனசாட்சியை ப்போணி செய்து விட்டுப்பழகிக்கொண்டுள்ளனர்.

அவன் எழுதுகோல் தெய்வம் எழுத்தும் தெய்வம் என்றான் ஏனோ எழுத்து பாரதியைக்காப்பாற்றவில்லை. ஆனாலும் பாரதி தமிழ் எழுத்தைக்காப்பாற்றினான்.

பாரதிதாசன் மட்டும் இல்லாதுபோயிருந்தால் ரொம்பவும் கஷ்டம். மராட்டிய பீம் ராவு க்கு ஒரு அம்பேத்கார் கடவுளாய்ப்பார்த்து அனுப்பியும் இருக்கலாம் பாரதிக்கும் இப்படி ஒரு தாசன் கடவுள் ஏற்பாடோ என்னவோ .ஜீவா என்கிற ஜீவானந்தம் தமிழ் மண்ணில் பாரதியைத்தலையில் தூக்கிக்கொண்டு சுற்றி ச்சுற்றி வந்து கும்மாளம் போட்ட பொதுவுடைமைக்காரர். தமிழ் மக்கள் காங்கிரசை மறந்தாலும் காமராஜை கக்கனை என்றும் மறப்பது இல்லை. அப்படித்தான் பொதுவுடமை க்கருத்தைப் பிடிக்காதவர்கள் இங்கே எத்தனையோ பேர் எண்ணிக்கையில் இருப்பார்கள். ஆனால் ஜீவாவை ப்பிடிக்காதவர்கள் மாத்திரம் தமிழ் மண்ணில் இல்லை.

இந்தப்படிக்கு எல்லாம் யாரேனும் ச்சிந்திப்பார்களா என அவன் தினம் தினம் ஏங்கித்தவித்தான்.

யாருக்கு எண்பது நிறைவோ அவர் அவ்வப்போது பேசிய பேச்சுக்கள் இவை.. இன்னும் இன்னும் கூட இப்படியாய் அவன் கேட்டிருக்கிறான்.

அந்த எண்பது ஆண்டு நிறைவு தினம் அவருக்கு எப்போதோதான் முடிந்துபோனது. ஆனால் இயக்கம் கொஞ்சம் வலுப்பெறத்தான் இப்படியாய் விழா ஏற்பாடு என்கிற ஒரு யுக்தி.. அகராதியில் இதனைத் தந்திரம் என்றும் கூடச் சொல்லலாம்.

கை நிறைய காசு தந்த ஒரு கல்லூரிப்பேராசிரியர் பதவியைவேண்டாம் எனச்சொல்லி இயக்கம் கண்டவராயிற்றே. சுயத்தைத்தூக்கி எறிந்துவிட்டு வாழும் சமூகம் பெரிதென எண்ணி ப்பொது வாழ்க்கைக்கு வந்தவர். அப்படி வருவது ஒருவருக்கு அத்தனை எளிதா என்ன. அள்ளிக்கொடுத்து குபேரனாக்கி அதிகார நாற்காலியில் உட்காரவைத்துவிடும் அந்த அரசியல் சூத்திரம் பழகும் இயக்கத்தில் சேரவா அவர் ஒடோடி வந்து சேர்ந்தார் அப்படி .இல்லையே.

மக்கள் பிரச்சனைக்காக களம் கட்டுதல் போராடுதல் சிறைக்குச்செல்லுதல் மாறி மாறி இது மட்டுமே செய்வது அவருக்குப்பணி. .வெறென்ன இங்கு நிகழ்ந்தது .

இலங்கைப்பிரச்சனை யார் யாருக்கோ அரசியலில் ஊறுகாயாய் அனுபவமானது.. அவரோ இலங்கைத்தமிழரின் துயரத்தில் தன்னை முற்றாய் அடையாளங்காண முடிந்த தலைவரானார். எந்த சமூக அசைவையும் தான் அமரும் நாற்காலிக்கு ச்சாதகமாக மாற்றிக்கொண்டுவிடும் யுக்தி பயிலப்படும் நிகழ் இந்திய அரசியலில் அவர் வித்தியாசமானவராய் அனுபவப்பட்டார்.. இதுகள் எல்லாமே அவனுக்குத்தான் ஏற்பட்டதாய்ச்சொல்கிறேன். உங்களை வைத்துச்சொல்லவில்லை அய்யா ஒன்றும் பயப்படாதீர்கள்.

பெரியமண்டபத்தின் வாயிலில்தான் எத்தனைக்கூட்டம். எத்தனைக்கொடிகள் அ.வரின் பெருமை ப்பேசும் எத்தனைத் தட்டிகள். காவேரி ப்படுகை மட்டுமில்லை, தெற்கே கன்னியாகுமரியிலிருந்தும் மேற்கே கொங்குநாட்டிலிருந்தும் சங்கமித்த எத்தனைத்தோழர்கள். அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தலைவரை அனுப்பி இருந்தன. அவன் ஒவ்வொன்றாய்ப்பார்த்துக்கொண்டே போனான்..

புத்தகக்கடைகள் போடப்பட்டு புத்தகங்கள் மும்முரமாய் விற்பனை ஆகிக்கொண்டு இருந்தன..நல்ல புத்தகங்கள் அடுக்கடுக்காய். வாங்கித்தான் செல்கிறார்கள் மக்கள். யார் இல்லை என்று சொல்வது. நல்லது மட்டும்தான் இங்கே நடக்க மாட்டேன் என்கிறது. நீ லஞ்சம் வாங்கு எனவோ ஊழல் செய் எனவோ யாரும் திட்டம் போட்டு பாடமா நடத்துகிறார்கள். இல்லையே. ஆனால் எத்தனைக்கச்சிதமாய் அவைதாம் நிகழ்ந்து போகின்றன. வெளிச்சத்துக்கு வந்துவிட்ட ஊழலைவிட வராதவை எண்ணிக்கையில் மிக மிக அதிகம். அவன் மனத்திரையில் எதனை எல்லாமோ ஆழமாக யோசித்தான்.

வாழ்நாளில் தன் நாடு பொதுவுடமைக்கு வந்துவிடும் என இருட்டறையில் கணக்குப்போட்ட பல முட்டாள்களுள் அவனும் ஒருவன் .சோவியத்து நாடு சுக்கல் சுக்கலாய்ப்போனது கண்டு கண்ணீர் விட்டான் பொய் சொல்லவில்லை உண்மை இது… மனம் அவனுக்கு நொறுங்கிப்போனதுண்மை.

வாழ்ந்த மண்ணிலேயே லெனின் சிலையை புல்டோசர் வைத்து அகற்றியது கண்டு அன்று முழுவதும் உண்வு ஏதும் சாப்பிடவே முடியாது திகைத்து திகைத்து திக்காறி நின்றவன். இது எல்லாம் மெய்யா இல்லை அமெரிக்க சிஐஏ செய் மாய்ச்சதியா என நண்பர்கள் பலரிடம் கேட்டுப்பார்த்தான். அந்த மிகாயில் கோர்பசேவ் எனும் குலத்தக்கெடுத்த கோடரி புரியாத பாஷை பேசி ஏமாற்றி விட்டானே எனப் புலம்பித்தீர்த்தான். படித்தவர்கள் எப்போதும் ஆபத்தானவர்கள் என அவன் மனம் சொல்வதுண்டு.

ஒரு நாள் எல்லாமே மெல்லக்கனவாய் பழங்கதையாய்ப்போனதை அசைபோட்டபடி அவன் மண்டபத்துக்குள்ளாய் நுழைந்தான் மானிடர் வாழும் .வாழ்க்கை எத்தனை ச்சிறியது. அடி நாட்களில்தான் ஏனோ அந்த ரகசியம் மட்டும் பிடிபடுவதில்லை. மறைந்துபோன அவனின் தந்தைதான் அடிக்கடி சொல்லிக்கொள்வார். ‘திரும்பிப்பார்ப்பதற்குள் முடிந்து போகுமடா இந்த மனித வாழ்க்கை’ என்கிறபடி..

மேடையின் மய்யமாய் எண்பதைத்தொட்ட அத்தலைவர் அமர்ந்திருந்தார். அவரின் இரு பக்கத்திலும் எத்தனையோ தலைவர்கள் அமர்ந்து சிவப்பு வரிசையை அலங்கரித்துக்கொண்டிருந்தனர்.

தமிழ் நிலத்தி £வாவோடு சேர்ந்து அவர் தமிழ் மண்ணில் இலக்கிய ப்பெருமன்றம் கட்டிய வரலாறு எல்லாம் பேசிக்கொண்டிருந்தார் தாடி வைத்துக்கொண்டு பேசிய பேச்சாளர். தாமரை இலக்கிய த்திங்களிதழ் சிவந்த விதம் விளக்கிச் சொன்னார். சரசுவதி இதழ் பற்றியும்தான் இடை இடையே பேச்சு வந்தது. அவன் இன்னும் ஒரு இருக்கை தேடினான்.

நல்லது பெரிதாகும் என்பார்களே ஆனால் நல்லது பெரிதாகவில்லையே ஏன் என்று மனதில் எண்ணிப்பார்த்தான். இது நல்லது என்பதில் ஐயமில்லை. பின் ஏனோ எப்படி எப்படி எல்லாம் பின்னடைவு. மனம் புதியதாய் ஒருமுறை ச்சுள்ளென்றது. மேடையில் பேசுபவர்கள் பேசுவதை முழுவதாய்க்கேட்கவேண்டுமே. ஆக

மைக் தக அமைந்து காதில் நன்றாய்க்கேட்கும் இடம் தேடி ஒரு நாற்காலி பார்த்து இப்போதுதான் அமர்ந்து கொண்டான்.

சட்டைப்பையில் துயின்ற செல் போன் அவனை மெல்லவே அழைத்தது.

‘ நாதான் பேசுகிறேன். பல் வலி தாங்கவே முடியவில்லை. உடன் பல் டாக்டர்கிட்ட போயாகணும். ஆட்டோ பிடிச்சிகிட்டு அடுத்த பத்து நிமிஷத்துல இங்க வரணும் வச்சிடறேன்’

அவன் மனைவி பேசி முடித்தாள்.

இது என்னடா வாழ்க்கை என்று எழுந்து அந்த மண்டபத்தை விட்டு வெளியே வந்தான்.. மனம் கிடந்து அடித்துக்கொண்டது. மனவியின் பல்வலிக்கு ஒரு டாக்டரிடம் கூட்டிப்போகவே இங்கு ஒரு நாதியில்லை. நாம் பேசுவது சிந்திப்பது எல்லாம் இமாலய விஷயம்தான், அவனே மனதில் எண்ணிச்சிரித்துக்கொண்டு நடந்தான் ..யார் கண்ணிலும் அவன் பட்டுவிடவில்லை. அதுதான் விஷயம்.

————————————————————————-

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 40 தாமரைப் பூ சமர்ப்பணம்மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம் முடிவு) அங்கம் -4 பாகம் -3
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *